குடும்ப நலச் சட்டங்கள் (2)

சில தினங்களுக்கு முன்பு பதிவிட்ட படித்ததில் பிடித்தது என்ற கட்டுரையை இதன் முதல் பகுதியாகக் கொள்ளவும்.  ஒரு வாசகியிடமிருந்து இதற்கு மறுப்பாக ஒரு கடிதம் வந்துள்ளது.  அதற்கும் பதில் எழுத வேண்டும்.  நேரம் கிடைக்கும் போது எழுதுவேன்.  பெண்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பு இல்லை; சமூகத்திலும் குடும்பத்திலும் பெண்கள் எத்தனையோ வேதனைகளுக்கும் இன்னல்களுக்கும் ஆளாகிறார்கள்.  என் வாசகி ஒருவரை அண்ணா சாலையில் எதேச்சையாகச் சந்தித்த போது எப்படி இருக்கிறீர்கள் என்று சாதாரணமாக விசாரித்தேன்.  அதற்கு அவர் முந்திலாம் அடிச்சிக்கிட்டிருந்தான்; இப்போ அடிக்கிறதில்லை என்றார் சர்வ சாதாரணமாக.  அவர் குறிப்பிட்டது அவர் கணவரை.  ஆனால் அவர் சொன்ன அடுத்த வாக்கியம் அதை விட பயங்கரம்.  மாமியார் அடிக்கிறாராம்.  போலீஸுக்குப் போவேன் என்றால் போய்க்கோ, என்னை நீ ஜெயில்ல போட்டாலும் உன்னை உதைக்காம விட மாட்டேன் என்று சொல்லி அடிக்கிறார் மாமியார்.  வாசகியும் வாசகியின் கணவரும் மத்திய அரசு ஊழியர்கள்.

ஒருமுறை என் நண்பன் ஒருவனை அவன் மனைவி விவாகரத்து செய்தார்.  15 ஆண்டுகளுக்கு முந்திய கதை.  அவன் செய்த குற்றம், ஸீரோ டிகிரி நாவலை தன் இளம் மனைவியிடம் படிக்கக் கொடுத்ததுதான். என் மீதும் போலீஸ் விசாரணை நடந்தது.  ஐயோ சாமி ஆளை விடுங்கோ, இனிமே நான் எழுத்து பக்கமே போமாட்டேன் என்று சொல்லி விட்டு ஓடி வந்தேன்.  அப்படியும் விடவில்லை.  பிறகு போலீஸ் துறையில் இருந்த ஒரு எழுத்தாளரைப் பிடித்து அவர் தயவில் தப்பினேன்.  கீழே வாசகர் கடிதம்:

அன்புள்ள சாரு,

நல்ல பதிவு. விவாகரத்து தொடர்பான சட்டங்கள் நம்மூரில் இன்னமும் மிகக்குழப்பமாகவும் பெண்களுக்கு ஆதரவாகவுமே உள்ளன என்பது ரகசியமல்ல.

மிகக்குறிப்பாக ”வரதட்சணை கேட்டான்” என்று ஒரு புகார் கொடுத்தால் எந்த கேள்வியும் கேட்காமல் தாலி கட்டியவன், அவன் பெற்றோர், சகோதர சகோதரிகளோடு உள்ளே தள்ள முடியும். இந்த பொய் வழக்கால் கணவனின் அமெரிக்கவாழ் நண்பன் ஒருவனும் வழக்கில் உள்ளிழுக்கப்பட்டு, அவன் எதேச்சையாய் ஊருக்கு விடுமுறையில் வந்து, விசாவை புதுப்பிக்கச்சென்ற இடத்தில் மேற்படி வழக்கால் விசா மறுக்கப்பட்டு, எப்படியோ தட்டுத்தடுமாறி தனது தரப்பை நிரூபித்து அமெரிக்கா திரும்ப நேர்ந்த கதையை என் தெலுகு சகா கூறக்கேட்டிருக்கிறேன்.

இதில் மிகக்குறிப்பாக இணையத்தில் படித்த மூன்று சட்டங்கள் கொடூரமானவை :

1. விவாகரத்தான பின் பெண் எப்போதுவேண்டுமானாலும் வந்து பணம் கேட்டு வழக்கு தொடுக்கலாம்.
2. முன்னாள் கணவனின் பரம்பரை சொத்திலும் பங்கு கேட்டு வழக்கு தொடுக்கலாம். (இது என்ன கொடுமை, கணவனின் சம்பாத்யத்தில் பங்கு கேட்டால் நியாயம். அவன் அப்பன் சம்பாதித்ததில் பங்கு கேட்டால்கூட, அப்பனின் சொத்தில் மகனுக்கும் பங்குண்டு என்ற கணக்கில் (எனக்கு இதில் ஒப்புதல் இல்லாவிட்டாலும் கூட) கொஞ்சம் லாஜிக் இருக்கிறது. ஆனால் அவன் பாட்டன், முப்பாட்டன் சம்பாதித்த சொத்திலும் பங்கு கேட்பேன் என்றால், நோகாமல் நோம்பு கும்பிடும் மனப்பான்மைதான் தெரிகிறது.

இதுதான் உச்சகட்ட கொடும் சட்டம் :

3. ஒரு மனைவி மண உறவில் இருக்கும்போது கணவனுக்கு துரோகம் செய்து முறைதவறிய உறவில் ஈடுபட்டால்,  அதை காரணம் காட்டி கணவன் விவாகரத்துக்கு விண்ணப்பித்தால், விவாகரத்து தராமல் மனைவி மறுக்க முடியும்.

ஆனால் ..

இதே முறை தவறிய உறவில் கணவன் ஈடுபட, மனைவி அதை காரணம் காட்டி விவாகரத்து வழக்கு தொடர்ந்தால் கணவன் விவாகரத்து கொடுத்தே ஆகவேண்டும், மறுக்க முடியாது.

மேற்படி சட்டங்கள் குறித்து வழக்கறிஞர்கள்தான் விளக்கவேண்டும். நான் இணையத்தில் படித்ததோடு சரி.

இணையத்தில் மருமகள் என்று ஒரு வலைப்பதிவு மணமான கணவன்களையும் அவன் வீட்டாரையும் எப்படியெல்லாம் சட்டரீதியாக காயடிக்கலாம் என்று வகுப்பே எடுக்கிறார்கள். ”498A misuse” என்று கூகுள் செய்துபாருங்கள் புரியும்.

அன்புடன்,

அமிதாப் பச்சன்,

மும்பை.

பி.கு : உங்களது தளத்தில் இதை வெளியிடவேண்டுமென நினைத்தால் எனது பெயரையும் ஊரையும் நீக்கிவிட்டு வெளியிடவும் 🙂

(பெயரையும் ஊரையும் நீக்குவதற்கு பதிலாக இரண்டையும் மாற்றிப் போட்டு விட்டேன்.)