முகத்தை அழிக்கும் முகநூல் : அராத்து பதில்

பத்திரிகையிலிருந்து சாகித்ய அகாதமி பரிசுக்காக எந்தெந்த நூல்களைப் பரிந்துரைப்பீர்கள் என்று கேட்டதும் அது இந்திய அளவிலானதா, தமிழ்நாடா என்று கேட்டேன் இல்லையா?  பரிசு தரும் நிறுவனங்கள் குறித்து எனக்குத் தெரிந்தது அவ்ளோதான். முந்தாநாள் அந்திமழையில் கேள்வி கேட்டிருந்த ஒரு அன்பர் உங்களுக்கு எதிராகத் தீவிரமாக இயங்குபவர்; அவருக்கெல்லாம் பதில் சொல்லலாமா என்று நண்பர் ஒருவர் கேட்டார்.  ”எனக்கு எதிரிகளைப் பற்றி எதுவுமே தெரியாது.  நண்பர்களை மட்டுமே அறிவேன்” என்று பதில் சொன்னேன்.

***

இரண்டு மாதமாக ஒரு காசோலையை வங்கியில் போட வேண்டும்.  இன்று கொஞ்சம் நேரம் கிடைத்தது.  ரொம்ப நாள் ஆனால் காசோலை செல்லாமல் போய் விடும் அபாயம் உள்ளது.  இன்று ஆக்ஸிஸ் வங்கி இருக்குமா என்று நண்பருக்குக் குறுஞ்செய்தி அனுப்பினேன்.  ஞாயிறு அன்று எந்த வங்கியும் செயல்படாது என்றுதான் நினைக்கிறேன் என்று வந்தது பதில் செய்தி.  ஓ, இன்று ஞாயிற்றுக் கிழமையா என்று நாட்காட்டியைப் பார்த்தேன்.  அங்கே புதன் கிழமை என்று இருந்தது.

***

இன்று ஞாயிற்றுக் கிழமையா?  சரி, நாளை போக வேண்டியதுதான் என்று பதில் குறுஞ்செய்தி அனுப்பினேன்.

”நாளையும் விடுமுறை.”

“ஓ காட்.  நாளை என்ன விசேஷம்?”

“குடியரசு தினம்.”

***

குடியை நிறுத்தி விட்டேன்.  நான் நிறுத்தியதும் வாசகர் வட்டத்திலும் ஒரு பத்து பேர் நிறுத்தி விட்டார்கள்.  ஜெகா நிறுத்தியது ஆக ஆச்சரியம்.  அதை விட ஆச்சரியம் என்னவென்றால், நான் சொன்ன அதே பதிலை அவரும் சொன்னதுதான்.

“குடியை விடப் பெரும் சந்தோஷத்தை அளிக்கக் கூடிய ஒன்றைக் கண்டு பிடித்து விட்டேன்.”

“என்ன சாரு அது?”

”வேலை.”

“எப்போதும் வேலை செய்து கொண்டுதானே இருந்தீர்கள்?”

“வாரம் ஒருமுறை விடுப்பு எடுப்பேன்.  சில சமயம் இரண்டு நாட்கள் போய் விடும்.  இப்போது 48 மணி நேரம் அதிகமாகக் கிடைத்திருக்கிறது.”

ஜெகா கண்டு பிடித்தது வாசிப்பும் இசையும் சினிமாவும்.  மூன்றும் குடியை விட சந்தோஷத்தைத் தருகிறதாம்.

”மாலை ஆறு மணியிலிருந்து எட்டு வரை என்ன செய்வது சாரு?” என்று கேட்டார் வெள்ளைச்சாமி.

நேற்று மாலை பிரபு, அராத்து, கணேஷ், செல்வா, வெள்ளை, நான் அறுவரும் சந்தித்தோம்.  சிலர் குடித்தனர்.   சிலர் குடிக்கவில்லை. அப்போதுதான் அந்தக் கேள்வியைக் கேட்டார் வெள்ளை.

ஒரு டிவிடி ப்ளேயர் வாங்கி வைத்துக் கொண்டு நான் குறிப்பிட்டுள்ள, எழுதியுள்ள உலக சினிமாவை எல்லாம் பாருங்கள் என்றேன்.

சரியாக ஒன்பரைக்கு வீட்டுக்குக் கிளம்பி விட்டேன்.  முன்பு என்றால் காலை ஒன்பதுக்குத்தான் கிளம்பி இருப்பேன்.  திடீரென்று வாரத்துக்கு பத்துப் பனிரண்டு நாள் கிடைத்தது போல் உள்ளது.

***

மே 17 – சனிக்கிழமை – அன்று ஒரு நல்ல அரங்கத்தில் என்னுடைய பத்து நூல்கள் வெளியீட்டு விழா நடக்க உள்ளது.  அது பற்றி நேற்று பேசி முடிவு செய்தோம்.

இப்போது ஜும்ப்பா லஹரியின் லோலேண்ட் வாசித்துக் கொண்டிருக்கிறேன்.  கூடவே பியானோ இசை என் ஆத்மாவை வருடுவது போல் மிக மெலிதாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.

https://www.youtube.com/watch?v=6Lq_0P39iLg

***

முகத்தை அழிக்கும் முகநூல் என்ற என் பதிவுக்கு அராத்து எழுதியுள்ள பதிலை கீழே காணலாம்:

அன்புள்ள சாருவுக்கு அராத்து எழுதிக் கொள்வது.

தமிழகத்தில் மரியாதையாகவும், புனிதமாகவும், அறம் சார்ந்தும், நெறி சார்ந்தும், நீதி, தர்மம், நியாயம் சார்ந்தும் வெள்ளையும் சொள்ளையுமாக எழுதிக் கொண்டிருக்கும் எந்த எழுத்தாளரும் உங்களை எழுத்தாளர் எனப் பொதுவில் சொல்ல மாட்டார்கள்.

சரி, அது போகட்டும்.

கொஞ்சூண்டு கலகம் போலத் தெரிவதாக எழுதும் ஆட்களும்,  ஓத்தா, மயிறு என்ற வார்த்தைகளைப்  போட்டு “தைரியமாக” எழுதுவதாக நினைத்துக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களும், கண்டவர்களை தெனாவட்டாகப் புணர்தலை வெளிப்படையாக எழுதும் எழுத்தாளர்களும் உங்கள் பெயரைச் சொல்வதில்லை. நீங்கள் கூட டெலிஃபோன் டைரக்டரியில் என் பெயர் மிஸ் ஆவது போல இருக்கிறதே என காமடியாக கூறியிருக்கிறீர்கள்.

இப்படி வெளிப்படையாக நடப்பதை, நான் மேடையில் வெளிப்படையாகச் சொன்னால், சிலர் உங்களிடம் போனில் வருந்துகிறார்கள். என்ன எழவு மெண்டாலிட்டின்னே புரியலை சாரு!

உங்களுக்கு எப்படியோ, அப்படியே எனக்கும். அராத்து, தற்கொலை குறுங்கதைகள் போன்ற வார்த்தைகள் எவர் வாயில் இருந்தும் வராது.   எனக்கும் அது ஆகப் பெரிய பெருமையாக இருந்தது.  நீங்கள் என்னை எழுத்தாளர் இல்லை என்று சொல்வதுதான் உவப்பானது, ரிலாக்ஸானது.  உங்கள் பிளாகில் கடைசிக்கு முந்தைய பாராவில் “எரிச்சலில்” , உங்களையும் மறந்து இப்படி எழுதி என்னைத் திடுக்கிட வைத்து விட்டீர்கள் .

// சரி, பத்திரிகை தான் எழுதுகிறது என்றால் அராத்து போன்ற எழுத்தாளர்களுக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? //

தற்கொலை குறுங்கதைகளின் வாசகர்களில் பலர் முதன்முதலில் அந்தப் புத்தகத்தைப் படித்தவர்கள். அவர்கள் யாரும் எஸ்.ரா , ஜெமோ அதன் தொடர்ச்சியாக தற்கொலை குறுங்கதைகள் படித்தவர்கள் அல்லர். சாரு வாசகர்கள்,  அராத்து ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் ஃபிரண்ட்ஸ் மற்றும் தற்கொலை குறுங்கதைகளை முதல் புத்தகமாக படித்தவர்கள் தான் தற்கொலை குறுங்கதைகளின் ரசிகர்கள்.   ஏன் ரசிகர்கள் என்று சொல்கிறேன் என்றால், பலருக்கு தற்கொலை குறுங்கதைகளின் பல வரிகள் மனப்பாடம். சிலர் ஆன்றாய்ட் ஆப் செய்யப்போகிறேன் என என்னிடம் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

சினிமாவைப் பற்றி போஸ்ட் போட்டால் அதிகம் பேர் ஆர்வமாகப் படிக்கிறார்கள் சாரு. அவர்களில் சிலர் திறந்த மனதுடன் தற்கொலை குறுங்கதைகளை எதிர் கொண்டு, அதிலுள்ள சென்ஸிபிளிட்டியை சிலக்கிறார்கள்.  இது ஒரு வித்தியாசமான காம்போவாக இருக்கிறதே என நானும் விட்டு விட்டேன்.

தமிழ் நாட்டில் 90 சதவீதம் சினிமாதான்.  சினிமாவுக்குத்தான் முக்கியத்துவம். முதல் படம் எடுத்து முடிப்பதற்குள் அதன் இயக்குநர் , ஹீரோயின் பேட்டி பத்திரிகைகளில் வந்து விடும். எல்லோரும் சினிமா பித்துப் பிடித்துதான் அலைகிறார்கள்.  இந்தப் பைத்தியக்கார உலகில்தான் நானும் வாழ வேண்டி உள்ளது.  இந்தப் பைத்தியக்காரத்தனத்தை சீரியஸாக எடுத்துக்கொண்டு , அதை எதிர்த்து எழுத ஆரம்பித்தால், நானும் மெண்டலாகி விடுவேன்.  அந்த அளவுக்கு சிக்கலான, நுட்பமான கடும் பைத்தியக்காரச் சூழல் நிலவுகிறது. என்ன செய்வது என்று புரியாமல் நானும் ஐக்கியமாவதுதான் மெண்டலாகாமல் இருக்க ஒரே வழி என முடிவு செய்து ,

திரிஷா,  பாபிலோனா, தலைவா, ஆதி பகவன்,  லிங்கா, ஐ, ரஜினி, கமல், குஷ்பு, ஷகிலா என அவ்வப்போது எதையாவது எழுதித் தள்ளி விடுகிறேன். மற்ற போஸ்டுக்களை விட இதற்கு ஆதரவு அதிகம் .

இந்த போஸ்டை உங்களின் பிளாகுக்கு பதில் என எடுத்துக் கொள்ள வேண்டாம். உங்கள் கருத்துதான் என் கருத்தும் .இதை என்னுடைய புலம்பலாக எடுத்துக் கொள்ளலாம்.

பார்த்தீர்களா ? ஒரு முறை நீங்கள் எழுத்தாளர் என்று சொல்லி விட்டதாலேயே புலம்ப ஆரம்பித்து விட்டேன். இந்தத் தமிழ் நாட்டில் எழுத்தாளர் என்று சொல்லி என்ன ஆகப் போகிறது ? நான் பாட்டுக்கும் ஜாலியாக இருந்து விட்டுப் போகிறேன்.

இதுவரை உங்களிடம் கோரிக்கை எதுவும் வைத்ததில்லை. இனி மறந்தோ , வாய் தவறியோ , கெட்ட வார்த்தையில் திட்ட வேண்டும் என்று தோன்றுகையிலோ கூட என்னை எழுத்தாளர் என்று கூறி விட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்த முறை பிரியங்கா சோப்ரா பற்றி போஸ்ட் போடும்போது செட்டிங்ஸ் மூலம் உங்கள் கண்ணுக்குத் தெரியாமல் பார்த்துக் கொள்வேன் smile emoticon

இப்படிக்கு,

அராத்து.