சாருவும் நானும்: லைலா எக்ஸ்

ஸ்ரீராம் தொகுத்துக்கொண்டிருக்கும், என்னைப் பற்றிய நண்பர்களின் கருத்துத் தொகுப்பு நூலுக்கு லைலா எக்ஸ் எழுதியுள்ள கட்டுரை இது. பல சமயங்களில் நான் எழுதியிருக்கிறேன். “எனக்கு உங்கள் கட்டுரைகள் மிகவும் பிடிக்கும்.  ஆனால், புனைகதைகள்….” என்று சொல்லி அசிங்கமாக சிரிக்கும் பல நண்பர்களை நான் பார்த்திருக்கிறேன்.  எந்த ஒரு ஐரோப்பிய எழுத்தாளனும் தன் வாழ்நாளில் பெரும்பகுதியை இப்படி கட்டுரைகள் எழுதி வீணடித்துக் கொண்டிருக்க மாட்டான்.  உம்பர்த்தோ எக்கோ போன்றவர்களை நான் எழுத்தாளனாக கருதுவதில்லை.  அவர்கள் பல்கலைக் கழக அறிஞர்கள்.  வரலாறு பற்றியும் தத்துவம் பற்றியும்  அவர்களிடம் இருந்து அறிந்து கொள்ள ஏராளம் உள்ளன.  தமிழின் சாபக்கேடு, ஒரு எழுத்தாளன் வரலாறு பற்றியும் இசை பற்றியும், தத்துவம் பற்றியும், சினிமா பற்றியும், மருத்துவம், மனித உடற்கூறு, சமையல், அரசியல் என்று எல்லா கன்றாவியைப் பற்றியும் எழுத்தித் தொலைய வேண்டியிருக்கிறது.  இல்லாவிட்டால் தொலைந்தவர்கள் பட்டியலில் சேர்த்துவிடுவார்கள்.  மேலும், இந்த விஷயங்களைப் பற்றியெல்லாம் எழுத இங்கே வேறு புத்திஜீவிகளும் இல்லை, சிந்தனையாளர்களும் இல்லை.  கல்வியாளர்களும் இல்லை.  ஆனால், என் அடையாளம் என் புனைகதைகள். என் புனைகதைகளைப் பற்றிய நல்லபிப்பிராயம் இல்லாதவர்களோடு நான் பழகுவதில்லை.  முகமன் கூட சொல்ல விரும்பமாட்டேன்.  ஆனால், விதிக்கு சில விலக்குகளும் உண்டு.  அதில் ஒருவர் லைலா எக்ஸ்.  என் புனைகதைகளிலேயே ஆகச் சிறந்ததாக நான் கருதுவது, ராஸ லீலா மற்றும் எக்ஸைல்.  லைலா எக்ஸின் கட்டுரை இது இரண்டையும் நிராகரிப்பதாகவே உள்ளது.  மற்றபடி, எதார்த்த வாழ்வில் சாரு எவ்வளவு நிஜமானவர், இயல்பானவர், சிநேகப்பூர்வமானவர், இனிமையானவர் என்றெல்லாம் பல விபரங்கள் இக்கட்டுரையில் உண்டு.  ஒரு எழுத்தாளன் கொலைகாரனாகவோ பொறுக்கியாகவோ இருப்பதில் என்ன பெரிய பிரச்சனை இருக்கிறது?  இயக்குனர் ரோமன் பொலான்ஸ்கி ஒரு Paedophile; ஆர்த்தர் ரேம்போ ஒரு பொறுக்கியாக வாழ்ந்தவன்.  ஜெனே கதை எல்லோருக்கும் தெரியும்.  வான்கோவைப் போல என் செவிகளில் ஒன்றை ஒரு வேசியிடம் அறுத்துக் கொடுக்க முடியாத ஒரு கோழை நான்.  மிஷல் வெல்பெக்கிடம் பிபிசியிலிருந்து ஒரு இளம் பெண் நேர்காணல் எடுப்பதற்காக பாரிஸ் சென்றாள்.  இருபத்து நான்கு மணிநேரமும் கடும் போதையில் இருக்கும் வெல்பெக் அவளைப் பார்த்து நீ என்னோடு ஒரு முறை படுத்தால் உனக்கு நான் பேட்டி தருவேன், பயப்பட வேண்டாம் இதோ பார் நமக்கு கம்பெனி கொடுக்க என் மனைவியும் இருக்கிறாள் என்று சொல்ல, அடித்து பிடித்துக் கொண்டு லண்டன் போய்ச் சேர்ந்தாள் அந்தப் பெண். அது பிறகு பெரிய சர்ச்சை ஆயிற்று.  சர்ச்சைதான் ஆயிற்று.  யாரும் வெல்பெக்கை தீண்டத்தகாதவனாக  சமூக விலக்கம் செய்யவில்லை.  வில்லியம் பரோஸ்ஸுக்கு கைத்துப்பாக்கிகளைச் சேகரிக்கும் பழக்கம் உண்டு.  துப்பாக்கி சுடுவதில் வல்லுநர்.  ஒருமுறை தன் அன்புக்குரிய மனைவியின்  தலையில் ஆப்பிளை வைத்து துப்பாக்கியால் சுட்டார்.  குறி தவறி மனைவி இறந்தாள்.  நடந்தது மெக்ஸிகோ என்று நினைக்கிறேன். சிறையில் போட்டுவிட்டது அரசு.  அவர் கொலைகாரர் அல்ல; எழுத்தாளர் என்று அமெரிக்க அரசும் ஜான் பால் சார்த்தர் போன்ற புத்திஜீவிகளும் மெக்ஸிகோ அரசிடம் பேசி அவரை வெளியே கொண்டுவந்தார்கள். பரோஸ் ஓரினச் சேர்க்கையாளர்.  பதினாறு வயதுக்குட்பட்ட சிறுவர்களை அவருக்குப் பிடிக்கும். அதற்கு அமெரிக்காவில் இருபது ஆண்டுகளுக்கு மேல் சிறைதண்டனை உண்டு. அதன் காரணமாகவே அவர் மொராக்கோ வந்து வாழ்ந்தார். மொராக்கோ இந்தியாவைப் போல. அங்கேயும் ஓரினச் சேர்க்கை தடை செய்யபட்டது என்றாலும் யாரும் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. அதிலும் வெள்ளைத்தோல் அமரிக்கர் என்றால் சல்யூட் அடித்துவிட்டுப் போய்விடும் போலிஸ். நம்மூரில் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் போடவேண்டும் என்று ஒரு சட்டம் இருப்பது போல. ஆக, ஒரு பேச்சுக்கு நான் பரோஸை போல இருந்தால் என்னைப் பற்றி என்ன எழுதப்படும்?  ஒரு ஐரோப்பிய எழுத்தாளனைப் போல நான் இங்கு வாழ்ந்தால் ஒரே நாளில் என்னைக் கொன்று விடுவார்கள்.  

பொதுவாக இந்தத் தொகுப்பு நூலில் என்னைப்பற்றி ஒரேயடியாகப் பாராட்டு வார்த்தைகளே உள்ளன;  இந்தப் புகழ்ச்சி எல்லாம் தொகுக்கப்படலாமா என்று சில நண்பர்கள் கேட்டனர். என்னைப் புகழ்வதால் எனக்கு மகிழ்ச்சி இல்லை.  என்னளவுக்கு – நான் என்னைப் புகழ்ந்து கொள்ளும் அளவுக்கு  வேறு யாரும் என்னைப் புகழ முடியாது.  ஓரான் பாமுக். கார்ஸியா மார்க்கேஸ். மரியோ பர்கஸ் யோசா. ஹாருகி முராகாமி  போன்ற பலரையும் விட நான் சிறந்த எழுத்தாளன் என்று எனக்குத் திண்ணமாகத் தெரியும்.  இப்படிச் சொல்வது என் உயரத்தின் அளவைச் சொல்வதைப் போல.  அவ்வளவுதான்.  என்னை யாரும் புகழ முடியாது.  புகழ்வதால் எனக்கு மகிழ்ச்சியும் கிடையாது.  எனக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய ஒரே விஷயம், பயணம் மட்டுமே.   இருந்தாலும் தமிழ்நாட்டில் ஒரு எழுத்தாளன் உயிரோடு இருக்கும் வரை அவனைப் பற்றி ஒரு வார்த்தை பேசாமல் அவன் செத்து மடிந்த பிறகு ஆகா, ஓஹோ என்று புகழ்வது வழக்கமாக இருக்கிறபடியால் என் ஆயுள் காலத்திலேயே என் எழுத்துப் பற்றிய அறிமுகத்தை செய்துவிட வேண்டும் என்று நினைக்கிறார் ஸ்ரீராம்.  அவ்வளவுதான்.

– சாரு நிவேதிதா  

***

சாருவும் நானும் – லைலா எக்ஸ்

சாருவின் வலைத்தளத்தை பல வருடங்களாகத் தொடர்ந்து படித்து வருகிறேன். எனக்கு சாருவின் புத்தகங்களை 2005 வாக்கில் கல்லூரி இறுதிக்காலத்தில் அறிமுகப்படுத்தியது என் தம்பிதான். தி.ஜா., சுஜாதா, சாண்டில்யன், பாலகுமாரன் போன்றவர்களிடமிருந்து தீவிரமான எழுத்துக்களுக்கு நகர்ந்த துவக்க காலத்தில் என் முதல் தீவிர இலக்கியப் பரிச்சயம் சாருவுடன்தான் துவங்கியது. பெங்களூருவில் கருடா மாலில் அவரைப்பார்த்த போது என் தம்பி மட்டும் பேச, நான் வணக்கம் வைத்துவிட்டுப் பேசாமல் வந்துவிட்டேன். தேகத்தைப் படித்துவிட்டும், மேலும் சில முகநூல் பிரச்சனைகளாலும் அவர் மீது பெரிதான அபிப்ராயம் இல்லாமலிருந்தது. மாலில் சந்தித்தபிறகு என்னுள் இருந்த சாருவின் மீதான எதிர்மறை எண்ணங்களை மாற்றியது என் சகோதரன்தான். ஒருமுறை அவரது வலைத்தளத்தில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக அறிய வரவும், “நான் எந்த அளவிலாவது உதவ முடியுமா” என்று கேட்டு மெயில் எழுதினேன். இப்படியாக எங்களது நட்பு துவங்கியது. அவர் எழுத்தைப் பல வருடங்களாக படித்து வந்திருந்தாலும் அவரைத் தொடர்பு கொள்ளத் தோன்றியதில்லை. பேசத் துவங்கிய ஆரம்ப நாட்களில், “இப்படி தீவிரமாக என்னை வாசிக்கும் ஒரு வாசகி இருப்பதே தெரியவில்லையே” என்று சொல்லிக் கொண்டிருந்தார். படிப்பதைத்தவிர வேறு ஒன்றும் எழுத்தாளர்களுக்கு பெரிதாகச் செய்ய வேண்டியதில்லை என்ற கண்ணோட்டம் மெதுவாக மாறிக்கொண்டு வந்த காலம். ஒரு எழுத்தாளரைப் பாராட்டுவது எத்தனை முக்கியம் என்று அந்த கால கட்டத்தில் வெகு தாமதமாகவே தெரிந்துகொண்டேன்.

சாருவின் ஸீரோ டிகிரியை எத்தனை முறை வாசித்திருப்பேனென்று கணக்கே கிடையாது. மேலும், அவருடைய பெரும்பான்மையான படைப்புகளை நான் ஒருமுறையாவது வாசித்துள்ளேன் – இதைப்பற்றி அவருக்கே தெரியாது என்று தான் நினைக்கிறேன். ‘தேகம்’ முதற்கொண்டு வாசித்து முடித்துள்ளேன். ‘கலகம் காதல் இசை’ படித்து தான் அவர் மீது எனக்கு அதிகம் மரியாதை வந்தது (தன்னுடைய புனைவுகளை விட கட்டுரைகளைப் பிடிக்கும் என்று சொல்பவர்களை சாருவுக்குப் பிடிக்காது என்ற போதும்)… இந்த காலத்தில் இணையத்தை வைத்துக்கொண்டு இசை பற்றியோ அல்லது எந்த ஒரு புத்தகத்தைப்பற்றியோ எளிதாக எழுதிவிடலாம். ஆனால், இத்தனை தூரம் தொழில்நுட்பம் வளர்ந்திராத காலத்தில் அப்படியான இசைக் கலைஞர்களைப் பற்றி எழுதவும், கேட்கவும் எத்தனை ஒரு தேடலும் அர்ப்பணிப்பும் வேண்டும் என்பதை நினைத்தால் எனக்கு மலைப்பாக இருந்தது. இசை பற்றிய எத்தனை குறிப்புகள்… எத்தனை தூரம் அலைந்து திரிந்து அவற்றை சேகரித்தாரோ… நல்ல இசையை அறிமுகப்படுத்துபவர்கள் என்னைப் பொறுத்தவரை கடவுள். அதனால் யார்டா இது, இசை பற்றி இப்படி எழுதிக்கொண்டிருப்பது என்று அவர் மீது கவனம் செலுத்தத் துவங்கினேன். பிறகு கோணல் பக்கங்கள் படித்து முடித்த போது அவருடைய அனுபவங்களும், வாழ்வின் மீதான அணுகு முறையும், தேனான தமிழுமாக அவர் எழுத்துக்குத் தீவிரமான வாசகியானேன். ஆனாலும் அவருடன் பேசுவதில் தயக்கம் இருந்துகொண்டே தான் இருந்தது. அவர் மது அருந்துவது இல்லை என்று என்றைக்கு அறிந்துகொண்டேனோ அன்றே அவரைத் தொடர்பு கொள்ள இருந்த தயக்கம் நீங்கியது.

சாருவின் எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும், ஸீரோ டிகிரியும் நான் மிகவும் ரசித்த புனைவுகள். என்னுடைய வயதில் ‘தேகம்’ புனைவைக் கூட மிக விரும்பித்தான் படித்தேன் என்றாலும் இன்று அதை என்னால் ரசிக்க இயலாததால் அப்புதினத்தை பிடித்த ஒன்றாக இப்போது குறிப்பிட விரும்பவில்லை. மேலும் கோணல் பக்கங்கள், மனம் கொத்திப் பறவை, வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள் மற்றும் பழுப்பு நிறப் பக்கங்கள் ஆகியவற்றை மிகவும் விரும்பிப் படித்துள்ளேன். மிக முக்கியமாக, ஊரின் மிக அழகான பெண்.  

ஆனால் முக்கியமான ஒன்றை நான் குறிப்பிட்டே ஆக வேண்டும்.  என்னதான் சாரு ஒரு “transgressive” எழுத்தாளர் என்று கூறிக் கொண்டாலும் அவருடைய புனைவுகளில் நான் வெறுப்பை உணர்வதில்லை. இன்றைய யுகமே வெறுப்பில் இயங்கும் ஒரு யுகம். அத்தனை புத்திசாலித்தனமான, கூர்மையான வார்த்தைப்பாடுகளும் வெறுப்பில் ஊறும் போது மிக நன்றாக வந்துவிடுகிறது. ஆனால், சாருவிடம் இந்த சமுதாயத்தின் மேல் புனைவுகளில் கோபம் தான் இருக்குமேயன்றி வெறுப்பு இருக்காது. அத்துடன் நான் சொல்ல விரும்புவது, அவரது புனைவுகளில் உள்ள சுவாரஸ்யம், கவர்ச்சி மற்றும் அவற்றிலுள்ள விஷய ஞானம் என்பவை மிக முக்கியம் என்பதை மட்டுமே.  சாரு எக்ஸைல் படிச்சிட்டியா படிச்சிட்டியா என்று கேட்டுக்கொண்டே இருப்பார்; பின்னர் அப்படிக் கேட்பதை விட்டுவிட்டார். அதேபோல் தான் ராஸ லீலாவையும். ஆனால் எனக்கு இவற்றில் உள்ள எழுத்தும் கதைகளும் சுவாரஸ்யமாக இருந்தாலும் புனைவு என்ற வகையில் அத்தனை ஈர்ப்பு இல்லாததாக உணர்வதால் அவற்றைப்பற்றி அவரிடம் பேசுவதில்லை. அதை அவர் நிச்சயமாக நல்ல விதமாகத்தான் எடுத்துக்கொள்வார் என்றாலும், அதிக நபர்கள் குறிப்பிடும் அதே விசயத்தை மீண்டும் குறிப்பிட வேண்டாம் என்பதே என் எண்ணம்.

எந்த ஒரு எழுத்தாளருக்கும் எழுத்து என்பது தொடர்ந்து இயங்க வெண்டிய தீவிர செயல்பாடு. அதில் சாரு எந்த ஒரு குறையும் வைப்பதில்லை. புனைவெழுத்தில் மட்டுமல்ல, இசையாக இருக்கட்டும், சினிமாவாக இருக்கட்டும், புகைப்படம், நடனம் என்று எந்த ஒரு கலைச் செயல்பாட்டினைப் பற்றியும் சாரு தொடர்ந்து சுவாரஸ்யமாக எழுதிவருகிறார். அவருடைய கண்ணோட்டத்தை வைக்கிறார், அறிவுஜீவித்தனமான கருத்துகளாக மட்டுமில்லாமல் உணர்வுபூர்வமாகவும் பார்க்கிறார். குறும்படங்கள், தொலைக்காட்சி விவாதங்கள், புத்தக வெளியீடு என்று இயங்குகிறார்; எத்தனை தூரம், எத்தனை இடங்களுக்குப் பயணப்படுகிறார்; அவருடைய பயணக் கட்டுரைகள் மற்றும் அதில் அவர் எழுதும் குறிப்புகள் எத்தனை முக்கியமானவை என்று இந்த முகநூல்/ட்விட்டர் தலைமுறைக்கு அறிய வருவதில்லை. கதைகளும் சரித்திரங்களும் நிறைந்த தஞ்சை, திருச்சி பகுதியிலிருந்து வந்தவள் நான். ஒவ்வொரு மண்டபத்திற்கும், ஒவ்வொரு கோட்டைக்கும், ஒவ்வொரு கோயிலுக்கும், ஒவ்வொரு கடவுளுக்கும், ஒவ்வொரு இடத்துக்குமாக பல நூறு கதைகள் கேட்டவள். ஒரு இடத்தை இடமாக மட்டும் பார்க்காமல் அதை அத்துடன் இணைந்த சரித்திரமும் கதைகளும் அங்கு வாழ்ந்த மனிதர்களுமாக அறிந்தவள். திருச்சியில் மிகவும் பிரபலமான “ஓயாமரி” என்றொரு இடுகாடு உண்டு, ஓயாமல் பிணங்கள் எரிந்து கொண்டே இருக்குமாம்.  அதனால்தான் அது “ஓயாமரி”. இப்படி சின்ன சின்ன விசயங்களையும் கதைகளாக கேட்டு வளர்ந்தவள் என்ற விதத்தில் எனக்கு சாரு மிக முக்கியமான எழுத்தாளராக தோன்றுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.  

முக்கியமாக கலாச்சார போர்வையிலோ அல்லது நம்பிக்கைகளிலோ சிக்கிக் கொள்ளாமல் சுதந்திரமாக இயங்குகிறார். ஜல்லிக்கட்டு, ஹிந்தி, பின்னாட்களில் நித்தியானந்தா என்று எதை எடுத்துக் கொண்டாலும் கோட்பாட்டு ரீதியாக அல்லாமல் உணர்வு பூர்வமாகவே இயங்குகிறார். அதுதானே ஒரு எழுத்தாளனின் சுதந்திரம்? கலாச்சாரம் மட்டுமல்ல, அறிவுஜீவித்தனத்திலிருந்தும் வெளியேறுவதே முக்கியம் என்று நான் நம்புகிறேன். எனக்கு ஒத்து வராததை மட்டுமே கட்டுடைப்பேன் அல்லது எதிர்ப்பேன், இதற்கு முன்னால் தவறுதலாகப் பேசியிருந்தால் ஒன்று, அதைப் பற்றி பேசாமல் இருப்பேன் அல்லது சப்பைக்கட்டு கட்டுவேன் என்பது என்ன ஒரு சுயநலம். சாரு நிச்சயமாக அப்படி  இயங்குவதில்லை.

எத்தனை எத்தனை எழுத்தாளர்களை அறிமுகம் செய்கிறார்… தமிழ் மட்டும் அல்லாமல் சர்வதேச அளவில்…. எழுத்தாளர்கள் மட்டுமா? அவர் அறிமுகப்படுத்திய இசைக் கலைஞர்கள்தான் எத்தனை!  அவர் வளர்த்தெடுக்கும் அல்லது எழுதுவதற்க்கான வெளியை உருவாக்கித் தந்து அதன் காரணமாக எழுத்துலகில் அறியப்பட்டவர்கள்தான் எத்தனை பேர்!   அவருடைய இனிமையானத் தமிழும், சுவாரஸ்யமான நடையும் மிகவும் தனித்துவமானவை. அதை அவருடைய எதிரிகளே ஒப்புக்கொள்வார்கள். மற்றபடி அவருடைய எந்த புனைவு உயர்வானது, சாரு அறிமுகப்படுத்தியவர்களில் யார் முக்கியமானவர், யார் முக்கியமற்றவர் என்பதையெல்லாம் காலம் தான் தீர்மானிக்கும்.

சாரு என்னளவில் ஒரு புனைவு எழுத்தாளர் மட்டுமல்ல, புனைவாகவே வாழ்பவர், தம்மைப் பற்றிய மிகை கற்பனைகளும், உறவுகளுடனும்  மற்றும் நண்பர்களுடனும் அவர் ஏற்படுத்திக்கொள்ளும் கற்பனைகளும் ஒரு புனைவெழுத்தாளனுக்கே உரிய தனித்தன்மையான விடயங்கள். இவைதான் அவரை முழுமையான ஒரு புனைவெழுத்தாளராக அடையாளம் காட்டுகிறது. அவர் சிலரை, சில விசயங்களை, சில நம்பிக்கைகளை மறுதலிப்பதும், ஏற்றுக் கொள்வதும் மற்றும் மாற்றிப்பேசுவதாக நாம் உணர்வதும் அவரது கற்பனைகளால் மட்டுமே… “I Robot”டில் வில்ஸ் ஒரு வசனம் சொல்லுவார் “Can a robot write a symphony? Can a robot turn a… canvas into a beautiful masterpiece?” ஆனால் நிச்சயம் அந்தக் காலமும் வரும். அதற்கான முதல் கட்ட வேலைகளை சூப்பர் கம்ப்யூட்டர் உருவாக்குகிறோம் என்ற பெயரில் நாங்களெல்லாம் சுமாராக “Code” எழுதிக்கொண்டுள்ளோம்… Word processing அதாவது கொடுக்கப்பட்ட கண்டிஷன்களைகொண்டு ஒரு விசயத்திற்கு புத்திசாலித்தனமான, நிரந்தரமான, தரமான கருத்து என்பதெல்லாம் ஒரு கம்ப்யூட்டரே கொடுத்துவிடும், உதாரணத்திற்கு – இவர் தமிழ், கிருஸ்துவ, கம்யூனிஸ்ட்; இவருடைய நண்பர்கள் இவர் இவர், அவர்களுடைய நம்பிக்கைகள் இவை இவை, அவர்களுடனான சண்டைகள், அல்லது சமாதானங்கள் இப்படி… இப்படிக் கொடுத்துவிட்டால் சம்பந்தப்பட்ட நபர் எப்படி இந்த சூழலுக்கு கருத்து எழுதுவார் என்பதை தோராயமாக கம்ப்யூட்டரில் கொண்டுவந்து விடலாம். ஏனென்றால், இன்றைய அறிவுஜீவிகள் (ஆழமான உணர்வுகளில்லாத) முழு அறிவை மட்டுமே கொண்டு அப்படித்தான் இயங்குகிறார்கள், FB trending word பயன்படுத்திஸ் சொல்ல வேண்டுமென்றால் “பிளாஸ்டிக் தனமான புத்திசாலித்தனத்துடன்…” இயங்குகிறார்கள். ஆனால், நம் சாருவிற்கு இருப்பதைப் போன்ற கற்பனைகளை ஒரு ரோபாட்டால் நிச்சயம் கொண்டு வர இயலாது, இதை நீங்கள் கிண்டலாகக் கூட எதிர்கொள்ளலாம், உண்மை எப்போதும் சீரியஸான ஒன்று மட்டுமல்லவே. சிம்பொனியும், ஓவியமும் கற்பனை தான், ஆனால் அவை எப்படியும் சில கோட்பாட்டில் இயங்குபவை. சில கோட்பாடுகளில் கொண்டு வந்துவிட இயலுபவை. Radom மாக கம்ப்யூட்டரில் டைனமிக்ஸ் கொடுத்துவிட்டு இப்படியாக வரை என்றால் அது வரைவதும் நிச்சயம் ஏதோ ஒரு வகையில் புதிதாகத்தான் இருக்கும். பல feel களைக்கொடுத்து இதேபோல் பாடல் ஒன்று கொண்டுவா என்று கம்ப்யூட்டரில் கோட் எழுதிவிடலாம் என்பது என் வாதம். (பியானோவில் improvisation என்று உண்டு அதையெல்லாம் கம்பூட்டரில் வெகு எளிதாக கொண்டு வந்துவிடலாம்) – சிம்பொனி சற்று கடினம் தான் என்றாலும், திறமையான ஒரு புரோகிராமரால் ஒரு robotடை அதைச் செய்ய வைத்துவிடலாம் என்பது என் நம்பிக்கை. இப்படிச் சொல்வதற்கான அடிப்படை அறிவு எனக்கு உண்டு, Being one of the product delverlopers in LABs working on the world’s first super computer (WATSON) and also being a Pianist. எதற்குச் சொல்ல வருகிறேனென்றால் I robotடில் கூட அந்த ரோபோட் கனவு  தான் காணும், அந்தக் கனவும் சில தர்க்கங்களால்தான் ஆனது… ஆனால் கற்பனைகள் அப்படியல்ல அதற்கு எந்த தர்க்கமோ, கோட்பாடோ தேவையல்ல. கற்பனைகள் மட்டுமே மனிதனை எந்திரத்திலிருந்தும் வேறு எவற்றிலிருந்தும் வேறுபடுத்திக் காட்டுகிறது. அப்படியான கற்பனைகள் நிறைந்தவர் சாரு.

உதாரணமாக ஒரு சாமியாரை தர்க்கரீதியாக அணுகியிருந்தால் யாராக இருந்தாலும் அவர் போலி என்பதைக் கண்டுபிடித்து விடுவர். ஆனால், அதை உண்மை என்று ஒருவர் நம்புவதற்கான காரணங்கள் கற்பனையை நாடுபவை, புத்திசாலித்தனத்தையும் மீறிய கற்பனைகளும், நம்பிக்கைகளும் நிரம்பியவை. அப்படியான நம்பிக்கைகளும், கற்பனையும் நிறைந்ததுதான் மனிதார்த்தம்.  இப்படியான கற்பனைகளாலும் நம்பிக்கைகளாலும்தான் சாரு மனிதர்களை அணுகிறார், அதனால்தான் அவர் அப்பாவி, குழந்தை அல்லது காமெடியன் என்று சிலரால் அழைக்கப்படுகிறார், முக்கியமாக, பிளாஸ்டிக் அறிவுஜீவிகளால். ஆனால் இப்படிப்பட்ட அறிவுஜீவிகளும் கூட காதலி விஷயத்திலோ அல்லது மனைவி விஷயத்திலோ – எனக்கு அவள் விசுவாசமாக இருக்கிறாள் என்ற கற்பனையிலேயே வாழ்கிறார்கள்.  இப்படியான விஷயங்களை எவராலும் முழுவதுமாக உண்மை என்று நிறுவ இயலாது, அப்படி நிறுவ இயலாமல் போவதாலேயே அது உண்மையல்ல என்றோ உண்மை என்றோ ஆகாது. ஆனால் சாரு இப்படியான கற்பனைகளை மனைவி/காதலியிடத்தில் மட்டுமில்லாமல், எல்லோரிடமும் செய்வதோடு வெளிப்படையாகவும் இருக்கிறார். அந்த நம்பிக்கைகளும், கற்பனையும் உடைபடும்போது மாற்றிப் பேசுகிறார்.  அதனால்தான் அவர் அதிகம் கல்லடிப்படுவது. அதுதான் பிளாஸ்டிக் அறிவுஜீவிகளுக்கும் அவருக்கும் உள்ள வித்யாசம்.

இதையெல்லாவற்றையும் மீறி சாருவிடம் ஒரு கவர்ச்சி உள்ளது. பின்னாட்களில் தன் அறிவுஜீவித்தனத்தால் சாருவிடமிருந்து விலகிய எவரும் அவருடைய இந்த கவர்ச்சியால் ஏதோ ஒரு காலக்கட்டத்தில் கவரப்பட்டவர்கள்தான்.

நக்கற மாட்டுக்கு சிவலிங்கம்ன்னு தெரியுமா, செக்குன்னு தெரியுமா என்பது போல் எதையும், எவரையும் கிண்டலுக்கும் கேலிக்கும் உட்படுத்திவிட்டு அப்படி எழுதுவதையே புத்திஜீவித்தனம் என்று நம்பிக்கொண்டிருக்கும் முகநூல் / ட்விட்டர் யுகத்தில், இலக்கியம் என்பதே பெரும் ரகசியமான செயல்பாடாக ஆகிவிட்டது. இந்த இணைய உலகிற்கு வெளியில், சீரிய இலக்கிய உலகம் செயல்பட்டு வருகிறது. இதில் இரண்டு உலகங்களிலும் சரிசமமாக இயங்கிவரும் மூத்த எழுத்தாளர் சாரு மட்டும்தான்.

இங்கே மூத்த என்று குறிப்பிட்ட பிறகு இதை எழுதியேதான் ஆகவேண்டும். பெண்ணாக இருந்தாலும் நான் இயங்கும் வெளி சற்றே பரவலானது, பெங்களூரில் மென்துறையில் எல்லா மாநிலத்தையும் சேர்ந்த, எல்லா வயதுள்ள நண்பர்களுடனும் பழகும் வாய்ப்பு எனக்கு உண்டு. அதேபோல் பல இலக்கிய நண்பர்களும், சினிமாஉலக நண்பர்களும், விளையாட்டு உலக நண்பர்களும் உண்டு. எதற்குக் குறிப்பிட்டேன் என்றால் சாரு உடலளவிலும் சரி, மனதளவிலும் சரி முழுமையான ஒரு இளைஞர்….  எந்த ஒரு “மூத்த” இலக்கியவாதியையும் போல் அவருக்கு பைக் ஓட்ட வராது. ஆனாலும், அவர் பெங்களூருக்கு வரும் போது வண்டியில் போகலாம் என்றால், தயங்காமல் சம்மதித்து விடுவார். பயப்படாமல் உட்கார்ந்தும் வருவார். அவர் அளவு இளமையாக, சுவாரஸ்யமாகப் பேசும் நபர்கள் மிக அரிது.  என் 25 வயது நண்பர்களை விட சுவாரஸ்யமாகவும், இளமையாகவும் யோசிக்கவும் பேசவும் செய்வார். அவருடன் எம்.ஜி. ரோட்டில் நடந்தாலும் சரி, மால்களில் சுற்றினாலும் சரி, என் தந்தையின் வயதுள்ளவர் என்ற எண்ணம் எனக்குத் துளியும் வராது.

சாருவுடன் பேசத் துவங்கிய முதல் முறையே நான் “சாரு” என்றுதான் விளித்தேன். அதைப் பற்றி அவரிடம் இப்படிக் கூறினேன், “இந்த கார்ப்ரேட் கலாச்சாரத்தில் பழகிவிட்டு சார் என்று கூப்பிடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை, ரமேஷையே அண்ணான்னு கூப்பிடுவதற்கே என் நண்பர்கள் கிண்டல் பண்ணுவாங்க உங்களை அண்ணா என்றும் கூப்பிட முடியாது சாரு என்று கூப்பிட்டால் பரவால்லியா?” அதற்கு சாரு, “நீ அண்ணன்னு கூப்பிட்டிருந்தீன்னா உன் மேல் கேஸ் போட்டுடுவேன், சாருன்னே கூப்பிடு” என்று கூறினார்.

இப்படியாக சாரு சம வயது ஆண் நண்பனுடன் சுற்றும் ஒரு உணர்வைத்தான் தருவார்.  நல்ல இசையை அறிமுகப்படுத்தினால் குதூகலிப்பதும், நல்ல சாப்பாட்டை அறிமுகப்படுத்தினால் அதை ரசிப்பதுமாக, அவர் முழுமையான ஒரு இன்றைய காலக்கட்ட இளைஞர்களுக்குச் சமம். இவ்வளவு தூரம் நடக்கமாட்டேம்மா என்றோ, இதை சாப்பிட மாட்டேம்மா என்றோ சொல்லவே மாட்டார். இரவானால் சற்று சோர்வாக உணர்வார், ஆனால், அது எனக்குமே பொருந்தும். இப்படியாக அவர் முழு “யூத்”..

சாரு யாரிடம் எப்படிப் பேச வேண்டும் என்று முழுதாக முதலில் அறிந்து கொண்டு பிறகு அவர்களுக்குத் தகுந்த மாதிரிதான் பழகுவார். பெண் என்பதால் இலக்கிய அல்லது சினிமா கிசுகிசு சொல்ல முற்படுவார். அதில் நமக்கு விருப்பம் இல்லையென்று அறிந்தால் அதைப்பற்றி மீண்டும் பேச மாட்டார். “உன்னை கூட்டிட்டு போய் அவந்திகாவுக்கு அறிமுகம் செய்யறேன், எல்லாரையும் அப்படி செய்யமாட்டேன்” என்றும் சொல்லுவார், வீட்டிற்குச் செல்ல வாய்ப்பு அமையவில்லை, ஆனால் அறிமுகப்படுத்தினார். நான் பியானோ வாசிப்பேன் என்று சொன்னால் அவரால் அருமையான பியானோ பாடல்களையும் குறிப்பிட முடியும், அத்துடன் ”நீ வாசிக்க நான் உட்கார்ந்து கேட்கணும்” என்று ரொமேண்டிக்காகவும் சொல்ல முடியும். அதை நாம் நட்பாகவும் எடுத்துக் கொள்ளலாம், ரொமேண்டிக்காகவும் எடுத்துக் கொள்ளலாம் அது நம் விருப்பத்தை/தேவையைப் பொறுத்தது. அவருடைய ”யூத்“ சுபாவத்தால் அவர் அப்படித்தான் பேசுவார், அதே சமயம் அவரளவில் எதையும் யாரிடமும் திணிக்கமாட்டார். அவருடைய எதிரி என்று பெயர் பெற்ற ரமேஷுடன் (கவிஞர்) எனக்கு நெருக்கமான நட்பு உண்டு. அதை அறிந்த பின் அவரைப்பற்றி பேச மாட்டார். அதே சமயம் ரமேஷுடனான என் நட்பைத் தடுக்கவும் முயல மாட்டார். அவரைப்பற்றி அறிந்துகொள்ளவும் முயல மாட்டார்.

ஒரு எழுத்தாளரைக் குறிப்பிட்டு, அவர் எழுதுவதையெல்லாம் நல்லா இருக்குன்னு சொல்லறீங்களே இது நியாயமா என்று கோபித்துக் கொண்டால் ,”அதுவும் ஒருவகையான எழுத்துதானேம்மா. நீ எழுதுவது ஒரு துருவம்ன்னா இது ஒரு துருவம்” என்று விட்டுக்கொடுக்காமல்தான் பேசுவார். அதைவிடுத்து “வெளியில் அப்படித்தானம்மா பேசவேண்டியதா இருக்கு, என்ன பண்ண அவங்க எழுத்து எனக்கு பிடிக்கத்தான் இல்ல…” என்ற பொய்மை அவரிடமிருந்து ஒருபோதும் வராது. அப்படியே ஒருவேளை பிற்பாடு அந்த புனைவுகள் பிடிக்கவில்லையென்றால் அதையும் வெளிப்படையாகத்தான் கூறுவாரேயன்றி முதுகுக்குப் பின்னால் அதைப்பற்றி கேட்கும் நபரிடம் சால்ஜாப்பு சொல்லிக்கொண்டு இருக்க மாட்டார். ஆனால் அவரை விமர்சிக்கும் சிலர், சில எழுத்தாளர்களை முன்னால் பாராட்டி விட்டு பின்னால் அந்த எழுத்து நன்றாக இல்லை என்று என்னிடம் கூறிய நிகழவுகளும் உண்டுதான். அதனால் நான் நிச்சயமாக சொல்ல முடியும், அவர் பிலாஸ்டிக் அறிவுஜீவி அல்ல. மிகவும் உணர்வுபூர்வமான, அதே சமயம் எதையும் தேவையான அறிவுடன் அணுகும் நபர் சாரு.  

உதவி பெறுவதில் அவராக பெரும்பாலும் எதையும் வற்புறுத்த மாட்டார். நாமே உதவி செய்வதாகக் கோரினால் சரி என்று ஒப்புக்கொள்வார். செய்வதாகச் சொன்னதை மீண்டும் மீண்டும் கேட்கும் வழக்கமும் அவரிடம் இல்லை. செய்யவில்லை என்றால் விட்டுவிடுவார். அதேசமயம் அதனால் நட்பைத் துண்டிக்கவோ, முகம் காட்டவோ மாட்டார். எத்தனை தூரம் தொல்லை கொடுத்தாலும் அதைப் பற்றிய கோபத்தைக் காட்டாததை நினைத்து அவர் மேல் எனக்கு ஆச்சரியமாக இருக்கும். நான் ஒரு பக்காவான ஒழுங்கீனம், பலமுறை சொன்ன நேரத்திற்கு அவரைச் சந்திக்காமல் தாமதமாகச் செல்வேன். ஒருமுறை என் தாமதத்தால் விமானத்தைத் தவற விட்டுவிட்டு அவரிடம் அதைச் சொன்ன போது “அடடா நீ அப்படிப்பட்ட ஆளா? உன்னிடம் ஜாக்கிரதையாகத்தான் இருக்கணும்” என்று சொன்னார், ஆனாலும் அடுத்தமுறை நான் தாமதமாகப் போக அவர் சரியான நேரத்திற்கு வந்திருந்தார்.  இப்போதும் கூட இன்று நான் இரண்டு மணிக்கு வரேன் சாரு என்று சொன்னால் “லைலா ரெண்டுன்னு சொன்னா மூணுக்குத்தான் வரும்” என்று நினைத்துக்கொண்டு தாமதமாகவெல்லாம் வர மாட்டார், நான்தான் அவருடைய நேரத்தை வீணடித்தற்காக கிடந்து தவிக்க வேண்டும், அதைப்பற்றி எதையும் எதையும் காட்டிக் கொள்ளாமல் நம்மிடம் பழகுவார்.  மனதுக்குள் அசிங்கமாகத் திட்டுவாராக இருக்கும்..

இப்படி நேரம் தவறாமையிலிருந்து தொடங்கி அவரிடம் கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் உண்டு. நாம் எதை அவரிடத்தில் தேடுகிறோம் என்பதைப் பொறுத்தது அது.

“ஒரு பெண்ணை பார்த்தேன் லைலா, நடை, பேச்சு, அசைவு மற்றும் எந்த ஒன்றிலும், எந்த விதத்திலும் பெண்மையைக் காட்டிக்கொள்ளாமல் வெகு இயல்பாக இருந்தா பாத்துக்கோ…. ஆனா அத்தனை புத்திசாலிப் பெண்.” சாரு சொல்ல வருவது என்னவென்றால், அந்தப் பெண், தன்னை ஒரு பெண் என்று முன்னிறுத்திக் கொள்ளாமல், தன் அழகால் ஈர்க்க எத்தனிக்காமல் தன் புத்திஜீவித்தனத்துடன் இயல்பாக இருந்தாள். ஆனால் அவளது அறிவால் நான் கவரப்பட்டேன் என்பதைத்தான். அவருக்கு இதே கண்ணோட்டம்தான் என்னைப் பற்றியும் இருக்கும் என்று நம்புகிறேன்.  ஒருமுறை சாருவைப் பார்க்க நான் கிளம்பிக் கொண்டிருந்த ஹோதாவைப் பார்த்து என் அம்மா ஆச்சரியப்பட்டு கேட்டார்கள், “யாரைப் பார்க்க போற, இப்படி நீ டிரஸ் பண்ணி பாத்ததே இல்லையே” என்று. ஏன் இதைச் சொல்ல வந்தேன் என்றால், சாருவுக்கு சரியானபடி உடை உடுத்தவில்லை என்றால் சுத்தமாகப் பிடிக்காது.  நான் பொதுவாக அத்தனை நன்றாக உடை உடுத்திக்கொள்ளும் ஆள் இல்லை. ஆனால் சாருவைப் பார்க்க வேண்டுமென்றால் நன்றாகத்தான் உடை உடுத்திக்கொண்டு போக வேண்டும். அணிந்திருக்கும் காலணியிலிருந்து காதணி வரை கவனித்துவிடுவார். ஆனால் எப்போது இவற்றையெல்லம் பார்க்கிறார் என்று மட்டும் தெரிந்துகொள்ளவே முடியாது.

அவருடைய எதிர்பார்ப்புகளும், விருப்பங்களும் மிகவும் வெளிப்படையானவை.  அவர் எதையும் மறைக்கவும் மாட்டார், அதற்காக வெகு நிச்சயமாக வேண்டவே வேண்டும் என்று எதிர்பார்க்கவும் மாட்டார். இதனால் சாருவைப் புரிந்து கொள்வதில் கலாச்சாரம் மற்றும் பொதுவான நல்லது கெட்டது என்ற விஷயங்களில் இருப்பவர்களுக்கு சிரமமாகத்தான் இருக்கும்.

ஆண்களிடம் காட்டும் அதே நட்பைத்தான் சாரு பெண்களிடமும் பேணுவார். ஆனால் அப்படியான முயற்சிக்குப் பிறகும் பெண்கள் இயல்பாக இருப்பது ஏதோ பாவச்செயல் என்று பார்க்கப்படும் இந்த கலாச்சாரத்தில் ஆணும் சரி பெண்ணும் சரி விலகியே தான் செல்ல முற்படுகிறார்கள். ஆனால் சாரு அப்படியானவர் அல்ல, ஒரு நல்ல நட்பை அவரிடத்தில் எந்தச் சூழலுக்குப் பிறகும் பேண இயலும்.

பெண்கள் அவரை ஒரு எல்லைக்கு உட்படுத்த அல்லது சில நிபந்தனைகளுக்கு உட்படுத்த முயன்றால் அந்தப் பெண்ணைத் தவிர்த்து விடுவார். எப்படிப்பட்ட தேவதையாக அல்லது பேரழகியாக இருந்தாலும் சரி. ஆனால் இங்கே பல ஆண்களை பெண்கள் சகித்துக் கொண்டிருப்பதே மேற்கூறியபடி நிபந்தனைகளுக்குள் இயங்குவதால் தான்.  ஆனால், சாருவை எந்தவித நிபந்தனைகளுக்கும் உட்படுத்த இயலாது என்பதுடன், அப்படியே அவர் சுதந்திரத்துடன் இருந்தாலும் அவருக்கு இந்த வயதிலும் காதலிகளும், தோழிகளும் இருப்பதுதான் அவரைப் பற்றிய நிதர்சனம். பெண் என்பதால் எனக்கு இதை சொல்லத் தோன்றுகிறதோ என்னவோ. சாரு நினைத்திருந்தால் தன் எழுத்தை விரும்பும் ஒரு பணக்காரப் பெண்ணுடன் உறவை ஏற்படுத்திக்கொண்டு சென்று இருக்க இயலும்.  இதை விட அது உகந்தது அதை விட அதுக்கும் மேலிருப்பது உகந்தது என்று பணத்தை முன்னிட்டும், அழகை முன்னிட்டும், வசிப்பிடத்தை முன்னிட்டும் சென்று கொண்டிருக்கும் இன்றைய காலத்தில் இதையும் சாருவின் முக்கியமான பண்பாகப் பார்க்கவேண்டும். அவர் பணம் கேட்டு அவரது வலைதளத்தில் எழுதும் போது அதற்காக உதவ வேண்டும் என்று தோன்றுவதற்கான முக்கியமான காரணம் எனக்கு இது ஒன்றும் கூட.

சாருவுக்குத் தன்னுடைய எழுத்தை சரியாக மார்கெட்டிங் செய்துகொள்ளத் தெரியாது.

ஒருமுறை நடனத்தைப் பற்றிய நீயா-நானா. அதில் சாரு, நிகழ்ச்சியில் நாடனமாடிய ஒரு பெண் “நான் சந்திப்பவர்களின் வாழ்க்கையைப் படித்து கத்துக்கறேன், ஏன் உங்கள் கதைகளைப் படிக்கனும்” என்பது போல் கேட்டார். நான் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தபோது “எத்தனை வகையான அல்லது எத்தனை அடுக்குகளில் நீங்கள் வாழ்க்கையை, எத்தனை கலாச்சாரத்தை, எத்தனை நாடுகளை பார்க்க முடியும்? ஆனால் கதைகளில் அவை எண்ணிக்கையற்றது” என்று அருகிலிருந்த அம்மாவிடம் சொன்னேன்.  சாரு அந்த பெண்ணுக்கு எந்த பதிலும் சொல்லவில்லை.  எல்லோராலும் எல்லா நேரத்திலும் புத்திசாலித்தனமாக இருக்க முடியாது.  அதற்காக அந்தப் பெண் அந்த பேச்சில் வென்று விட்டதாக ஆகாது. அதுதான் புத்திசாலித்தனமாக பேசுவதற்கும், நிதர்சனமான புத்திசாலித்தனத்திற்கும் உள்ள வேற்றுமை. சூழலைப் பொறுத்து சிலர் புத்திசாலிகளாகத் தோற்றம் தருவார்கள், ஆனால், நிஜமான புத்திசாலித்தனம் மற்றும் நிதர்சனம் எங்கோ வெகு தொலைவில் இருக்கும்.

பிளாஸ்டிக் மற்றும் இறுகிய புத்திசாலித்தனத்தை, திறமையான நகர்வுகளைச் செய்யாத சாரு, இப்படி இருப்பதையே திறமை என்று நம்பி இயங்கிக் கொண்டிருக்கும் உலகில் சாரு ஒரு காமடியனாக காணப்படுவதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. இவ்வாறான விஷயங்களில் மட்டுமே திறமை பார்க்கும் நபர்கள் அவருடைய இயல்பான வாழ்வில் அவர் பெற்றுள்ள பேறுகளைப் பற்றியும் அவருக்கு இருக்கின்ற Craze பற்றியும் அவருடைய வெற்றிகளைப் பற்றியும் அறிவதில்லை.

எனக்கு சாருவிடம் பிடிக்காதது ஒன்றே ஒன்று தான் நள்ளிரவு ஆறரைக்குத் தொலைபேசியில் அழைப்பது. அவர் வாக்கிங் போய்க்கொண்டிருக்கும்போது. அதைத்தவிர அவருக்கு ஓய்வான நேரம் கிடைக்காது என்பதால் தான் அப்படிச்செய்வார். அத்துடன், தாமதமாக எழும் யாரும் வெற்றி பெற இயலாது என்று வேறு சொல்லுவார். நான் சிரித்து வைப்பேன். எதற்கு சொல்கிறேன் என்றால் எல்லாருடைய பார்வையிலும் எல்லாராலும் வெற்றி பெற இயலாது. அது யாருடைய வெற்றியையும் பாதிக்காது. அதேப்போல் ஒருவர் இப்படி என்றால் எல்லோரிடமும் அப்படியே தான் இருப்பார்கள் என்று இல்லை. நான் என் வாழ்வில் சந்தித்த எந்த ஒரு இளைஞரை விடவும் சாரு இந்த வயதில் முழு இளைஞர். இதுவரை சந்தித்த எந்த ஒரு ஆணை விடவும் சுவாரஸ்யம் குறைந்தவரும் இல்லை, நியாயமற்றவரும் இல்லை.

தன்னை ஒரு ஐரோப்பிய எழுத்தாளனாக பாவித்துக் கொள்வதும் சாருவின் வழக்கம். என்ன செய்வது, ஒரு எழுத்தாளரை மதிக்காத தமிழ்ச் சமூகத்தில் அவர் அப்படித்தான் யோசிக்க வேண்டியுள்ளது. முழு நேர எழுத்தாளராக மட்டுமே இயங்குவதற்கு எத்தனை தூரம் நம்பிக்கையும் தைரியமும் வேண்டும்.  அவருக்குரிய சரியான இடத்தை தமிழ்ச் சமூகம் அளித்திருந்தால் அவர் அப்படிப் பேசிக்கொண்டு இருக்கத் தேவையே இருக்காது.  மீண்டும் சொல்கிறேன், சாரு தன் எழுத்திலும், வாழ்விலும் புனைவாக வாழ்ந்து வருபவர்.  அவரது முழு வாழ்வே புனைவில் உள்ள விஷயங்களை விட சுவாரஸ்யமும், சாகசமான நிகழ்வுகளும் நிறைந்தது.  அவருக்கு நிகழ்ந்துள்ள சில காதல்கள், துரோகங்கள் மற்றும் நகைச்சுவைகள் புனைவுகளில் வருபவற்றை விட நம்ப முடியாதவை. அதனால் சாரு தன்னை அப்படியாகச் சொல்லிக்கொள்வதிலுமே ஒரு பிளாஸ்டிக்தனமான புத்திசாலித்தனம் இல்லாமல், அது அவரது இயல்புக்கு உரியதாக மட்டுமே உள்ளது.  நல்லது தானே. தன்னை, தமிழ்க் கலாச்சாரம் வார்த்தெடுத்த ஓர் ஆண் மகனாக உணர்ந்துகொள்வதை விட நிச்சயம் நல்லது தான்.  தமிழ்ச் சமூகத்தில் ஆண் தன்மையுடன் இயங்குவதை விட, சாரு ஒரு ஐரோப்பிய எழுத்தாளராக இயங்குவது நிச்சயம் எல்லோருக்குமே நல்லது.