அற்புதம்… ஆனந்தம்… கடவுளின் உரையாடல்…

http://www.youtube.com/watch?v=6jxsnIRpy2E

இமயமலை புகைப்படங்களை வாசகர் வட்டத்தில் பதிவு செய்து கொண்டிருந்த போது நான் எப்போதோ எழுதியதை எடுத்து வட்டத்தில் போட்டிருந்தார்  செல்வகுமார்.  வட்டத்தை ஆக்கபூர்வமாகக் கொண்டு செல்பவர்களில் அவர் ஒருவர்.  எனக்கே இது புதிதாக இருந்தது.  இமயத்தைப் பார்க்கும் போதெல்லாம் பரிபூர்ணமாக என் ஆன்மாவில் ஒரு வித இசை ஓடிக் கொண்டிருந்தது.

தருண் தேஜ்பாலில் valley of masks என்ற நாவலை அப்போது படித்துக் கொண்டிருந்தேன்.  இப்போது சொல்கிறேன்.  குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.  அந்த நாவலுக்கு Asian Man Booker விருது கிடைத்து விடும்.  ஆனால் தருணின் மூன்று நாவல்களிலும் அந்த நாவலுக்குத்தான் நான் மூன்றாவது இடம் கொடுப்பேன்.  முதல் இடம் story of my assassins.  இரண்டாவது, ஆல்கெமி ஆஃப் டிஸையர்.  மூன்றாவது valley of masks.  இது ஒரு fable.   fable என்றால் பத்து பக்கம் எழுதலாம்.  ஐநூறு பக்கம் எழுதுவதெல்லாம் மனித முயற்சியில் சாத்தியமா என்றே தெரியவில்லை.  இந்த நாவல் முழுக்கவும் கற்பனை.  ஒன்று கூட நிஜ வாழ்க்கை அல்ல.  முழுக்க முழுக்க கற்பனை.  இதில் எந்த விதமான உலக வாழ்க்கை அனுபவங்களும் இல்லை.  ஆனால் இது ஒருவகையில் இந்தக் காலத்து மனிதனின் கதை.  ஆனால் கதையில் மனிதர்களே இல்லை.  சொன்னால் புரியாது.  படித்துத்தான் பார்க்க வேண்டும்.  கதையில் ஒரு தேசம் வருகிறது.  அங்கே இசைக்குத் தடை.  இசைத்தால் மரண தண்டனை.  காதலுக்குத் தடை.  அன்புக்குத் தடை.  பாசத்துக்குத் தடை.  அம்மா அப்பா அண்ணன் தம்பி சகோதரி என்று எந்த உறவுகளும் இல்லை.  மீறினால் மரணம்.  ஒரு குழந்தை பிறக்கும்.  ஆனால் அப்பா யார் என்று தெரியாது.  நீங்களாகவும் இருக்கலாம்.  நானாகவும் இருக்கலாம்.  அந்த தேசத்தின் பாதுகாவலான ஒருவன் கடைசியில் அங்கிருந்து தப்பி விடுகிறான்.  அங்கிருந்து யாருமே அதுவரை தப்பியதில்லை.  தப்பவும் முடியாது.  தப்பியவன் ஒரு தேசத்துக்கு வருகிறான்.  அங்கே ஒரு பெண்ணை சிலபேர் சேர்ந்து கற்பழிப்பதைப் பார்க்கிறான்.  அவர்களை அடித்து விரட்டுகிறான்.  ஆனால் அதே தேசத்தில் ஒரு அற்புதமான இசையைக் கேட்கிறான்.   வேறு மனிதனாகிறான்.  அவனைத் தேடிக் கொண்டு அவனுடைய தேசத்து ஆட்கள் வருகிறார்கள்.  அவர்கள் அந்த இசையைக் கேட்டால் மனிதத் தன்மையை மீட்டு எடுத்து விடுவார்கள் என்ற நம்பிக்கையோடு அவர்களுக்காகக் காத்திருக்கிறான்.  நாவல் முடிகிறது.

இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள்.  நான் இது போன்ற பாடல்களைக் கேட்டே வளர்ந்திருக்கிறேன்.  தமிழ்நாட்டில் வாழ்ந்தாலும் தமிழ் பேசினாலும் தமிழிலேயே எழுதினாலும் இது போன்ற பாடல்களைக் கொண்டதாகவே இருந்து வருகிறது என் ரசனை உலகம்.  இந்தப் பாடலைக் கேட்க முடிகிறதா என்று பாருங்கள்.  ஏனென்றால், இளையராஜாவை எனக்குப் பிடிக்காவிட்டாலும் அவரை எவ்வளவு தூரம் உருகி உருகிக் கேட்கிறார்கள் என்பதைப் பார்ப்பதற்காகவே எப்போதாவது வியாழக்கிழமைகளில் ரெஸிடென்ஸி பாருக்குப் போவதுண்டு.  இந்தப் பாடலில் கிடாரிஸ்ட் என்ன உருகு உருகுகிறான் என்று பாருங்கள்.  கிடாரிலிருந்தும் ஸாக்ஸஃபோனிலிருந்தும் கடவுளே இசை வடிவாகப் பேசுகிறார்.  இப்படிப்பட்ட இசையைக் கேட்கும் போது மனித மனதில் பேராசை, கோபம், துக்கம், வெறுப்பு போன்ற எண்ணங்களெல்லாம் எப்படித் தோன்றும்? எப்படித் தோன்ற முடியும்?

பாடலைக் கடைசி வரை கேளுங்கள்…

Comments are closed.