தற்கொலைக் குறுங்கதைகள் : அராத்து

நான் அராத்துவை ப்ரமோட் செய்வதாக சில புகார்கள் வந்தன.  உண்மையைச் சொல்கிறேன்.  நான் ப்ரமோட் செய்ய முயற்சித்த ஒரே நண்பர் மனோஜ் தான்.  ஆனால் “மௌனியே பதினஞ்சு கதைதான்  எழுதியிருக்கிறார். நான் பதினாறு கதை எழுதி விட்டேன்” என்று சொல்லி அடம் பிடிப்பவரிடம் என்னால் என்ன செய்ய முடியும்? ஆக, இறைவன் மனது வைத்தால் ஒழிய யாரும் யாரையும் ப்ரமோட் செய்ய முடியாது.   தருண் தேஜ்பாலின் ஒரு நாவல் 4 லட்சம் பிரதிகள் விற்றிருக்கிறது.  ஆனால் அவர் ஒரு நாவலாசிரியர் என்று இந்தியாவில் பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது.  இவ்வளவுக்கும் அவர் ஒரு சர்வதேச இலக்கிய விருதுக்கு நடுவராக இருக்கிறார்.  மேலும், புகழ் என்றால் என்ன என்பது பற்றி தீராக் காதலி நூலில் எழுதியிருக்கிறேன்.  தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே.டி.யின் வாழ்க்கையில் நடந்தது என்ன?  மகாபாரதம் போன்ற மாபெரும் காவியத்தில்தான் அப்படி நடக்கும்.  ஆனால் எம்.கே.டி. வாழ்வில் நடந்தது.  பணம் பூராவும் போயிற்று.  கண் பார்வை போயிற்று.  படம் ஓடவில்லை.  இவ்வளவும் ஜெயிலுக்குப் போய் விட்டு வந்த பின்பு.  இரண்டு ஆண்டுகளில் தமிழ் சினிமாவே மாறிப் போயிற்று.  கண் பார்வை இல்லாமல் அம்மன் கோவிலில் தன் வாழ்வின் போக்கைப் பற்றி அம்மனிடம் கேட்டபடி தரையில் அமர்ந்திருக்கிறார்.  அப்போது ஒரு பக்தர் யாரோ ஒரு குருட்டுப் பிச்சைக்காரன் என்று நினைத்து பாகவதருக்குக் காசு போடுகிறார்.  அந்த நாணயம் கோவில் தரையில் விழுந்த நங் என்ற சத்தம் பாகவதருக்கு மட்டும் கேட்கவில்லை.  தினமும் காலையில் எழுந்ததும் எனக்கும் கேட்கிறது.  அது எனக்கு சொன்ன வாழ்வியல் தத்துவங்கள் அநேகம்.  எனவே நண்பர்களே, யாரும் யாரையும் ப்ரமோட் செய்ய முடியாது.  திறமையும் இறையருளும் மட்டுமே ஒருவரை சாகாவரம் பெற்றவராக்குகிறது.  பாகவதரின் பாடல்கள் சாகாவரம் பெற்றவை.  அதேபோல்தான் அராத்துவின் தற்கொலைக் குறுங்கதைகளும்.  தற்கொலைக் குறுங்கதைகள் உயிர்மை மூலமாக நூலாக வரப் போவதாக நேற்று அராத்து சொன்னார்.  அது நூலாக வர வேண்டும்; அதுவும் உயிர்மையில்தான் வர வேண்டும் என்று ஆசைப்பட்டவன் நான்.  மனுஷ்ய புத்திரனுக்கு நன்றி.  புதிய எழுத்தாளர்களைக் கண்டு பிடித்து ப்ரமோட் செய்பவர் அவர் தான்.  ஒரு எழுத்தாளனுக்குப் பதிப்பாளன் முக்கியம்.  என்னுடைய புத்தகங்களை நானே பதிப்பித்துக் கொண்டிருந்த போது என் எழுத்தைப் பரவலாகக் கொண்டு சென்றவர் மனுஷ்ய புத்திரன்.  ஆனால் நான் தற்கொலைக் குறுங்கதைகளை ஒன்றிரண்டு தான் படித்திருக்கிறேன்.  தமிழுக்கு இந்த எழுத்து புதிது.  ஒரே ஒரு விஷயம்.  அராத்துவுக்கு ஒற்றெழுத்தின் மேலும் ரெமி மார்ட்டின் மேலும்  என்ன கோபமோ?    ஒற்றெழுத்தே வைக்க மாட்டேன் என்கிறார்.  ரெமி மார்ட்டின் பாட்டிலையும் உடைத்து விடுகிறார்.  சமீபத்தில் ஒரு முழு போத்தல் ரெமி மார்ட்டினை கால் தவறி உடைத்து விட்டார்.  இதோ ஒரு ஸாம்பிள், ரெமிக்கு அல்ல.  த.கு.வுக்கு:

தற்கொலை குறுங்கதைகள் – சுவாரசியம்

உலகம் அழிந்து விட்டது. கடவுள் டாஸ்மாக்கில் அமர்ந்திருந்தார்.

அங்கேயிருந்த குடிகாரர்களை பார்த்து சொன்னார், உலகம் அழிந்து விட்டது . இந்த டாஸ்மாக்கும் இங்கே இருக்கும் நீங்கள் மட்டும்தான் மிச்சம் .

கடவுள் என்பதால் அனைவருக்கும் கடைசியாக கடவுள் நம்பிக்கையை அவர் விதைத்து விட்டதால் , யாருக்கும் அவர்மேல் சந்தேகமில்லை.

அதானால் ஒருவன் கத்தினான் கடவுளுக்கு ஒரு குவாட்டர் சொல்லு.

கடவுள் சிரித்தார் . எனக்கு குவாட்டரா? எனக்கு எவ்வளவு குடித்தாலும் போதை ஏறாது . நீங்கள் குடிக்க குடிக்கத்தான் என் கணக்கு தப்பி விடும் என்றார்.

சாமி உங்க கிட்ட நிறைய நேரம் பேசணும் , இங்க இருக்கும் சரக்கு தீந்துடும் . ஏதாவது ஏற்பாடு பண்ணுங்க என்றான் ஒரு பக்தன்.

ஒருவன் சில்லி சிக்கன் ஆர்டர் செய்தான் கடவுளுக்கு. ஒருவன் கடுப்பாகி , சாமிடா ,என்ற படி வெஜிடபிள் சாலட் ஆர்டர் செய்தான்.

கடவுள் சொன்னார் , இந்த டாஸ்மாக்கையும், உங்களையும் இன்னும் சிறிது நேரத்தில் அழித்தாக வேண்டும் . கடைசியாக என்ன கேட்க வேண்டுமோ கேளுங்கள் என்றார்.

சாமி எங்களை சாவடிங்க சாமி , சொர்கத்துலயாவது சில்லிட் பீர் கெடைக்குமா சாமி என்றபடி வாந்தி எடுத்தான் சாபத்தால் மானிடனாக இருக்கும் இந்திரன்.dissertationcheap.com

Comments are closed.