விவேகம் சர்ச்சை – 3

விவேகம் பற்றிய என் விமர்சனத்துக்கு எழுதப்படும் பின்னூட்டங்களைப் படிக்காதீர்கள்;  மன உளைச்சலாகி விடும் என்றார் என் நண்பர்.  அதெல்லாம் மனநோயாளிகளின் பிதற்றல்.  அந்தப் பிதற்றல் எல்லாமே வலியால் ஏற்படுவது.  நானோ சமூக நோய் பற்றி ஆய்வு செய்யும் ஒரு மருத்துவன்.  நோயாளியின் வலி கண்டு மருத்துவனே துடித்தால் என்ன ஆவது?  அதையெல்லாம் நான் செய்ய மாட்டேன்.  அந்தப் பின்னூட்டங்கள் சுவாரசியமாக இருந்தன.  எல்லாமே விவேகம் Marquis de Sade எழுத்துக்கள்தான்.  என் வீட்டுப் பெண்களின் ஜனன உறுப்புதான் எல்லோருடைய குறியும்.  சிலர் பழுக்கக் காய்ச்சிய இரும்பால் ஜனன உறுப்புக்குள் விட்டுக் குடைய வேண்டும் என்றெல்லாம் graphic ஆக எழுதியிருந்தார்கள்.  வெறுமனே என் வீட்டுப் பெண்கள் என்று எழுதாமல் அவர்களுக்கும் எனக்குமான உறவையும் குறிப்பிட்டிருந்தார்கள்.  அது மட்டும் அல்ல; அவர்களின் தொலைபேசி எண்ணையும் கொடுத்து முடிந்தால் நடவடிக்கை எடுடா பாடு என்று முடிந்தது.  சீ சீ  மனநோயாளிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா பிரதர்ஸ்?

எல்லா பின்னூட்டங்களையும் பொறுமையாக சுவாரசியமாகப் படித்தேன்.  எல்லோருக்குமே என் வயது வேறு உறுத்தியிருக்கிறது.   பாவம்.  உண்மையில் இந்த யூட்யூப் சினிமா விமர்சனத்தில் ஒரு இளம்பெண் இறங்கி அடித்தால் தமிழ்நாடே பற்றிக் கொண்டு எரியும் என்பதில் சந்தேகமே இல்லை.  ஷாலின் போன்றவர்கள் முயற்சி செய்யலாம்.  ஒரே நாளில் உலகப் புகழ்.  பெருமாள் முருகனையெல்லாம் காணாமல் அடித்து விடலாம்.

ப்ளூ ஷர்ட்காரருக்கு வந்திருக்கும் பின்னூட்டங்கள் எனக்கு வந்ததை விடக் கடுமை.  உயிருக்கே ஆபத்து என்றுதான் நினைக்கிறேன்.  கொஞ்சம் பயமாக இருந்தது.  அன்பர்கள் பின்னூட்டத்தில் எழுதியிருக்கிறார்கள்.  அருண் வைத்தியநாதன் மென்மையாக முகநூலிலேயே ப்ளூ ஷர்ட் என்றால் புல்ஷிட் என்று எழுதி விட்டார்.  இந்த மனநிலைதான் பயமாக இருக்கிறது.  விமர்சனமே பண்ணக் கூடாது.  அப்படியென்றால் என்ன, சினிமா உலகில் ஹிட்லர் ஆட்சியா நடந்து கொண்டிருக்கிறது?  எந்திரன் இரண்டை விமர்சித்தால் நேரில் வந்து கழுத்தை அறுத்து விடுவார்கள் போலிருக்கிறதே?  ஏன் ஐயாமார்களே, சாப்பாடு என்று சொல்லி நரகலைக் கொட்டினால் என்னய்யா செய்ய முடியும்?  நான் கஷ்டப்பட்டுத்தான் குப்பையைத் திரட்டினேன், அதற்காக என்னென்னவோ சிரமங்களை அடைந்தேன்.  மூக்கையெல்லாம் பொத்திக் கொண்டேன். வெளிநாடு எல்லாம் போனேன்.  ஆனால் இலையில் விழுந்திருப்பது குப்பை!  என்ன செய்யட்டும் அருண்?  இதை எப்படி நான் மென்மையாக விமர்சனம் செய்ய?

இன்னொரு விஷயம். இன்னொருத்தரை இப்படித்தான் விமர்சனம் செய்ய வேண்டும் என்று சொல்ல நீங்கள் யார்?  சினிமா உலகின் ஹிட்லரா?  சரி, நான் சொல்லுகிறேன்.  இனிமேல் பாஸ்கி தன் கையில் உள்ள மயிலிறகைத் தூக்கிப் போட்டு விட்டு, ப்ளூ ஷர்ட் போல் இறங்கி அடிக்க வேண்டும் என்று சொல்ல முடியுமா?  பாஸ்கிக்கு எப்படித் தோன்றுகிறதோ அதைச் செய்கிறார்.  அதை நான் விமர்சிக்கலாம்.  ஆனால் இப்படிச் செய், அப்படிச் செய் என்று அவருக்கு புத்தி சொல்ல நான் யார்?  அதேபோல் ப்ளூ ஷர்ட்காரருக்கும் இன்ன பிறருக்கும் புத்தி சொல்ல நீங்கள் யார் அருண்?  சமூக வெளியில் படைப்பை வைத்து விட்டால் அவரவர் அவரவர் புத்திக்கு ஏற்றாற்போல் விமர்சிக்கத்தான் செய்வார்கள்.  பாய்ஸ் படத்தை விகடன் சீய்… என்று ஒரே வார்த்தையில் விமர்சிக்கவில்லையா?

என் வீட்டுப் பெண்களைத் திட்டுவது பற்றி எனக்குக் கொஞ்சமும் கவலை இல்லை.  ஏனென்றால், அஹம் பிரம்மாஸ்மி என்பதை நம்புபவன் நான்.  வெறுமனே நம்புபவன் மட்டும் அல்ல; அதை நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.  அருணின் உயிர் சக்தியும் என் உயிர் சக்தியும் ஒன்று.  எல்லாமே பிரும்மம்.  ஆகாயம், நீர், நிலா, காற்று, பன்றி, மலை, குப்பை, சக்தி, மரம், கல், ஆடு, மாடு, கழுதை, குதிரை, என்னைத் திட்டுபவன், என்னைப் பாராட்டுபவன் எல்லோருமே பிரும்மத்தின் வாழ்விடங்கள்.  நான் நீ.  நீ நான்.  எனவே என் வீட்டுப் பெண்களும் உங்கள் வீட்டுப் பெண்களும் ஒன்றே.  அஹம் பிரம்மாஸ்மி.