சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே!

தலைக்கு மேலே வேலைகள் காத்துக் கிடப்பதால் பத்மஸ்ரீ விஷயம் பற்றி எதுவும் எழுதவில்லை.  இப்போது டாக்டர் ஸ்ரீராம் இது பற்றி ஜெயமோகன் மீண்டும் எழுதியதன் இணைப்பை அனுப்பியிருக்கிறார்.  அவசரமாக சில லிபிய நாவல்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.  இருந்தாலும் இது பற்றி ஓரிரு வார்த்தைகள் எழுதித் தான் ஆக வேண்டும் என்று தோன்றுகிறது.  முதலில் ஜெயமோகனின் பதிவு.

http://www.jeyamohan.in/83865#.Vq9jWfl97IU

 ஜெ.யின் அந்த விளக்கத்தில் ”முதல்முறையாக சிற்றிதழ்சார்ந்த ஒருவரை தேசியகௌரவம் தேடிவருகிறது. அது நிராகரிக்கப்படுவது தவறான முன்னுதாரணம் என்று சாரு நிவேதிதா, பா.ராகவன் இருவரும் ஃபோனில் சொன்னார்கள். அது ஒருமுக்கியமான வாதம் என்றே நினைக்கிறேன். ஆனால் வேறுவழியில்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார்.  உண்மைதான்.  ஆனால் நான் பேசியதன் சாரம் வேறு.  எனக்கு சரியாகப் பேசத் தெரியாததால் நான் என்ன சொல்ல வந்தேன் என்பதை சரியாகச் சொல்லாமல் போயிருக்கலாம்.  அதனால் இந்த விளக்கம் இப்போது.  பேச்சை விட எனக்கு எழுத்து நன்றாக வரும் என்பதால் இங்கே சரியாக எழுதி விட முடியும் என்று நினைக்கிறேன்.  பார்ப்போம்.

ஜெயமோகனும் நானும் இரு வேறு துருவங்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.  ரசனையிலும் பண்பாட்டு, கலாச்சார அணுகுமுறையிலும்.  ஆனால் நாங்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் அதிக பட்ச மரியாதையும் மதிப்பும் அன்பும் கொண்டவர்கள்.  மனுஷ்ய புத்திரன் ஒரு விஷயம் சொன்னார்.  புத்தாண்டு அன்று அவர் ஒரு வாழ்த்துச் செய்தியை அலைபேசி மூலம் அனுப்பியிருக்கிறார்.  ஒருவருக்கொருவர் கடுமையாக சாடி எழுதிக் கொள்ளும் ஒரு எழுத்தாளருக்கு.  உடனே அந்த எழுத்தாளர் மனுஷை அழைத்து அரை மணி நேரம் மிகவும் அந்தரங்கமாகப் பேசியிருக்கிறார்.  இப்போது புரிகிறதா, எழுத்தாளர்கள் எவ்வளவு கடுமையாக விவாதித்துக் கொண்டாலும் அவர்களை இயக்கும் சக்தி எழுத்து.  இதை வேறு எந்தத் துறையைச் சேர்ந்தவர்களிடமும் காண முடியாது.

ஜெ. பத்மஸ்ரீ விருதை மறுத்தது குறித்துச் சில நண்பர்கள் என்னிடம் கருத்து கேட்டார்கள்.  அவர் அந்த விருதை மறுத்ததை நான் விமர்சிப்பேன் என்று அவர்கள் எதிர்பார்த்தது போல் இருந்தது.  நான் யாரையும் விமர்சிப்பதில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்து வெகு நாட்கள் ஆயிற்று.  அதற்காக பரதேசி போன்ற ஒரு பொய்யான படத்தைப் பாராட்டுவேனா?  இல்லை.  ஒதுங்கிப் போய் விடுவேன்.  அவ்வளவுதான்.  அதனால்தான் தூங்காவனம், தாரை தப்பட்டை போன்ற படங்களைப் பார்க்கவேயில்லை.  யாரையும் புண்படுத்தக் கூடாது என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு வாழ வேண்டும் என்று தீர்மானித்து அதன்படியே வாழ்ந்தும் வருகிறேன்.  என்னைத் திட்டுபவர்களையும் அவதூறு செய்பவர்களையும் கூடப் பொருட்படுத்தாமல் கடந்து போகவே முயல்கிறேன்.

சமீபத்தில் எம்.எஸ். பற்றி ஒரு பத்திரிகையில் கட்டுரை கேட்டார்கள்.  எம்.எஸ். ஒரு hoax என்பது என் கருத்து.  சிறு வயதிலிருந்தே அவரது இசை எனக்குப் பிடிக்காது.  நான் வந்த பாரம்பரியம் அரியக்குடி ராமானுஜய்யங்கார், மஹாராஜபுரம் விஸ்வநாதய்யர், ஜி.என்.பி. என்று போகும்.  எம்.எஸ்.ஸின் குரல் மிக இனிமையானது.  குரல் இனிமை மட்டும் சங்கீதத்தின் உச்சங்களைத் தொட போதாது.  சங்கீத ஞானம் இல்லாத எனக்கு எம்.எஸ். பிடிக்காதது என் அறிவின்மையைக் காட்டுகிறதோ என சிலர் சந்தேகிக்கலாம் என்று எம்.எஸ். பற்றிய நூல்களைத் தேடிய போது எனக்குக் கிடைத்தது MS, a Life in Music.  T.J.S. George எழுதியது.  அது என் கருத்தை உறுதிப்படுத்தியது.

மேலும் சங்கீத ரசனை என்பது சங்கீதம் பற்றிய அறிவினால் வருவதல்ல என்பது என் முடிவு.  ஒரு உதாரணம் சொல்கிறேன்.  இந்தச் சம்பவத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவன் அடிக்கடி சொல்லுவார்.  அவருடைய நண்பர் ஒருவர் அமெரிக்காவிலிருந்து அவருக்கு சில ஒலித்தகடுகளைக் கொடுத்து இதில் எதெல்லாம் பிடித்திருக்கிறது என்று கேட்டார்.  ராகவன் அது எல்லாவற்றையும் கேட்டு விட்டு அதில் ஒன்றே ஒன்று மட்டும் ஆகப் பிரமாதம் என்று சொல்கிறார்.  அது ட்சைக்காவ்ஸ்கி உருவாக்கிய ஸ்வான் லேக் என்ற இசைக் காவியம்.  இவ்வளவுக்கும் ராகவனுக்கு மேற்கத்திய சங்கீதம் பற்றிய துளி அறிவு கிடையாது.  இதுதான் இசை உணர்வு என்பது.

சரி, விஷயத்துக்கு வருகிறேன்.  எம்.எஸ். பற்றிய என் தேடலில் இரண்டே இரண்டு பேர் தான் அறிவார்த்தமாக எழுதியிருந்தனர்.  ஒன்று, ட்டி.எம். கிருஷ்ணா.  யாரோ பெரிய சங்கீத மேதை ஒருவர் அவரிடம் எம்.எஸ். ஒரு hoax என்று பல ஆண்டுகளுக்கு முன்பு சொன்னதாகத் தன் கட்டுரையை ஆரம்பித்திருந்தார் கிருஷ்ணா.  அடுத்து, எம்.எஸ். பற்றிய மிக நீண்டதொரு கட்டுரை எழுதியிருந்தவர் யார் தெரியுமா?  ஜெயமோகன்.  இவ்வளவுக்கும் தனக்கு சங்கீதம் தெரியாது என்று சொல்லிக் கொள்பவர்.  அதை விட ஒரு சினிமா இசையமைப்பாளரை ஞானி என்று கொண்டாடுபவர்.  அவர் தான் எம்.எஸ். பற்றி அறிவார்த்தமாக, உணர்ச்சிவசப்படாமல் எழுதியிருந்தார்.  அதுவும் சாதாரண கட்டுரை அல்ல அது.  டி.ஜே.எஸ். ஜார்ஜின் புத்தகத்தைப் படித்து அந்தப் புத்தகத்தைப் பற்றி எழுதிய கட்டுரை அது.

அசந்து போன தருணம் அது.  இந்த ஆள் எதைத்தான் விட்டு வைக்கிறார்?  ஒரு எழுத்தாளன் எம்.எஸ். என்ற உலகம் புகழும் பாடகி பற்றி ஒரு ஆங்கிலப் பத்திரிகையாளர் தலையணை சைஸில் எழுதிய ஆங்கிலப் புத்தகத்தை வாசித்து விட்டு அதற்கு ஒரு நீண்ட கட்டுரையை எழுத வேண்டுமா?  ஜெ. எழுதியிருக்கிறார்.  இதற்காக அவர் எத்தனை மணி நேரம் செலவழித்திருப்பார்?  இதற்காக அவருக்கு என்ன சன்மானம் கிடைத்திருக்கும்?  பாராட்டுக் கடிதங்கள் கூட வந்திருக்குமா என்று தெரியவில்லை.  மகாபாரதம் என்றால் வரும்.  கர்னாடக சங்கீதத்துக்கு வருமா? தெரியவில்லை.  இப்படியெல்லாம் ஒரு எழுத்தாளன் ஊண் உறக்கமின்றி இந்தத் தமிழ் சமுதாயத்துக்காக உழைத்தால் அதற்குப் பிரதியாகக் கிடைப்பது என்ன?  அவதூறு.  என்ன மாதிரியான சமூகம் இது?

இத்தகைய சூழலில் ஒரு எழுத்தாளன் எப்படி இருக்க வேண்டும் என்பதையே ஜெயமோகனிடம் விளக்கினேன்.  ரமணரிடம் ஒரு பக்தர் ஒரு பூங்கொத்தைக் கொடுக்கிறார் என்றால் உடனே ரமணர் ஆஹா, நம்முடைய துறவு வாழ்க்கைக்கான அங்கீகாரம் கிடைத்து விட்டது என்றா சந்தோஷம் அடைவார்?  ரமணருக்கு அந்தப் பூங்கொத்தை அளிப்பதால் மகிழ்ச்சி அடைவது பக்தன் தானே தவிர அந்த ஞானி அல்ல.  அதேபோல் ரமணரை அவதூறு செய்தாலும் ரமணரிடம் அது எந்த விளைவையும் ஏற்படுத்தாது.

எழுத்தை யாரொருவர் உயிர் மூச்சாகக் கொண்டிருக்கிறாரோ, எழுத்தை யாரொருவர் தவமாகப் பயில்கிறாரோ, அவர் ஒரு ஞானி என்பதில் எனக்குக் கொஞ்சமும் சந்தேகம் கிடையாது.   

எனவே தான் ஜெயமோகன் இது போன்ற சிறிய பூங்கொத்துக்களைக் கண்டு எந்தப் பதற்றமும் அடையக் கூடாது என்று சொன்னேன்.  இதுதான் நான் சொல்ல விரும்பிதன் சாரம்.  இது பற்றியும் ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவனிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் ஆண்டாள் திருப்பாவையிலிருந்து ஒரு பாடலைப் பாடினார்.

கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்

அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை

பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை
சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே
இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.

 

அன்பினால் உன் தன்னை சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே என்ற வரி முக்கியம்.  உன் மீது கொண்ட அன்பினால் உரிமையினால் ஒருமையில் அழைத்தேன், கோபிக்காதே இறைவா என்று பொருள்.

எழுத்தாளனுக்கு பத்மஸ்ரீ கொடுப்பவர்கள் ஆண்டாள் நிலையில் இருப்பவர்கள்.  அதெல்லாம் உரிமையினால் அன்பினால் செய்வது.  அதையெல்லாம் எழுத்தாளன் அதிகம் பொருட்படுத்தக் கூடாது.  ஏனென்றால் எழுத்தாளன் சிருஷ்டிகர்த்தா.