ஒரு வாரமாக ஆளைக் காணாமே?

ஒரு வாரமாக ஆளைக் காணோமே, சாருஆன்லைனில் எதுவும் எழுதவில்லையே என்று பல நண்பர்கள் எனக்கு எழுதிக் கேட்டிருந்தனர்.  ஆனால் நான் விசாரித்த வரை பெரும்பாலான நண்பர்கள் அந்திமழையில் வாராவாரம் நான் எழுதும் கேள்வி பதில் பகுதியையும், புதிய தலைமுறையில் வாராவாரம் எழுதும் தொடரையும் படிப்பதில்லை என்று அறிந்தேன்.  அந்திமழைக்கு லிங்க் தருகிறேன்.  புதிய தலைமுறை ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமையும் கடைகளில் கிடைக்கும்.  வாங்கிப் படிக்க வேண்டியதுதான்.  விகடனில் மனம் கொத்திப் பறவை எழுதிய போது எவ்வளவு உழைத்தேனோ அந்த அளவுக்கு புதிய தலைமுறை இதழ் தொடருக்காகவும் பல மணி நேரங்களை செலவிடுகிறேன்.   பின்வருவது அந்திமழையில் இன்று வெளிவந்த கேள்வி பதில்களின் ஒரு பகுதி.  மீதியை அந்திமழையில் வாசிக்கலாம்.  இணைப்பு கொடுத்திருக்கிறேன்.  அந்திமழையில் இன்று வெளிவந்திருக்கும் பகுதி 24-ஆவது வாரம்.

http://andhimazhai.com/news/view/charu-24.html

புத்தக விழாவின் கடைசி நாள் அன்று என் நீண்ட நாள் நண்பனைப் பார்த்தேன்.   வெளிநாட்டில் வாழ்கிறான்.  பார்த்துச் சில ஆண்டுகள் ஆகிறது.  உயிர்மை அரங்கிலிருந்து என்னை அழைத்தான்.  சென்றேன்.  முன்னிரவு எட்டு மணி.  கடும் போதையில் இருந்தான்.  அன்று காலைதான் சென்னை வந்து இறங்கியிருக்கிறான்.  இறங்கியதிலிருந்தே குடி.  குடிப்பது அவரவர் இஷ்டம்.  ஆனால் நிற்கக் கூட முடியாமல் ஒரு பொது இடத்துக்கு வரலாமா?  சரி, அதுவும் அவன் இஷ்டம்.  வந்தவன் என்னை அன்று இரவு இலக்கியம் பேசுவதற்கு அழைத்தான்.   எப்படிப் போவது?  அவன் இருக்கும் நிலை வேறு; என் நிலை வேறு.  என்னவென்று பேசுவது?
நான் குடிப்பதை நிறுத்தி விட்டேன் என்றேன்.  வா; சாப்பிட்டுக் கொண்டே பேசலாம் என்றான்.  கட்டாயப்படுத்தினான்.  எனக்கோ தர்மசங்கடமாக இருந்தது.  அவனைப் பார்க்கவும் பேசவும் எத்தனையோ ஆர்வமாக இருந்தேன்.  ஆனால் அவனோ நான் சொல்லும் எதையுமே புரிந்து கொள்ள முடியாத நிலையில் இருந்தான்.   பத்து நிமிடம் வந்து விட்டுப் போவதில் உனக்கு என்ன ஆகி விடும் என்று பயங்கர அன்புடன் திட்டினான்.  பத்து நிமிடம் பத்து மணி நேரம் ஆகி விடும் என்று எனக்குத் தெரியும்.  நானோ அன்று இரவு அந்திமழைக்கு பதில்கள் எழுதி அனுப்ப வேண்டும்.  இன்னொரு பத்திரிகைக்கும் எழுத வேண்டும்.  இப்படி திடீரென்று வந்து அழைத்தால் எப்படி?
என் வாழ்நாளில் இதுவரை ஒருமுறை கூட  முன்கூட்டியே தெரிவிக்காமல் அனுமதி கேட்காமல் யாரையும் சந்தித்தது இல்லை.  ஒருமுறை கூட அப்படி நடந்ததில்லை.
எப்படித் தப்பிக்கலாம் என்று பார்த்தாலும் “என்ன, ஓடிடலாம்னு பார்க்கிறியா, விட மாட்டேன்” என்று ஓங்கி நின்றான் நண்பன்.   அரை மணி நேரம் ஆகியது.  பிறகு கடுமையான குரலில் வர முடியாது என்று சொல்லி விட்டு வந்தேன்.  வருத்தமாக இருந்தது.
சந்திக்காதது அல்ல; அவன் எழுதிய கேள்வி பதில் ஒன்றில் அவன் என்னுடைய முதல் நாவல் தவிர வேறு எதுவும் இலக்கியமாகத் தேறாது எனவும் இன்று தமிழிலேயே கூர்மையாக எழுதுபவர் ஜெயமோகன் ஒருவர் தான் என்றும் எழுதியிருந்தான்.  மிகவும் நல்லது. ஆனால் சரக்கு அடித்தால் மட்டும் ஏன் இந்த நண்பர்களுக்கு என் நினைவு வந்து தொலைக்கிறது என்பதுதான் எனக்கு வருத்தமாக இருந்தது.