என் அன்பு மகனே,
துக்கத்தில் இருக்கும் போது மது அருந்தாதே. பத்து ஆயுளுக்கு உண்டான குடியை நான் குடித்திருக்கிறேன். ஆனால் ஒருபோதும் துயரத்தில் குடித்ததில்லை. குடி என் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இப்போது குடியை விட கொண்டாட்டமான விஷயங்கள் வாழ்வில் குடி புகுந்து விட்டன.
நீ இங்கே வரும் போது தஹியா உணவு விடுதியில் ஒரு மணி நேரம் பேசுவதோடு நம் சந்திப்பு முடிந்து விடுகிறது. அதிலும் உனக்குக் கடல் உணவு பிடிக்காது என்பது ஒவ்வொரு முறையும் தஹியா உணவு விடுதியில் நீ பச்சை மீனை உண்ணாமல் வேறு உணவுகளைக் கேட்கும்போதுதான் ஞாபகம் வருகிறது. மகாபலிபுரத்தில் இருக்கும்படி வா. ஆறு ஏழு மணி நேரம் போதும். ஏனென்றால், அங்கேயிருந்து பார்த்தால்தான் நம்முடன் இருந்தவர்கள் நட்சத்திரங்களாக மாறி நம்மோடு உரையாடுவதை நாம் அமைதியாகக் கேட்க முடியும். இங்கே நகரத்தில் வாகன இரைச்சலில் அவர்களின் உரையாடலை நம்மால் கேட்க முடிவதில்லை.
இப்போதைக்கு உனக்காக ஆஸிம் அஷர் என்ற கடவுளின் தூதனின் குரலை அனுப்புகிறேன். இப்படி ஒரு குரல் தோன்றுவது அரிது. அவன் பாடும் போது அவன் உடன் பாடும் சம்ரா அவனை எத்தனை ஆச்சரியத்துடன் பார்க்கிறாள் பார். அவள் கண்களில் தெரியும் பரவச உணர்ச்சியை உனக்கு அனுப்புகிறேன்…