28.4.17
ஒரு தாய். அவளுக்கு இரண்டு பிள்ளைகள். மூத்த பிள்ளை குடிகாரன், ஸ்த்ரீலோலன், அடிக்கடி வம்பு தும்பு செய்து பெண்களிடம் அடி வாங்குபவன். ஊரில் ஒருத்தரிடம் கூட நல்ல பேர் கிடையாது. பார்க்க நன்றாகத்தான் இருப்பான். ஆனால் கொனஷ்டையான ஆடை அணிகலன்களால் தன்னை ஒரு பொறுக்கி போல் காட்டிக் கொள்வான். இளையவனும் குடிகாரன் தான், ஸ்த்ரீலோலன் தான். ஆனால் அவன் அப்படி இருப்பது யாருக்கும் தெரியாது. யாருக்குமே தெரியாது. எப்போதும் பெண்களிடம் நல்ல பேர். ஊரிடமும் நல்ல பேர். பார்த்தால் மூச்சு நின்று விடும் போன்ற அத்தனை அழகிய தோற்றம். (அது அவன் தேர்ந்தெடுக்கும் போட்டோகிராபர்களின் கைவண்ணமும் கூட. மேலும், அவன் தேர்ந்தெடுக்கும் ஆடை அணிகலன்களும் அழகுக்கு அழகூட்டுகிறது!) ஊரெல்லாம் அவன் புகழ் பாடுகிறது. முதலில் அவனை வண்ணதாசனோடு ஒப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். இப்போது ஜெயமோகனோடு ஒப்பிடுகிறார்கள். மூத்தவன் எப்போதும் போல் எல்லோரிடமும் பாட்டு வாங்கிக் கொண்டு எங்கேயோ கிடக்கிறான். கிட்டத்தட்ட எல்லோருமே அவனை ஒரு தீண்டத்தகாதவனாகவே நடத்துவதைப் பார்க்கும் போது அந்தத் தாய்க்கு வயிறு எரிகிறது.
இப்போது நீங்கள் ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்கள். என்ன, வந்து விட்டீர்களா? அந்தத் தாய்க்கு மூத்தவனைத்தானே பிடிக்கும்? அதுதான் இல்லை. அவளுக்கும் இளையவனையே பிடிக்கும். இளையவன் இப்போது ஏதோ விருது வாங்கியிருக்கிறானாம். இன்னும் சில ஆண்டுகளில் விஷ்ணுபுரம் விருது கூட வாங்குவான் என்கிறார்கள். தாய்க்கு மகிழ்ச்சி. தனக்கு முன்னே வாங்கி விடுவானோ என்றும் ஒரு சந்தேகம்.
அடுத்தபடியாக என்ன மாதிரி உளறிக் கொட்டி யாரிடம் மாத்து வாங்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறான் மூத்தவன்.
என்ன செய்வது, உலகம் இப்படித்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.