அறம்

கோபி கிருஷ்ணன் என்று ஒரு எழுத்தாளர் இருந்தார்.  மனிதர்களின் உளவியலை அவர் அளவுக்கு ஆய்வு செய்து எழுத்தாளர் தமிழில் இல்லை என்றே சொல்லலாம்.  உலக அளவில் கூட மிகவும் கம்மி தான்.  மேலும் கோபி அந்த ஆய்வை வெளியிலிருந்து செய்யவில்லை.  அவரே அதை அனுபவித்துப் பார்த்து எழுதினார்.  மனநல விடுதிகளில் தங்கினார்.  மருந்துகளை உட்கொண்டார்.  பல நூறு கதைகள் எழுதினார்.  சிறு பத்திரிகைகளில்.  இலவசமாக.  வாழ்நாள் பூராவுமே இலவசமாகவே எழுதினார்.  நக்கீரன் பத்திரிகையில் ப்ரூஃப் ரீடராக வேலை பார்த்தார்.  பிறகு பல பத்திரிகைகளில் ப்ரூஃப் ரீடராக வேலை பார்த்தார். பாக்கெட் நாவல் அசோகனின் அலுவலகத்தில் கூட மூன்று நாட்கள் ப்ரூஃப் ரீடராக வேலை பார்த்ததாகச் சொல்லியிருக்கிறார். எங்குமே நிரந்தரமாகத் தங்க மாட்டார்.  எங்காவது மனிதச் சுரண்டலைப் பார்த்தால் எதிர்த்துக் கேட்டு, வாதம் செய்து வேலையிலிருந்து நீக்கப்படுவார்; அல்லது, அவரே ராஜினாமா கொடுத்து விடுவார்.  அநேகமாக அவரே ராஜினாமா செய்வதுதான் அதிகம் நடக்கும்.

அவர் வீடு வில்லிவாக்கத்தில் ஒரு ஒண்டுக் குடித்தனம்.  வீடு என்றே சொல்ல முடியாது.  அசோகமித்திரன் கதைகளில் வருவதைப் போன்ற ஒரு எலிப் பொந்து.  என் வீடு அப்போது திருமங்கலத்தில் இருந்தது.  அவர் வீட்டுக்குப் போனால் சுமார் நான்கு மணி நேரம் பேசிக் கொண்டிருப்போம்.  அப்போதெல்லாம் நான் காலையிலிருந்தே தண்ணீர் குடிக்காமல் இருப்பேன்.  ஏனென்றால், அந்தக் குடித்தனத்தில் ஒரே ஒரு கழிப்பறைதான் இருந்தது.  அங்கே எப்போதும் யாராவது இருப்பார்கள்.  உள்ளே இருட்டாக இருக்கும்.  விளக்கும் இருக்காது.  நீங்களெல்லாம் எப்படி என்று கேட்டால், பழகி விட்டது என்பார் கோபி.

சிகரெட் செலவுக்கும் டீ செலவுக்கும் மாதம் 500 ரூபாய் தேவைப்படுகிறது சாரு என்றார் ஒருமுறை.  அப்போதெல்லாம் கணினி இல்லை; ஐடி துறையே இல்லை.  அவருடைய கதையை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு பத்திரிகை அலுவலகமாக அலைந்திருக்கிறேன்.  ஒரு பத்திரிகையில் உங்கள் கதை வேண்டுமானால் கொடுங்கள் என்றார்கள்.  கொஞ்சம் பெருமையாகவும் அதே சமயம், இப்படிப்பட்ட அவலத்திலும் பெருமை எண்ணும் என் கீழான மனம் பற்றிச் சிறுமையாகவும் தோன்றியது.  இந்தியா டுடேயில் வாஸந்தி கோபியின் கதையை எடுத்துக் கொண்டார்.   1500 ரூபாய் கிடைக்கும்.  கோபிக்கு மூன்று மாதம் தாங்கும்.  அப்புறமாக, வாஸந்தியிடம் சொல்லி மீண்டும் ஒரு கோபி கதையைப் போடலாம் என்று மனம் கணக்கிட்டது. கோபியின் மனைவியை நான் பார்த்ததில்லை.  அவரும் எங்கோ பத்திரிகை அலுவலகத்தில் ப்ரூஃப் ரீடராக இருந்தார் என்று நினைக்கிறேன்.

இந்தியா டுடேயிலிருந்து 1500 ரூபாய் வந்த போது கோபி இறந்து போயிருந்தார்.  இதை உங்களால் நம்ப முடியாது.  ஆனாலும் தமிழ் சினிமா மாதிரிதான் அது நடந்தது.  அவருக்குத் தேநீர் குடிக்கவும் சிகரெட் குடிக்கவும் 500 ரூ. இல்லாமல் செத்தார்.   500 ரூ. கிடைத்திருந்தால் இன்னும் பத்து ஆண்டுகள் வாழ்ந்திருப்பார்.  குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகளாவது.  கோபி இறந்த பிறகு சுஜாதா தன் வாசகர்களிடம் பணம் வசூலித்து கோபியின் மனைவிக்குக் கொடுத்தார்.  கோபி இருந்த போது அவர் பெயரை சுஜாதா அறிந்திருக்கவில்லை.  அதனால் என்ன,  சுஜாதாவின் தப்பா அது?

ஆக, என் இனிய நண்பர்களே, மேலே சொன்ன விஷயத்திலிருந்து கோபி கிருஷ்ணன் என்றால் அவரது அடையாளம் என்ன என்று உங்களுக்குப் புரிகிறது?  ப்ரூஃப் ரீடர் என்றா, எழுத்தாளர் என்றா?  எழுத்தாளர் என்றுதானே?  எழுத்தாளர் என்பது மட்டும்தானே அந்த மனிதனின் அடையாளம்?  அந்த ஒரே அடையாளத்தையும் பிடுங்கிக் கொள்கிறார் ஒருத்தர்.  பிடுங்கிக் கொண்டால் என்ன கிடைக்கும்?  கோபி கிருஷ்ணன் ஒரு ப்ரூஃப் ரீடர்.  கோபி கிருஷ்ணன் ப்ரூஃப் ரீடர் என்றால் திருவள்ளுவர் யார்?  அவர் ஏதாவது பாணராக இருக்கலாம்?  கம்பர்?  விவசாயி.  சமகாலத்துக்கு வாருங்கள்.  இதோ.

வண்ணதாசன் – எலெக்ட்ரீஷியன்

வண்ணநிலவன் –  கடற்கரையில் சுண்டல் விற்பவர்

ஜெயமோகன் – பஸ் கண்டக்டர்

யுவன் சந்திரசேகர் – வளையல் வியாபாரி

சாரு நிவேதிதா – பிஞ்ச செருப்பு தைப்பவர்

எஸ். ராமகிருஷ்ணன் – இஸ்திரி போடுபவர்

மனுஷ்ய புத்திரன் – குமாஸ்தா

இமையம் – விவசாயி

பா. வெங்கடேசன் – சாணை பிடிப்பவர்

இப்படியே சொல்லிக் கொண்டு போகலாம்.  இப்படிச் சொல்லாமல் சொல்பவர் யார் தெரியுமா?  உலக நாயகன்.  வேறு என்ன?  இங்கே எழுத்தாளர்களுக்கு இருக்கும் ஒரே அடையாளம் எழுத்தாளன் என்பது மட்டுமே.  அதுவும் சமூகத்துக்குத் தெரியாது.  அவனே அவனைப் பற்றி நம்பிக் கொள்ளும் அடையாளம் அது.  ஆனால் அதையும் பிடுங்கி தன் சட்டைப் பாக்கெட்டில் மாட்டிக் கொள்கிறார் உலக நாயகன் கமல்ஹாசன்.

பெரும் பத்திரிகைகளில் எழுதும் வரை – அதுவும் இப்போது ஒன்றரை ஆண்டுகளாகத்தான் – எனக்கு எழுத்தின் மூலம் காசு வந்ததில்லை.  எல்லா எழுத்தாளர்களுக்கும் அப்படியே.  பெரும் பத்திரிகைகளில் எழுதினால் ஐநூறோ ஆயிரமோ கொடுப்பார்கள்.  அவ்வளவுதான்.  வாராவாரம் எழுதினாலும் எத்தனை கிடைக்கும்?  நாலாயிரம்.  வாராவாரம் யார் எழுத முடியும்?  ஸ்டார் எழுத்தாளர்களால் மட்டுமே அது சாத்தியம்.

இலக்கியப் பத்திரிகைகள் யாவும் தமிழில் ஒரு கலாச்சார விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அவரவர் சொத்தை விற்று நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.  அஃ என்ற பத்திரிகையை நடத்திய பரந்தாமன் சமீபத்தில்தான் இறந்தார்.  அவரைப் போன்ற எண்ணற்ற தியாகிகளைக் கொண்டது தமிழ் எழுத்துச் சூழல்.  ஆக, இலக்கியப் பத்திரிகைகளில் எழுதினால் ஒரு பைசா கிடைக்காது.  நான் உயிர்மை மாதப் பத்திரிகையில் பத்து ஆண்டுகள் 120 கட்டுரைகள் எழுதினேன்.  நஷ்டத்தில் நடக்கும் இலக்கியப் பத்திரிகை.  காசு எப்படிக் கொடுப்பார்கள்?  அப்படியே 500 ரூ. கொடுத்தாலும் அது எப்படி போதிய சன்மானம் ஆகும்?  எழுதுவதற்கே எனக்கு 2000 ரூ.  ஆகுமே?  சில கட்டுரைகளுக்கு அதையும் விட அதிகம்.  டிவிடிக்கள், புத்தகங்கள், இத்யாதி, இத்யாதி.  உயிரையே உருக்கி, வாழ்க்கையையே சோதனைச் சாலையாக்கி எழுதும் போது பணமெல்லாம் பிசாத்து இல்லையா, ஒரு எழுத்தாளனுக்கு?

பதிலாக, சமூகத்திலிருந்து எழுத்தாளனுக்கு எதுவுமே கிடைக்கவில்லை.  அங்கீகாரம், பணம்… எதுவுமே இல்லை.  ஜீவனோபாயத்துக்காக எழுத்தாளர்கள் குமாஸ்தா வேலை செய்கிறார்கள்.  வீட்டிலும் எழுத்தாளன் என்ற அடையாளம் இல்லை.  பணம் வராத வேலையை குடும்பத்தில் எப்படி மதிப்பார்கள்?

ஆனால் இயக்குனர் ஷங்கரின் ஒரு படத்தின் தயாரிப்புச் செலவே 150 கோடி.  அவர் சம்பளம் 40 கோடி இருக்கலாம்.  உத்தேசமாகச் சொல்கிறேன்.  நடிகரின் சம்பளம் 40 கோடி.  ஆனால் எழுத்தாளன் இயங்குவது ஓசியில்.  இந்தக் கோடிக்கெல்லாம் எத்தனை சைஃபர் இருக்கிறது என்றே அவனுக்குத் தெரியாது.  ஆனானப்பட்ட சுஜாதாவே மருத்துவமனையில் இருந்த போது டைரக்டர் மணி ரத்னம்தான் அவருக்கு மருத்துவச் செலவைக் கட்டியதாக பத்திரிகையில் படித்தேன்.  ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு கூட பிரபஞ்சனுக்கு பைபாஸ் செய்த போது ஒரு இயக்குனர் தான் நாலு லட்சம் கொடுத்ததாக அவர் பத்திரிகையில் எழுதியிருந்தார்.  யார் அந்த இயக்குனர் என்று எனக்குத் தெரியும்.  அவர் இப்படியெல்லாம் தன் பெயர் வருவதை விரும்ப மாட்டார்.  இப்படி தனக்கு உடம்புக்கு வந்தால் கூடத் தன் நண்பர்கள்தான் காப்பாற்ற வேண்டும் என்ற அவல நிலையில் இருப்பவர்கள் எழுத்தாளர்கள்.  அப்படிப்பட்டவர்களிடமிருந்து எழுத்தாளன் என்ற அடையாளத்தையும் பிடுங்கிக் கொள்வது கண் தெரியாத பிச்சைக்காரனிடமிருந்து திருடுவது போன்ற செயல் இல்லையா?  அதுவும் திருடுவது யார்?  கோடீஸ்வரன்!!!

அதாவது, அம்பானியைப் போன்ற ஒரு செல்வந்தர் ஒரு பிச்சைக்காரப் பரதேசியிடம் உள்ள ஒரு திருவோட்டைப் பிடுங்குவது போன்ற செயலே கமலின் செயல்.  அப்படி என்ன செய்தார் கமல்?  பிக் பாஸ் இறுதி நிகழ்ச்சியில் இயக்குனர் ஷங்கரை எழுத்தாளர் என்று சொல்லி அடையாளப்படுத்தினார் கமல்.  முதலில் இயக்குனரும் எழுத்தாளருமான ஷங்கரை அழைக்கிறேன் என்றார்.  பிறகு ஷங்கர் வந்ததும், இயக்குனரைக் கூட விட்டு விட்டு எழுத்தாளர் ஷங்கர் என்று மட்டுமே குறிப்பிட்டார்.

ஜெயமோகனின் அறம் கதையை தமிழ்கூறு நல்லுலகுக்கு அறிமுகப்படுத்தினார் கமல்ஹாசன்.  அந்த அறம் கதையில் வரும் எழுத்தாளர் வயிறு எரிந்து ஒரு சாபம் விடுகிறார்.  அதுதான் அறம்.  அப்படி என் வயிறு எரிகிறது இப்போது.  கோடிகளில் சம்பளம் வாங்குவது மட்டும் அல்லாமல், ஒரு கடவுளைப் போல் பேரும் புகழும் ஆடம்பரமுமாக வாழும் நீங்கள் பிச்சைக்காரனிலும் பிச்சைக்காரனாக வாழ்ந்து கொண்டிருக்கும் எழுத்தாளனிடமிருந்து அந்த எழுத்தாளன் என்ற ஒரே ஒரு அடையாளத்தையும் பிடுங்கிக் கொள்கிறீர்களே…  ம்ஹும்… இதற்கு மேல் எழுத விரும்பவில்லை.