Author is not dead; he doesn’t exist!

எழுத்தாளன் செத்து விட்டான் என்று பல பத்திரிகைகளில் செய்தி பார்த்தேன்.  மாபெரும் காமெடியாக இருந்தது.  இங்கே எழுத்தாளன் எப்போது இருந்தான்?  நடிகர்களே இங்கு இருக்கிறார்கள்.  எழுத்தாளர்கள் இருந்ததே இல்லை.  இருந்தால்தானே சாவதற்கு?

பெருமாள் முருகனின் துரோகம் என்ற தலைப்பில் மனுஷ்ய புத்திரன் முகநூலில் எழுதியதை இங்கே மறுபதிவு செய்கிறேன்.   இதன் ஒவ்வொரு வார்த்தையையும் என் வார்த்தையாகவும் கொள்ளவும்.  இனி மனுஷ்ய புத்திரன்:

நேற்று பெருமாள் முருகனுக்கு ஆதரவாக நண்பர்கள் சிலர் புத்தக கண்காட்சிக்கு வெளியே மெளனப்போராட்டம் நடத்திக்கொண்டிருந்தபோது பெருமாள் முருகன் ’’தனது படைப்புகள் அனைத்தையும் திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும் தன் நூல்களை வெளியிட்ட பதிப்பகங்கள் அந்த நூல்களை இனி விற்க வேண்டாம் என்றும் அதற்கான் நஷ்ட ஈடை தான் பதிப்பகங்களுக்கு கொடுத்துவிடுவதாககவும் அதே போல தன் புத்தகங்களை இதுவரை வாங்கியவர்கள் அவற்றை எரித்துவிடலாம் என்றும் அதற்கான நஷ்ட ஈடை தான் கொடுத்து விடுவதாகவும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இதன் மூலமாக தனக்காக குரல் கொடுத்து அத்தனை பேரையும் செருப்பால் அடித்திருக்கிறார் பெருளாள் முருகன்.

உலகில் சர்ச்சைகளுக்கும் நெருக்கடிகளுக்கும் ஆளான எவ்வளவோ கலைஞர்கள் இருந்திருக்கிறார்கள். தமிழகத்திலும் இருந்திருக்கிறார்கள். ஆனால் ஒரு குறிப்பிட்ட பிரச்சினைக்காக நான் எழுத்துலகை விட்டே வெளியேறுகிறேன் என்று உலகில் இதுவரை எந்த எழுத்தாளனும் இதுவரை சொல்லியதில்லை. மேலும் அந்த எதிர்ப்புகள்தான் அவர்களை மேலும் நெஞ்சுரத்துடன் பணியாற்றுவதற்கான வலிமையை கொடுத்திருக்கின்றன.
ஆனால் பெருமாள் முருகன் இப்போது செய்திருப்பதென்ன?
இது பச்சையான கோழைத்தனம். பச்சாதாபத்தை தூண்டி தனக்கு இப்போது கிடைத்திருக்கும் ஊடக வெளிச்சத்தை இன்னும் சில தினங்களுக்கு தக்க வைத்துக்கொள்ளும் முயற்சி இது.

தன்னுடைய நாவல் குறித்து வட்டாச்சியர் அலுவலத்தில் வைத்து நடக்கும் ஒரு விசாரணைக்கு பெருமாள் முருகன் உடன்பட்டதன் மூலம் மிகத் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறார். எனது கவிதை ஒன்றைப் பற்றி ஒரு ஆர்.டி.ஓ விசாரணை நடப்பதை என்னால் கற்பனை கூட செய்யமுடியவில்ல. இதுபோன்ற விவகாரங்கள் நீதிமன்றத்தின் வழியேதான் தீர்க்கப்பட முடியும், இதுபோன்ற கட்டைப் பஞ்சாயத்துகளுக்கு இலக்கியப் பிரதியை உட்படுத்த உடன்பட்டது என்பது எந்த விதத்திலும் நியாபயப்டுத்த இயலாத ஒன்று.

ஒரு எழுத்தாளனுக்கு ஏதோ ஒரு மிரட்டல் விடுத்தால் மிரட்டுபவர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுப்பது அரசின் கடமை. அந்தக் கடமை நிறைவேற்றப்படவில்லை என்பது தெரிகிறது. இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் துணையை நாடுவதற்கு பெருமாள் முருகனுக்கு எல்லா வாய்ப்பும் இருக்கிறது. ஆனால் அதைச் செய்வதில் அவருக்கு ஈடுபாடு இருப்பதாக தெரியவில்லை அதே சமயம் தமிழக் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் ஊடகங்களின் ஆதரவும் முற்போக்கு இயக்கங்களின் ஆதரவும் ஒரு எழுத்தாளனுக்காக உருவாக்கப்பட்டிருப்பது பெருமாள் முருகன் விவகாரத்தில்தான். இதை கருத்துரிமைக்கான ஒரு போராட்டமாக வளர்த்தெடுப்பதுதான் சமூக பொறுப்புள்ள எழுத்தாளனின் கடமை. இது பெருமாள் முருகன் என்ற தனி நபரின் பிரச்சினையல்ல.

மாதொரு பாகன் நாவலில் சர்ச்சைக்குரிய இரண்டு பக்கங்களை நீக்க ஒப்புக்கொண்டதை நான் ஒரு அவமானமாகவோ தோல்வியாகவோகூட பார்க்க மாட்டேன். இந்திய சமூகங்களில் இதுபோன்ற சிறு சிறு சமரங்களுக்கு உட்பட்டுத்தான் நமது பணிகளை ஆற்ற வேண்டியிருக்கிறது. ஆனால் இந்த சமரசத்திற்காக தான் எழுத்துலகை விட்டே வெளியேறுகிறேன் என்றும் தனது எல்லா பிரதிகளும் எரிக்கப்படட்டும் என்று சொல்வதும் போலித்தனத்தின் உச்சக் கட்டம். இந்த முடிவைத்தான் தங்களது கருத்துரிமைக்காக போராடும் எல்லா கலைஞர்களும் மேற்கொள்ள வேண்டுமா? உங்களுடைய முடிவில் ஏதாவது தர்க்கம் இருக்கிறதா? உங்களுடைய உணர்சிகரமான நாடங்களுக்காக ஏன் எல்லோரையும் முட்டாளாக்குகிறீர்கள்? விஸ்வரூபம் விவகாரத்தில் கமல் ஆடிய நாடகத்தையும் நீங்கள் மிஞ்சிவிட்டீர்கள். தமிழகத்தின் சல்மான் ருஷ்யாக மாற விரும்பும் உங்கள் குழந்தைத்தனமான ஆசையைத் தவிர இதில் வேறொன்றையும் நான் பார்க்கவில்லை.

தமிழர்களை உணர்ச்சி நாடகங்கள் மூலம் மடையர்களாக்க முடியும் என்பதை நீங்கள் நிரூபித்திருக்கிறீர்கள். உங்களது அறிவிப்பின் மூலம் கருத்துரிமைக்ககான போராடத்தை அடிப்படைவாதிகளிடம் நீங்கள் முற்றாக விட்டுக் கொடுத்து மிகப்பெரிய துரோகத்தை செய்திருக்கிறீர்கள். உங்களை துன்புறுத்துகிறவர்களை நான் கடந்த சில தினங்களாக ஊடகங்களில் கடுமையாக கண்டித்துவந்திருக்கிறேன். உயிர்மையில் உங்களுக்கு ஆதரவாக தலையங்கமே எழுதியிருக்கிறேன். ஆனால் அவர்கள் உங்களுடைய ஒரு புத்தகத்தைதான் எரித்தார்கள். நீங்கள் உங்களுடைய அத்தனை புத்தகங்களையும் எரிக்க அழைப்பு விடுத்திருப்பதன் மூலம் அவர்களைவிட மோசமான நபராக மாறிவிட்டீர்கள்.

உங்களது இந்த முடிவு உங்களது சொந்த முடிவு என்றாலும்கூட உங்களுக்காக குரல்கொடுத்தவன் என்ற முறையில் இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

– மனுஷ்ய புத்திரன்