கரூர்

வரும் 13, 14 தேதிகளில் கரூரில் இருப்பேன்.  வாசகர் வட்ட நண்பர் தயாநிதியின் திருமணத்துக்காக வருகிறேன்.  ஆனால் கரூரையும் அதைச் சுற்றியுள்ள ஊர்களிலும் உள்ள நண்பர்களைச் சந்திக்க முடியுமா என்று தெரியவில்லை.  ஏனென்றால், அதில் ஒரு பிரச்சினை உள்ளது.  சென்ற முறை ஏற்காடு வந்த போது கோவையில் உள்ள நண்பர்களைப் பார்க்க வேண்டும், பேச வேண்டும் என்று உண்மையிலேயே விருப்பப்பட்டேன்.  அது தொடர்பாக பல தினங்கள் முன்பே எழுதியிருந்தேன்.  சந்திப்பதற்கு சுமார் 20 நண்பர்கள் விரும்பினர்.  நான் எங்கே தங்கியிருக்கிறேன் என்று கேட்டிருந்தனர்.  20 பேர் இல்லை, 30 பேரைக் கூட சந்தித்துப் பேச விருப்பம் உள்ளவனாகவே இருக்கிறேன்.  ஆனால் 20 பேரைச் சந்திக்கும் அளவுக்கு இடம் எங்கே இருக்கிறது?  எனக்கு அறை போட்டிருந்த நண்பர் பாஸ்கரையே நான் எவ்வளவு தூரம் வருத்துவது?  அந்த அறையில் சுமார் நான்கு பேர் அமர்ந்து பேசலாம்.  ஆனால் ஈரோட்டு நண்பர்களையும் சேர்த்து நாங்கள் ஆறு பேர் இருந்தோம்.  டவுன் பஸ் மாதிரி இடித்துப் பிடித்துக் கொண்டு அமர்ந்து பேசினோம்.  அதனால் கோவை நண்பர்கள் ஒருவரைக் கூட சந்திக்க முடியவில்லை.  இப்படித்தான் நடக்கும் என்று ஏற்கனவே எனக்குத் தெரியும்.  அதனால் ரமேஷிடம் சொன்னேன்.  அவர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் வைத்து சந்திக்கலாம் என்றார்.  நல்ல யோசனைதான்.  ஆனால் நான் சுவாதீனமாகப் பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்றால் ஏர்கான் வசதி வேண்டும்.  இல்லாவிட்டால் என் வியர்வையைப் பார்த்து மற்றவர்கள் பயந்து விடுவார்கள். ஆடம்பரம் என்று நினைக்க வேண்டாம்.  என் உடல்வாகு அப்படி. 15 டிகிடி செல்ஷியஸிலேயே வியர்த்துக் கொட்டும்.  ஸ்டேடியத்தையே குளிர்ச்சி செய்ய வைக்க நான் என்ன ஜக்கியா?

இப்போது கரூரிலும் அதே பிரச்சினைதான் வரும் என்று நினைக்கிறேன்.  நானே ஒன்பது பேராக வருவேன்.  ஈரோடு – 4 உருப்படி; மதுரை – 3 உருப்படி, துபாய் – 1 உருப்படி; சென்னை – 1 உருப்படி.  இதற்கு மேல் கரூர் வாசகர்களும் சேர்ந்தால் இடம் எங்கே?  ஒரு பெரிய suite என்றால் 15 பேர் கூட சந்திக்கலாம்.  20-உம் சாத்தியம்தான்.  இந்த தயாநிதி அந்த தயாநிதி போல் அல்ல.  பொதுவாக நம் நண்பர்களிடம் திட்டமிடுதல் இல்லை.  ஒரு நாலு பேர் சேர்ந்தால் முடியாத காரியமா?  காரியம் செய்ய வகை இல்லை. 

இந்தியர்களே அப்படித்தான் இருக்கிறார்கள்.  நான் தினந்தோறும் அடுக்களையிலேயே மூன்று மணி நேரம் செலவிடுகிறேன் என்பதால் அவந்திகா ஒரு பணிப்பெண்ணை அமர்த்தினாள்.  காய்கறி நறுக்கிக் கொடுப்பது மட்டுமே வேலை.  பணிப்பெண் இரண்டு குழந்தை பெற்றவர்.  மத்திம வயது.  இன்று முளைக்கீரை நறுக்க வேண்டும்.  ஒரு நாள் பூராவும் வெந்தாலும் வேகாத அளவுக்கு மண்டை மண்டையாக நறுக்கினார் அந்தப் பெண்.  இவ்வளவுக்கும் பொடிப் பொடியாக நறுக்க வேண்டும் என்று சொல்லியும் இந்த லட்சணம். முறுங்கைக்காய் நறுக்குவோம் இல்லையா, அந்த சைஸுக்கு நறுக்கி இருந்தார், விரல் நீளத்துக்கு.  இது வேலைக்கு ஆகாது, இன்னும் பொடியாக நறுக்குங்கள் என்று நறுக்கிக் காண்பித்தேன்.  அடுத்த கணமே விரலிலிருந்து ரத்தம். மருந்து போட்டு கட்டச் சொல்லி விட்டு நானே நறுக்கினேன்.  தினமுமே மாற்றி மாற்றி இந்த வேலைதான். வேலையைச் சொல்லிக் கொடுப்பதிலேயே தாவு தீர்ந்து போகிறது.  பாகக்காய் நறுக்கத் தெரியவில்லை.   மீன் கழுவத் தெரியவில்லை. 

பார்க்கலாம்…     

 

      

Comments are closed.