அம்மா உணவகமும் கிழக்கு பதிப்பகமும்…

சில நண்பர்கள் முன்பதிவுத் திட்டத்தைக் கிண்டல் செய்வதாக எண்ணிக் கொண்டு சில வார்த்தைகளைக் கொட்டியிருக்கிறார்கள்.  அதாவது, விலையை அதிகப்படுத்தி விட்டு முன்பதிவில் பாதி விலைக்குத் தருகிறார்களாம்.  தயவு செய்து பின்வரும் வார்த்தைகளுக்காக பத்ரி என்னை கோபித்துக் கொள்ளலாகாது.  என்னைப் பொறுத்தவரை கிழக்கு பதிப்பகத்தில் அம்மா உணவகம் மாதிரிதான் புத்தகங்களுக்கு விலை நிர்ணயம் செய்கிறார்கள்.  பழைய எக்ஸைல் 440 பக்கம்.  அதன் விலை என்ன இருக்க வேண்டும்?  600 ரூபாய் இருக்கலாம்.  அப்படி இருந்தால்தானே என்னைப் போன்ற ஏழை எழுத்தாளர்களுக்கு ஓரளவாவது ராயல்டி கிடைக்கும்? ஆனால் அதன் விலை என்ன தெரியுமா? 250 ரூ.  இது அநியாயம் இல்லையா, அக்கிரம் இல்லையா?  ஏழை எழுத்தாளர்களுக்கு இதனால் நல்வாழ்வு கிடைக்க சாத்தியம் இருக்கிறதா?  நான் ஒருபோதும் இது போன்ற விஷயங்களில் பதிப்பாளருடன் பேசியதோ குறுக்கீடு செய்ததோ இல்லை.  சமீபத்தில் தான் நாம் ஏன் இன்னமும் ஏழையாகவே இருக்கிறோம் என்று தீவிரமாக ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போது பழைய எக்ஸைலை எடுத்தப் பார்த்ததில் இந்த 250 ரூ. விலை விஷயம் தெரிந்தது.  ஒரு லட்சம் பிரதிகள் விற்றால் இப்படி விலை வைக்கலாம்.  1200 பிரதிகள் அச்சிடும் போது?

நான் சொல்வதில் நம்பிக்கை இல்லையெனில் மற்ற புத்தகங்களையும் கிழக்கு வெளியீடு புத்தகங்களையும் நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.  இந்த முன்வெளியீட்டுத் திட்டம் பற்றி நான் பத்ரியிடம் நீண்ட நேரம் பேசி அவரை சம்மதிக்க வைத்தேன்.  இதனால் பதிப்பாளருக்கு ஒரு பைசா லாபம் இல்லை.  வாங்குபவர்களின் எண்ணிக்கையை இருபதாயிரம், முப்பதாயிரம் என்று அதிகரிக்க வேண்டும் என்ற என்னுடைய வெறியினால் இந்தத் திட்டம் உருவானது.  இந்த யோசனையை எனக்குச் சொன்னவர் அராத்து அல்ல. அவரை விட கில்லாடியான ஒரு ஆள் என் பக்கம் இருக்கிறார்.  அராத்து யாரிடமும் சொல்லாமல் செக்கோஸ்லோவேகியா போய் விட்டார்.  அவரை யாரும் தொடர்பு கொள்ளக் கூட முடியவில்லை.  ஆனாலும் கடவுள் எப்போதும் என் பக்கமே.  அராத்து காணாமல் போனதும் அவரை விட கில்லாடியான இந்த நண்பர் கிடைத்தார்.   ஆனால் அவர் செய்யும் தொழில் இதற்கெல்லாம் சம்பந்தமே இல்லாத ஒன்று.

இந்த முன்பதிவுத் திட்டம்  பற்றி கிழக்கு பத்ரி எழுதியிருப்பதையும் பாருங்கள்:

http://www.badriseshadri.in/2014/12/blog-post.html