இன்று வேண்டாம்…

Arya Stark-Maisie Williams.jpg

எப்போதடா நாய்களுக்குப் பணிவிடை செய்யாத வாழ்க்கை லபிக்கும் என்று தினந்தோறும் வேண்டிக் கொள்கிறேன்.  ஒரு நாளில் நான்கு மணி நேரம் பப்பு ஸோரோவுக்கே போய் விடுகிறது.  ச்சிண்ட்டுவுக்கு நேரமே ஆவதில்லை.  பூனைகள் தன் பாட்டுக்கு வளர்கின்றன.  நாய்கள்தான் எத்தனை வயது ஆனாலும் சிசுவைப் போல் நம் கவனிப்பை எதிர்பார்க்கின்றன.  மாதம் முடியும் போது 28 அல்லது 29-ஆம் தேதி பப்பு, ஸோரோவுக்குப் பூச்சிக் கொல்லி மாத்திரை கொடுக்கவில்லை என்றால், கொடுக்க மறந்து போனேன் என்றால், முதல் தேதியிலிருந்து ஸோரோ பச்சை நிறத்தில் வாந்தி எடுக்கும்.  அப்புறம் வாந்தியை அள்ள வேண்டும்.  இப்படி.

எப்படியோ என் வீடு நாய்களின் நண்பர்கள் இருக்கும் வீடு என்று தெரிந்து கொண்டு விட்ட மூன்று தெரு நாய்கள் ஆறு ஆண்டுகளுக்கு முன்னே என்னிடமும் அவந்திகாவிடமும் காலையும் மாலையும் வந்து பிஸ்கட்டோ பெடிக்ரியோ வாங்கிச் சாப்பிட்டு விட்டுப் போகும்.  அதைப் பார்த்து விட்டு காகங்களும் – ஒரு முப்பது இருக்கும் – தினமும் வந்து பெடிக்ரி கேட்டுச் சாப்பிடுவது வழக்கமாகி விட்டது.  மறந்து விட்டால் கூட காகங்கள் வந்து கறாபுறா என்று கத்தி சாப்பிட்டு விட்டுத்தான் போகும்.  அத்தனை உரிமை.  மூன்று தெரு நாய்களுக்கும் அதன் வண்ணங்களை வைத்துப் பெயர் வைத்திருக்கிறேன்.  ப்ளாக்கி, ப்ரௌனி, ஒய்ட்டி.  இதில் ஒய்ட்டி சாது.  முன் பக்கத்தில் அரை கால் கிடையாது.  ப்ளாக்கி அதை விட சாது.  ப்ரௌனி பெண் நாய் என்பதால் ஏதோ சந்திர மண்டலத்துப் பிராணி போல் நடந்து கொள்ளும்.  எனக்குக் கொஞ்சம் பெண்களோடு நட்பு உண்டு என்பதால் அது எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை.  உதாரணமாக, ஒய்ட்டியையும் ப்ளாக்கியையும் தொடலாம், கொஞ்சலாம்.  ஆனால் ப்ரௌனியைத் தொட நெருங்கினாலே ஓடி விடும்.  ஒரு மாதிரி உடம்பை அஷ்டகோணலாகக் காட்டி, தொடாதே என்று சொல்லும்.  இந்த மூன்றுமே முந்திரிப்பருப்பு போட்ட பிஸ்கட் மட்டுமே சாப்பிடும்.  வேறு மலிவான பிஸ்கட்டைத் தொடக் கூட தொடாது.  சட்டியில் வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரையும் புதிதாக மாற்றப்பட்டிருந்தால்தான் குடிக்கும்.  தண்ணீர் பழசாகி விட்டால் முகர்ந்து பார்த்து விட்டுப் போய் விடும்.  ஆனால் தெருநாய்களைத் தெருவிலேயே வளர்ப்பதில் பிரச்சினை இல்லை.  உணவும் தண்ணீரும் மட்டும்தானே கொடுக்கிறோம்?

இதற்கிடையில் எங்கள் வீட்டுக்கு மூன்றாவது வீட்டில் இரண்டு நாய்கள் இருக்கின்றன.  வீட்டில் வளர்வன அல்ல.  அந்த வீட்டு ஏரியாவில் வளர்பவை.  நான் வாக்கிங் கிளம்பும் போது என் கூடவே வந்து நான் வாங்கிக் கொடுக்கும் பிஸ்கட்டைச் சாப்பிடும்.  ஒன்றின் பெயர் டைகர், இன்னொன்றை குள்ள பாஸ் என்று அழைக்கிறேன்.

நேற்று இரவு பத்தரை மணி அளவில் மூன்று இளைஞர்கள் ஒரு பூனைக் குட்டியை எங்கள் தெரு ஓரத்தில் வைத்து விட்டுப் போனார்கள்.  அப்படி வைக்காதீர்கள், தெருநாய்கள் கடித்து விடும் என்று சொன்னாள் அவந்திகா.  பூனைக்குட்டியும் அவர்கள் பின்னே ஓடியது. பிறந்து ஒரு மாதம் இருக்கும்.  அவர்கள் வளர்த்த குட்டி போல.   அதற்குள் ச்சிண்ட்டு அவந்திகாவை அழைக்கவே அவள் உள்ளே வந்தாள்.  பூனைக்குட்டி அவர்கள் பின்னேயே ஓடி விட்டது என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே பூனையின் ஓலம்.  நாய்கள் கடித்து விட்டன.  ப்ளாக்கியும் ப்ரௌனியும்தான்.  பூனைக்குட்டி இறந்து விட்டது.

அப்போது எனக்குள் பொங்கிய துக்கத்தை இங்கே எழுத எனக்குத் திறமை இல்லை.  ஒருக்கணம் நிதானித்துச் செயல்பட்டிருந்தால் அதைக் காப்பாற்றி இருக்கலாம்.  குட்டி அவர்களின் பின்னே ஓடி விட்டது என்று நினைத்தது தவறாகி விட்டது.  பிறகு அவந்திகாவே தெருவில் குழி தோண்டி அந்தக் குட்டியைப் புதைத்தாள்.  எனக்கு அதற்கெல்லாம் மனோதிடம் இல்லாததால் உள்ளே வந்து விட்டேன்.  அந்த மூன்று இளைஞர்களும் பூனையை வளர்த்து விட்டு தெருவில் போட்டு விட்டார்கள்.  இப்படித்தான் இருக்கிறது மனித இனம்.

விண்டர்ஃபெல் பிராந்தியத்தின் ஆட்சியாளனான நெட் ஸ்டார்க்கின் மகள் ஆர்யா.  தன் பூனைக்குட்டியைத் துரத்திக் கொண்டு வரும் போது நிலவறையில் இருவர் தன் தந்தையைக் கொல்ல முயற்சி நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்கிறாள்.  தம்பியையும் யாரோ கொல்ல முயற்சி செய்திருக்கிறார்கள்.  மேலேயிருந்து தள்ளியதில் அவன் உயிர் பிழைத்ததே பெரிய அதிர்ஷ்டம்.  கால்கள் இரண்டும் செயல் இழந்து விட்டன.  ஆர்யா தன் தமக்கைப் போலவோ மற்ற பெண் குழந்தைகளைப் போலவோ இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டு நல்ல திடகாத்திரமான பிள்ளைகளைப் பெற வேண்டும் என்று கனவு காணும் பெண் அல்ல; மாறாக அவள் வாள் சண்டை கற்றுக் கொள்கிறாள்.

ஒருநாள் மிகவும் சோகமாகக் காணப்படும் அவளிடம் என்ன விஷயம் என்று கேட்கிறான் ஆசான்.  இன்று பயிற்சி வேண்டாம், என் மனம் குழப்பத்தில் இருக்கிறது என்கிறாள் ஆர்யா.  குழப்பத்தில் இருக்கும் போதுதான் பயிற்சி செய்ய வேண்டும் என்று சொல்லும் அவன் மேலும் விபரம் கேட்க, தன் தந்தைக்கு எதிரான சூழ்ச்சி பற்றிச் சொல்கிறாள்.

”எல்லா கடவுள்களையும் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறேன்.”

“எல்லா கடவுள்களையும் பிரார்த்தித்துக் கொள்ள வேண்டாம்.  ஒரே ஒரு கடவுளை வேண்டிக் கொள்.”

“அப்படியா, அது என்ன கடவுள்?”

“மரணம்.”

அந்தப் பதிலைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறாள் ஆர்யா.

”ஆம், மரணம்தான் அந்தக் கடவுள்.  மரணத்திடம் நாம் வேண்டிக் கொள்ளும் பிரார்த்தனை என்ன தெரியுமா?

இன்று வேண்டாம்.”

பிறந்து ஒரே மாதத்தில் செத்திருக்கக் கூடாது அந்தப் பூனைக்குட்டி.

மரணத்திடம் என் வேண்டுகோள் அது ஒன்றுதான்.  எனக்காக அல்ல; இந்த உலகில் ஜீவித்திருக்கும் கோடிக்கணக்கான இளம் பிஞ்சுகளுக்காக என் பிரார்த்தனை…

இன்று வேண்டாம்…