சென்னை

யாதும் ஊரே; யாவரும் கேளிர் என்றான் சங்கக் கவிஞன்.  ஆனால் அதெல்லாம் நம்முடைய நினைவுச் சின்னங்களில் பொறித்துக் கொள்வதற்காக மட்டுமே நம்மிடம் இருக்கும் அலங்கார வார்த்தைகள்.  தங்களின் பிறந்த ஊர், வளர்ந்த ஊர்களைப் பற்றி மக்கள் கொண்டிருக்கும் வெறித்தனமான பற்றுதலைப் பார்க்கும் போது எனக்கு அச்சமாக இருக்கிறது.  சில எழுத்தாளர்கள் தாங்கள் பிறந்து வளர்ந்த ஊர்களைப் பற்றி எழுதியிருப்பதைப் படித்து விட்டு அந்த ஊரைப் பார்க்கும் போது அதிர்ச்சியாக இருக்கும்.  தண்ணீர் வசதியே இல்லாமல் வெறும் கட்டாந்தரையும் அனல் கக்கும் வெக்கையும் கூடிய அந்தப் பாறை நிலத்தை ஏதோ சொர்க்க பூமியைப் போல் எழுதியிருந்தாரே எழுத்தாளர் என வியந்திருக்கிறேன்.  அழகு காண்பவரின் கண்களிலே இருக்கிறது என்ற ஆங்கிலப் பழமொழிதான் ஞாபகம் வரும்.  ஊர்களைப் பற்றி எனக்கு அப்படி ஒரு உணர்ச்சிகரமான பற்றுதல் கிடையாது.  (ஏன், எந்த விஷயத்தின் மீதுமே கிடையாது.)  ஆனாலும் சில எழுத்தாளர்கள் தங்களின் படைப்புத் திறன் காரணமாக சில நகரங்களையும், ஊர்களையும் நம்முடைய சொந்த ஊர்களாகவும் சொந்த மண்ணாகவும் மாற்றி விடுகிறார்கள்.  மரியோ பர்கஸ் யோசாவின் (Mario Vargas Llosa) லீமா நகரின் Miraflores அப்படிப்பட்ட தகுதியைப் பெற்றிருக்கிறது.  அடுத்து, நம் எல்லோருக்கும் தெரிந்த ஓரான் பாமுக்கின் பனி நாவலில் வரும் Kars என்ற நகரம்.  அந்த நாவலில் கார்ஸ் நகரம் தான் பிரதான கதாபாத்திரம்.  அதனாலேயே அந்நகரத்தைப் பார்க்க மேற்கத்திய பயணிகள் வந்து குவிகின்றனர்.  பாமுக்கின் இஸ்தம்பூல் என்ற பெரிய சுயசரித நூலைப் படித்து விட்டு உடனடியாக இஸ்தம்பூல் சென்று வந்தேன்.  தமிழில் அசோகமித்திரனின் பதினெட்டாவது அட்சக்கோடு நாவலில் காணும் ஹைதராபாத் காவிய நயம் மிக்கது.  இப்படி எத்தனையோ நகரங்களும் ஊர்களும் நம் மனதில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் அன்றாடம் நாம் பார்த்துக் கொண்டும் வாழ்ந்து கொண்டும் இருக்கும் ஊருக்கு ஒரு விசேஷ இடம் இருக்கத்தான் செய்கிறது இல்லையா?

பதினைந்து ஆண்டுகள் தில்லியில் வாழ்ந்து விட்டு சென்னைக்கு வந்து இப்போது எனக்கு 25 ஆண்டுகள் ஆகி விட்டன.  ஆரம்பத்தில் ஏற்பட்ட மனத்தோற்றங்கள் இப்போதும் மாறி விடவில்லை.  Hot, hotter, hottest என்ற இந்த ஊரின் சீதோஷ்ணமும், ஜனநெரிசலும்தான் சென்னை பற்றி என் மனதில் படிந்த சித்திரங்கள்.  அதில் இன்று வரை எந்த மாற்றமும் இல்லை.  எறும்புக் கூட்டம் போல் மொய்த்துக் கொண்டும், ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டும் கூட்டம், கூட்டம், எங்கு பார்த்தாலும் கூட்டம்.  இதற்கு ஆட்சியாளர்களே காரணம்.  உலகின் பெருநகரங்களோடு சென்னையை ஒப்பிட்டுப் பார்த்தால் இதை நாம் புரிந்து கொள்ளலாம்.  ஒரு நகரம் மக்கள் லகுவாக வாழ்வதற்கு ஏற்ற இசைவான சூழலை அளிக்கிறதா இல்லையா என்பது அந்நகரைச் சுற்றி வளரும் துணை நகரங்களையும் பொறுத்தே இருக்கிறது.  சென்னைக்கு அப்படிப்பட்ட துணைநகரங்கள் இல்லை.  திருமழிசையில் துணைநகரம் அமைப்பது அரசியலாகி இப்போதுதான் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக அறிகிறோம்.

கிராமங்களில் வாழ்வது சாத்தியமில்லாமல் போனதால் மக்கள் கூட்டம் நகரங்களை நோக்கிப் புலம் பெயர்வதுதான் ஒரு நகரம் எதிர் கொள்ளும் மிகப் பெரிய பிரச்சினை.  அப்படி வரும் மக்கள் கூட்டத்தை தன்னிடம் வாங்கிக் கொள்வதற்கான எந்த அடிப்படை வசதியையும் சென்னை நகரம் கொண்டிருக்கவில்லை.  இங்குள்ள சேரிகளே அதற்கு சாட்சி.  நான் வாழும் மைலாப்பூருக்கு அருகில் உள்ள நொச்சிக்குப்பத்தில் உள்ள குப்பை கூளங்களையும் அதன் சுற்றுப்புறத்தையும் பார்க்கும் போது என் மனம் பதறுகிறது.  ஹிட்லரின் வதை முகாம்களை விடவும் மோசமான ghettos-ஆகத் தோற்றம் அளிக்கின்றன சேரிகள்.  மடிப்பாக்கம் போன்ற புறநகர்ப்பகுதிகளும் இந்தச் சேரிகளை விட எந்த விதத்திலும் மேம்பட்டதல்ல.  ஒரு மழைப் பருவத்தில் நடந்த ஒரு சம்பவத்தை என்னால் எப்போதும் மறக்க இயலாது.  சென்னையின் பிரபலமான கல்லூரி ஒன்றில் பேராசிரியையாகப் பணி புரியும் என் வாசகி ஒருவர் புறநகர்ப்பகுதி ஒன்றில் வசித்தார்.  திடீரென்று ஜுரம் என்று கல்லூரி போகவில்லை.  ஒரே வாரத்தில் கல்லூரிக்கு அவரது மரண செய்தி வந்தது.  டெங்கு போன்ற ஏதோ ஒரு காய்ச்சல்.  சவ அடக்கத்துக்காக அவர் வீட்டுக்குப் போன போது மிகப் பெரிய அதிர்ச்சியால் தாக்குண்டேன்.  சேறும் சகதியும் புல்லும் புதருமாக – சரித்திரத்தில் இருண்ட காலம் என்று சொல்வார்களே – அப்படிப்பட்டதொரு காலத்துக்குப் போய் விட்டது போல் இருந்தது.  அந்தச் சூழலில் உயிர் பிழைத்திருந்தால்தான் ஆச்சரியம்.  பெண்ணுக்கு 25 வயது கூட ஆகியிருக்காது.  கல்லூரிப் பேராசிரியைகள் அத்தனை பேரும் ஒரு பஸ்ஸில் வந்து இறங்கிய போது அந்தப் பெண்ணின் தந்தை கதறிக் கொண்டே சொன்னார் ஒரு வார்த்தை, அதை என்னால் வாழ்நாளில் மறக்க இயலாது.  ”எம் பொண்ணு கல்யாணத்துல தான் உங்க எல்லாரையும் பார்ப்பேன்னு நினைச்சேன் தாய்ங்களா… இப்போ எம் பொண்ணு பொணத்தைப் பாக்க வந்துட்டீங்களே…”

இதுதான் எனக்குத் தெரிந்த சென்னை.  இப்படிப்பட்ட ஒரு மாநகரத்தை உருவாக்கி வைத்திருப்பதற்காக நம் ஆட்சியாளர்கள் அவமானப்பட வேண்டும்.  ஆனால் இது பற்றி யார் கவலைப்படுவது?  என் வீட்டிலிருந்து நடை தூரத்தில் ஒரு வசிப்பிடம் இருக்கிறது.  ஒரு வனத்தைப் போல் தோற்றமளிக்கும் பகுதி அது.  ஒரு தூசி துரும்பைப் பார்க்க முடியாது.  சூரியனே காணாத அளவுக்கு விருட்சங்களின் அடர்த்தி.  மத்திய லண்டனில் உள்ள ப்ளூம்ஸ்பரியைப் பார்த்திருக்கிறீர்களா, அப்படி இருக்கும் அந்தப் பகுதி.  போட் ஹவுஸ் என்று பெயர்.  இப்படி சென்னையில் அநேக இடங்கள் உண்டு.  லஸ் அருகே உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவைச் சுற்றியுள்ள பல பகுதிகள் சென்னையின் ப்ளூம்ஸ்பரிதான்.  போயஸ் கார்டன் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.

இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகளைப் போக்காத வரை சென்னை பற்றிப் பெருமையாகப் பேசிக் கொள்ள எதுவும் இல்லை.  கிராமங்களிலிருந்து பிழைப்புத் தேடி தினந்தோறும் வந்து இறங்கும் ஆயிரக் கணக்கான மக்களையும் சேர்த்துக் கொண்டு சென்னை நகரம் எதிர் கொள்ளும் இன்னொரு அதிபயங்கரப் பிரச்சினை, போக்குவரத்து.  சமீபத்தில் மோட்டார் சைக்கிள்களில் செல்லும் பயணிகள் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதற்காகக் கொண்டு வரப்பட்ட சட்டம் இப்போது வெறும் புத்தகத்தில் தான் இருக்கிறது என்பதை அறிவீர்கள்.  ஆரம்ப ஜோரும் வீராவேச நடவடிக்கைகளும் காற்றில் பறக்கின்றன.  திரும்பவும் குடும்பம் குடும்பமாக ஸ்கூட்டர்களில் பயணிக்க ஆரம்பித்து விட்டனர் மக்கள்.  ஒரு ஸ்கூட்டரில் குறைந்த பட்சம் நான்கு பேர்.  காரணம் என்ன?  அவர்கள் பஸ்ஸிலோ மெட்ரோ ரயிலிலோ வசதியாகப் பயணம் செய்வதற்கு இங்கே வாய்ப்பு இல்லை.  இரண்டு குழந்தைகளைக் கொண்ட ஒரு குடும்பம் டவுன் பஸ்ஸில் அல்லது மின்சார ரயிலில் பயணம் செய்வது பற்றி உங்களால் யோசித்துக் கூட பார்க்க முடியாது.  ஆனால் ஐரோப்பிய நகரங்களில் குடும்பமே ஸ்கூட்டரில் போகும் காட்சியை நீங்கள் காண முடியாது. சொன்னாலும் நம்ப மாட்டார்கள்.  மூன்று நிமிடத்துக்கு ஒரு பஸ்ஸையும், மெட்ரோ ரயிலையும் நீங்கள் அங்கே பிடிக்க முடியும்.  இங்குள்ள பேருந்துகளைப் பார்க்கும் தோறும் எனக்கு ஹிட்லரின் வதைமுகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரயில் பெட்டிகள்தான் ஞாபகம் வருகிறது.  அப்பேர்ப்பட்ட கொடூரமான அனுபவத்தையே சென்னை பஸ்களும் மின்சார ரயில்களும் நமக்கு அளித்துக் கொண்டிருக்கின்றன.  மக்களின் அன்றாடப் போக்குவரத்துக்கான அடிப்படை வசதிகள் செய்யப்படும் வரை சென்னை ஒரு Auschwitz-ஆகத்தான் காட்சி அளித்துக் கொண்டிருக்கும்.

இப்படி இல்லாமல் ஒரு நகரம் தன் ஜீவனையும் சௌந்தர்யத்தையும் இழக்காமல் இருக்க வேண்டுமானால், நகரத்தில் இருக்கும் வசதிகள் அனைத்தும் கிராமங்களிலும் கிடைக்க வேண்டும்.  உதாரணமாக, பாரிஸ் நகரை எடுத்துக் கொண்டால் அங்கே இருக்கும் சூப்பர் மார்க்கெட், சினிமா, பள்ளிக்கூடங்கள், வீட்டு வசதி, போக்குவரத்து என்ற அத்தனை வசதிகளும் ஃப்ரான்ஸின் தென்கோடியில் உள்ள தூலுஸ் என்ற சிறுநகரிலும் கிடைக்கும்.  இரண்டு நகர்களிலும் நான் இருந்திருக்கிறேன்.  பாரிஸில் கிடைக்கும் அதே காஃபி அதே விலையில் (இது முக்கியம்) தூலுஸில் கிடைத்தது.  எனவே இப்போது பாரிஸ் நகரவாசிகள் (பிற தேசங்களிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் அல்ல; காலம் காலமாக அங்கே வசிக்கும் உள்ளூர்வாசிகள்) கொஞ்சம் கொஞ்சமாக கிராமங்களையும் சிறு நகரங்களையும் நோக்கி நகர ஆரம்பித்து விட்டார்கள்.

எப்படி இருந்தாலும், எந்த ஒரு நிலப்பகுதியும் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட இருள்களினூடே கூட தனக்கான அற்புதங்களையும் கொண்டிருக்கத்தான் செய்கின்றன.  அப்படிப் பார்த்தால் சென்னையின் அற்புதங்கள் என எதையெல்லாம் சொல்லலாம்.   முதலாவதாக நான் சொல்லக் கூடியது நொச்சிக்குப்பம் மீன் மார்க்கெட்.  நீங்கள் சைவ உணவுக்காரராகவே இருந்தாலும் இந்த மார்க்கெட்டை ஒரு ஞாயிறு காலையில் பார்க்க வேண்டும்.  அது ஒரு வாழ்க்கை. இப்படி ஒரு மாலை நேரத்து எட்வர்ட் எலியட்ஸ் பீச், நண்பகல் நேரத்து எழும்பூர் அருங்காட்சியகம், மாலை நேரத்து நேப்பியர் பாலம்… அப்புறம் இரவு நேரத்துச் சென்னை பற்றித் தனியாக ஒரு கட்டுரை தான் எழுத வேண்டும்.  சமீபத்தில் ஆலந்தூரில் உள்ள சாங்கு சித்தரின் ஜீவசமாதிக்கு ஒரு பௌர்ணமி இரவில் சென்றிருந்தேன்.  சென்னையின் அற்புதங்களில் ஒன்றான கானா பாடல்களில் அந்த இரவு முழுவதும் திளைத்திருந்தேன்…

(இந்தக் கட்டுரையின் சுருக்கப்பட்ட பகுதி தி இந்துவில் வெளிவந்திருந்தது.  தி இந்துவுக்கு நன்றி.)