என்னுடைய எழுத்தின் மீது பிரியம் கொண்ட சில நண்பர்கள் ஏற்படுத்திய அமைப்பே வாசகர் வட்டம். இதற்கு முன்னாலும் ஒரு வாசகர் வட்டம் இருந்தது. லட்சுமி கிருஷ்ணமூர்த்தி நிறுவிய வாசகர் வட்டம். க்ரியா பதிப்பகத்துக்கும் முன்னால் அதற்கு ஒரு முன்னோடியாக இருந்த வாசகர் வட்டம் அது. நல்ல புத்தகங்களைப் பதிப்பிப்பது அந்த வாசகர் வட்டத்தின் நோக்கமாக நடைமுறையாக இருந்தது.
என் வாசகர் வட்டத்தைப் பற்றி எனக்கு நெருக்கமான பலரே அவதூறாகப் பேசும் போது வேதனையாக உள்ளது. என் வாழ்வின் மிக முக்கியமான நபரே பல நூறு முறை வாசகர் வட்டத்தைப் பற்றி மட்டமாகப் பேசுவதைக் கேட்டு மௌனம் சாதித்திருக்கிறேன். எடுத்துச் சொல்லலாம் என்றால் அதைப் புரிந்து கொள்ளவோ ஒத்துக் கொள்ளவோ குறைந்த பட்சம் நான் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்கவோ கூட சிறிதும் மனம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். ஒரு தாலிபானிடம் போய் நீங்கள் அகிம்சை பற்றிப் பேச முடியுமா, அப்படிப்பட்ட மூடிய கதவாக இருக்கின்றன அவர்களது மனம்.
பாஸ்கர் என்ற நண்பர். இப்போது திருவனந்தபுரத்தில் இருக்கிறார். முன்பு வாசகர் வட்டத்தின் பொறுப்பாளர். அவரும் அராத்துவும் சேர்ந்து காமராஜர் அரங்கில் என்னுடைய புத்த்க வெளியீடுகளை எத்தனை முறை நடத்தியிருக்கிறார்கள் தெரியுமா? எப்பேர்ப்பட்ட காரியம் அது! இப்போது என் உறவினர் ஒருவர் சொல்கிறார், சென்ற முறை காமராஜர் அரங்கில் மேடையில் சீனிவாசனும் ஒரு பெண்ணும் பேசியது சிவகார்த்திகேயனையும் சந்தானத்தையும் பார்ப்பது போல் இருந்தது; மேடையில் ஏறி சீனிவாசனை அடிக்க வேண்டும் போல் இருந்தது என்று சொன்னார். சொன்ன நபர் என் எழுத்துக்காக இதுவரை ஒரு துரும்பையும் எடுத்துப் போட்டதில்லை. ஆனால் சீனிவாசன் தான் நான் செய்யும் பயணங்கள் அனைத்தையும் ஒருங்கிணைக்கிறார். விமான டிக்கட் எடுத்துக் கொடுக்கிறார். ஆனால் அவர் நடுத்தர வர்க்கம். எனக்கு விமான டிக்கட் எடுத்துக் கொடுத்து விட்டு அவர் ரயிலில் போவார். எவன் செய்வான் இதுபோல்? சீனிவாசனை அடிக்க வேண்டும் போல் தோன்றிய நபர் செய்வாரா? இரண்டு ஆண்டுகள் எனக்கு மாதாமாதம் 4000 ரூ செலவு செய்து மருந்து வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அவர் எனக்கு செய்து கொண்டிருக்கும் உதவிகளைப் பட்டியல் இட்டால் அதற்கு ஒரு டஜன் பக்கங்கள் தேவை. இதையெல்லாம் விட முக்கியமாக, என்னுடைய think tank அவர். சோவிடம் பேசுங்கள்; துக்ளக்கில் எழுத முடியும் என்றார். பேசினேன். ஆறு மாதம் எழுதினேன். துக்ளக்கில் எழுதிய ஒரே எழுத்தாளன் நான் தான். இதைப் போல் ஆயிரம் யோசனைகள். ”சீனி, தற்கொலை செய்து கொள்ளலாம் என்று தோன்றுகிறது. பதிமூணாவது மாடியில் நிற்கிறேன். குதித்து விடவா?” என்று கேட்டேன் ஒருநாள். சமீபத்தில்தான். ஐயோ, ஒரு மாதம் ஒத்திப் போடுங்கள்; மேலும் கடைசி போன் அழைப்பில் என் பெயர் வரும்; என்னைத் தூக்கி உள்ளே போட்டு விடுவார்கள். அப்புறம் பேசிக் கொள்ளலாம். இப்போதைக்குக் கொஞ்சம் Wenjun சாப்பிடுங்கள்” என்றார் ஒருமுறை. ஆக, என் உயிரைக் காத்தவரே அவர்தான்.
பாஸ்கர் இல்லாமல் இப்போது நான் உலக சினிமா பற்றி எழுதுவதில்லை. அவர்தான் எனக்கு உலக சினிமா டிவிடி அளிப்பவர். எங்கெங்கோ போய்த் தேடுவார். அவருக்குப் போலியோவில் ஒரு கால் சரியாக இயங்காது. அந்தக் காலத்தில் அவரிடம் மோட்டார்சைக்கிள் கிடையாது. கட்டையை ஊன்றியபடி பஸ் ஸ்டாண்டிலிருந்து நடந்தே வந்து டிவிடியைக் கொடுத்து விட்டுப் போவார். எவன்யா செய்வான் இதையெல்லாம்? வாசகர் வட்டத்தின் மீது அவதூறு செய்யும் மகாத்மாக்கள் செய்வார்களா? செய்யாத போது மூடிக் கொண்டு கிடக்காமல் என்ன விமர்சனம் தேவை கிடக்கிறது?
இவர்களுக்கெல்லாம் நான் தனித்தனியாக நன்றி பாராட்டுவது இல்லை. ஏனென்றால், என் உயிரையும் கொடுத்து எழுதுகிறேன் அல்லவா, அதுதான் நான் இவர்களுக்குச் செய்யும் நன்றி. சாரு நிவேதிதா என்றால் அது ஒரு ஆள் அல்ல; அது ஒரு இயக்கம். சாரு நிவேதிதா என்ற பெயரில் சீனிவாசன் அடக்கம்; பாஸ்கர் அடக்கம்; இன்னும் நூறு பேர் அடக்கம்.
குஜராத்தில் வசிக்கும் ஷிவா என் மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவர். எக்ஸைல் மொழிபெயர்ப்பில் ஈடுபட்டவர். ஒரு பெரிய தொழிற்சாலையின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர். வீட்டுக்குப் போகவே இரவு பத்து பதினொன்று ஆகும். அதற்குப் பிறகு அதிகாலை மூன்று மணி வரை கண் விழித்து எக்ஸைல் மொழிபெயர்ப்பில் ஈடுபட்டார். இந்தக் காரியத்தின் முக்கியத்துவத்தைத் தன் குழந்தைகளிடமும் மனைவியிடமும் விளக்கி அவர்களின் அனுமதி பெற்று இல்வாழ்விலிருந்து இரண்டு ஆண்டுகள் விடுப்பு எடுத்துக் கொண்டு அந்தப் பணியை முடித்தார். இளைஞர். இளைய மனைவி. இரண்டு ஆண்டுகள் தன் இல்வாழ்க்கையை எனக்காகத் துறந்தார் அந்த மனிதர்… வாசகர் வட்டத்தை அவதூறு செய்ய என் உறவினர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?
ராஜேஷ்.. கருந்தேள். எனக்காகத் தன் வாழ்வின் பல மணி நேரங்களை, நாட்களை, மாதங்களைத் தியாகம் செய்தவர். அவரது உழைப்பின் பலன் தான் இன்று அமேஸான் பதிப்பகத்தின் மூலம் வந்திருக்கும் Morgue Keeper சிறுகதைத் தொகுப்பு. இது உலக இலக்கியப் பரப்பில் கால் வைக்க எனக்கு ஒரு பாஸ்போர்ட். ஏற்கனவே ஸீரோ டிகிரி என்ற அடையாளம் இருந்தாலும். இன்னும் சிலர் இருக்கிறார்கள். பெயரைக் குறிப்பிட முடியாது. எனக்கு என் எழுத்தே உயிர். அந்த உயிருக்கு உயிர் கொடுப்பவர்களே என் மொழிபெயர்ப்பாளர்கள். ஆக, இவர்கள் எனக்குத் தாயைப் போன்றவர்கள். என் வணக்கத்துக்கும் போற்றுதலுக்கும் உரியவர்கள். என் தோலைத்தான் இவர்களுக்கு நான் செருப்பாகத் தைத்துப் போட வேண்டும். இவர்களெல்லாம் தான் வாசகர் வட்டம். வாசகர் வட்டம் என்றால் குடிகாரக் கும்பல் என்று சொல்லும் பதர்களுக்கு இதை எப்படிச் சொல்லிப் புரிய வைப்பது என்றே எனக்குத் தெரியவில்லை. வாசகர் வட்டத்தின் உள் வட்டத்தில் பத்து பேர் இருக்கிறார்கள். இதில் ஆறு பேர் குடிக்க மாட்டார்கள். வாசகர் வட்டம் ஒரு இயக்கத்தையே நடத்திக் கொண்டிருக்கிறது. இதில் ஒருத்தன் குடிக்கிறான் என்பதையே முன்னிலைப்படுத்தி அவதூறு செய்வது என் தாயைப் பழிப்பதற்குச் சமமானது. அப்படிப்பட்டவர்கள் முகத்திலேயே நான் இனி விழிக்க மாட்டேன்.
இதுவரை பத்து புத்தக வெளியீட்டு விழாக்கள் மிகப் பிரம்மாண்டமாக ஐந்து நட்சத்திர விடுதிகளிலும் சென்னையின் மிகப் பெரிய அரங்கமான காமராஜ் அரங்கிலும் நடந்துள்ளது. இதை நடத்திக் கொடுத்தது வாசகர் வட்டம். தலைமைப் பொறுப்பில் இருந்தது பாஸ்கர், பார்த்திபன், செல்வகுமார், கருப்பசாமி, சீனிவாசன், கணேஷ் அன்பு, ராஜேஷ் மற்றும் பலர் பலர் பலர். வாசகர் வட்ட நண்பர் வெளியிட்டு விழாவுக்காக இரவில் போஸ்டர் ஒட்டிய கதையை எக்ஸைல் நாவலிலேயே எழுதியிருக்கிறேன். இப்படியெல்லாம் பலரது உழைப்பில் நடப்பதுதான் என் புத்தக வெளியீட்டு விழாக்கள்.
“இதை எழுதும் போது எனக்கு வருடாவருடம் டிஸம்பர் மாதம் காமராஜர் அரங்கில் நடந்து கொண்டிருந்த என் புத்தக வெளியீட்டு விழாக்களின் ஞாபகம் வருகிறது. பொதுவாக அந்த அரங்கில் முதலமைச்சர், சினிமா நட்சத்திரங்கள் போன்றவர்களின் விழாக்கள்தான் நடக்கும். ஆனால் என் புத்தக வெளியீட்டு விழாக்களிலும் அரங்கம் நிரம்பி வழியும். இதற்குக் கொக்கரக்கோ குறிப்பிட்ட என்னுடைய தற்கொலைப் படை தான் காரணம். ஊரெல்லாம் போய் நோட்டீஸ் விநியோகிப்பது, சுவரொட்டி ஒட்டுவது, கட் அவுட் வைப்பது போன்று அரசியல் தலைவர்களுக்கும், சினிமா ஸ்டார்களுக்கும், ஆன்மீக சூப்பர் ஸ்டார்களுக்கும் அவர்களின் தொண்டர்கள், ரசிகர்கள், பக்தர்கள் செய்யும் காரியங்களை என் வாசகர்கள் செய்தார்கள். நீங்கள் இப்போது படித்துக் கொண்டிருக்கும் இந்த நாவல் 2011 டிஸம்பரில் வெளியானது. வெளியீட்டு விழா வழக்கம் போல் காமராஜர் ஹாலில் நடந்தது. அந்த விழாவுக்காக போஸ்டர் ஒட்டிய தன் அனுபவத்தை என் வாசகர்களில் ஒருவரான பெரியார் சம்பந்தர் இப்படி விவரிக்கிறார்:
”நீண்ட நாட்களாக சொல்ல வேண்டும் என்று நினைத்தேன் இன்று சொல்கிறேன். எக்ஸைல் வெளியீட்டு விழாவுக்காக பல நாட்கள் நூலகங்களிலும், இலக்கிய விழாக்களிலும், பூங்காக்களிலும் நோட்டீஸ் கொடுப்பது, போஸ்டர் ஒட்டுவது போன்ற வேலைகளின் இறுதிக் கட்டமாக விழாவுக்கு முந்தின நாள் இரவு போஸ்டர் ஓட்டுவதற்காக நானும் ராமச்சந்திரனும் ஒரு மணி அளவில் மயிலாப்பூர் சென்றோம். அங்கே அருணும் கார்த்திகேயனும் எங்களிடம் பொறுப்பை ஒப்படைத்தார்கள். அதாவது, போஸ்டர்களையும் போஸ்டர் ஓட்டும் நபர்களையும். நாங்கள் மயிலாப்பூர், மந்தைவெளி, எல்டாம்ஸ் ரோடு என முடித்துக் கொண்டு தி.நகர் பஸ் நிலையம் வந்து சேர்ந்தோம். அப்போது இரவு மணி மூன்று. அங்கே போஸ்டர் ஓட்டுபவர்களை எல்லா சுவற்றிலும் ஒட்டுமாறு சொல்லி விட்டு நாங்களும் ஒட்டிக் கொண்டிருந்தோம். அப்போது என்னோடு நோட்டீஸ் ஒட்டிக் கொண்டிருந்தவர், ’தம்பி, பஸ்ஸு மேல ஒட்டுப்பா’ என்று சொன்னார். சரி, இவர்தான் நோட்டீஸ் ஓட்டும் தொழில் செய்பவராச்சே, இவருக்குத் தெரியும் போல என்று நினைத்துக் கொண்டு நாங்களும் பசையைத் தடவி இரண்டு பஸ்ஸில் ஒட்டினோம். அப்போது அங்கே ஆட்டோ ஸ்டாண்டில் இருந்த ஆட்டோக்காரர்கள் வந்து யாரைக் கேட்டு பஸ்ஸில் ஒட்டினீர்கள் என்றார்கள். நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து விழித்தோம். அதற்குள் எங்களை பஸ்ஸில் ஒட்டச் சொன்ன நபர் (முழு போதையில் இருந்தார்) சென்னை பாஷையில், ’ஆங், கவர்மெண்டுகாரங்கதான் ஒட்டச் சொன்னாங்கோ… இப்ப அதுக்கு இன்னா?’ என்று முறைத்துக் கொண்டு சொன்னார். இது நடந்து கொண்டிருக்கும் போதே ஒருவர் (அந்த ஆட்டோ ஸ்டாண்டின் தாதாவாக இருப்பார் போல) எங்களைப் பார்த்தபடி தன் செல்ஃபோனை எடுத்துப் பேசிக் கொண்டே போனார். சில நொடிகளில் ஒரு பருமனான போலீஸ் வேகமாக வந்து தன் கையிலிருந்த லத்தியால் நண்பரின் புட்டத்தில் ஒன்று போட்டார். நான் செய்வதறியாது ஓடி வந்து சார் சார் ப்ளீஸ் அடிக்காதீங்க என்று சொல்லும் போதே யாரக் கேட்டுடா பஸ்ஸில் நோட்டீஸ் ஒட்டுனீங்க என்றார். நான் சரசரவென ஒட்டியதைப் பிரித்துக் கொண்டே தெரியாமல் நடந்திட்டுது என்று சொல்லி சமாளித்தேன். பிறகு மற்ற ஆட்டோக்காரர்களும் எங்களுக்காகப் பரிந்து பேசி, தப்பு இவங்க மேல இல்ல சார், ஒட்டச் சொன்னது இவங்க அழைச்சிட்டு வந்த ஆளுங்கதான் என்று சொல்லி ஒருவழியாக அந்தப் போலீஸிடமிருந்து தப்பி வந்தது பெரிய பாடாய்ப் போய் விட்டது. நாங்கள் போலீஸிடம் சிக்கிக் கொண்டதுமே எங்களோடு போஸ்டர் ஒட்ட வந்த ஆட்கள் கமுக்கமாக ஆட்டோவை எடுத்துக் கொண்டு கோடம்பாக்கம் சைடு ஓடி விட்டார்கள். பிறகு அவர்களைத் தேடிப் பிடித்து மற்ற போஸ்டர்களையும் ஒட்டுவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. பாதி போஸ்டர்கள் ஒட்டுவதற்குள், ’பசைக்குத் தண்ணீர் தேவைப்படுது; இல்லாட்டா ஒட்ட முடியாது’ என்று சொல்லி ஓடப் பார்த்தார்கள். விடுவோமா? மவுண்ட் ரோடு சந்தில் உள்ள மேன்ஹோலிலிருந்து வந்து கொண்டிருந்த சாக்கடை நீரை எடுத்துக் கொடுத்து ஒட்டச் செய்தோம். அந்த நள்ளிரவில் எங்கு தேடியும் தண்ணீர் கிடைக்கவில்லை. எல்லா வேலையும் முடியும் போது அதிகாலை ஆகி விட்டது. இதை நினைக்கும் போது இப்போதும் சிரிப்பு பிய்த்துக் கொண்டு போகிறது.”
பெரியார் சம்பந்தர் இளைஞர் என்பதால் அவருக்கு விஷயம் புரியவில்லை. அந்தப் போலீஸிடம் ஒரு நூறு ரூபாயை நீட்டியிருந்தால் இளித்தபடி சல்யூட் அடித்து விட்டுப் போயிருப்பார். இருந்தாலும், இப்படிப்பட்ட வாசகர்கள்தான் நான் இன்னமும் தமிழிலேயே எழுதுவதற்கான உந்துதலைத் தந்து கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாக, என் வாசகர் வட்ட நண்பர்களோடு சேர்ந்து கொண்டு அவ்வப்போது நான் உல்லாசப் பயணமும் இலக்கியச் சந்திப்புகளும் நிகழ்த்துவதுண்டு.”
***
கோபி கிருஷ்ணனைப் போல் எப்போதோ ஆதரவற்று செத்துப் போயிருக்க வேண்டிய ஆள் நான். என்னை உயிரோரு வைத்திருப்பதே வாசகர் வட்டம்தான். எனவே ஒருவர் வாசகர் வட்டத்தை அவதூறு செய்தால் நான் உயிர் வாழ்வதை அவர் விரும்பவில்லை என்றே பொருள். ஏனென்றால், உயிர் என்றால் சுவாசம் மாதிரி ஒரு விஷயம் அல்ல எனக்கு. உயிர் என்பது என் எழுத்து. என் இயக்கம். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நைஜீரியாவிலிருந்து என் வீட்டுக்கு வந்து என்னைச் சந்தித்த நண்பர் நான் வைத்துக் கொண்டிருந்த டப்பாவைப் போன்ற கணினியைப் பார்த்து விட்டு பதற்றம் கொண்டு ஒரு கணினி வாங்கிக் கொடுத்தார். அவரை ஒரே ஒருமுறைதான் சந்தித்திருக்கிறேன். அவரும் வாசகர் வட்டம்தான். இன்னொரு நண்பர் எனக்கு மடிக் கணினி வாங்கித் தந்தார். அதை நான் அவந்திகாவின் தேவைக்காகக் கொடுத்திருக்கிறேன். ஒருவர் அலைபேசி. பயணத்திலும் என் நேரம் வீணாகக் கூடாது என்று ஒரு நண்பர் ஐபேட் வாங்கித் தந்தார். இவர்கள் அனைவரும் வாசகர் வட்டம் தான். ஒரு நண்பர் தன் பிள்ளைக்கு வைத்திருந்த கல்லூரிக் கட்டணத்தை என் துருக்கி பயணத்துக்காகக் கொடுத்து விட்டார் என்று எழுதியிருந்தேன் அல்லவா? அவரும் வாசகர் வட்டம். அது பற்றி எழுதியதும் மற்றொரு நண்பர் அந்தப் பணத்தை அனுப்பி வைத்தார். அவரை நான் இரண்டு முறைதான் பார்த்திருப்பேன். எத்தனை லட்சங்களை இவர்கள் எனக்காக இழந்திருக்கிறார்கள் தெரியுமா? ஆனால் மிகச் சுலபமாகச் சொல்கிறார்கள் என் உறவுக்காரர்கள்… “வாசகர் வட்டம் வேஸ்ட்; உங்கள் நேரத்தை வீணடிக்கிறார்கள். Bunch of idiots.” இப்படி வாசகர் வட்டத்தை விமர்சிக்கும் பதர்களுக்கு என்ன தெரியும்? எனக்குத் தொலைபேசிக் கட்டணம் கட்டுவது ஒரு வாசகி; வேஷ்டி சட்டை வாங்கிக் கொடுப்பது ஒரு வாசகர்; என் பயணச் செலவைப் பார்த்துக் கொள்வது ஒரு வாசகர்; என் காலைச் சிற்றுண்டிக்கு ஒரு வாசகர். இப்படியும் என் மருந்துச் செலவுக்கு மாதம் 4000 ரூ துண்டு விழுகிறது. அடிக்கடி சாருஆன்லைனில் என் வங்கிக் கணக்கு எண்ணைத் தருவதைப் பார்க்கும் போதெல்லாம் என் மனம் பதறுகிறது என்றார் என் நண்பர் ஒருவர். ஒரு நண்பர் இந்தக் காரணத்தினாலேயே சாருஆன்லைன் பக்கம் வருவதேயில்லை. இளகிய மனம் கொண்டவர்களால் தன் அன்புக்குரிய எழுத்தாளன் பிச்சை எடுப்பதைப் பார்க்கும் போது எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்?
என் புத்தகச் செலவை ஏற்றுக் கொண்டிருப்பது ஒரு வாசகி. மாதம் சுமார் 5000 ரூ ஆகும். உடனே உறவு சொன்னது; நீங்கள் ஒரு வேஸ்ட். 200 ரூ குடுத்தாலே எல்லா புக்ஸையும் டவுன்லோடு செய்து கொள்ளலாம். அடப்பாவி! எனக்குக் குட்டிச் சுவரோடு உரையாடுவது போல் இருந்தது. என் புத்தகங்களுக்காக மட்டும் பத்து பேர் கெரில்லாப் போராளிகளைப் போல் தேடிக் கொண்டிருக்கிறார்கள். திருநாவுக்கரசு என்று ஒரு நண்பர். எனக்கு மீனின் சிறகுகள் தேவைப்பட்டது. ஒரு மாதமாகத் தேடியும் கிடைக்கவில்லை. டாக்டர் ஸ்ரீராம், திருநாவுக்கரசு, செல்வகுமார் என்று பலரும் தேடினார்கள். கடைசியில் திருநாவுக்கரசு ரோஜா முத்தையா நூலகத்தில் உள்ளதாகச் சொன்னார். அப்படியானால் நான் அங்கே போய் 300 பக்கத்தையும் ஸ்கேன் செய்து வர வேண்டும். 3000 ரூ ஆகும். நல்லவேளையாக கவிஞர் ஆராவிடம் இருப்பதாகத் தெரிவித்தார். ஆராவின் ஊர் போரூர். போரூரில் வசிப்பவர் செல்வகுமார். செல்வகுமாரைத் தொடர்பு கொண்டு பேசினேன். அவர் தன் நண்பர் ஒருவரை ஆரா வீட்டுக்கு அனுப்பி, மீனின் சிறகுகளை வாங்கி என் வீட்டுக்கு வந்து தருவதற்கு ஏற்பாடு செய்தார். போரூரிலிருந்து மைலாப்பூர் ரொம்ப தூரம். இரவு ஒன்பது மணிக்கு அந்த நண்பர் கொண்டு வந்து கொடுத்து விட்டுப் போனார். சமீபத்தில் ஹெலன் சிஸ்யு, இரிகாரே, ஜூலியா க்றிஸ்தவா எழுதிய கீழ்க்கண்ட நூல் தேவைப்பட்டது.
Cixous, Irigaray, Kristeva: The Jouissance of French Feminism (European Writers)
முதலில் ஃப்ளிப்கார்ட்டில் கேட்டார் என் வாசகி. 1200 ரூ. விலை. 15 நாள் ஆகும். 15 நாள் சென்று புத்தகம் இல்லை என்று தகவல். பிறகு அமேஸானில் கிடைத்தது. 1500 ரூ விலை. இன்னும் சில நாட்களில் கிடைக்கும். ஒரு புத்தகம் வாங்குவது இப்படி இருக்கிறது. தமிழில் பல புத்தகங்களை ரோஜா முத்தையா நூலகத்திலிருந்துதான் ஸ்கேன் செய்து எடுத்துப் படிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் உறவோ ஐபேடில் டவுன் லோடு செய்து கொள்ளச் சொல்லி எனக்கு அறிவுரை சொல்கிறது. ம்…
டாக்டர் ஸ்ரீராம். மருத்துவத்தில் மேல்படிப்புக்கான போட்டித் தேர்வுக்குப் படிக்கிறார். இங்கே காசு கொடுத்துச் சேர்ந்தால் ரெண்டு கோடி கொடுக்க வேண்டும். அவர் நடுத்தர வர்க்கம். சகாயம் போல் நேர்மை பேணுகின்றவர். போட்டித் தேர்வு எழுதியே அமெரிக்கா போவேன் என்று சொல்கிறார். தினமும் 18 மணி நேரம் படிக்கிறார். அவர் தன்னுடைய படிப்பை இரண்டு வாரம் ஒத்தி வைத்து விட்டு தினமும் 20 மணி நேரம் என்று உழைத்து என்னுடைய விக்கிப்பீடியா பக்கத்தை உருவாக்கினார். உலகில் எந்த எழுத்தாளனுக்கும் இப்படிப்பட்ட விக்கிபீடியா பக்கம் கிடையாது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு நான் கேரளத்தின் ஒரு மூலையில் உள்ள கிராமத்தில் பேசிய பேச்சின் ஒலிப்பதிவைக் கூட அதில் தேடிக் கொடுத்திருக்கிறார். எப்பேர்ப்பட்ட உழைப்பு இது! அது மட்டும் அல்ல; தன் படிப்பு நேரத்தினூடே தூக்கத்தையும் விட்டு விட்டு எக்ஸைல் நாவலில் பிழைதிருத்தம் பார்த்தார். 1000 பக்கத்துக்குப் பிழை திருத்தம். 150 junk இருப்பது தெரிந்தது. பதிப்பகத்தில் பணிபுரியும் ஒருவர் செய்த தவறு இப்படி முடிந்தது. அதைச் சரி பார்த்தவர் டாக்டர் ஸ்ரீராம். அதிலும் அவர் கண்டு பிடித்த ஒரு பிழை பயங்கரம். Ouragan என்று ஒரு ஃப்ரெஞ்ச் வார்த்தை. இதன் பொருள் சூறாவளி. எக்ஸைலில் வருகிறது. இதை நான் Ouragon என்று எழுதி விட்டேன். இதை ஒரு பிழையாக எழுதியிருந்தார் டாக்டர் ஸ்ரீராம்.
எனக்கு நோபல் கிடைத்தால் கூட அது இப்படிப்பட்ட நண்பர்களுக்கு ஈடாகாது. ஆயிரம் பக்கத்தில் 2 லட்சம் வார்த்தைகளில் ஒரு வார்த்தை ouragan. அதில் o என்று தவறாக விழுந்து விட்ட எழுத்தை மாற்றி a என்று போட வேண்டும் என்று ஒரு நண்பர் எனக்குச் சொல்கிறார் என்றால் இவர்களெல்லாம் யார்? கடவுளால் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள். என் தாயை விட மேலானவர்கள். ஆனால் இவர்களெல்லாம் கீழ்த்தரமானவர்கள்; சாருவைக் கெடுக்கிறார்கள் என்கிறது என் உறவு. வாசகர் வட்டத்துக்கு அதிக நேரம் செலவழிக்கிறீர்கள்; வீட்டுக்கு அல்ல என்றும் சொன்னது உறவு. வேறொரு பெண்ணாக இருந்தால் ஷிவாவை விவாகரத்து செய்திருப்பார்; ஷிவாவின் மனைவி புரிந்து கொண்டார். ஒரு இளைஞர் தன் வாழ்நாளில் தன் இல்லற வாழ்வில் இரண்டு ஆண்டுகளின் இரவை என் எழுத்துக்காகக் கொடுத்திருக்கிறார் என் உறவே, புரிந்து கொள். ஆனால் அப்பேர்ப்பட்ட ஸ்ரீராமை வாசகர் வட்டத்தில் உள்ள சிலருக்குப் பிடிக்காது. அதெல்லாம் அப்படித்தான் இருக்கும். அவர்களுக்கு நான் விளக்கினேன், ஸ்ரீராம் என்னென்ன செய்திருக்கிறார் என்று.
என் எழுத்தை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும் போது ராஜேஷ் நிறைய குடித்தார். பிறகு நிறுத்தி விட்டார். மொழிபெயர்ப்பை. தானாகவே குடியும் நின்றது. ஏன்? நான் ஒரு பித்தநிலையில்தான் என் எழுத்தை உருவாக்குகிறேன். ஏதோ ஒரு பிரபஞ்ச சக்தி என் கைகளை இயக்குகிறது. எழுதுகிறேன். இதை மொழிபெயர்ப்பவரையும் அந்த சக்தி ஆட்படுத்தும் போது அதன் வீர்யம் மனப் பிறழ்வை ஏற்படுத்தி விடுகிறது. அதை சமநிலைப்படுத்தவே குடி தேவைப்படுகிறது.
எப்பேர்ப்பட்ட தியாகம்டா இது! எல்லோருக்கும் மனைவி, குழந்தை குட்டி எல்லாம் உண்டு. டாக்டர் ஸ்ரீராம் மட்டுமே திருமணமாகாதவர்.
செல்வகுமார் பற்றியும் அவரும் கருப்பசாமியும் எனக்காகச் செய்யும் பணிகளைப் பற்றியும் நிறைய எழுத வேண்டும். கணேஷ் அன்பு… எத்தனை இரவுகளை எனக்காகச் செலவு செய்கிறார் தெரியுமா? நேற்று இரவு மூன்று மணிக்கு நான் விருட்சம் கூட்டத்தில் பேசியதை எனக்கு அனுப்பியிருக்கிறார். அதையெல்லாம் ஒழுங்குபடுத்துவதற்கு ஒலி வடிவத்தைச் சீரமைப்பதற்கு எத்தனை மணி நேரம் ஆயிற்றோ! அவர்தான் பல இரவுகளை செலவு செய்து எக்ஸைல் வெளியீட்டு விழா நிகழ்ச்சித் தொகுப்பையும் எடிட் செய்து வெளியிட்டார். டீஸர்களை உருவாக்க அவர் எடுத்துக் கொண்ட நேரம்! இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல பலர் உண்டு. கார்ல் மாக்ஸ், நிர்மல், ஜெகதீஷ்… இவர்கள் மூவரும் என் நண்பர்கள் மட்டுமல்ல; பெறாத பிள்ளைகள். இவர்கள் இல்லையேல் நான் இல்லை. அந்த வகையில் என்னைப் போன்ற அதிர்ஷ்டசாலி எவனும் இல்லை. ஒரே துரதிர்ஷ்டம், இதையெல்லாம் புரிந்து கொள்ளாத என் உறவுகள் வாசகர் வட்டத்தை குடிகாரக் கும்பல் என்று அவதூறு செய்கிறது. பாவம் உறவுகள்.
https://www.youtube.com/watch?v=lnC5uvCq-SQ
https://www.youtube.com/watch?v=LhLxukKsifk
https://www.youtube.com/watch?v=nxENSmBC5S4
https://www.youtube.com/watch?v=8ADtwpzaSxk
https://www.youtube.com/watch?v=9rAvlKdcqqU