கிருஷ்ணா என்ற கிளியும் கிருஷ்ணா எழுதிய கிளியும்… பிரபு காளிதாஸ்

பிரபு காளிதாஸ் முகநூலில் எழுதியது:

விகடனில் மனுஷ்ய புத்திரன் எழுதிய “கிளிக்காவியம்” படித்தேன். கிளி பற்றிய கவிதை என்பதால் முதலில் படிக்காமல் விட்டுவிடலாம் என்று இருந்தேன். காரணம், செல்லப்பிராணிகள் கதைகள் பூராவும் துயரத்தில் தான் முடியும் என்பது மாற்றமுடியாத விதி. நான் வளர்த்த “கிருஷ்ணா” எனும் கிளியை மறுபடி இந்த கவிதை கிளறிவிட்டால் என்ன செய்வது என்று பயம். அப்புறம் தைரியம் வரவழைத்துப் படித்து விட்டேன். பயங்கரமான கவிதை. அது என் கிருஷ்ணா பற்றிய நினைவுகளைக் கிளறிவிட்டது.

“கிருஷ்ணா”வை நான் வளர்த்தபோது ஆறாவது படித்துக்கொண்டிருந்தேன். கிருஷ்ணா ஆண் கிளி என்பதை “கிளிக்காவியம்” கவிதையில் வருவதுபோல் ஒரு குறவன் தான் சொன்னான். அதன் கழுத்தில் இன்னும் கொஞ்ச நாளில் சிகப்பு வளையம் வரும் என்று ஆணித்தரமாய் சொன்னான். ஆனால், கிருஷ்ணாவை நாங்கள் குறவனிடமிருந்து வாங்கவில்லை. ஒரு சிறுவன் அது குஞ்சாக இருந்தபோதே தந்துவிட்டுப் போனான். தண்ணீர் கேட்டு எங்கள் வீட்டுக்கு வந்தபோதுதான் குறவன் அதை ஆண் கிளி என்றான். அதனால் கிருஷ்ணா என்று என் அப்பா பெயர் வைத்தார்.

கிருஷ்ணாவுக்கு ஒரு கண் கிடையாது. வலது கண் இருக்கும் இடத்தில் கறுப்பாக ஒரு பள்ளம் இருக்கும். கிருஷ்ணாவுக்கு என் அம்மாவின் குரல் மிகவும் பிடிக்கும். காரணம், அம்மாவும் கிருஷ்ணாவைப் போல் கீச் கீச் என்றுதான் பேசுவார். மேலும் என் நண்பர்கள் அனைவருக்கும் கிருஷ்ணா மிகவும் பரிச்சயம். அவர்கள் வந்தால் வீல் வீல் என்று கத்தும். கிருஷ்ணாவுக்கு வலது கண் இல்லாத காரணத்தால் நான் அவனது இடதுபுறம் நின்றுதான் பார்ப்பேன். அவனும் அது புரிந்தது போலவே தனது வலது புறத்தை எனக்குக் காட்டவே மாட்டான்.

கிருஷ்ணாவுக்கான கூண்டை என் அப்பா நாங்கள் குடியிருந்த கூறை வீட்டில், பூனை அதைப் பிடித்துவிடாமல் இருக்க கூரையின் உச்சியில் இருந்து கம்பி தொங்கவிட்டு கூண்டு வைத்திருந்தார். குஞ்சிலிருந்தே எங்களோடு வளர்ந்ததால் கிருஷ்ணாவின் இறக்கைகளை நாங்கள் வெட்டியதே இல்லை. பறந்து சுற்றிவிட்டு தானாகக் கூண்டுக்கு வந்து அடைந்து விடும்.

இடியுடன் கூடிய ஒரு மழைநாளின் பின்னிரவில், திடீரென்று கிருஷ்ணாவின் குரல் கதறலாய் இருளில் அந்தரத்தில் கேட்க, பதறியடித்து அப்பா டார்ச் எடுத்து கூண்டு இருக்கும் திசையில் அடிக்க, கூண்டு ஆடிகொண்டிருந்ததால் டார்ச் வெளிச்சத்தில் விழும் வட்டத்தில் தெரிந்து தெரிந்து மறைந்தது. கரண்ட் இல்லை. ஆடும் கூண்டின் வாகுக்கு டார்ச் வெளிச்சத்தைத் தொடர வைத்தபோது, திறந்திருந்த கூண்டின் மேல் ஒரு கறுப்புப் பூனை படர்ந்து அமர்ந்து ஆடிக்கொண்டே இருக்க, இரண்டே நொடிகளில் வெளிச்சம் பட்ட கையோடு எங்கோ அந்தப் பூனை இருட்டில் தாவி மறைந்தது.

கிருஷ்ணா பூனையிடம் சிக்கவில்லை. கூண்டு திறந்ததில் பறந்து விட்டிருக்கிறது. பறந்து ஜன்னல் வழியே வெளியே போயிருக்கிறது. அதன் பின் கிருஷ்ணா வரவேயில்லை. கிருஷ்ணாவுக்கு எங்கள் குரல் எப்படிப் பரிச்சயமோ, அதே மாதிரி எங்களுக்கும் கிருஷ்ணாவின் குரல் துல்லியமாய்த் தெரியும். ஆயிரம் கிளிகள் நடுவே கிருஷ்ணா குரல் தனித்து நிற்கும்.

மூன்று மாதங்கள் கழித்து ஒரு அந்திமாலை நேரத்தில் எங்கள் வீட்டின் கொல்லைப்புற வேப்பமரத்தில் கிருஷ்ணா குரல் கேட்டது. பார்த்தால் அவனேதான். வந்து திண்ணையில் இறங்கினான். அம்மா, ஒரு சீத்தா பழத்தைப் பிய்த்துப் போட்டார். நிதானமாய் சாப்பிட்டான் கிருஷ்ணா. தனது ஒற்றைக்கண்ணால் என்னைப் பார்த்தான். என் அண்ணன் தோள்மேல் அமர்ந்து அவர் காதைக் கடித்தான்.. அம்மாவைப் பார்த்து கீய் கீய் கீய் என்று கத்தினான். பின் பறந்து மறைந்தான்.

மாலை அப்பா ஆஃபீஸில் இருந்து திரும்பி வந்ததும் விஷயத்தைச் சொன்னோம். அதன் பின் அந்த வேப்பமரத்தில் எந்தக் கிளி வந்து அமர்ந்தாலும் அம்மாவும் அண்ணனும் கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா என்பார்கள். அனால் எந்தக் கிளியும் திரும்பிப் பார்க்கவில்லை. திரும்பிப் பார்த்த சில கிளிகளுக்கு இரண்டு கண்கள் இருந்தன, காலப்போக்கில் அந்த வேப்பமரமும் வீட்டை விரிவுபடுத்த அந்த மரத்தையும் வெட்டியாகிவிட்டது.

ஒரு கிளியின் ஆயுட்காலம் நூறாண்டுகள் என்று எங்கோ படித்தேன். கிருஷ்ணா எங்காவது இருப்பான். அவனுக்கு இருபத்தைந்து வயதாகியிருக்கும்.

இவ்வளவு நினைவுகளையும் மறந்து கிடந்த என்னை “கிளிக்காவியம்” நினைவு படுத்திவிட்டது.

Abdul Hameed Sheik Mohamed ஸார், பழைய ஃபைல்களை தூசி தட்டி எடுக்க வெச்சிட்டீங்க… கிருஷ்ணா நினைவு என்னை வாட்டுகிறது.