நிகனோர் பார்ராவை விட உசத்தியான கவிஞன்…

இப்படிச் சொல்வதால் பார்ராவை மட்டம் தட்டி விட்டதாக எண்ணக் கூடாது.  நான் உலக இலக்கியத்தின் மாணவன்.  சும்மாவாச்சும் போகிற போக்கில் தட்டி விடுகிறவன் கிடையாது.  முழுமையாக நிகனோர் பார்ராவைப் படித்ததால்தான் இப்படிச் சொல்கிறேன்.  பார்ராவை விட நல்ல கவிஞன் மனுஷ்ய புத்திரன். ஏற்கனவே பார்ராவின் கடைசிக் கோப்பை என்ற கவிதையை அதே விஷயத்தை மனுஷ்ய புத்திரன் எழுதிய கவிதையோடு ஒப்பிட்டு மனுஷின் கவிதை எவ்வளவு உயரத்தில் இருக்கிறது என்று நிறுவியிருந்தேன்.  ஆக, பார்ராவுக்குக் கொடுப்பதற்கு முன்னால் மனுஷுக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட வேண்டும்.  கொடுக்க மாட்டார்கள்.  ஏனென்றால், நோபல் கமிட்டியில் உள்ளவர்களுக்குத் தமிழ் தெரியாது.  ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் அறிவாளிகளுக்கு மனுஷ்ய புத்திரனை திமுக மேடைப் பேச்சாளர் என்ற அளவில் மட்டுமே தெரியும்.  அதற்குத்தான் அந்த அசடுகள் ஆசைப்பட்டன.  அசடுகள் ஆசைப்பட்டதை அள்ளிக் கொடுத்தார் மனுஷ்ய புத்திரன்.  அவருடன் கூட இருப்பவர்களுக்குக் கூட அவர் யார் என்று தெரியாது.  அவருடன் கூடவே இருக்கும் இரண்டு பேர் விதி விலக்கு.  அவரும் தொடர்ந்து நான் ஒரு முட்டாள் நம்புங்கள் நம்புங்கள் என்று மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டே இருக்கிறார்.  அப்படி ஒருத்தன் சொன்னால் உடனே அதை நம்பி விடும் அளவுக்கு அசடுகளாக இருக்கிறார்கள் மற்றவர்கள்.  தன்னை ஒருவன் முட்டாள் என்று தினந்தோறும் நிரூபிக்க முயற்சி செய்து கொண்டே இருக்கிறான் என்றால் அவன் உங்களோடு கண்ணாமூச்சி ஆடுகிறான் என்று கூடவா உங்களுக்குப் புரியாது, அட, அசடுகளா!

மேதைகளைக் கூட முட்டாள்களாகவே அறிந்து கொள்ள ஆசைப்படும் சமூகம் இது.  அதனால் தாஜ்மஹல் கூட இவர்களுக்கு வெறும் சுவராகத்தான் தெரியும்.  இவர்களின் மட்டித்தனத்தைப் பார்த்து தாஜ்மஹலும் உள்ளுக்குள் சிரித்தபடி நான் சுவர் தான் நான் சுவர் தான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறது.

இது எல்லாவற்றையுமே ஒரு அந்நியனாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

மனுஷ்ய புத்திரன் முகநூலில் எழுதியுள்ள பதிவு இது:

பின்னிரவு ஒன்றரை மணி வரை எழுதிக்கொண்டிருந்தேன். மறுபடி மூன்று மணிக்கே விழிப்பு வந்துவிட்டது. பறவைகள் துயில் கலைந்து பூமியின் முதல்குரல்களைப் பதிவு செய்கின்றன. சின்ன வெளிச்சத்தில் கூச்சமடைகிறேன். எவ்வளவு முயன்றும் தூக்கத்திற்கான கண்ணி எங்கோ அறுந்துவிட்டது. மனம் இடையறாது கொந்தளித்துக்கொண்டிருக்கிறது. என் பிரியமான கடற்கரைக்குப் போனால் ஒரு சமநிலைக்குத் திரும்பக்கூடும். காக்கைகளும் புறாக்களும் பெரிய மணல் பரப்பில் வந்திறங்கும்போது என் சுவாசம் சீரடையத் தொடங்கும். நிறைய பார்த்தாகிவிட்டது. அன்பின் பாவனைகள், அற்பத்தனத்தின் பசப்பல்கள், வெறுப்பின் தடங்கள், புறக்கணிப்பின் தந்திரங்கள். இதற்கு மத்தியில்தான் இவ்வளவு வேலைகளை செய்திருக்கிறேன் என்பது திகைப்பாக இருக்கிறது.இந்த பைத்தியக்காரத்தனத்திலிருந்து வெளியேற ஏதேனும் வழி இருக்கிறதா? நகுலனின் வார்த்தைகளில் சொல்வதானால் ‘ தினம் தினம் உங்கள் பார்வையில் பட்டுத்தெறிக்க வேண்டும் என்று என்ன அவசியம்?’ சாரு நேற்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். ‘ உன்னோடு இருக்கும் யாருக்குமே ஏன் உன்னைத் தெரியவில்லை?’ என்று. அப்படியெல்லாம் நான் நினைத்து விடக்கூடாது. மனம் முறிந்துவிடும்.

இன்று மதியம் மதுரை கிளம்பலாம் என்று ஒரு எண்ணம் இருக்கிறது. எதற்குப் போகிறேன் என்று தெரியாது.

மனுஷ்ய புத்திரன்