மிளகாய் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி, கீரை வடை…

26.04.2017

தினமும் பத்தரைக்குள் படுத்து காலை நான்கு மணிக்கு எழுந்து விடுவது வழக்கம்.  ஏதாவது நிகழ்ச்சிகள் இருந்தால் இதில் கொஞ்சம் மாற்றம் ஏற்படும்.  நேற்று நண்பர் ராம்ஜியுடன் எம்சிசியில் சந்திப்பு.  மெட்ராஸ் கிரிக்கெட் க்ளப்பில் உள்ள உணவகத்தில் உள்ள ருசி சென்னையில் வேறு எங்குமே இல்லை என்பது என் கருத்து.  ஆனால் உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி.

நான் இப்போது பத்திய உணவையே உண்டு வருகிறேன்.  காலையில் கஞ்சி.  மதியம் சாமை, தினை, குதிரைவாலி, வரகு போன்ற தானியம் ஏதாவதுதான்.  ஆரம்பத்திலிருந்தே எனக்கு அரிசி பிடிக்காது என்பதால் சௌகரியமாகப் போயிற்று.  இரவில் காய்கறியை வெட்டிப் போட்டு, கடுகு சாஸ் போட்டுக் கலந்து சாப்பிடுவேன்.

நேற்று ஒருநாள் பத்தியத்துக்கு விடுமுறை அறிவித்து விட்டு, ஒரு மிளகாய் பஜ்ஜி, ஒரு வெங்காய பஜ்ஜி, பாதி கீரை வடை, பாதி ஆனியன் ஊத்தப்பம், கொஞ்சம் தயிர் சாதம், கடைசியாக ஐஸ் க்ரீம் என்று அடித்தேன்.  வீட்டுக்கு வரும் போது பத்தரை.  மாத்திரைகளை முழுங்கி விட்டுத் தூங்கியிருந்தால் பிரச்சினை ஆகியிருக்காது.  ஆனால் பப்புவுக்கும் ஸோரோவுக்கும் சாப்பாடு போட வேண்டும்.  அவந்திகாவின் முகம் படு களைப்பாகத் தெரிந்தது.  வெயில் ஒத்துக்கலைப்பா என்றாள்.  நானே இரண்டுக்கும் உணவு கொடுக்க ஆரம்பித்தேன்.  ஆஞ்ஜைனா துவங்கியது.  ஆஞ்ஜைனா என்பது நெஞ்சு வலி.  ரத்தத்தில் போதுமான ஆக்ஸிஜன் இல்லையென்றால் வருவது.  ஆஞ்ஜைனாவுடனேயே உணவு கொடுத்தேன்.  உணவு கொடுப்பது என்றால் சாதாரண வேலை அல்ல.  150 கிராம் ராயல் கேனைன் உணவை எடுத்து அதில் மீனைப் போட்டுக் கலந்து ஸோரோவுக்குக் கொடுக்க வேண்டும்.  அது சாப்பிட ஏழு நிமிடம் ஆகும்.  பிறகு மற்றொரு 150 கிராம் ராயல் கேனைனில் மீன் கலந்து கொடுக்க வேண்டும்.  அதற்கு இன்னொரு ஏழு நிமிடம்.  பிறகு மாத்திரை கொடுக்க வேண்டும்.  பிறகு தோட்டத்தில் விட்டு மலஜலம் போக விட வேண்டும்.  பிறகு பப்புவுக்கு இதே போல்.  ஆனால் பப்புவுக்கு 150 கிராம் போதும்.

எல்லாம் முடிக்க பதினொன்றேகால் ஆகி விட்டது.  இரண்டுக்கும் உணவு கொடுக்க சரியாக முக்கால் மணி நேரம் ஆகும்.  ஆஞ்ஜைனா கடுமையாகி விட்டது.

பொதுவாக ஆஞ்ஜைனா வந்தால் கால் கையை அசைக்காமல் ஓய்வு எடுத்தால் சரியாகி விடும்.  ஆனால் பதினொன்றரை ஆகியும் வலி அதிகமானதே தவிர குறையவில்லை.  அப்படி இருக்கும் போது நடக்கக் கூடாது.  நடக்கவே கூடாது.  அந்த நள்ளிரவில் ஆட்டோ, டாக்ஸி எல்லாம் கிடைக்குமா?  நண்பர் ராமசுப்ரமணியனுக்கு ஃபோன் செய்தேன்.  என் வீட்டிலிருந்து பத்து நிமிட நடை தூரத்தில் இருக்கிறார்.  கால் மணி நேரத்தில் ராமசுப்ரமணியனும் அவர் மனைவி காயத்ரியும் வந்து காரில் காவேரி மருத்துவமனை அழைத்துச் சென்றார்கள்.  மருத்துவமனைக்கு டாக்டர் ஸ்ரீராம் ஜார்ஜ் டவுனிலிருந்து அடித்துப் பிடித்துக் கிளம்பி வந்து சேர்ந்தார்.

ஈஸிஜி நார்மல்.  ஹார்ட் நார்மல்.  வாய்வுக்கு ஊசி போட்டார்கள்.  வலியும் போய் விட்டது.  அப்படியானால் நீங்கள் வீட்டுக்குக் கிளம்பலாம் என்றார் டாக்டர்.  அப்போது அங்கே வந்த காயத்ரியிடம் நான், கொஞ்சம் அந்த ராஸ லீலா மொழிபெயர்ப்பை சீக்கிரம் முடியுங்கள் என்றேன்.  என்ன ப்ளாக்மெயிலா என்றார்.  இமோஷனல் ப்ளாக்மெயில் என்றேன்.

இனிமேல் ஜென்மத்துக்கும் கீரை வடை, வெங்காய பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி ஆகிய சொர்க்க வஸ்துக்களைத் தொடுவதில்லை என்று முடிவு செய்து விட்டேன்.  இனிமேல் எங்கேயிருந்தாலும் இரவு ஒன்பது மணிக்கு வீடு திரும்பி விட வேண்டும்.  பத்து மணிக்கு மேல் நாய்களுக்கு உணவிடும் போதெல்லாம் இப்படி ஏதாவது ஏடாகூடமாகி விடுகிறது.

காயத்ரியும் ராமசுப்ரமணியனும் வீடு திரும்பும் போது  இரவு ஒன்றரை இருக்கும்.  இருவருக்கும் நான் பட்டுள்ள நன்றிக் கடனை எப்படி அடைப்பது என்று தெரியவில்லை.  அடுத்த ஜென்மத்தில்தான் முடியும் என்று தோன்றுகிறது.

எப்போதாவது இப்படி மருத்துவமனைக்குச் செல்லும் போது திரும்பி வந்து இப்படி ஒரு குறிப்பை எழுத முடியாமலும் போகலாம்.

சுபம்.