ஒரு சிறிய பயணம் (3)

அந்த நதியில் என்ன நடந்தது என்பதற்கு முன்னால் வேறு சில சம்பவங்களையும் இங்கே எழுதிவிட்டு மேலே செல்லலாம்.

நேற்று எக்ஸைலில் ஒரு பகுதியில் திருத்தம் செய்து கொண்டிருந்த போது தமிழர்கள் எத்தனை விதமாக பு…  வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள் என்று எழுதினேன்.  மு.பு., கே.பு., அறிவுகெட்டப் பு. என்பதெல்லாம் நாம் சாதாரணமாக அறிந்தவை.  எப்போதாவது பயன்படுத்தப்படும் பு…க்களும் உள்ளன.  ஒருவர் தனக்கு நியாயம் என்று நினைப்பதைச் சொல்கிறார்.  அது அடுத்தவருக்கு அநியாயமாகப் படுகிறது.  உடனே ”போய்யா, பெரிய நியாயப் பு…  பேசுறாரு” என்று சொல்வார்கள் அல்லவா?  இப்படிப் பல பு…க்கள் உள்ளன.

இன்று காலையில் எனக்கு ஒரு சம்பவம் நடந்தது.  அப்போது நான் பெரிய கார்டு பு…  என்று மனதில் சொல்லிக் கொண்டேன்.  கார்டு என்பது debit card.  என் நண்பர் எப்போதும் டெபிட் கார்டை வைத்திருங்கள்.  உங்கள் உடலில் உள்ள ஒரு உறுப்பைப் போல் அது எப்போதும் உங்களிடமே இருக்க வேண்டும் என்றார்.  அப்போதுதான் நான் மனதுக்குள் பெரிய கார்டு பு…  என்று சலிப்புடன் சொல்லிக் கொண்டேன்.

நண்பர் ஒருவரைப் பார்க்க நேற்று சவேரா ஓட்டல் போயிருந்தேன்.  நண்பரைப் பார்த்து ஏழு ஆண்டுகள் ஆகின்றன.  மிக நெருங்கிய நண்பர்.  நான் போகும் போது மாலை ஆறு மணி.  நண்பர் இரவு பனிரண்டு மணிக்கு விமான நிலையம் கிளம்ப வேண்டும்.  நான் அங்கேயே உறங்கி விட்டு காலையில் எழுந்து வீட்டுக்குப் போக வேண்டும்.  நான் இரவில் வீட்டுக்குப் போவதை நிறுத்தி விட்டேன்.  அது ஏகப்பட்ட பிரச்சினைகளை உருவாக்குகிறது. உதாரணமாக, ஈரோட்டிலிருந்து இரவு ஒன்பது மணிக்குக் கிளம்பும் ரயிலில் சென்னை கிளம்பினேன்.  அது காலை நான்கு மணிக்கு செண்ட்ரல் வந்து சேர்ந்தது.  நான் வீட்டுக்கு வந்த போது காலை நாலரை.  அவந்திகாவுக்கு போன் செய்தேன்.  எடுக்கவில்லை.  கார்த்திக்குக்கு போன் செய்தேன். எடுக்கவில்லை.  அவர்கள் இரவு பனிரண்டுக்குத் தூங்கச் செல்பவர்கள். நாலரை மணி என்பது அவர்களுக்கு நடுநிசி. கால் மணி நேரம் கேட்டுக்கு வெளியிலேயே நின்று போன் செய்து கொண்டே இருந்தேன். கேட்டை அடித்தேன்.  நாய்கள் விழித்துக் கொண்டு என்னைப் பார்த்த சந்தோஷத்தில் அதகளம் செய்ய ஆரம்பித்ததும் கார்த்திக் வந்து கேட்டைத் திறந்தான்.

பிறகு காலையில் பார்த்த போது கண்ணாடித் தொட்டிக்குள் இருந்த விலை உயர்ந்த மீனான koi செத்துக் கிடந்தது.  காரணம், பப்புவும் ஸோரோவும் என்னைப் பார்த்து விட்டு குதித்த குதியில் மீன் தொட்டிக்குச் செல்லும் ஆக்ஸிஜன் குழாய் அறுந்து விட்டது.  கோயி மீன் விலை உயர்ந்த மீன் என்பதை விட முக்கியமானது என்னவென்றால், இது பல ஆண்டுகள் உயிர் வாழக் கூடியது.  ஜப்பானில் தலைமுறை தலைமுறையாக இதை வளர்த்து வருவார்கள்.  என் அப்பா வளர்த்த கோயி இது, என் தாத்தா வளர்த்த கோயி இது என்று சொல்வார்கள்.  பெண்களுக்கு சீதனமாகவும் கொடுப்பது உண்டு.  மலேஷியாவிலும், தாய்லாந்திலும் உள்ள புத்த மடாலயங்களில் மூன்று அடி நீளமுள்ள கோயி மீன்களைப் பார்த்திருக்கிறேன்.

நான் இரவில் வீடு திரும்புவதைத் தவிர்ப்பதற்கு இது ஒரு காரணம் மட்டுமல்ல; பல காரணங்கள் உள்ளன.  ஒவ்வொரு காரணமும் ஒரு சிறுகதை.  அதனால் சவேராவிலேயே தூங்கி விட்டு காலையில் எட்டு மணிக்கு மேல் வீட்டுக்குத் திரும்பலாம் என்று நினைத்தேன்.  ஆனால் அதில் ஒரு பிரச்சினை இருந்தது.  நண்பர் நள்ளிரவே கிளம்பி விடுவார்.  நான் காலையில் அறைச் சாவியை ஓட்டல் நிர்வாகத்திடம் கொடுக்கும் போது பழைய பாக்கி என்று ஏதாவது கேட்டால் என்ன செய்வது? அது போல் நான் பல இடங்களில் மாட்டித் திண்டாடி இருக்கிறேன்.  சமீபத்தில் கோயம்புத்தூரில்.  சரி, மிக நெருங்கிய நண்பர் என்பதால் வெளிப்படையாக இது பற்றிப் பேசி விடுவோம் என்று நினைத்து தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கிளம்பினேன்.  துரோகியையும் வரச் சொல்லி இருந்தேன்.  அவரும் வந்து விட்டு பதினோரு மணிக்குக் கிளம்பி விட்டார்.  நண்பர் நாங்கள் உணவு விடுதியிலிருந்து வாங்கும் எல்லாப் பொருட்களுக்கும் கார்டைக் கொடுத்துக் கொண்டே இருந்தார்.  ஒரு தண்ணீர் பாட்டிலைக் கூட விடாமல் பார்த்துப் பார்த்து கார்டைக் கொடுத்துக் கொண்டேயிருந்தார்.  நட்சத்திர ஓட்டல் என்பதால் தண்ணீர் பாட்டில் கூட நூறு ரூபாய் இருக்கும்.  பியர் முன்னூறு ரூபாய்.

நண்பரிடம் என் பிரச்சினையைச் சொன்னேன்.  காலையில் நான் சாவியை ஒப்படைக்கும் போது ஏதேனும் பணம் கேட்டால் என்ன செய்வது என்று கேட்டேன்.  ”கவலையே வேண்டாம். என் டெபிட் கார்ட் எண்ணைக் கொடுத்திருக்கிறேன்.  அதையே பயன்படுத்தி நீங்கள் வீட்டுக்குக் கூட டாக்ஸியில் போய்க் கொள்ளுங்கள்” என்றார் நண்பர்.  ”அதெல்லாம் வேண்டாம், ரெண்டு தெரு தாண்டினால் என் வீடு; ஆட்டோவில் ஐம்பதுதான் ஆகும்.  என் கவலை காலையில் சாவியைக் கொடுக்கும் போது காசு கேட்பான். அதற்குத்தான் என்ன செய்வதென்று தெரியவில்லை” என்றேன்.

அதெல்லாம் கேட்க மாட்டான்.  எல்லாவற்றையும் செட்டில் செய்து விட்டேன்.

”இல்லை; கேட்பான்.  கேட்டால் என்ன செய்வது என்று தெரியவில்லை. என் பாக்கெட்டில் முன்னூறு ரூபாய்தான் உள்ளது.  கேட்பான் என்று ஏன் தோன்றுகிறது என்றால் நட்சத்திர ஓட்டல்களில் நான் தனியாக மாட்டிக் கொள்ளும் எல்லா சமயங்களிலும் இப்படி ஒரு பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது” என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.  வெளியே சொன்னால் அதெல்லாம் உங்கள் மனப் பிராந்தி, இப்போது அப்படி நடக்காது என்பார் நண்பர்.

இந்த பயத்திலேயே அவருடன் என்னால் உற்சாகமாகப் பேச முடியாமல் போனது.  அவரோ படு உற்சாகமாக, காலையில் காம்ப்ளிமெண்டரி ப்ரேக்ஃபாஸ்ட் எல்லாம் இருக்கிறது; நீங்கள் நிதானமாக சாப்பிட்டு விட்டு டாக்ஸியில் போகலாம் என்றார்.

ஐயோ…  ப்ரேக்ஃபாஸ்டாவது மண்ணாங்கட்டியாவது.  காலையில் எழுந்து கொல்லைப்புறம் வழியாக ஓடி விட வேண்டும்.  சாவியை ஓட்டல்காரனே எடுத்துக் கொண்டு விடுவான் என்று நினைத்துக் கொண்டேன்.  சொல்லவில்லை.  சொன்னால் அநாவசியமாகப் பயப்படுகிறீர்கள் என்பார் நண்பர்.

சரி, இவ்வளவு பயம் ஏன், நண்பர் லண்டன் செல்கிறார்.  எப்படியும் கையில் கொஞ்சம் இந்தியப் பணம் இருக்கும்.  ஒரு ஆயிரம் ரூபாயை வாங்கி வைத்துக் கொள்ளலாமா என்று யோசித்தேன்.  வேண்டாம் என்று தோன்றியது.  பிறகு வாங்கி வைத்துக் கொள்வதுதான் நல்லது என்று தோன்றியது.  கூச்சம் அதைத் தடுத்தது.  இதில் கூச்சம் கூடாது; வாங்கி வைத்துக் கொள் என்றது உள் மனம்.  ஆனாலும் கூச்சம் தடுத்தது.  கடைசியில் இந்த மனப் போராட்டத்தில் கூச்சமே வென்றது.

பனிரண்டுக்குப் படுத்தாலும் காலை ஆறு மணிக்கு மேல் எனக்கு உறக்கம் வராது.  எழுந்ததுமே ஓட்டலிலிருந்து தப்பிச் செல்லும் வழி என்ன என்று மட்டுமே யோசனை சென்றது. நிச்சயமாக ஓட்டல்காரன் பணம் கேட்பான் என்று என் மனம் சொன்னது. ஆனால் கொல்லைவழியில் தப்பினால் அதற்காகப் போலீஸ் நடவடிக்கை எடுக்கும் போது சிசிடிவியில் என் முகத்தைப் பார்த்து என் வீட்டுக்குப் போலீஸ் வந்து பத்திரிகையில் செய்தி வெளியானால் பெரும் அவமானமாகப் போய் விடுமே என்று பயந்தேன்.  அதோடு காலை ஆறு மணிக்கே வீடு திரும்ப முடியாது.  ஆறு மணியும் என் வீட்டில் நள்ளிரவு தான்.  அதையும் மீறிப் போனால் பப்புவும் ஸோரோவும் என்னைப் பார்த்த சந்தோஷத்தில் குதிக்கிற குதியில் இன்னொரு தொட்டியில் வளரும் Flowerhorn மீன்கள் இரண்டும் செத்து விடுமே என்ற அச்சத்தில் வீடு திரும்பும் எண்ணத்தைக் கைவிட்டேன்.  இந்த ஃப்ளோரான் மீன்கள் சாதாரண மீன்கள் அல்ல.  சமீபத்தில் மூன்று தினங்கள் அவந்திகாவின் அம்மா வீட்டுத் திருமண விஷயமாக அவள் தன் பிறந்தகத்தில் இருந்தாள்.  இரண்டு ஃப்ளோரான்களுக்கும் வழக்கமாக அவந்திகாதான் தினமும் இரண்டு வேளையும் உணவிடுவாள்.  அவள் வீட்டில் இல்லாத மூன்று தினங்களும் அந்த இரண்டு ஃப்ளோரான்களும் சாப்பிடவே இல்லை. மூன்று நாட்களும் இரண்டு வேளையும் நான் உணவிட்டேன்.  ஆனால் அதை அந்த ஃப்ளோரான்கள் சீந்தவே இல்லை.  மூன்று நாட்களும் அவை முழுப்பட்டினியாகக் கிடந்தன.  செத்து விடும் என்று நினைத்தேன்.  சாகவில்லை.  நான்காம் நாள் அவந்திகா வந்து அவைகளைப் பார்த்த போது அந்த இரண்டு ஃப்ளோரான்களும் அவளுடன் வாய் விட்டுப் பேசியதை நான் என் இரண்டு கண்களாலும் பார்த்தேன்.  சத்தியம் இது.  நம்புங்கள்.  அந்த மீன்கள் நம்மைப் போல் பேசவில்லை.  ஆனால் வாயை திறந்து திறந்து பேசின.  துள்ளித் துள்ளிக் குதித்தன.  ஆடின.  ஆர்ப்பாட்டம் போட்டன.  தொட்டியிலிருந்தே வெளியில் விழுந்து விடுவது போல் மேலே மேலே எம்பிக் குதித்தன. மேலே இருந்த திறப்பின் வழியே தண்ணீர் வெளியே தெறித்தது. அவள் உணவைப் போட்டதும் அவ் அவ் என்று விழுங்கின. தண்ணீர்த் தொட்டியில் வாயை வைத்து அவளைத் தொடுவதற்கு முயற்சி செய்தன.  விட்டால் அவள் மடியில் விழுந்து விளையாடும் போல் தோன்றியது.

அவள் இல்லாத மூன்று நாளும் அந்த மீன்களை சாப்பிட வைக்க நான் எவ்வளவோ போராடினேன்.  காது, கண் என்று எல்லா உறுப்புகளும் செயல் இழந்து விட்டது போல் அவை என்னைக் கண்டு கொள்ளவே இல்லை.

அந்த ஃப்ளோரான்களுக்காக எட்டு மணி வரை அறையிலேயே பொழுதைப் போக்கி விட்டு சாவியுடன் கிளம்பினேன்.  அப்போது கூட புறக்கடை வழியே ஓடி விடலாம் என்று தோன்றியது.  சிசிடிவி, போலீஸ், பத்திரிகை என்று ஞாபகம் வரவே வரவேற்பறையை நோக்கித் திரும்பினேன்.

சாவியைக் கொடுத்ததும் பில்லை நீட்டினார்.  800 ரூ பாக்கி.  நண்பர் அவருடைய அறையிலிருந்த மினிபாரில் எடுத்த விஷயங்களுக்கான பில்.

நான் நினைத்தது சரியா? சரி, நண்பர் சொல்லியிருந்த அவருடைய டெபிட் கார்ட் எண்ணிலிருந்து தொகையை எடுத்துக் கொள்ளச் சொன்னேன்.  வரவேற்பாளர் முயன்றார். தோற்றார்.  கார்டு வேலை செய்யவில்லை.

என் கையில் முன்னூறு ரூபாய் இருந்தது.  வீட்டுக்கு போன் பண்ணினால் என் கதையே முடிந்து போகும்.

என் டெபிட் கார்டை எடுத்து வரவில்லை.  அதில் 600 ரூ இருந்தது.  சரியாகச் சொன்னால் 560 ரூ.  அராத்துவுக்கு போன் செய்ய முடியாது.  அவர் பத்து மணிக்கு மேல்தான் எழுந்து கொள்வார்.  தலையில் கையை வைத்துக் கொண்டு அப்படியே நாற்காலியில் உட்கார்ந்தேன்.

பிறகு வேறு வழியே இல்லாமல் அராத்துவை அழைத்தேன்.  ஆச்சரியகரமாக விழித்திருந்தான்.  மனைவியை வரவேற்பதற்காக விழித்தேன் என்றார்.

விஷயத்தைச் சொன்னேன்.  போனை வரவேற்பாளரிடம் கொடுக்கச் சொன்னார்.  கொடுத்தேன்.  அவருடைய டெபிட் கார்ட் எண்ணைக் குறித்துக் கொள்ளச் சொல்லி, அந்த எண்ணிலிருந்து 800 ரூபாயை எடுத்துக் கொள்ளச் சொன்னார்.  பிரச்சினை தீர்ந்தது.  வெளியே வந்தேன்.

பிறகுதான் அவர் எனக்கு அந்த ஆலோசனையைச் சொன்னார்.  டெபிட் கார்டை எப்போதும் என் உடல் உறுப்பைப் போல் பாக்கெட்டிலேயே வைத்துக் கொள்ள சொல்லி.  “பெரிய கார்ட் பு…” என்று அப்போதுதான் மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.

இனிமேல் என்னைப் புதிதாகச் சந்திக்க ஆர்வப்படும் நண்பர்கள் என்னைப் பார்த்த உடனேயே என்னிடம் 2000 ரூபாயிலிருந்து 5000 ரூபாய் வரை கொடுத்து விடுங்கள்.  இல்லாவிட்டால் என்னைச் சந்திக்க வேண்டாம்.

ஆம்ப்ரா விடுதியில் பொள்ளாச்சி நண்பர் சதீஷ் தன்னுடன் இரண்டு நண்பர்களை அழைத்து வந்திருந்தார். அவர்கள் செய்த அக்குறும்பு பற்றி விரைவில் எழுதுகிறேன்.  எனக்கு உடனடியாக லேப்டாப் வாங்க வேண்டும்.  அதற்குப் பணம் கேட்டு எழுதியிருந்தேன்.  யாரும் அனுப்பவில்லை.  ஒரே ஒரு நண்பர் 70 ரூபாய் அனுப்பி இருக்கிறார்.  இப்படியே ஒரு 500 பேர் அனுப்பி வைத்தால் விரைவில் வாங்கி விடுவேன் என்ற நம்பிக்கை துளிர்க்கிறது.

ஆனால் என்ன கொடுமை என்றால், என் நட்பை உபயோகப்படுத்தி ஒரு அயோக்கியன் பணம் சேகரித்துக் கொண்டிருக்கிறான். வாசகர் வட்டத்தில் இருந்தவன் தான்.  நேற்று சவேராவில் நான் சந்தித்த நண்பர் அவனுக்குத் தான் ஒரு லேப்டாப் வாங்கிக் கொடுத்ததாகச் சொன்னார்.  நல்லது.  எனக்குக் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். ஆனால் என் பெயரைச் சொல்பவனுக்கு வாங்கித் தருகிறார்கள்.  என்ன மனோபாவம் இது என்று புரியவில்லை.

பணம் அனுப்புவதற்கான வங்கி விபரம்:

Account holder’s Name: K. ARIVAZHAGAN

Axis Bank Account number: 911010057338057

Branch: Radhakrishnan Salai, Mylapore

IFSC UTIB0000006

MICR CODE: 600211002

***

ICICI account No. 602601 505045

Account holder’s name: K. ARIVAZHAGAN

T. Nagar branch.  chennai

IFSC Code Number: ICIC0006026

 

 

Comments are closed.