ஒரு எழுத்தாளனின் சபதம்: தமிழ்ப் பிரபா

முகநூலில் 5.6.17 அன்று தமிழ்ப் பிரபா எழுதியது:

ஓரிரு வருடங்களுக்கு முன்பு பேஸ்புக்கில் அறிமுகமான நண்பரொருவர் போனமாதம் அலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு, தன்னுடைய திருமணச் செய்தியைச் சொல்லி, கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டார். அவர் சொன்ன தேதியையும், இடத்தையும் சுயவிசாரணை செய்து “வர ட்ரை பண்றங்க’ என்றதும் உரிமையாக மறுத்தவர், கண்டிப்பாக நான் வர வேண்டுமென்றார்.

திருமண மேடையிலேயே உப நிகழ்ச்சியாக தன் நண்பர்களுடன் சேர்ந்து துவங்கப்போகும் NGO’வின் ஆரம்ப விழா, விவசாயிகளுக்கான துயர்நிவாரணம் அளித்தல், கல்யாணத்திற்கு வந்த கூட்டத்தை மனமாற்றம் செய்து உடலுறுப்பு தானம் செய்ய வைப்பது போன்ற விபரீதமான நிகழ்ச்சி நிரல்களை அவர் சொல்லிக் கொண்டே போனபோது இடைநிறுத்தி “உங்களுக்கு மறுநாள் காலில கல்யாணங் நடக்கணுமா வேணாவா” என்றேன்.. “இல்ல ப்ரபா பொண்ணு வீட்லலாம் பேசியாச்சு ஓக்கே சொல்லிட்டாங்க” என்று அவர் சொன்ன தருணம் இப்படியும் ஒரு பெண் குடும்பமா என்று ஆற்றாமையில் மௌனமாகத் துடித்துப் போனேன்.

பிறகு சுதாரித்து, ‘இல்லங்க என்னதான் இருந்தாலும் மேரேஜ்ங்கிறது தனி ஈவன்ட்டு, நீங்க சொல்றதும் தனி ஈவன்ட்டு. அததுக்குனு ஒரு மரியாத இருக்குதுல” என்றேன்.

‘இல்ல ப்ரபா, இவ்ளோ பெரிய கூட்டத்த நல்ல விஷயங்களுக்கு யூஸ் பண்ணிக்கிறது நல்லதுதானே’ என்றார்.

நான் அமைதியாக இருந்தேன்.

அவர் இன்னொரு விஷயத்தையும் குறிப்பட்டார் ‘ப்ரபா உங்கள ஏன் கண்டிப்பா வர சொல்றேன் தெரியுமா?’

“தெரியாதுங்க”

“எங்களோட NGO’ திறப்பு நிகழ்ச்சில ஒரு பகுதியா இளம் எழுத்தாளர்கள் சிலருக்கு பணமுடிப்பு கொடுத்து மேடையில கௌரவிக்கிறோம். லிஸ்ட்ல நீங்கதான் பஸ்ட்டு”

“அயியோ அதெல்லாம் வேணாங்க’ என்று பதறினேன். ஆயினும் அவர் சொன்ன ‘பணமுடிப்பு’ என்கிற வார்த்தையிலிருந்த கவர்ச்சி என் முழு எதிர்ப்பையும் காட்ட விடவில்லை.

“செரிங்க, உங்க இளம் எழுத்தாளர்கள் அவார்ட் லிஸ்ட்ல யாரெல்லாம் இருக்காங்க” என்றேன்.

“நீங்க, உமா மகேஷ்வரன், பிரபு காளிதாஸ், வெண்பா கீதையன், சுந்தர் ஸ்ரீனிவாஸ்” என்றார்.

நான் எதிர்முனையில் அமைதியாகவிட்டதை உணர்ந்து “என்ன ப்ரபா சைலண்டா ஆய்ட்டீங்க” என்றார்.

“இல்லங்க. பிரபு காளிதாஸ் மாதிரியான சமகால படைப்பாளிகளோட என்னையும் சேத்து வெச்சுப் பாக்குற அந்த மனசு இருக்கே……” என்றேன்.

“ச்ச்சே. அதுல என்ன இருக்கு. ஆங் அப்புறம் ப்ரபா. உங்க ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு செலிபிரிட்டி அவார்ட் தர மாதிரி ப்ளான் பண்ணியிருக்கோம். உங்களுக்கு எஸ்.ரா விருது கொடுப்பாரு”

தன் அகலமான வாய்ச்சிரிப்பினால் எஸ்.ரா எனக்கு விருதளித்ததும் என் தோளைத் தட்டும் காட்சி மனக்கண்களில் வந்து போனது.

“செரி ப்ரபா, நான் மத்தவங்ககிட்டலாம் பேசணும். நா உங்களுக்கு என்னனு அப்ட்டேட் பண்றேன்” எனச் சொல்லி அவர் இணைப்பைத் துண்டித்தார்.

‘இதையெல்லாம் நம்பலாமா வேணாமா’ என்கிற மனநிலையில் இருந்தாலும் செரி, ஒரு கௌரவத்திற்கு திவ்யாவிடம் சொல்லி வைக்கலாம் என அவளிடம் பகிர்ந்துக் கொண்ட போது

“மாம்ஸ், என்னையும், சாரலையும் அந்த மேரேஜ்க்கு கூட்னுபோ. நீ அவார்ட் வாங்குறத நாங்க நேர்ல பாக்கணும்” என்றாள்.

“ஓக்கே போலாம்” எனச் சொல்லிவிட்டால் அதிலுள்ள பொருளை கடைசிவரை காப்பாற்ற வேண்டுமென்பதால் “செரி எப்டின்னு பாக்கலாம்” என மையமாக சொல்லி வைத்தேன்.

நண்பர் சொன்னதை குறுக்கு மதிப்ப்பீடு செய்வதற்காக சுந்தர் ஸ்ரீனிவாஸை அலைபேசியில் அழைத்தேன் “ஆமா, ப்ரபா எனக்கும் phone பண்ணான். என்ன ஐடியா இது. ஒரு மேரேஜ் பங்க்ஷன்ல இதெல்லாம் சரிப்படாதுன்னு சொன்னேன். அவன் கேக்கல’ என்றான்.

“டேய், நடைமுறைப்படுத்துற பத்தி யோசிக்கதா. நோக்கத்தப் பாரு. அதுவும் நமக்குலாம் விருது தர்றாங்கனா சும்மாவா” என்றேன்.

“ம்ம்ம்.. எனக்கு டைம் செட் ஆகாது. வந்தாதான் வருவேன்” என்றான்.

***

இடைப்பட்ட நாட்களில் அந்த நண்பர் அலைபேசியில் அழைத்து திருமண நிகழ்ச்சியில் என்னென்ன மாற்றங்கள் நடந்திருக்கின்றன என்று என்னுடன் பகிர்ந்து கொண்டார். விருது சமாச்சாரத்தில் அவர் கை வைக்காதது ஆறுதலாக இருந்த போதும் அவர் கல்யாணம் குறித்த அக்கறை எனக்கு இருந்ததால் இந்த இரண்டு நிகழ்சிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டாம். அது அபாயமானது சொந்தபந்தங்கள் பிரச்சனை ஆக்கி விடுவார்கள் என்றெல்லாம் அவரிடம் சொல்லிப் பார்த்தேன். கேட்கவில்லை.

“அதெல்லாம் பாத்துக்கலாம். நீங்க உங்க மனைவி குழந்தையோட வந்துடுங்க. ஆங் அப்புறம் சாரு நிவேதிதா, கரு. பழனியப்பன் இவங்கல்லாம் வராங்க” என்றார்.

இன்னும் சில நாட்கள் கழித்து “சாரு வர மாட்டேன்னு சொல்லிட்டாரு” என்று புலம்பி விவசாயத்தையும், தமிழ் இலக்கியச் சூழல் குறித்த விசாரங்களையும் அவ்வப்போது என்னிடம் பகிர்ந்து கொண்டு வரலானார். தன் திருமணத்திற்கு ஒருநாள் முன்பு, என் வருகையை உறுதிப்படுத்திக் கொண்டார்.
***

என் திருமண நாளன்று கூட நான் அத்தனை உற்சாகமான மனநிலையில் இல்லை. காலையில் தூங்கி எழுந்ததும் புத்துணர்வு வேலைகளை மேற்கொண்டு நண்பர்க்கு பரிசளிப்பதற்காக எஸ்.ரா பரிந்துரை செய்த ‘வாழும் நல்லிணக்கம்’ புத்தகத்தை பரிசுப் பொட்டலமாக்கி, சலூனுக்கு சென்று சிகையலங்காரம் செய்து, அன்று இரு சக்கர வாகனத்திலேயே அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்து என்னுடைய சூப்பர்வைசரிடம் சிறப்பு அனுமதி பெற்று திருமண ரிசப்ஷன் / விருது நிகழ்ச்சிக்கு செல்லத் திட்டம். தோதாக என்னுடைய அலுவலக நண்பன் ராகவனையும் பேசி அழைத்துப் போக உத்தேசித்திருந்தேன்.

எல்லாம் நடந்து அலுவலகத்திலிருந்து கிளம்புகையில் விகடனிலிருந்து சார்லஸ் அழைத்தார்

“பாஸ் இன்னைக்கு ஈவ்னிங் ஆர்டிகல் தரேன்னு சொன்னீங்களே” என்றார்.

“பாஸ் நா ஒரு அவார்ட் பங்க்ஷனுக்கு போய்னு இருக்கேன்” என்று பண்டிக்கைக்கு துணி வாங்கப் புறப்படும் மழலையின் குதூகலத்தில் சொன்னேன்.

“அவார்ட் பங்க்ஷனா எங்க அது? யார் தரா?”

“அதெல்லாம் வந்து சொல்றேன். ஆனா எனக்கும் ஒரு அவார்ட் இருக்கு என்றேன்.
எனக்கு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி என்று அவரிடம் தெரிவிப்பதன் மூலம் கட்டுரையின் தாமதத்தை பொருட்படுத்த மாட்டார் என்கிற எண்ணத்தில் சொல்லி அலுவலகத்திலிருந்து நானும் ராகவனும் கிளம்பினோம்.

***

சுமார் ஏழரை மணியளவில் மண்டபத்தை அடைந்தோம். மாப்பிள்ளையும், பெண்ணும் உள்ளே நுழைவதை போட்டி போட்டுக்கொண்டு படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். ராகவன் சிகரெட் புகைக்க வேண்டுமென்றான். எதிரிலுள்ள டீக்கடையில் அவனொரு பக்கம் நிக்க. நானொரு பக்கம் நின்று கரு.பழனியப்பனை அழைத்தேன்.

சார், இந்த மாதிரி ஒரு பங்க்ஷன் எனச்சொல்லி. “உங்களக் கூட கூப்டு இருந்தாருபோல வர்றீங்களா” என்றேன்.

“ஆமா ப்ரபா வந்துட்டுதான் இருக்கேன். எத்தனை மணிக்கு அந்த அவார்ட் தர்றது. NGO லான்ச்சிங் பங்க்ஷன்?

எட்டரை மணிக்கு சார்?

“என்ன பிரபா இவரு. எவ்ளோ வாட்டி சொல்லியும் கேக்கல. அத இன்னொரு பங்க்ஷனா வைங்க வரேன்னு சொன்னேன் விடவே இல்ல. செரி அந்த மண்டபத்தோட லேண்ட்மார்க் சொல்லுங்க ஒரு முக்காமணி நேரத்துல வந்துடுவேன்” என்றார்.

“தண்டையார்பேட்ட மகராணி தேட்ருன்னு கேளுங்க. அதுக்கு பக்கத்து சந்து. செல்வ வாணி மஹால். வந்துட்டு எனுக்கு போன் பண்ணுங்க” என்றேன்.

மணமக்கள் மேடையேறினர். நாங்களும் உள்ளே சென்றோம். என்னைப் போன்று விருது வாங்க வந்தவர்களும் சிறப்பு அழைப்பாளர்களும் தென்படுகிறார்களா என்று பருந்துப் பார்வை பார்த்தேன். ம்ஹும்.

மண்டபத்தில் தெரிந்தவர்கள் என்று யாருமில்லை. மணி எட்டுக்கு மேல் ஆகியிருந்தது. மணமகன் சொன்ன நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கான எந்த சமிக்ஞைகளும் இல்லை. ராகவனும் நானும் பிள்ளை திருடுபவர்கள் போல மண்படத்தில் சுற்றிவிட்டு ஓரிடத்தில் அமர்ந்தோம். உட்கார்ந்ததும் அவன் சிகரெட் புகைக்க வேண்டுமென்று டீக்கடைக்கு அழைத்தான்.

“ன்னா மச்சி நீ சொன்ன பங்க்ஷன் நடக்குற மாதிரி தெர்லயே.. சும்மா நா வர்றதுக்குக்காக அவாடு கிவாடுனு ஓல் ஓத்தியா” என்றான்.

“ஏ. இல்லடா… இரு வெயிட் பண்லாங். ஒரு வாட்ரு பாக்கெட்டு வாங்கு தாகமா இருக்குது” என்றேன்.

அவன் புகையிலிருந்து விலகி ஓரமாக வந்து கரு.பழனியப்பனுக்கு வழி சொல்லிக் கொண்டிருந்தபோது அருகே உள்ள ஒரு குட்டைத் திண்ணையில் சோர்வுடன் உட்கார்ந்திருந்த முகத்தை இனங்கண்டேன்.

“டேய் உமா மகேஷ்வரா எப்டிடா இருக்க”

“என்னைப் பார்த்ததும் உற்சாகமாக எழுந்து அவனும் ஹாய் ப்ரபா எப்டி இருக்க” என்றேன்.
இருவரும் பேஸ்புக்கில் லைக், கமென்ட் செய்துகொண்டு ஈராண்டுக்கு மேல் இருக்குமென்றாலும் தொடர்பற்றுப் போன பள்ளி நண்பனை பேருந்து நிலையத்தில் சந்தித்துக் கொள்ளும் பரவசத்துடனும், பாசத்துடனும் சுக துக்கங்களை குசலம் விசாரித்துக் கொண்டோம். உண்மையான நட்புக்கு லைக், கம்மென்ட் முக்கியமில்ல என்பதற்கு நடப்பு உதாரணமாக நாங்கள் திகழ்ந்ததை நாங்கள் மட்டுமே அக்கணம் அறிந்தோம்.

அவனிடம் திருமணத்தைப் பற்றியும், விருது சமாச்சாரத்தைப் பற்றியும் சொல்லி வருத்தப்பட்டபோது அவன் பெரிதாய் அலட்டிக்கொண்டதாய் தெரியவில்லை. “எனக்கு முன்னாடியே தெரியும். ப்ரென்ட்டாச்சேன்னு மேரேஜ்கு வந்தேன். நெல்சனும் நானும் இப்போ நைட்டு ஒம்போது மணிக்கு தேனிக்குப் போறோம்” என்றான். பிறகு சில நிமிடங்களிலேயே அவனுடைய நண்பர் ஒருவர் வந்து அவனை அழைத்துக் கொண்டு போனார்.

புன்னகையுடன் அவனை வழியனுப்பிவிட்டுத் திரும்பினால். “மச்சி ரொம்ப பசிக்குதுடா” என்றான் ராகவன்.

“இர்றா அவார்ட்….”

“த்தா கடுப்பு ஏத்தாத பசி கேராவுது”

“செரி வாடா சாப்ட்டாவது போலாம்” என்று இருவரும் மணமேடையைத் தாண்டினோம். மாப்பிளை என்னைப் பார்க்க வேண்டுமென்பதற்காக அதீதமான உடல்மொழியை வெளிப்படுத்தினேன். அவர் கண்டுகொள்ளவில்லை.

இருவரும் சாப்பிட்டுக் கீழே வந்தோம். நான் கடமைக்கு வாய் வைத்துவிட்டு கைக்கழுவினேன். உடன் வந்ததற்கான முழுபலனையும் ராகவன் ஸ்வீட் பீடாவினால் நிறைவு செய்தான். வெற்றிலைச் சாறு வறண்டு போனதும் அவன் சொன்னான் “வாடா டைம் ஒம்போதாவுது கிப்ட் குடுத்துட்டு போலாம் எனக்கு நெறைய ஜனல் என்ட்ரீஸ் வேற போடணும்”. நியாயம்தான். அவன் மேடைக்கு வரவில்லை. நான் மட்டும் மேடையேறி மணமக்களை வாழ்த்த வரிசையில் நின்றிருந்தபோது ரொம்பவும் தனிமைப்பட்டவனாக, பலகீனமாக உணர்ந்தேன்.

மணமக்களின் அருகில் சென்று மாப்பிள்ளையிடம் அன்பளிப்பைக் கொடுத்து புகைப்படமும் எடுத்துக்கொண்டேன். அவர் என் தோளைத்தொட்டு வழியனுப்ப எத்தனித்த போது அவர் காதருகே சென்று சொன்னேன் “பாஸ், என் பேரு தமிழ்ப்பிரபா நீங்க கூட…” மேற்கொண்டு நான் தொடரும் முன் கைக்குட்டையைத் தொலைத்த சிறிய அதிர்ச்சிக்கு இணையான பாவத்தில் “ஓ பிரபா ஸாரி. வந்ததுக்கு ரொம்ப நன்றி. அந்த பங்க்ஷன் நடத்த முடியல” ‘பரவால்லங்க ரெண்டு பேருக்கும் என்னோட வாழ்த்துக்கள்’ என்றேன். “நம்ம அந்த NGO இனாக்ரேஷன பெரிய ஈவ்ன்ட்டா சூப்பரா இன்னொரு நாள் பண்ணலாம். உங்களுக்கு விருதும் அந்த விழாவுலயே” என்றார்.

“ஓக்கேங்க இப்போ கரு.பழனியப்பன் வந்துட்டு இருக்காரு அவருக்காச்சும் ஏதும் அப்டேட் பண்ணிங்களா” என்றேன். ஓ அவரு வராறா! ப்ரபா நீங்க ஒண்ணு பண்ணுங்க அவருக்கிட்ட நம்ம பங்க்ஷன் கேன்சல் ஆய்டுச்சுனு சொல்லுங்க. ஒரு கஸ்ட்ட்டா ரிசப்ஷன்க்கு இப்போ அட்டன்ட் பண்ணா போதும்” என்றார். சரி என்று தலையாட்டிவிட்டு நான் கீழே இறங்கினேன்.

விஷயத்தை கரு.பழனியப்பனிடம் சொன்னால் அவர் எப்படி எதிர்வினையாற்றுவர் என்று தெரியவில்லை. ஏற்கனவே மண்டப முகவரியைத் தேடியலையும் அவருக்கு மேலும் மன உளைச்சளை கொடுக்க வேண்டாம். வந்ததும் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.

கிளம்பலாம் என்று நச்சரித்துக் கொண்டிருந்த ராகவனை “இர்றா. உனுக்குதாங் கரு.பழனியப்பன் டீவில பேசுறதுலாங் புடிக்குன்னு சொல்லுவல இன்ட்ரோ குடுக்குறேங்’ என்று ஆறுதல்படுத்தி வைத்திருந்தேன்.

ஒருவழியாக மண்டபத்தைக் கண்டறிந்து காரை பார்க்கிங் செய்துவிட்டு என்னை அலைபேசியில் அழைத்தார். நானும் நண்பனும் சென்றோம். அவருடன் ஆரியும் (நெடுஞ்சாலை படத்தின் கதாநாயகன்) வந்திருந்தார்.

“இவருதான் தமிழ்ப்பிரபா சூப்பரா எழுதுவாரு” என்று ஆரியிடம் அறிமுகம் செய்துவைத்தார். அந்தப் பாராட்டை ரசிக்கிற மனநிலையில் நான் இல்லை. சும்மா சிரித்து வைத்தேன்.

‘செரி வாங்க டைம் ஆய்டுச்சி’ என்று வேகவேகமாக உள்ளே நுழைய முற்பட்டவரிடம் விஷயத்தைச் சொன்னேன் “அப்படியா” என்று தாடியைச் சொரிந்தவர் “வந்துட்டோம் வாங்க” என்று நால்வரும் உள்ளே நுழைந்தோம். அவர் கொண்டுவந்த அன்பளிப்பைக் கொடுக்க என்னையும் மேல வரச் சொன்னார். நான் மறுத்துவிட்டு கீழேயே ஓரமாக நின்றுவிட்டேன்.

அவரையும், ஆரியையும் கண்டுகொண்ட கூட்டம் ராஜ உபச்சாரம் செய்தது. அவர்களை வரிசையில் நிற்கவிடவில்லை. மணமகன் வேகமாக வந்து அவர்களை அரவணைத்தார். ஒரு சலசலப்பு உண்டாவதற்கு முன்பான அமைதி ஏற்பட்டது. புகைப்படம் எடுத்துக் கொண்டதும், மணமகன் தன் நண்பர்களை அழைத்து அவர்கள் காதில் கிசுகிசுத்தார். அந்த நண்பர்கள் இரண்டு புத்தகங்களைக் கொண்டு வந்தார்கள். கரு.பழனியப்பனும் ஆரியும் திருமணத்திற்கு வந்ததாக மணமகன் புத்தகங்களைப் பரிசாகக் கொடுத்து கெளரவித்தார். திரும்பும் புகைப்படம் எடுக்கப்பட்டது. நான் தூரத்திலிருந்து அது என்ன புத்தகம் என்று பார்த்தேன். “காரமசோவ் சகோதரர்கள்” என்று பெயரிட்டிருந்தது. அந்தந்த தொழிலுக்கு என்று ஒரு மரியாதை இருக்கத்தானே செய்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.

ராகவன், “மச்சி, உன்னையும்தான அவன் chief கஸ்ட்டா கூப்ட்டு இருந்தான். உனக்கும் ஒரு புக்கு குடுத்துருக்கலால்ல” என்றான்.

‘வுட்றா பர்வால அதுன்னா பெரிய புக்கா’ எனச் சொல்லிக் கொண்டாலும் எனக்காக ஒரு குரல் ஒலித்தது ஆறுதலாக இருந்தது.

தண்டையார் பேட்டையிலிருந்து திருவான்மியூருக்கு வண்டியைச் செலுத்தி இரவு பதினொரு மணிபோல அலுவலகம் சேர்ந்து ஜில்லென்று தண்ணீரைக் குடித்து மூச்சுவிட்டபின் அலைபேசியை எடுத்துப் பார்த்தேன். திவ்யா மெசேஜ் அனுப்பியிருந்தாள்.

Maams w r u?
Maams cal me once you free.
Maams snd me your award recvg pics.

அதைப் படித்தபோது அவளுக்கு என்ன எதிர்வினை ஆற்றுவதென்றுத் தெரியவில்லை. ஆனால் மனதில் ஓர் உறுதி பூண்டது. நிச்சயமாக நான் ஒரு மிகப்பெரிய விருதை வாங்குவேன். அதை நேரடியாக அவள் கண்டு பரவசப்படும் ஒரு வாய்ப்பை அவளுக்குத் தருவேன். அது ஒருபோதும் அந்த நண்பர் ஏற்பாடு செய்யும் விருது விழாவாக இருக்காது. திரும்பவும் அந்த விருதுக்காக செல்வதைவிட மேலான தகுதி என்னிடம் இருக்கிறதென்று நினைத்துக் கொண்டேன். அது உண்மையும்கூட.

https://www.facebook.com/prabha.prabakaran/posts/1508472015871586