தமிழ் எழுத்தாளர் சிவசங்கரி அவர் பெயரைப் பயன்படுத்துவதற்காக என்னை மன்னிக்க வேண்டும். சிவங்கரியையும் விடவும் தட்டையாக எழுதுபவர் தஸ்லீமா நஸ்ரின். ஆனால் ஆங்கிலத்தில் எழுதுவதால் உலகப்புகழ் பெற்று விட்டார். அவருடைய லஜ்ஜாவை நான் குப்பை என்று சொன்னதற்காக தஸ்லீமா, “சாரு நிவேதிதா லஜ்ஜாவை குப்பை என்று சொன்னால் உண்மையும் குப்பை தான்” என்று ட்வீட் போட்டிருக்கிறார். நல்லது. இப்போதுதான் மாதொரு பாகன் பிரச்சினை பற்றி எழுதி விட்டு வெளியே வந்தேன். தஸ்லீமாவை எப்படி அணுகுவது என்பதற்கு அவரே நூல் கொடுத்திருக்கிறார். உண்மை என்றால் நம்முடைய நாளிதழ்களில் வரும் செய்திகளும் உண்மைதான். அதை அப்படியே எழுதுவது பற்றி எனக்கு ஆட்சேபணையே கிடையாது. ஆனால் தினத்தந்தியை இலக்கியப் பத்திரிகை என்று சொல்ல முடியுமா? உண்மையோடு கலை என்ற மந்திரப் பொடி சேர்ந்தால்தான் அது இலக்கியம். அடுத்த வாரம் லஜ்ஜாவை கவனிக்கலாம். இப்போது அதை விட முக்கியமான வேலை இருக்கிறது.