அராத்து பற்றி

எனக்கு ஒரு ராசி இருக்கிறது.  எனக்கு எந்த எழுத்தாளரைப் பிடிக்கிறதோ அவருக்கு என்னைப் பிடிக்காது.  உ-ம்.  சுஜாதா, அசோகமித்திரன்.  அதேபோல் என்னை விரும்பிப் படிக்கும் ஒரு எழுத்தாளரை எனக்குப் பிடிக்காது.  உ-ம். உ.த.எ. என்னது, உ.த.எ.வா என்று கேட்காதீர்கள்.  அவருக்குப் பிடிக்காதது போல் பாவனை செய்வார்.  அவ்வளவுதான்.  முதல்முதலாக தருணுக்கு என்னைப் பிடிக்க, அவர் எழுத்து என்னை இழுத்துக் கொண்டு போக என்று ஆனது.  Mario Vargas Llosa-வுக்கு அடுத்தபடியாக நான் விழுந்து விழுந்து படிக்கிறேன் என்றால் அது தருண் தேஜ்பாலைத்தான்.  இன்னொரு முக்கியமான விஷயம்.  பத்திரிகையாளர்கள் பெரிய எழுத்தாளர்களாக முடியும் என்பதிலும் எனக்கு நம்பிக்கை இல்லை.  ஹெமிங்வே, மார்க்கேஸ் இருவரையும் விதிவிலக்காகத்தான் நினைப்பேன்.  அதையும் மீறி தருண் ஜெயித்து விட்டார்.  யோசாவைப் படிப்பது போல், தருணைப் படிப்பது போல் என்னால் தமிழ் எழுத்தாளர்களைப் படிக்க முடியவில்லை.  தமிழ் எழுத்தாளர்களின் எழுத்தை பத்து பக்கத்துக்கு மேல் தாண்ட முடியவில்லை.  நான் தற்காலத் தமிழ் எழுத்தாளர்களைச் சொல்கிறேன்.  கரிச்சான் குஞ்சு, மௌனி, நகுலன் வகையறாக்களைச் சொல்லவில்லை.  ந. முத்துசாமி, அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, கோபி கிருஷ்ணன், ஆதவன் வரை சரியாக இருந்தது.  அதற்கு மேல் ஒருவரைக் கூட படிக்க முடியவில்லை.  எனக்குப் பிடித்த ஓரிருவர் ஒரே ஒரு சிறுகதைத் தொகுதியோடு இலக்கியத்துக்கு டாட்டா சொல்லி விட்டனர்.  இந்த நிலையில்தான் அராத்துவின் புனைவு எழுத்து என்னை வெகுவாகக் கவர்ந்தது.  இவ்வளவுக்கும் அவர் ஒரு எழுத்தாளர் அல்ல.  நேரம் கிடைக்கும் போது எழுதுவார்.  அதுவும் ரொம்பக் கொஞ்சமாக.  கணினி மட்டும் கண்டு பிடிக்கப்படாமல் இருந்திருந்தால் அராத்து எழுத்தாளராக ஆவதற்கு சாத்தியமே இல்லை.  அவரெல்லாம் பேனா பிடித்து காகிதத்தில் எழுதக் கூடும் என்பதை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.

 

அராத்து இணையத்தில் எழுதிக் கொண்டிருக்கும் தற்கொலைக் குறுங்கதைகள் நாவலை அவ்வப்போது படிக்கும் போது அவர் ஆதவனை விடவும் நன்றாக எழுதுவதாகத் தோன்றியது.  எழுதினேன். உடனே நண்பர்கள் சீறி எழுந்து விட்டார்கள்.  ஏதோ ஆதவன் உயிரோடு இருந்த போது அவரைக் கொண்டாடியது போல.  அவர் இருந்த போது அவரை சீந்த ஆள் இல்லை.  காகித மலர்கள் நாவலை அவர் நா. பார்த்தசாரதியின் தீபத்தில்தான் எழுதினார் என்று நினைக்கிறேன்.

 

போகட்டும்.  அராத்துவை ஆதவனோடு ஒப்பிட்டதற்கு சீறி எழுந்த நண்பர்களுக்கு அராத்து ஒரு பதில் எழுதினார்.  அதைப் படித்துப் பாருங்கள்.  அதோடு தற்கொலைக் குறுங்கதைகளில் ஒரு கதையையும் தருகிறேன்.  அதையும் படித்துப் பாருங்கள்.
1) சாரு நிவேதிதா எழுத்து விஷயத்தில் கறாராக இருப்பார். சொந்தக் காதலி(!)யே என்றாலும் குப்பை என்றால் குப்பைதான்.மொழிபெயர்ப்புதான் உயிர் என இயங்கிக் கொண்டு இருக்கும் வேளையில் மொழிபெயர்ப்பாளர்களை எகிறி அடித்துத் திட்டியதை நினைவு கூருங்கள். பொண்டாட்டி புள்ளை என சாருவின் தாக்குதலுக்கு முதல் இலக்காவது அவரின் அருகில் இருப்பவர்கள்தான். இந்த லட்சணத்தில் சாருவை தாய் போலவும் அராத்துவை அவருடைய குழந்தை போலவும், அராத்து எழுதுவதை சாரு ஒரு தாய் போல் சிலாகிப்பதாகவும் பிச்சை எழுதியதைப் பார்த்து திடுக்கிட்டுப் போய் விட்டேன்.வயிற்றுப்போக்கு ஆரம்பித்து விட்டது.

2)இன்றைய பின் நவீனத்துவ உலகில் நாம் அனைத்தையும் ஓவராக நினைத்துக் கொண்டு, சாரு ஓவராக சொல்கிறார் என கூறிக் கொள்கிறோம். ரேஷ்மோனு என்ற ஊர் பேர் தெரியாதவரின் இசை சாருவுக்கு பிடித்து உலகத்தரமான இசை என கொண்டாடியதை பார்த்திருக்கிறோம். மார்க்கேஸைக் கொண்டாடும் அதே passion-ஓடுதான் கோபி கிருஷ்ணனையும் கொண்டாடுவார். மாறாக, தமிழர்கள்தான் மூத்த எழுத்தாளர் என ஒருவருக்கு மடம் எழுப்பி அவரைப் பீடத்தில் அறைந்து கதறக் கதற அவரின் பிணத்தை கற்பழிக்கும் வேலையை செய்து கொண்டு உள்ளனர்.

3) ஒருவர் ஒருவரை பாராட்டுவதே தமிழ்ச் சூழலில் அந்நியமாகவும் கூச்சமாகவும் பார்க்கப்படுகிறது. ஒருவர் பாராட்டினால் கைதட்டிவிட்டுப் போகும் பழக்கம் கூட இல்லை. அந்தப் பாராட்டை போஸ்ட்மார்ட்டம் செய்து, இது ஓகே ஆனால் அது நொட்டை என சொல்லி கடைசியில் வாழ்த்து சொல்லும் பழக்கம். இதை நான் ஒருவரின் குறையாகச் சொல்ல வில்லை, ஒரு பெரும் கூட்டத்தின் பழக்கமாக உள்ளது.

4)முன்பு அராத்துவின் தற்கொலைக் குறுங்கதைகள் இதாலோ கால்வினோ போல இருக்கிறது என எழுதினார் சாரு. அப்போது பேச்சு மூச்சு இல்லை. ஏனெனில் இத்தாலோ கால்வினோ யாரும் படித்ததில்லை, நான் உட்பட. இப்போது ஆதவன் என்று படித்ததும் விறைத்துக் கொள்கிறது . ஆதவனை கரைத்துக் குடித்தது போல வெறி வந்து மாரியாத்தா வந்தது போல 360 டிகிரி சுழன்று ஆடுகின்றனர் .நிர்மல் எழுதியது போல இப்போது ஆதவன் எழுந்து வந்து இந்த விவாதங்களைப் பார்த்தால் திரும்பவும் நதியில்தான் போய் விழுவார்.

5) உலகத்தரத்தில் எழுத வேண்டும் எனில் அதற்கு என்ன அளவுகோல்? ஏதாவது லேகியம் சாப்பிட வேண்டுமா? ஒரு குறிப்பிட்ட பரம்பரையில் ஒரு ஆள் புணர்ந்து பெற்றெடுக்க வேண்டுமா? குறியில் முடி சிரைக்காமல் 48 வருடம் விரதமிருக்க வேண்டுமா? புரிகிறது ……இதெல்லாம் வேண்டாம், இந்தியாவில் இருக்கக் கூடாது ….இல்லையில்லை ….தமிழ்நாட்டில் இருக்கக் கூடாது. வெளிநாடுகளில் பிறந்திருக்க வேண்டும், குறைந்த பட்சம் இலங்கை. நம் பக்கத்தில் இருப்பவன் எப்படித் தரமானவனாக இருக்க முடியும் என்ற மாபெரும் தன்னம்பிக்கையே காரணம்.

6) நான் முன்பே சொன்னது போல உலக இலக்கியத்துக்கும் எனக்கும் ஸ்னான ப்ராப்தி இல்லை. தமிழ் எழுத்தாளர்கள் நிலை நூற்றாண்டுகளாக ஒரே மாதிரி இருப்பதைப் பார்த்தும் எழுத்தாளனாகத்தான் ஆவேன் என அடம் பிடிக்கும் எக்ஸெண்ட்ரிக்கும் இல்லை நான். எனக்குப் பணம் வேண்டும், அதுவே முக்கியம்.  இந்தப் ’பணம் வேண்டும்’ என்ற குவாலிட்டி இருந்தாலே ஒருவனால் எழுத்தாளனாக ஆக முடியாது. அதுவரையில் நிம்மதி. மேலும் நான் ஒரு கடும் சோம்பேறி. ஒரு சிறுகதை டைப் அடிக்க வேண்டுமெனில் 2 வாரம் ஆகும்.

7) கலை இலக்கியத்தில் சாரு இதுவரை அறிமுகப்படுத்தியது எனக்கு ஏமாற்றமளித்தது இல்லை. எனக்கு விவரம் பத்தாது என்பதால், இந்த விஷயத்தில் நான் அவரை நம்பித்தான் ஆகவேண்டும். தற்கொலைக் குறுங்கதைகளில் இதாலோ கால்வினோ போல நான் எழுதுகிறேன், ஆதவன் போலவும் எழுதுகிறேன் என நான் நம்புகிறேன் சாரு, நீங்கள் சொன்னதால். சும்மா போலி தன்னடக்கத்துடன் ஹி ஹி என வழிவதுதான் இங்கே டெம்ப்ளேட். இதாலோ கால்வினோவை படிக்க ஆரம்பித்து விடுகிறேன்.

***

 

தற்கொலை குறுங்கதைகள் – கீங் கீங்

ஹலோ

சொல்லு மச்சி

குழந்தைக்கு ஆக்ஸிடெண்ட் ஆயிடிச்சிடா தாவாங்கட்டையில அடி ….நெத்தியிலயும் அடி .

கீங் கீங்

இப்ப எங்கடா இருக்க ?

ஆம்புலன்ஸ் கால் பண்ணிட்டு வெயிட் கீங் கீங் பண்ணிட்டு இருக்கேன்.

ஏய் ஆம்புலன்ஸ் கீங் கீங் ஆம்புலன்ஸ் வர்ர வரைக்கும் வெயிட் பண்ணவேண்டாம் …கீங் கீங்க்

ஹலோ

எதாவது கார் லிஃப்ட் கேட்டு ஹாஸ்பிடல் போடா

இல்லடா ஆம்புலன்ஸ் 10 கீங்க் கீங்க் நிமிஷத்துல வந்துடும்னு சொன்னாங்க .

இல்ல மச்சி சொல்றத கீங்க் கீங்க் ஹலோ மச்சி சொல்றத கேளு , குழந்தைக்கு நினைவு இருக்கா கீங்க் கீங்க் ….ஹலோ

லேசா இருக்குடா அப்பா அப்பா கீங்க் கீங்க் அப்பா அப்பான்னு அனத்தறா

ரத்தம் வழியறதை முதல்ல ஏதாவது கீங்க் கீங்க் ரத்தத்தை நிறுத்த கீங்க் கீங்க் ஹலோ எதாவது துணியை வச்சி கீங்க் கீங்க் ரத்தத்தை நிறுத்து , வெயிட் பண்ணாத கார் லிஃப்ட் கேட்டு பக்கத்து ஆஸ்பிடல் சீக்கிரம் கீங்க் கீங்க் போ , டேய் கேக்குதா கீங்க் கீங்க் போய்ட்டு எந்த ஆஸ்பிடல்னு கீங்க் கீங்க் போன் பண்ணு.

கீங்க் கீங்க் கீங்க் கீங்க்

சரிடா …பயமாருக்குடா

மச்சி கீங்க் கீங்க் பயப்படாத , குழந்தைக்கு என்ன குரூப் கீங்க் கீங்க் ரத்தம் ?

கீங்க் கீங்க் பீ கீங்க் பாஸிடிவ் ,ஒரு கார் கீங்க் லிஃப்ட் குடுக்குறாரு கீங்க் , ஆஸ்பிடல் போய் கீங்க் கால் பண்றேன் கீங்க் கீங்க்

ஓகே மச்சி , நான் கீங்க் கீங்க் அங்க வந்துடறேன் கீங்க் கீங்க் .

கீங்க் கீங்க் கீங்க் கீங்க்

24 மிஸ்டு கால்ஸ் , 1 மெசேஜ்

மெசேஜ் – பிக் மை கால் ஹனி

டிரிங்க் டிரிங்க்

ஹலோ

என்னடா பயங்கர பிஸியா இருக்க , லைன்ல யாரு?

என்ன விஷயம் சீக்கிரம் சொல்லுடீ

எங்கிட்ட கடுப்படி , அடுத்தவங்க கிட்ட அரை மணி நேரம் மொக்கை போடு கீங்க் கீங்க் , அதை விடு , ஜஸ்ட் டையல் நம்பர் என்ன சொல்லு கீங்க் கீங்க் , அதை கேக்கதான் ரொம்ப நேரமா உன்னை கூப்டுகிட்டு கீங்க் கீங்க் இருக்கேன் , நீ என்னடான்னா கீங்க் கீங்க் …..

Comments are closed.