தொந்தரவு செய்யாதீர்கள்…

மதிப்புமிக்க சாரு அண்ணாவுக்கு,

வணக்கம். மாதொருபாகன் குறித்து உங்கள் கருத்தை நான் அறிவேன். ஆனால் என் வாசிப்பனுபவத்தில் அந்த நாவல் என்னை ஈர்த்தது அது குறித்து ஒரு மதிப்புரை எழுதியுள்ளேன். உங்களுக்கு நேரமும் சூழலும் வாய்க்குமெனில் படியுங்கள். ஒரு நாவலை நான் அனுகியவிதத்தில் ஏதெனும் தவறிருந்தால் சுட்டிக் காட்டுங்கள். எனக்கு உதவும். மற்றபடி எக்ஸைல் 2  இன்னும் வாசிக்க வில்லை. வாசித்துவிட்டு உங்களுக்கு எழுதுகிறேன். அதன் வெளியீட்டு விழாவுக்கு என்னால் வரமுடியாமல் போனது எனக்குத் தான் இழப்பு. மற்றவை பிறகு

ப்ரியமுடன்,
வீரா.
அன்புள்ள வீரா,
என் மின்னஞ்சல் முகவரி உங்களிடம் இருக்கிறது என்பதற்காக என்ன வேண்டுமானாலும் எனக்கு எழுதி விடுவீர்களா?  என்னை சில ரௌடிகள் முந்தாநாள் சங்கை அறுப்பேன் என்று கத்திக் கொண்டு அடிக்க வந்தார்கள்.  ஒரு இலக்கியச் சந்திப்பில்.  புத்தகக் காட்சியில். அது நேரடியான வன்முறை.  அதைப் புரிந்து கொள்ள முடிகிறது.  ஆனால் என் வாசகர்கள்/நண்பர்கள் என்று சொல்லிக் கொள்ளும் உங்களைப் போன்றவர்கள் எனக்குக் கொடுக்கும் மன உளைச்சலைத்தான் என்னால் தாங்க முடியவில்லை.  தினந்தோறும் எனக்கு வரும் கொம்மா ங்கோத்தா கடிதங்களைக் குப்பையில் போடுவதைப் போல் உங்கள் கடிதத்தையும் குப்பையில் போட எனக்கு மனம் வரவில்லை.  ஏனென்றால், நீங்கள் எனக்குத் தெரிந்தவர்.  அதனால்தான் என்னுடைய எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு உங்களுடைய வன்முறையை எதிர்கொள்கிறேன்.
ஆம்… உங்கள் கடிதம் என் மீது ஏவப்பட்ட வன்முறையாகத்தான் தெரிகிறது.  ஏனென்றால், நீங்கள் குறிப்பிடும் நாவல் எப்படி சராசரியானது என்று விளக்கியிருக்கிறேன்.  இது குறித்து என்னை விடத் தெளிவாக எழுதியிருக்கும் ஜெயமோகனின் சிறிய குறிப்பையும் அத்துமீறி வெளியிட்டிருக்கிறேன்.  அத்துமீறி என்று குறிப்பிடுவதற்குக் காரணம், ஏதோ நிர்ப்பந்தம் காரணமாக ஜெ. அந்தப் பதிவை அவருடைய தளத்திலிருந்து உடனே நீக்கி விட்டார்.  அவர் நீக்கியதை நான் வெளியிடுவது அதர்மம்.  இருந்தாலும் சில சமயங்களில் இது போன்ற காரியத்தையும் செய்ய வேண்டியிருக்கிறது, பொது நன்மையைக் கருதி.  இவ்வளவையும் படித்து விட்டு அந்த நாவல் எனக்கு மிக உயர்ந்த இலக்கிய அனுபவத்தைத் தந்தது என்று முழ நீளத்துக்குக் கட்டுரையை எழுதி அதை என்னை வேறு படிக்கச் சொல்லுகிறீர்கள்.  முதலில் உங்களுடைய ஈகோவை விடுங்கள்.  நீங்கள் சிறு பிள்ளை.  அதை முதலில் உணர்ந்து கொள்ளுங்கள்.  சிறு பிள்ளைகளுக்கு நடைப்பயிற்சி சொல்லித் தருவதோ, சைக்கிள் விடக் கற்றுத் தருவதோ என் வேலை அல்ல. அதையெல்லாம் நீங்களே தான் செய்து கொள்ள வேண்டும்.  ஒரு பெண்ணைப் புணர்வதற்கு யாராவது சொல்லித் தருவார்களா என்ன?
மேலும், நீங்கள் குறிப்பிட்டிருக்கும் நாவலைப் படித்ததே ஒரு வீண் வேலை.  அந்த வேலையைச் செய்ததால் முந்தாநாள் என் உயிரே போயிருக்கும்.  அதைப் படித்ததே வீண்வேலை என்கிற போது அந்தக் குப்பையைப் பற்றிய உங்கள் உன்னதக் கட்டுரையை வேறு படிக்க வேண்டுமாக்கும்?  என்ன தம்பி இது?  என்னை நீங்கள் யார் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?  நான் தமிழில் எழுதுகிறேனே தவிர நான் நீங்கள் நினைப்பது போல் ஒரு தமிழ் எழுத்தாளன் அல்ல.  சர்வதேசத் தரத்தில் வைத்து மதிப்பிடப்படும் ஒரு சர்வதேச எழுத்தாளன்.  தருணும் நானும் பேசிக் கொண்டிருந்த போது என்னுடைய பழைய வாழ்க்கை பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தான்.  நான் தில்லியில் வேலை பார்த்த சிவில் சப்ளைஸ் அனுபவங்களைத் தொடர்ந்து சென்னை அஞ்சல் அலுவலக வேலை பற்றிச் சொன்னேன்.  உடனே அவன் போஸ்டாஃபீஸில் வேலை பார்த்த இன்னொரு எழுத்தாளன் யார், சொல் என்றான். ”ப்யூகோவ்ஸ்கி பற்றிப் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறேன் தருண்.  அவனுடைய எல்லா எழுத்தையும் படித்திருக்கிறேன்.  நீ ஒரு தமிழ் எழுத்தாளனிடம் பேசிக் கொண்டிருக்கிறாய், ஜாக்கிரதை” என்றேன்.   ஏனென்றால், தமிழ் எழுத்தாளர்கள் அளவுக்கு உலக இலக்கியம் படித்தவர்கள் உலகில் எந்த இடத்திலும் கிடையாது.
ஆனாலும், என் எழுத்து இந்திய அளவில் கவனிக்கப்படுகிறது; வாசிக்கப் படுகிறது.  டெக்கான் கிரானிக்கிளில் நான் ஒரு கட்டுரை எழுதினால் அது சென்னைப் பதிப்பில் வருவதில்லை.  முதலில் சென்னைப் பதிப்பில் இருப்பவர்களுக்கு என்னைத் தெரியுமா என்றே எனக்கு நிச்சயமில்லை.   தில்லி பதிப்போடுதான் என் தொடர்பு எல்லாம்.  அவர்களுக்கு அனுப்பி அது ஏஷியன் ஏஜில் வெளிவரும்; அதே கட்டுரை சென்னை பதிப்பிலும்  வெளிவரும்.  வட இந்தியாவில் டெக்கான் கிரானிக்கிளின் பெயர் ஏஷியன் ஏஜ்.   இதன் காரணமாக, நான் இந்திய ஆங்கில இலக்கியத்தையும் சர்வதேச அளவில் எழுதப்படும் ஆங்கில இலக்கியத்தையும் பரிச்சயமாக்கிக் கொள்ள வேண்டிய அவசியம் நேர்கிறது.  லஜ்ஜாவும் மாதொரு பாகனைப் போல் ஒரு அமெச்சூரிஷ், mediocre நாவல்தான் என்று நான் சொல்ல வேண்டுமானால் லஜ்ஜாவை நான் படித்தாக வேண்டும்.  காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ் ஒரு மொக்கை நாவல், வைட் டைகர் ஒரு சராசரி நாவல் என்றெல்லாம் சொல்கிறேன் என்றால் அதையும் நான் படித்திருக்க வேண்டும்.   சேட்டன் பகத் ஒரு தண்டம் என்றால் அவர் எழுதிய மொக்கைகளை நான் படித்திருக்க வேண்டும்.  அமிதாவ் கோஷிடம் ஒன்றும் சரக்கு இல்லையே என்று நான் சொன்னால் அமிதாவ் கோஷ் எழுதிய ஒரு நாவலை அல்ல; இரண்டு மூன்று நாவல்களையாவது நான் படித்திருக்க வேண்டும்.  இதெல்லாம் சர்வதேச இலக்கியக் கருத்தரங்குகளில் கலந்து கொள்ளவும், ஒரு இந்திய எழுத்தாளனாக இந்திய ஆங்கில எழுத்து பற்றிய விமர்சனம் வைக்கக் கூடியவனாகவும் நிலைநிறுத்திக் கொள்ள எனக்கு வேண்டிய தகுதிகள்.  ஒரு தமிழ் எழுத்தாளனாக இருந்தால் இந்தத் தகுதியெல்லாம் வேண்டியதில்லை.  ஆனால் என்னை குஷ்வந்த் சிங்கின் அடுத்த கட்டமாக அங்கே பார்க்கிறார்கள். அதையும் நான் மறுத்து வருகிறேன்.  குஷ்வந்த் என்னதான் நாவல்கள் எழுதியிருந்தாலும் அவர் ஒரு பத்தி எழுத்தாளராகவே அறியப்பட்டவர்.  நான் அப்படி அல்ல.  நபக்கோவ், கேத்தி ஆக்கர், வில்லியம் பர்ரோஸ் போன்ற transgressive எழுத்தாளர்களுக்கு இணையாகப் பேசப்படுபவன்.   எனவே நான் அதற்கு என்னைத் தகுதி படைத்தவனாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.  அதற்கு நீங்கள் குறிப்பிடும் தமிழ் மொண்ணைகளையோ அந்த மொண்ணைகளுக்கு நீங்கள் எழுதியிருக்கும் உன்னத மதிப்பீடுகளையோ படிப்பது கழுதைக்குத் தாலி கட்டுவதைப் போன்ற செயலாகும்.
இன்னமும் ஜெயமோகனின் பிற்கால எழுத்துகளையும் எஸ்ராவின் சமீபத்திய நாவல்களைப் படிக்காமல் இருப்பதையே குற்றமாகக் கருதி இன்னும் ஆறு மாத காலத்துக்கு தமிழில் தான் படிக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறேன்.  என் வீட்டுக்கு வந்த ஒரு கல்லூரி மாணவன் அறம் தொகுதியைப் படித்து அழுது விட்டேன் என்று சொன்னான்.  அந்தத் தொகுதி அவனுடைய வாழ்க்கையையே மாற்றிப் போட்டு விட்டது என்று சொன்னான்.  அதற்கு முன் ஜெயமோகனை வெறும் கிழவர்களும் அல்லது கிழட்டுத் தனம் கொண்ட இளைஞர்களும் தான்   படித்துக் கொண்டிருக்கிறார்கள்  என்று நினைத்தேன்.  இந்தப் பையன் சொன்னதைக் கேட்டதும் உடனடியாக ஜெ.வின் பிற்கால எழுத்து எல்லாவற்றையும் படித்து விட வேண்டும் என்று எடுத்து வைத்திருக்கிறேன்.  அந்த இளைஞன் கிழவனா அல்லது இளைஞன் தானா என்று உடனே எனக்குத் தெரிய வேண்டும்.
நான் குறிப்பிடும் பல எழுத்தாளர்களை சர்வதேசப் புகழ் பெற்ற எழுத்தாளர்களுக்குத் தெரிவதில்லை என்பதை நான் நேர்ப்பேச்சுகளில் அறிந்திருக்கிறேன்.  என்றாலும் இந்திய ஆங்கில எழுத்தை விமர்சிக்க வேண்டுமானால் நான் எதைத் தேர்வு செய்கிறேன் என்பதையும் சொல்லியாக வேண்டும்.  அப்படிச் சொன்னதுதான் தருண் தேஜ்பாலின் நாவல்கள்.
நீங்கள் குறிப்பிடும் நாவலை ஆங்கிலத்தில் படிப்பவர்கள் நம் தமிழ் எழுத்தைப் பற்றி மிகக் கீழ்த்தரமான முடிவுக்கே வருவார்கள்.
வீரா, முதலில் நீங்கள் அடக்கம் பயிலுங்கள்.  அங்கிருந்து ஆரம்பியுங்கள்.  நன்றாக வரலாம்.  இல்லையேல் உங்கள் இஷ்டம். இன்னொரு விஷயம்…  அண்ணா என்று அழைப்பது அடக்கம் இல்லை.   நான் குப்பை என்று சொன்ன ஒரு நாவல் பற்றி நீங்கள் உயர்த்தி எழுதி ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து அதை நான் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதில் கொஞ்சம் கூட அடக்கம் தெரியவில்லை.  பெரும் ஆணவமே தெரிகிறது.  இந்த ஆணவம் நல்லதில்லை.
சாரு