காற்புள்ளி வராது, எடுத்து விட்டேன்…

டியர் சாரு,

‘சத்திய சோதனை’ கட்டுரையில் 26-க்கும் நவம்பருக்கும் இடையில் காற்புள்ளி வராது. எடுத்துவிட்டேன்.   26 நவம்பர் 1925.

ஸ்ரீராம்.

நேற்று அராத்து எனக்கு ஃபோன் செய்து ஒரு முக்கியமான விஷயத்தைச் சொன்னார்.  என் மீது கொண்ட அதீதமான அக்கறையினால் தான் அப்படிச் சொன்னார்.  தனிப்பட்ட அன்பு என்பதை விட என் செயல்பாடுகள் இப்போது இருப்பதைப் போலவே தீவிரமாக இருக்க வேண்டும்; சமூகத்துக்குப் பயன்பட வேண்டும் என்ற அக்கறையே அதற்குக் காரணம்.  ஒவ்வொரு மாதமும் பனிரண்டு கட்டுரைகள் எழுதுகிறேன்.  அது தவிர ArtReview Asia போன்ற ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு எழுதுவது தனி.  இதெல்லாம் போக, ஸ்ரீவில்லிபுத்தூர் நாவல் தனிக் கதை.  இதற்கெல்லாம் எனக்கு எப்படி நேரம் கிடைக்கிறது?  குடியை விட்டது மட்டுமே காரணம்.  போகட்டும்.  அராத்து சொன்ன விஷயம்.  மேலே உள்ள கடிதத்தைப் பார்க்கவும்.  சத்திய சோதனையின் நாலு வரியைப் போட்டதும் அடுத்த நிமிடம் ஸ்ரீராமிடமிருந்து மேற்கண்ட கடிதம்.  இப்படி ஒரு நண்பரை என் வாழ்நாளில் கண்டதில்லை.

முன்பு ஒரு தோழி இருந்தார்.  காலையில் ஐந்து மணிக்கு எனக்கு விமானத்தைப் பிடிக்க வேண்டும் என்றால் நான் இரண்டு மணிக்கு எழுந்து கொள்ள வேண்டும் அல்லவா?  அலாரம் வைத்து அதையும் கவனிக்காமல் உறங்கி விட்டால்?  தோழியிடம் விஷயத்தைச் சொன்னால் இரண்டு மணிக்கு எழுப்பி விட்டு விடுவார்.   மதியம் ஒரு மணிக்கு எனக்குச் சாப்பிட வேண்டும்.  ஐந்து நிமிடம் கூடக் காத்திருக்க முடியாது.  வெளியே போய் சாப்பிட நேரம் இருக்காது.  அவந்திகா ஊருக்குப் போயிருப்பாள்.  தோழியிடம் பனிரண்டரை மணிக்கு ஃபோன் செய்தால் போதும், 12.55க்கு சாப்பாடு வீடு தேடி வந்து விடும்.  பார்க் ஷெரட்டனிலிருந்து கூட வரும்.  இத்தனைக்கும் தோழி இருப்பது ஹைதராபாதில்.  எல்லா வேலையும் ஃபோனிலேயே முடிந்து விடும்.  காலம் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை அல்லவா?  தோழி அமெரிக்கா போனார்.  இப்போது மாதம் ஒருமுறை பேசுவதோடு சரி.  அவர் ஒருமுறை சொன்னார்.  உங்கள் வாழ்வில் என்னுடைய இடத்தை வேறு எவராலும் ஈடு செய்ய முடியாது என்று.  அவருக்கும் எனக்கும் இருந்த நட்பில் எந்த விதமான ஆண் பெண் உறவுச் சிக்கலும் இருந்ததில்லை.  இரண்டு கல்லூரி மாணவர்களிடையே இருக்கும் நட்பு தான்.  அவர் ஹைதராபாதில் இருந்ததால் அராத்துவைப் பார்க்கப் போகும் போது ஒன்றிரண்டு முறை சந்தித்திருக்கிறேன்.

இப்போது ஸ்ரீராம்.  ஹைதராபத் தோழியின் உதவிகள் ஒருவிதமானவை.   ஸ்ரீராமிடம் அதை எதிர்பார்க்கவே முடியாது.  நான் காலை நான்கு மணிக்கு எழுந்து கொள்ளும் வழக்கம் உள்ளவன்.  ஸ்ரீராம் அந்த நேரம்தான் உறங்கப் போவார்.  விரைவில் ஸ்ரீராமும் அமெரிக்கா சென்று விடுவார்.  அமெரிக்கா போனாலும் இப்படித்தான் இருப்பேன், எந்த மாற்றமும் இருக்காது என்று அடிக்கடி உறுதி கொடுக்கிறார்.  என் பழைய அனுபவம் அப்படி இருந்ததில்லை.  ஸ்ரீராமை விட நெருக்கமாக இருந்தவர்களையெல்லாம் கால வெள்ளம் அடித்துக் கொண்டு போய் எங்கோ ஒரு கண்காணாத கரையில் நிறுத்தி வைத்திருக்கிறது.  அமெரிக்கா என்றால் இன்னொரு பிரச்சினை, காலம்.  இங்கே பகல், அங்கே இரவு.  இன்னொன்று, இப்போது ஸ்ரீராம் இங்கே மாணவர்.  அங்கே போனால் இவ்வளவு சுதந்திரமாக இருக்க முடியாது.  அங்கே வேலை அதிகம்.

ஆனால் முதுமொழி சொல்வது போல், ஒரு கதவு மூடினால் எனக்கு ஒன்பது கதவுகள் திறப்பதில்லை; குறைந்த பட்சம் இரண்டு மூன்று கதவுகள் திறக்கின்றன.  இந்த நிலையில் அராத்து சொன்ன விஷயம், நீங்கள் ஸ்ரீராமைக் கண்டித்து அடிக்கடி பேசுகிறீர்கள், எழுதவும் செய்து விடுகிறீர்கள்.  அதைப் பார்த்து அவர் முறுக்கிக் கொண்டு விட்டால் உங்களுக்கு எப்படியோ நாங்கள்தான் பெரும் நஷ்டம் அடைவோம்.  நான் சொன்னேன், நான் கொடுப்பது ஒரு பயிற்சி.  அதைப் பயின்றால் உங்கள் அனைவருக்கும் நன்மை உண்டாகும்.  பயிற்சியின் போது முறுக்கிக் கொண்டு போனால் எனக்கு நஷ்டம் இல்லை.  மேலும், ஒவ்வொரு படைப்பாளியும் கடவுளுக்கு நிகரானவன்.  அவன் அருகில் இருப்பதற்கே ஒருவர் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

மற்றொரு நண்பர் என்னிடம் சொன்னார். ராம்ஜியை அடிக்கடி தொந்தரவு செய்கிறீர்களோ என்று எனக்குத் தோன்றுகிறது.  கவனம் தேவை.

புரிகிறாற்போல் சொல்கிறேன்.  பத்து நாட்கள் தினந்தோறும் பகல் உணவை வெளியே சாப்பிட வேண்டும்.  பத்து நாட்களும் ராம்ஜிக்கு ஃபோன் செய்து என்ன ஃப்ரீயா என்று கேட்பேன்.  இன்று ஃப்ரீ இல்லை சாரு என்று அவர்தான் எனக்குச் சொல்ல வேண்டும்.  என் நண்பர்கள் எப்போதுமே என்னிடம் சுதந்திரமாக இருக்க வேண்டும், இது போன்ற லௌகீக சமாச்சாரங்களில் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.  நேற்று அவரை சாப்பிடக் கூப்பிடோமே, இன்றும் கூப்பிட்டால் தப்பாக நினைப்பாரோ?  இந்தப் பேச்சே என்னிடம் கிடையாது.  நீங்கள் வேலையாக இருந்தால் அதைத் தாராளமாகச் சொல்லலாம்.  ஒரு மூன்று நாள் தொடர்ந்தாற்போல் பிஸி, பிஸி என்று சொன்னால், நான்காம் நாள் நானே தொடர்பு கொள்ள மாட்டேன்.  அவர் பிஸியாக இருக்கிறார் என்று நினைப்பேன்.  ஆனால் நான்காம் நாள் அவர் என்னைத் தொடர்பு கொண்டு அழைக்கலாம்.  இதெல்லாம் ரொம்பச் சின்ன விஷயம்.  ஆனால் இதெல்லாம் நட்புக்கு ஊறு செய்யும் என்ற அளவுக்கு அஞ்சும் நிலையில் மனிதர்கள் வாழ்கிறார்கள் என்பதே எனக்கு கிலியாக இருக்கிறது.