சமீபத்தில் நடந்த வாசகர் வட்டக் கூட்டம் பற்றி செல்வகுமார் எழுதியிருந்தது:
அராத்துவும் சாருவும் இதர நண்பர்களும் பேசிக் கொண்டிருந்தார்கள். நான் (வழக்கம்போல) சற்று தாமதமாக அங்கே சென்றேன். மேஜையின் மீது பாப்கார்ன், தண்ணீர், திராட்சை (ரசம் இல்லை)…. அவ்ளோதான்.
சாரு சிரித்துக் கொண்டே ‘பாருங்க செல்வா, உங்களை மாதிரி, வெறுமனே இதையெல்லாம் சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன்’ என்றார்
பிறகு ஓரிரண்டு நண்பர்கள் மது அருந்தினார்கள். சாருவிடம் சலனமே இல்லை. நண்பர்களுடன் சிறிது நேரம் கொடூரமாக ‘சராசரி லவ்கீக’ சமாச்சாரங்களை பேசிக் கொண்டிருந்தோம். சாருவிடம் அதற்கும் சலனம் இல்லை.
இதுமாதிரி சூழலில் ஒரு வாசகர் வட்ட சந்திப்பு நடத்தினால் ரகளையாக இருக்கும். என்னால் சுண்டுவிரல் அசைக்கக் கூட இப்போது திராணியில்லை. (வேலையில்லாத சவரத் தொழிலாளி…..மாதிரி கொஞ்சம் பிஸி) ஆனால், அப்படி நடத்தினால் விஷ்ணுபுரமே அதிர்ச்சியாகி டாஸ்மாக் தேட ஆரம்பித்து விடும் என்றும் தோன்றுகிறது.
***
செல்வாவின் குறிப்பு முடிந்து விட்டது. இனி நான்.
நண்பர்கள் பேசிக் கொண்டிருந்த லவ்கீக சமாச்சாரம் உண்மையில் எனக்கு உள்ளுக்குள் பெரும் கலவரத்தையே ஏற்படுத்திக் கொண்டிருந்தது. ஒருத்தர் இன்னொருத்தரிடம் கேட்கிறார்.
”எப்பிடிப் போவுது?”
“டெய்லி மூணு ரூவா நட்டம்.”
“மூவாயிரமா?”
“ஆமா.”
“அப்போ பரவால்ல.”
”உங்களுக்கு?”
“முன்னேல்லாம் மாசம் ரெண்டு லட்சம் பிஸினஸ் ஆவும். இப்போ இருபதாயிரத்துக்குத்தான் ஆவுது. என்ன பண்றதுன்னே தெரில… வேற பிஸினஸ் பண்லாமான்னு யோசிச்சிக்கிட்டு இருக்கேன்.”
***
Comments are closed.