படு ரகளையான எழுத்து…

நான் 25 வயதில் எழுதியது போல் இருக்கிறது.  விளாசித் தள்ளியிருக்கிறார் ஜி. கார்ல் மார்க்ஸ்.  அவருடைய முகநூல் பதிவுகளெல்லாம் நூலாக வரப் போகிறது.  எதிர் வெளியீடாக இருக்கலாம்.  கீழே வருவது இப்போதைய ஆட்சியை வறுத்தது.  இதேபோல் முந்தைய கருணாநிதி ஆட்சியையும் செம கிண்டு கிண்டியிருக்கிறார்.  ஆனால் வழக்கம் போல் என் வருத்தமெல்லாம் இப்படிப்பட்ட பதிவுகள் ஒரு நாவலாக வர வேண்டும்.  சோகம், எல்லாம் குறிப்புகளாகவே, கட்டுரைகளாகவே தீர்ந்து போகின்றன.  பெரூவின் மரியோ பர்கஸ் யோசாவின் நாவல்கள் இந்த மாதிரிதான் இருக்கும்.  கீழே உள்ளது கார்ல் மார்க்ஸ்.

குறுப்பு 3:

மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களது பொற்கால ஆட்சியில், போர்க்கால அடிப்படையில் மழை நிவாரணப் பணிகள், மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களது உத்தரவுப்படி மேற்கொள்ளப்பட்டது. மக்கள் நன்றி தெரிவித்தார்கள். இப்போதும் தெரிவித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

ஏங்க உங்க ஆட்சி செயல்படவே இல்லை, அதிகாரம் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டிருக்கிறது, யார் சொல்வதை யார் கேட்பது, யாருக்கு யார் உத்தரவிடுவது என்ற குழப்பத்தில் நீங்கள் செயல்படாமல் இருந்ததுதான் இவ்வளவு சேதத்துக்கும் காரணம் என்று விமர்சனம் வருகிறதே அதுக்கு என்ன சொல்றீங்க?

மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களது பொற்கால ஆட்சியில், போர்க்கால அடிப்படையில் மழை நிவாரணப் பணிகள் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களது உத்தரவுப் படி மேற்கொள்ளப்பட்டது. மக்கள் நன்றி தெரிவித்தார்கள். இப்போதும் தெரிவித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

ஏங்க நான் என்ன கேக்குறேன்னா…

நீ என்ன கேட்டாலும் இதுதான் பதில். என்ன டயர்டாக்காத. ஓயாம ஒரே பதிலைச் சொல்ல எனக்கும் கடுப்பாதான் இருக்கு. நாங்க செயல்படவே இல்லன்னா, தண்ணி வடிஞ்சிருக்குமா, இல்ல நீதான் வந்து வக்கனையா கேள்வி கேப்பியா? இந்தா இந்த அம்மா ஸ்டிக்கர கையில வச்சிக்க. போற வழியில எவனாவது தன்னார்வலர் சோத்துப் பொட்டலம் தருவான். அதுல இந்த ஸ்டிக்கரை ஒட்டி வீட்டுக்கு எடுத்துட்டு போ. பொண்டாட்டி புள்ளைங்களோட சந்தோசமா இரு. எவன் சொல்றதையும் நம்பாத. ரொம்ப போரடிச்சா பீப் சாங் கேளு. சரியா? கிளம்பு!