புதிய தரமணியும் பழைய ஆல்பர்ட் தியேட்டரும் : ஷாலின்

தரமணி பற்றி முகநூலில் ஷாலின் எழுதிய இந்தச் சிறிய குறிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

புதிய தரமணியும் பழைய ஆல்பர்ட் தியேட்டரும்

ஆண்டு 1990 .

எனக்கு 7 வயது . பள்ளியில் நடக்கும் ஸ்போர்ட்ஸ் டே வை ஒன்றுக்கும் உதவாது என்று புறக்கணித்துவிட்டு என் அன்பார்ந்த பெற்றோர்கள் என்னை மைக்கேல் மதன காமராஜன் படத்திற்கு அழைத்து சென்றார்கள் . அன்றைய மதிய காட்சியை கண்டுகளித்த இடம் எழும்பூரில் புகழ்பெற்ற ஆல்பர்ட் தியேட்டர் .முட்டை போண்டாவும் ,எனக்கு பிடிக்கவே பிடிக்காத பிரிட்டானியாவின் ஏலக்காய் கிரீம் பிஸ்கட்டும் உண்டு,படத்தை கண்டு களைத்து வீடு திரும்பினோம் .மறுநாள் பள்ளியில் டின் கட்டியது வேறு கதை .

(இதில் முக்கியமான விஷயமென்னவென்றால் அப்பொழுது அந்த வரலாற்று சிறப்புமிக்க “பார் ” ஆல்பர்ட் தியேட்டர் பக்கத்தில் அமைந்திருக்கவில்லை ).

ஆண்டு 2017 .

சத்தியம் தியேட்டரில் ஹாயாக பிளாஸ்டிக் பெண்களுடனும் ,கருப்பு பெண்களை கண்டுகொள்ளாத அடர்த்தாடி வைத்த ஆண்களுடனும், விளிம்புநிலை மனிதர்கள் கட்டும் புடவைவிலையில் விற்கும் பாப் கார்னும் ,பின்னழகை இன்னும் கூட்டிவிடும் கிரீம் டோனட்டும் முழுங்கி கொண்டு ,அதீத குளிரில் நடுங்கி கொண்டே பாத்திருக்கலாம் “தரமணியை” .

ஆனால்….சத்யம் வாடிக்கையாளர்களோ தரமணி தந்த கணிப்பொறி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறவர்கள். .அவர்களுக்கு தரமணி ரொம்ப பக்கம் .

ஆனால் தரமணி ,கணிப்பொறி ,சாப்ட்வேர் போன்றவற்றிலிருந்து அதிக தூரத்தில் இருக்கும் ஆல்பர்ட் தியேட்டர் வாடிக்கையாளர்களுடன் இந்த படத்தை பார்ப்பதுதான் உச்சிதம் என்றெண்ணி 27 வருடங்கள் கழித்து ,அதே ஆல்பர்ட் தியேட்டரில் ,வடசென்னையின் மக்களோடு மக்களாய் தரமணியை பார்க்க முடிவெடுக்கப்பட்டது .

இந்த 27 வருடத்தில் ஆல்பர்ட் தியேட்டர் மாறி இருக்கிறதா என்றால் இல்லை என்பதே அதற்கு பதில் .அதே கட்டிடம் ,அதே படிக்கட்டில் கும்பல் கும்பலாய் மக்கள் .ஆனால் ஒரே ஒரு மாற்றத்தை தவிர .அப்பொழுது இருந்த பெண்கள் கூட்டம் இப்பொழுது இல்லை .500 ஆண்கள் என்றால் 20 பெண்கள் இருந்திருப்பார்கள் .அவ்வளவுதான் .

திரையரங்கின் உள்ளே நுழைந்ததுமே நல்லதொரு பினாயில் வாசனை . பால்கனி முன்னவரிசை சீட்டில் பெண்கள் பாத்ரூமின் நேரெதிர்க்கொட்டில் அமர்ந்து படம் பார்ப்பதெல்லாம் ஒரு ஆத்மார்த்தமான அனுபவம் .

படம் துவங்கியது .தரமணி,பொருத்தமான பெயர் .

IT corridor என்று செல்லமாக அழைக்கப்படும் சென்னையின் தகவல் தொழில்நுட்ப பாதையின் நுழைவுவாயில் தரமணிதான் .இந்த தகவல் தொழில்நுட்பம் சென்னைக்கும் அதை சார்ந்து பணிபுரியும் பலரின் உளவியலுக்கும் ஏற்படுத்தி இருக்கும் பாதிப்பு சொல்லி மாளாது .ஆகவே இந்த படத்திற்கு தரமணிதான் சரியான பெயர் .

ஆண்ட்ரியா அழகாக இருக்கிறார் .அவர் உண்மையிலேயே ஒரு ஆங்கிலோ இந்தியன் என்பதால் அவருக்கு கொடுக்கப்பட்ட ஆங்கிலோ இந்திய பெண்மணியின் கதாபாத்திரத்தை அழகாக கையாண்டிருக்கிறார் .அந்த உடைந்துபோன தமிழாகட்டும் ,அந்த முட்டிக்குமேல் அணியும் பாவடையாகட்டும் ,அந்த பப் கை வைத்த லேஸ் மேலாடைகளாகட்டும்,பெரம்பூர் பாக்ஸன் தெருவில் காணக்கிடைக்கும் சில ஆங்கிலோ இந்திய முத்துக்களை அப்படியே கண்முன்னே கொண்டு வருகிறார் .

படத்தின் நாயகன் வசந்த் ரவி பார்ப்பதற்கு ஆன்மாவை தொலைத்துவிட்ட Adrian brody (Pianist பட ஹாலிவுட் நாயகன் ) போல் இருக்கிறார் . உண்மையில் இந்திய இளைஞர்கள் பலபேர் ஆன்மா இல்லாதவர்கள் போல்தான் திரிகிறார்கள் .கண்களில் அப்படி ஒரு வெறுமை .

முதல் சில காட்சிகளிலேயே ஆல்பர்ட் தியேட்டர் மக்கள் எழுந்து போகிறார்களா என்று கவனித்தேன் .இல்லை .ஒருவர் கூட எழுந்து வெளியே செல்லவில்லை . ஆண்ட்ரியாவின் பல வசனங்களுக்கும் ,புகை மது காட்சிகளுக்கும் ‘போடி …ஏய்….. யா….” போன்ற விமர்சனங்கள் எழும் என்று நினைத்தேன் .எழவில்லை .
மாறாக ஆண்ட்ரியாவின் வசனங்களுக்கு ஆண்கள் மத்தியிலும் ,என்னிடமிருந்தும் கைதட்டல் மட்டுமே எழுந்தது .
கடைசி வரையில் இதுவே நிலையாக இருந்தது.கட்டி போட்டது போன்று படத்தை பார்த்தனர் ஆல்பர்ட் தியேட்டர் மக்கள் .

இந்தப்படம் பெண்ணியப்படம் அல்ல .

இந்த படம் பெண்ணை ஒரு உணர்வாய் ,சிந்திக்கும் திறனாய் , உயிராய் பார்க்காமல் ,வெறும் 55 கிலோ சதையாக பார்க்கும் பெரும்பாலான ஆண்களை மாற்றும் நோக்கில் இன்னொரு ஆணால் எடுக்கப்பட்ட படம் .இந்திய டெஸ்டெஸ்ட்ரொன்களுக்கும் (testestrones ) இந்திய ஈஸ்ட்ரோஜன்களுக்கும் (estrogens ) நடக்கும் போராட்டம் .

மூன்றே காட்சிகளுக்குள் இந்த படத்தை சுருக்கி விடலாம் .

1 .ஆண்ட்ரியா -வசந்த் பிரிந்து போகும்முன் நடக்கும் அந்த சண்டை .

2 .அந்த போலீஸ்காரருக்கும் அவர் மனைவிக்கும் நடக்கும் சண்டை .

3 .நாகூரில் அந்த அனாதை பிணத்தை நாயகன் இழுத்து வரும் காட்சி.

அந்த படத்திற்கு ‘A ‘ certificate கொடுத்தது நியாயமே .

அத்தனை வன்முறை படத்தில் .

உளவியல் ரீதியாக ஒருவருக்கு இழைக்கும் வன்முறையை விட பெரிது என்ன இருக்க போகிறது ? உங்களுக்கு ரத்தம் ,கொலை ,அடி வன்முறையாக இருக்கலாம் .அனால் அதைவிட பெரிய கொடூரம் ஒருவரை தற்கொலைக்கு தூண்டுமளவிற்கு அவர்களை உளவியல் ரீதியாக டார்ச்சர் செய்வது .அதுவும் நெருங்கிய சொந்தங்களே . ஒரு உறவில் சந்தேகத்திற்கு இடம் கொடுத்து ,ஒரு சக மனுஷியை வெறும் சதையாக பார்க்கும் இடத்தில நடக்கும் அந்த சண்டை ,சண்டையல்ல .அது போர் .

அந்த போரை இயக்குனர் மிக மிக சரியாக திரைக்கு கொண்டுவந்ததுதான் காட்சி ஒன்று .

உன் எதிரியை கத்தியை கொண்டு வீழ்த்துவதை விட புத்தியை கொண்டு விழ்த்துவதில் போதை அதிகம் .ஒரு ஆன் மகனிற்கு கோவம் அதிகம் இதில் வரும் ? அவனை விட இன்னொருவன் தன் மனைவியை அதிகமாக சந்தோத படுத்துகிறான் என்கிற எண்ணத்தைவிட கொடுமையான எண்ணம் கிடையாது .தவறே செய்யாவில்லை என்றாலும் அந்த போலீஸ்காரனின் மிக மிக பலவீனமான இடத்தில ஒன்றரை டன் வெயிட்டில் அடிக்கிறாள் மனைவி ,வெறும் வார்த்தைகளை பயன்படுத்தி .
ஒரு பெண் ஒரு ஆணை வீழ்த்த உடல் பலம் தேவையில்லை ,வார்த்தை போதும் ,கண் பார்வை போதும் .

அதேபோல் ஒரு பெண் ஒரு ஆணுக்கு துரோகம் செய்ய பலமுறைகள் இருக்கின்ற அதற்க்கு செக்ஸ் மட்டும் அவசியம் இல்லை .ஆனால் ஆண்களை பொறுத்தவரையில் துரோகம் என்றால் அது உடல் சார்ந்ததுமட்டும்தான் . இது காட்சி இரண்டு .

நாகூர் -சூபி தத்துவம் .

அர்ப்பணித்துவிடு

உடல் ,உயிர் ,ஆன்மா ,சிந்தனை அனைத்தையும் அர்பணித்துவிடு .சந்தேகிக்காத ,கேள்வி கேட்காதே .
இவை அனைத்தையும் தாண்டி செய்வதே காதல் ,பக்தி
எல்லாமே .

நிபந்தனைகளற்ற அன்பு -சூபி -காதல் .
துரோகிக்கும் உணவளிக்கும் அன்பு .மரித்தபின் நாறிப்போகும் மற்றவள் தொட மறுக்கும் உடம்பு அதற்குள் காதலை வைக்காதே . காதல் உணர்வுகளில் வாழும் உடம்பில் அல்ல .
காட்சி மூன்று .

இந்த படம் என்னை ஏன் பாதித்தது ?

ஆண்ட்ரியா சந்தித்த பலவற்றை நான் சந்தித்திருக்கிறேன் .
முக்கிய விஷயம் ,என் ஆங்கில கிறிஸ்தவ பெயர் ,நான் அணியும் ஆடைகள் ,பேசும் ஆங்கிலம் ,இவற்றை வைத்து பல ஆண்டுகளாக என்னை ஆங்கிலோ இந்தியன் என்றுதான் பலர் நினைத்திருக்கிறார்கள் .இன்றுவரை .

ஆங்கிலோ இந்தியன் என்றால் என்ன தெரியுமா இந்தியாவில் ?

படுக்கைக்கு கூப்பிட்டால் ஈஸியாக வந்துவிடுவார்கள்.

இப்படித்தான் பேசிக்கொள்வார்கள் தரமணிக்கு அப்பால் வேலை செய்யும் IT மனிதர்கள் . அவர்களை பொறுத்தவரை ,தழுவி பேசவும் ,செக்ஸ் ஜோக்குகள் அடிக்கவும் ,உடல் உறுப்பை பற்றி நேரிடையாக விமர்சிக்கவும் ,வேண்டுமென்றால் படுக்கைக்கு அழைக்கவும் இவர்களுக்கு பட்டா போட்ட பெண்கள் ,ஆங்கிலோ இந்திய பெண்கள் .

ஆங்கிலோ இந்தியன் இல்லையென்றாலும் ,ஆண்களுடன் பப்புக்கு செல்லும் பெண்ணோ ,குட்டை பாவடை அணிந்தவளோ ,முக்கியமாக சிகரெட் பிடிக்கும் பெண்கள் மேல் சொன்ன அனைத்திற்கு பொருந்திப்போவதாக இவர்களின் நினைப்பு .

இவர்களை காதலித்துவிட்டு ,ஊர் பக்கம் போய் பெற்றோர் பார்க்கும் எண்ணைத்தலை பெண்களை ,அதுவும் வேலைக்கு போகாத பெண்களாய் பார்த்து மணப்பது இவர்களின் தனி சிறப்பு .இதையும் ஒரு காட்சியில் இயக்குனர் அழகாக தெளிவு படுத்தி இருக்கிறார் .

ஆனால் இந்த படத்தில் நடக்கும் காட்சிகளுக்கு ஆல்பர்ட் தியேட்டர் மக்களிடம் ஏன் இவ்வளவு ஆதரவு ?

சேரியில் சென்று பார்த்தல் தெரியும் . பெண் குடிப்பதோ ,பெண் சுருட்டு பிடிப்பதோ அவர்களில் பலருக்கு அந்நியம் இல்லை .பெண்ணின் ரிஷிமூலம் ,நதிமூலம் பார்க்காமல் காதலிப்பார்கள் ,திருமணம் முடிப்பார்கள் . அவள் எப்படி இருந்தாலும் ஏற்றுக்கொள்வார்கள் .அப்படியே அவளை சந்தேகப்பட்டாலும் ,கணவனை ஒரு மிதி மிதித்து விட்டு ,கூந்தலை அள்ளிமுடித்துவிட்டு மாட்டுக்கறி கழுவ போய்விடுவாள் .சேரி பெண்களின் நிலை தரமணி பெண்களின் நிலையைவிட நன்றாகவே இருக்கிறது .

படிக்க படிக்க அறிவு பெருகும் ஆனால் பெரும்பாலான இந்திய ஆண்களுக்கோ படிக்க படிக்க மூளை குறுகி விடுகிறது வடசென்னையின் படிக்காத சிறு குற்றவாளிகளைவிட படித்த கிரிமினல்கள் அதிகள் தரமணியில் .

குடும்ப உறவு பெண்ணின் யோனிக்குள்ளே இருக்கிறது என்கிற இந்திய ஆணின் மூளையை கடல் தண்ணியை கொண்டு கழுவ முயற்சி செய்திருக்கிறார் ராம் .முயற்சிக்கு பாராட்டுக்கள் .

“எல்லா காதலும் காதல்தான் ,இதில் ஏது நல்ல காதல் ,கள்ள காதல் ” என்று சமீபத்து இலக்கிய விழாவில் எழுத்தாளர் பிரபஞ்சன் கூறினார் . திருமணத்திற்கு வெளியே பெண்களின் தேடல் எல்லாம் வெறும் செக்ஸ்சாக மட்டும் இருக்கும் என்கிற பொது புத்தியை உடைத்திருக்கிறது தரமணி . பெண்ணுக்கு கணவனை தாண்டிய சில ஆண்கள் தேவை படலாம் ,அது மனம் விட்டு பேச கூட இருக்கலாம் . இதற்க்கு தரமணி பெண்களோ ,வடசென்னை பெண்களோ விதிவிலக்கல்ல .

35 வயதுக்குமேல் பெண்களுக்கு கள்ள காதல் அன்றி வேறு என்ன வந்து விட போகிறது என்று சொன்ன ஒரு இளம் (?) எழுத்தாளரின் கருத்துக்கு பதில்தான் “தரமணி “.

கற்பு என்பது பெண்ணுக்கு மட்டுமே சொந்தம் .ஆணுக்கும் அதற்கும் தொடர்பில்லை என்று சுற்றி திரியும் தரமணி ஆண்களுக்கும் ,வடசென்னை ஆண்களுக்கும் “தரமணி” நல்ல பாடம் .

எனக்கு மூன்று மச்சினிகள் இருக்கிறார்கள் என்று ஒரு ஆண் குதூகலித்து சொல்லலாம் ,இதே எனக்கு மூன்று மச்சினர்கள் இருக்கிறாரகள் என்று ஒரு பெண் கண்ணடித்து சொல்ல முடியுமா ? ஆண்கள் முதலில் தங்களின் கற்பை நிரூபிக்கும் நாட்கள் கூடிய விரைவில் வர இறைவனை பிராத்திக்கிறேன் .

படம் முடிந்து ஆல்பர்ட் தியேட்டர் மக்கள் களைய துவங்கினர் .பெண்கள் சிரிப்புடனும் ,ஆண்கள் கனத்துடனும் .

எந்த பழைய தியேட்டரிலும் புது படங்கள் போடலாமென்பது ஆல்பர்ட் தியேட்டரில் நிரூபிக்கப்பட்டது .

ஷாலின்