சாதத் ஹஸன் மண்ட்டோ

எக்ஸைல் மறு உருவாக்கம் தீவிரமாகப் போய்க் கொண்டிருக்கிறது.  ஏழாம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்பது திட்டம்.  அந்த வேலைக்க்குள் நுழைவதற்கு முன் வாசகர் வட்டத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்காக எட்டிப் பார்த்த போது இந்தச் சிறிய குறிப்பு கிடைத்தது.  நிஜந்தன் தோழன் எழுதியிருக்கிறார்.   சாதத் ஹஸன் மண்ட்டோவின் எழுத்தைப் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.  எனக்கு மிக நெருக்கமாக நான் உணரும் எழுத்தாளர்களில் மண்ட்டோவும் ஒருவர்.  தமிழில் மொழிபெயர்த்த ராமாநுஜம் மிகுந்த பாராட்டுக்கு உரியவர்.  நிஜந்தன் தோழனின் குறிப்பில் எழுத்துப் பிழைகள் அதிகம் உள்ளன.  அது இந்தக் காலத்தின் பிரச்சினை.  நூற்றில் ஒருவர் – இல்லை, தவறு – ஆயிரத்தில் ஒருவர் தான் தமிழைப் பிழை இல்லாமல் எழுதுகிறார்.  எனக்குப் பிடித்த எழுத்தாளராக வளர்ந்து வரும் அராத்துவே நிறைய எழுத்துப் பிழைகள் விடுகிறார்.  பொதுவாக சாரு ஆன்லைனில் எடுத்துப் போடும் போது எழுத்துப் பிழைகளை நானே திருத்தித்தான் வெளியிடுவேன், அதற்கு அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ செலவானாலும் பரவாயில்லை என்று.  ஆனால் இப்போது அந்த லக்‌ஷுரிக்கெல்லாம் எனக்கு நேரம் இல்லை.  எழுத்துப் பிழைகளை நீங்களே சரி செய்து கொண்டு படித்துக் கொள்ளவும்.  சிறிய குறிப்புதான்.  இருந்தாலும் இங்கே அதை உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது.

சமீபத்தில் நான் வாசித்த மிக சிறந்த புத்தகம்

மண்ட்டோ படைப்புகள் : தமிழில் – ராமாநுஜம்
வெளியீடு – புலம்
பக்கங்கள் 615
விலை: ரூ.450

“ என் கதைகளை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் நம்முடைய காலத்தினை தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றே அர்த்தம்.என் கதைகளில் தவறு என்று சொல்லப்படுவன எல்லாம் உண்மையில் அழுகிப் போன இந்த சமூக அமைப்பைத்தான் குறிக்கிறது”

-சாதத் ஹசன் மண்ட்டோ.

பிரிவினை மற்றும் மத கலவரங்களை நான் நேரடியாக பார்த்தது இல்லை ஆனால் இந்தபுத்தகத்தை வாசித்த 2வாரத்தில் கலவரத்தில் பாதிக்க பட்டவன் போலே இன்றும் இருக்கிறேன்

மண்ட்டோ என்ற இப் பெயரினை எனக்கு முதன் முதலாக அறிமுகபடுத்தியது பிரசன்னா,திசை புத்தக நிலைய உரிமையாளர் மகேந்திரன் மற்றும் நிசாமன்சூர்

மண்ட்டோ என்ற சாதத் ஹசன் மண்ட்டோ 1912 –ல் லூதியானாவில் இருக்கும் சம்ப்ராலாவில் பிறந்தார். இந்திய –பாகிஸ்தான் பிரிவினையில் மண்ட்டோ பாகிஸ்தானை தேர்ந்தெடுத்தார். தனது 43 ஆம் வயதில் 1955-ல் லாகூரில் காலமானார். மண்ட்டோவின் படைப்புகள் பெரும்பாலும் பிரிவினைத் துயரங்களை பேசுகின்றன. மேலும் விளிம்பு நிலை மக்கள்,விலை மாதர்கள் தான் அவரது கதைகளின் கதை மாந்தர்கள். ஓவ்வொரு படைப்பும் அதிர்ச்சிகளின் வெடிப்பில் முடிந்தது. எளிய வாசகர்கள் மண்ட்டோவினை அணுக அஞ்சுவதும் இதனால் தான். தான் வாழும் காலத்தில் தன் படைப்புகளால் அனைத்து விதமான எதிர்ப்புகளையும் மண்ட்டோ சந்தித்தார். அவரது எழுத்துக்கள் ஆபாசமானவை என்றும், அதிர்ச்சி மதிப்பீடுகளை தருவதற்காகவே புனைவினை மேற்கொள்கிறார் எனவும் விமர்சிக்கப் பட்டன. ஆனால் மண்ட்டோவினை நாம் அவ்வாறெல்லாம் மிக எளிமையாக ஒதுக்கித் தள்ளி கடந்து விட முடியாது. அவரது எழுத்துக்கள் மிகவும் ஆபாசம் என்றால்..அவர் மிக எளிமையாக சொல்கிறார்…ஆம் . உண்மைதான் மிக ஆபாசமானது என்று. இதுதான் மண்ட்டோ.

”விலைமாதுகள் பற்றி எழுதுவதே ஆபாசம் என்றால் அவர்களின் இருப்பும் ஆபாசமானதுதான் அவர்களை ப்ற்றி எழுதுவதை தடை செய்ய விரும்பினால் முதலில் விலைமாது என்ற நிலையை ஒழித்துகட்டுங்கள் பிறகு அவர் களை பற்றி எழுதுவது தானக மறைந்துவிடும்”
என்கிறார் மண்ட்டோ
சிக்கனமான சொற்களின் ஊடாகவே ஒரு படைப்பிற்கான அனைத்து வழிகளையும் திறந்து வைத்தவர் மண்ட்டோ.மண்ட்டோவின் எழுத்துக்கள் உண்மைக்கு அருகில் நிற்பவை அல்ல. மாறாக உண்மையாகவே நிற்பவை. இதுதான் பிற்போக்குவாதிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் பிரச்சனையாக இருந்தது. மண்ட்டோ தனது எழுத்துக்களால் பல விதமான சர்ச்சைகளை எதிர் கொண்டார். சமூகத்தின் உயரிய சின்னமான மதத்தினை அவர் தன் எழுத்துக்கள் ஊடாக மிகவும் எள்ளலான முறையில் கேள்விக்கு உட்படுத்தியது மதவாதிகளை எரிச்சல் ஊட்டியது.

குறிப்பாக சில சிறுகதைகளை குறிப்பிட்டாகவேண்டும்
திற
ஷரிபான்
மோஸல்
சுதந்திரத்திற்காக
ஒரு நாள்

முதலில் திற சிறுகதை இக்கதை பல எதிர்ப்புகளையும் வழக்குகளையும் சந்த்திதது
இக்கதை படிக்கும் வாசகன் உண்மையில் வெட்கத்தால் தலைகுனியவும் மத கலவரத்தால் பெண் வன்புணர்வு எவ்வளவு கோரமானது என்பதை சில பக்கத்திலே ஆனாதிக்கம் மத அடிப்படை வாதத்தால் நிரம்பி போன நம் மனதை பேனா கொண்டு கிழிக்கிறார்

சகினா என்ற என்ற பெண் கலவரத்தில் தொலைந்தபின் திற என்ற சொல் கேட்டு தனது சல்வார்னாடை வை அவிழ்ப்போதோடு நிறைவு பெருகிறது

(ஹேராம் படத்தில் ஷரிபான் திற மற்றும் சிறுகதைகளின் தாக்கத்தை உனரலாம்)
குடும்பத்திலும் சமூகத்திலும் வன்முறையினால் பாதிக்கபடுவது ஒரு பெண்ணின் உடல் தான் மண்ட்டோ இப்படி ஒவ்வொரு கதைகளிலும் கலவரதத்தையும் மனதோடு ஆராய்கிறது

பிழை எனப் பெயரிடப்பட்ட அவரது சொற்றோவியம் ஒன்று.

வயிற்றை மிக சுத்தமாக கிழித்துகொண்டு அந்தக் கத்தி சரியான நேர்கோட்டில் அவனின் தொப்புளுக்கு கீழ் இறங்கியது

அதில் அவனின் பைஜாமா நாடாவும் வெட்டபட்டது

கத்தியை பிடித்தவனிடமிருந்து அந்த வார்த்தைகள் வருத்தோடு வெளிபட்டது :ச்சே சே நான் தவறு செய்து விட்டேன்

ஆழ்ந்து படித்து பாருங்கள்

நினைவோடைப் பகுதியில் முகமது அலி ஜின்னாவினைப் பற்றி மண்ட்டோ எழுதியுள்ள பத்தி மிகவும் தனித்துவமானது. ஒரு படைப்பாளன் ஒரு ஆளுமையை அருகிலிருந்து உள்வாங்கி, அதை அப்படியே தன் படைப்பில் உருவாக்கி வாசகர் முன் உயிரூட்டி காட்டுவது என்பது எளிதான ஒன்றல்ல. ஆனால் மண்ட்டோவின் எழுத்துக்கள் மிக எளிதாக அதை சாதித்தன. மேலும் நர்கீஸ் பற்றியும் , நூர்ஜகான் பற்றியும், அசோக்குமார் பற்றியும் மிக நெருக்கமான விவரணைகள் நமக்கு மண்ட்டோவின் எழுத்துக்களில் காணக்கிடைக்கின்றன.

மண்ட்டோவின் எழுத்துக்கள் அடங்காமல் ஒடும் காட்டாறாய் ஒடுகிறது. நாமும் அவற்றினை கடக்க மிகவும் சிரமப் படுகிறோம். நம் பண்பாட்டு வெளிச்சத்தில் இருள் அள்ளி பூச முயலும் மண்ட்டோவின் எழுத்துக்கள் சற்று காத்திரமானவையே. ஆனால் உண்மைக்கு மிக அருகிலானவை என்ற முறைமையில்..ஒரு தேர்ந்த வாசகன் மண்ட்டோவின் ரசிகனாகிறான்.

மண்ட்டோவின் படைப்புகள் ஒரு தொகுதியாக தமிழில் கிடைக்கிறது. 20 க்கும் மேலான கதைகளும், அருமையான சொற்றோவியங்களும், ஆளுமைகள் குறித்த நினைவோடைகளும் , அவரது கடிதங்களும் என தொகுப்பு மிகவும் சிறப்பாக இருக்கிறது. தமிழில் மொழிப் பெயர்த்திருக்கும் ராமாநுஜம் அவர்களுக்கு நன்றிகள்.

இந்திய பிரிவனை பற்றியும் மதரீதியாலன அடிப்படை வாதிகளின் கோரத்தையும் கலவரத்தையும் இதைவிட படம் பிடித்து காட்ட இயலாது மத்த சிறுகதைகள் படிக்கும் போது உண்மையை காட்டியிருப்பார்கள் ஆனால் இவரின் சிறுகதையை படித்தால் நம் சட்டையை பிடித்து யாரோ உலுக்கிய உணர்வு

கட்டாயம் அனைவரும் படிக்கவும்

எழுதியவர்: நிஜந்தன் தோழன், சாரு நிவேதிதா வாசகர் வட்டம்.

Comments are closed.