மூன்று கவிதைகள்

சனிக்கிழமை காலை ஆறு மணிக்கு எழுதிய மூன்று கவிதைகள்.  சுமார் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு எழுதிய கவிதைகள்.

 

1. மழை

மழை

மழை

மழை

வானிலிருந்து அல்ல

நரகத்திலிருந்து வருகிறேன்

என சொல்லிக் கொண்டு வந்தது

மழை

 

தேவாலய மணி ஒலித்துக் கொண்டே இருந்தது

 

உனக்கு மரணத்தைக் கொண்டு வந்திருக்கிறேன்

என்றபடி

முடிவின்றிப் பொழிந்து கொண்டிருந்த

மழையின் முன்னே மண்டியிடுகிறான்

 

கொஞ்ச நேரத்தில்

கணுக்கால் அளவு

முழங்கால் அளவு

தொடை அளவு

இடுப்பளவு ஏறியதும் மனிதர்கள்

மொட்டை மாடி ஏறினார்கள்

 

வானில் ஹெலிகாப்டர்கள் பறக்கின்றன

உணவுப் பொட்டலங்களுக்காகக் கையேந்தி

பிரதமர் வெள்ளச் சீரழிவைப் பார்க்கிறார்

முதல்வர் வெள்ளச் சீரழிவைப் பார்க்கிறார்

பிளாஸ்டிக் டப்பாக்களில் பச்சிளங்குழந்தைகளை

வைத்துக் கொண்டு நீந்திக் கொண்டிருக்கிறது

மனிதக் கூட்டம்

மழையோ பொழிந்து கொண்டிருந்தது

நூற்றாண்டு உறக்கத்திலிருந்து

விழித்தெழுந்து

***

காற்று இல்லை

இடி இல்லை

மின்னலும் இல்லை

மழை மட்டும்

சீராக

அமைதியாக

தியானத்தைப் போல

எண்ணிக்கையிலடங்கா

நீர்த்தூண்களாக

இரவும் பகலும்

காலையும் மாலையும்

விடாமல் பொழிந்து

கொண்டிருந்தது

நூற்றாண்டு உறக்கத்திலிருந்து

விழித்தெழுந்து

***

மரங்களை

வாகனங்களை

குடிசைகளை

மிருகங்களையும்

தன்னோடு இழுத்துக் கொண்டு

செல்கிறது அணையிலிருந்து கிளம்பிய

நீர்

அப்போதும்

மழை பொழிந்து கொண்டிருந்தது

நூற்றாண்டு உறக்கத்திலிருந்து

விழித்தெழுந்து

***

வீட்டில் தயாரித்த உணவுப் பொட்டலங்களைச்

சுமந்து கொண்டு

செல்கிறது ஒரு

மனிதாபிமான மோட்டார் சைக்கிள்

பாபா கோவில் வாசலில்

எதிரே வந்த போதை மோட்டார் சைக்கிள்

மனிதாபிமானத்தின் மேல் இடித்துத் தள்ள

மனிதாபி

மானத்தின் முகம் கிழிந்து

ரத்தம்

பார்த்தது கனபேர்

போலீஸ் வந்தது

 

சாட்சி சொல்ல யாருமில்லை

பாபாவுக்கும் இஷ்டம்தான்

எழுந்து வரும் பாக்கியம் இல்லை

லோக்கல் தாதாக்களிடம்

முகம் கிழியக் கொடுக்கும்

வீரமில்லா

நானெடுத்தேன் ஓட்டம்

மழை பொழிந்து கொண்டிருந்தது

நூற்றாண்டு உறக்கத்திலிருந்து

விழித்தெழுந்து

 

***

ராமகிருஷ்ணா மடத்துக்காரர்கள்

எங்கள் ஏரியாவுக்கு வந்து

ப்ரெட் கொடுத்தார்கள்

நொச்சிக்குப்பம் கடற்கரையில்

பழந்துணியாய் ஒதுங்கிக் கிடக்கிறது

மூன்று மாதக் குழந்தையொன்று

மழை பொழிந்து கொண்டிருந்தது

 

ப்ரெட்டை எப்படிச் சாப்பிடுவது

ப்ரெட்டை என்ன செய்தாய்

என்றேன்

நாய்களுக்குக் கொடுத்து விட்டோம் என்றாள்

நாய்கள் பாவம்

உண்ண உணவில்லை

தங்க இடமில்லை

மழை பொழிந்து கொண்டிருந்தது

நூற்றாண்டு உறக்கத்திலிருந்து

விழித்தெழுந்து

***

தனியார் மருத்துவமனையில்

மின்சாரமின்றி

நோயாளிகள்

சுவாசிக்க வழியின்றி

இறந்து போனார்கள்

மழை பொழிந்து கொண்டிருந்தது

 

***

 

 

’சென்னை

கங்கையில் மிதக்கும் பிரேதமென

மிதக்கிறது…’

மழையின் மறுபெயர் துயரம்

எனக் கழிந்த இளம்பிராயத்தால்

வாழ்நாளில் மழைக்கவிதை

எழுத மாட்டேனென

நினைத்திருந்தவன் தன்

முதல் மழைக்கவிதையை

எழுத ஆரம்பித்தான்

(என்னை பிரமிக்கச் செய்த நேசமித்ரனுக்கு…)

***

2. நான் மரணம்

என் தொழிலை

நான் நேசிக்கவில்லை

என் தொழிலை

நான் வெறுக்கவும் இல்லை

என் தொழில்

என் இயல்பு

நான் மரணம்

கொலை என் தொழில்

 

நான் காற்று

நான் நெருப்பு

நான் மழை

நான் மரணம்

என்னைக் கண்டு

மனிதன் மண்டியிடுகிறான்

மன்றாடுகிறான்

கண்ணீர் விடுகிறான்

கதறுகிறான்

மூர்ச்சை அடைகிறான்

பயம் காமம் கண்ணீர் காதல் வெட்கம் கோபம் இன்பம் துன்பம் கொண்டாட்டம் துக்கம் விருப்பு வெறுப்பு

எதுவுமில்லை எனக்கு

எனக்கு ரூபமில்லை

அரூபமுமில்லை

 

அண்ட சராசரங்களும்

நிலவும்

நட்சத்திரங்களும்

மரணம்

தின்ன

வழங்குகிறேன்

 

நான் மரணம்

கொலை என் தொழில்

(டாக்டர் ஸ்ரீராமுக்கு…)

3. பாவியின் உயில்

குழந்தைகளை

வன்கலவி

செய்திருக்கிறேன்

சோற்றில் விஷம்

கலந்திருக்கிறேன்

நண்பனின் மனைவியை

போகித்திருக்கிறேன்

பெற்ற அன்னையை

மோகித்திருக்கிறேன்

நான் பாவி

 

ஆனாலும்

இந்த உலகில்

வாழ எனக்கு

உரிமையில்லையா?

(அன்பின் மொத்த உருவமான மதுரை அருணாசலத்துக்கு…)