தமிழில் வெகுஜன எழுத்துக்கும் இலக்கியத்துக்கும் சம்பந்தமே இருப்பதில்லை. அது வேறு; இது வேறு. ஆனால் வெகுஜனப் பத்திரிகைகளில் இலக்கியம் வரும். லா.ச.ரா.வின் எழுத்து முழுக்கவும் வெகுஜனப் பத்திரிகைகளில் வந்தவைதான். அசோகமித்திரனின் எழுத்தும்தான். இந்திரா பார்த்தசாரதி அநேகமாக கல்கியில் எழுதினார். மற்றபடி வெகுஜனப் பத்திரிகைகளில் வரும் பொழுதுபோக்கு எழுத்தை என்னால் ஒருபோதும் வாசிக்க முடிந்ததில்லை. அதற்கு ஒரே ஒரு விதிவிலக்காக இருந்தவர் சுஜாதா மட்டுமே. காரணம், அவர் எழுத்து வெறும் வணிக எழுத்து என்று ஒதுக்கித் தள்ள முடியாமல் இருந்தது. அவருடைய கற்றதும் பெற்றதும் தொடரை நான் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை ஒரு கட்டுரை விடாமல் படித்துக் கொண்டிருந்தேன். அதேபோல் அவருடைய துப்பறியும் கதைகள், ஒரே ஒரு சரித்திரக் கதை மற்ற சமூக (!) நாவல்கள் அனைத்தையுமே என்னால் சுவாரசியமாக வாசிக்க முடிந்தது. அவற்றை வெறுமனே வணிக எழுத்து என்று ஒதுக்கித் தள்ளி விட முடியாது. வணிகத்துக்கும் இலக்கியத்துக்கும் இடையில் இருக்கும். ஆனால் அதையும் மீறி சிலபல இலக்கியத் தரமான கதைகளையும் எழுதியிருக்கிறார். நகரம் அப்படிப்பட்ட ஒரு கதை. கனவுத் தொழிற்சாலையும் ஒரு நல்ல நாவல்.
சுஜாதா அளவுக்கு சுவாரசியமாக எழுத வேறு யாருமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவர் எதை எழுதினாலும் அதைத் தாராளமாகப் படிக்கலாம். தன்னுடைய கடைசி நாள் வரை எழுதிக் கொண்டே இருந்த சுஜாதாவின் இதுவரை வெளிவராத ஒரு தொடர் இப்போது குமுதத்தில் வர ஆரம்பித்துள்ளது. அதைப் படிக்கும் போது திரும்பவும் எனக்கு 50 ஆண்டுகள் பின்னால் போய் விட்டது போல் இருக்கிறது. படித்துப் பாருங்கள். அதோடு குமுதத்தில் நான் எழுதும் தொடரைப் பற்றியும் ஒரு வார்த்தை. நான் பத்திரிகைக்குப் பத்திரிகை வேறு விதமாக எழுதுபவன் அல்ல. உயிர்மையில் எழுதியதைத்தான் இப்போது குமுதத்தில் எழுதி வருகிறேன். ஒரே வித்தியாசம், பக்க அளவு மட்டுமே. உயிர்மையில் 3000 வார்த்தைகள்; குமுதத்தில் 700.