டிசம்பரில் இலங்கைப் பயணம்

டிசம்பர் 17-ஆம் தேதி நானும் வாசகர் வட்ட நண்பர்கள் சிலரும் இலங்கை செல்லலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன்.  முதலில் சென்னையிலிருந்து மோட்டார் சைக்கிளிலேயே கோவா செல்லலாம் என்ற திட்டம் இருந்தது.  ஆனால் ஏற்கனவே ஒருமுறை கோவா சென்றிருப்பதால் கோவா – மோட்டார் சைக்கிள் பயணத் திட்டத்தை டிசம்பருக்குப் பிறகு வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.  டிஸம்பர் 17 மதியம் கொழும்புவுக்கு விமானம்.  டிசம்பர் 18 என் பிறந்த நாள் என்பதால் டிசம்பர் 17 கிளம்பலாம் என்று திட்டம். 

வாசகர் வட்ட நண்பர்கள் மட்டுமே வரலாம்.  புதிய நண்பர்கள் வர வேண்டாம்.  இமயமலைக்குப் புதியவர்களை அழைத்துப் போக வேண்டாம் என்று அராத்து சொன்னார்.  அராத்து சொன்னால் யாருமே கேட்க மாட்டார்கள்.  நான் மட்டும் கேட்பேன்.  என்னவோ என் போதாத காலம், அப்போது நானும் மற்றவர்களைப் போல் அவர் சொல்வதைக் கேட்காமல் புதியவர்களாக இருந்தாலும் பரவாயில்லை என்று கோவையிலிருந்து இரண்டு புதியவர்களை சேர்த்துக் கொண்டேன்.  அவர்கள் இருவரும் செய்த காரியங்களைப் பட்டியலிட இங்கே நேரமில்லை.  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துன்பமாகக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.  இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், அவர்கள் எங்களைத் துன்புறுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை.  அதனால் ஒருநாள் மிகவும் கடினமாக அவர்களிடம் சொன்னேன்.  அப்படியும் கேட்கவில்லை.  உதாரணமாக, எங்களிடம் உள்ள தொலைபேசிகள் எதுவும் வேலை செய்யாது.  எங்கள் உறவுகளிடம் நான்கு நாட்களாகப் பேசியிருக்க மாட்டோம்.  இந்த கோவை நண்பர் மட்டும் சாரதியின் லோக்கல் ஃபோனை வாங்கிப் பேசிக் கொண்டிருப்பார்.  அவர் பேசுவதால் உங்களுக்கு  என்ன பிரச்சினை என்கிறீர்களா?  கோவை நண்பர் பைக்கில் வருவார்.  அவர் சாரதியின் ஃபோனில் பேசி முடிக்கும் வரை நாங்கள் 10 பேர் வேனில் மூடர்களைப் போல் உட்கார்ந்திருப்போம். 

ஒருநாள் கோவை நண்பர்கள் இருவரும் சார்ச்சுவில் காணாமல் போய் விட்டார்கள்.  இரவு எட்டு மணிக்கே எல்லோரும் கூடாரம் வந்து விட வேண்டும் என்பது உத்தரவு.  இருவரையும் ஒன்பதரை வரை காணவில்லை.  அங்கேயே மூச்சே விட முடியாத நிலை.  பிராணவாயு மிகவும் கம்மி.  இருவரையும் தேடி எங்கள் சாரதி வேனை எடுத்துக் கொண்டு போய் கண்டு பிடித்துக் கொண்டு வந்து சேர்த்தார்.  ஃபோன் செய்வதற்காக ராணுவ முகாம் வரை சென்றிருந்தார்களாம். 

இன்னொரு மகா பெரிய துன்பம்.  காசு கொடுக்கவில்லை.  கொஞ்சம் அல்ல.  18 ஆயிரம்.  அதை அராத்து தான் கொடுத்தார்.  நாளை தருகிறேன், நாளை மறுநாள் தருகிறேன் என்று டிமிக்கி கொடுத்து விட்டு ஊருக்கும் திரும்பி விட்டார்கள்.  சொன்னபடி அராத்துவுக்குப் பணம் வரவில்லை.  மறுபடியும் நாளை, நாளை மறுநாள், அடுத்த மாதம் என்ற சால்ஜாப்புகளே பதிலாக வந்ததும், அராத்து செம கடுப்புடன் சரி, ஐந்து ஆண்டுகளுக்குள் கொடுங்கள் என்று சொல்லி ஃபோனை வைத்து விடுகிறார்.  ஆனால் அடுத்த மாதமும் பணம் வரவில்லை.  அராத்து ஃபோன் செய்து கேட்டால், இது என்ன அராத்து அராஜகம் செய்கிறீர்கள், நீங்கள்தானே ஐந்து ஆண்டுகளுக்குள் அனுப்பச் சொன்னீர்கள், இப்போது என்னைக் குறை சொல்கிறீர்கள் என்று ஏறு ஏறு என்று ஏறியிருக்கிறார் அன்பர். 

பிறகு அராத்து கொஞ்சம் தணிந்து பேசி, சரி, போனால் போகிறது, மாதாமாதம் ஐந்து ஆயிரம் அனுப்புகிறேன், அவ்வளவுதான் என்னால் முடியும் என்று சொல்லி ஐந்து ஆயிரம் அனுப்பியிருக்கிறார்.  அராத்து பேச்சைக் கேட்காமல் புதியவர்களை சேர்த்துக் கொண்ட தப்புக்காக என்னுடைய பிஞ்ச செருப்பை எடுத்து என்னையே நாலு அடி அடித்துக் கொண்டேன். 

இன்னொரு வேடிக்கை என்னவென்றால், ஷிம்லாவில் வைத்து கோவை நண்பர் (வயது 23 தான் இருக்கும், இளைஞர்) தன் அம்மாவிடம் ஃபோனில் பேசிக் கொண்டிருக்கும் போது, என் அனுமதி இல்லாமல், ஃபோனை என்னிடம் கொடுத்து விட்டார்.  அந்த அம்மா என்னிடம், “சார், நீங்க பெரிய எழுத்தாளர், உங்களை நம்பித்தான் என் மகனை அனுப்பியிருக்கேன்.  கவனமா பார்த்துக்கோங்க” என்றார்.  நானும் அடிவயிற்றில் பீதி கிளம்ப, ஓ, ரொம்ப கவனமா பார்த்துக்கிறேன், கொஞ்சமும் கவலை வேண்டாம், அவர் என் பொறுப்பில் இருக்கிறார் என்று பொய் சொல்ல வேண்டிய அவசியம் நேர்ந்து விட்டது. 

என் அனுமதி இல்லாமல் இப்படி ஃபோனைக் கொடுத்ததற்காக அந்த நிமிடமே அவரை எங்கள் குழுவிலிருந்து விரட்டி அடித்திருக்க வேண்டும்.  செய்யாமல் போனது என் தப்பு.  அவரும் அவர் நண்பரும் காணாமல் போன அன்று இரவு அந்தத் தம்பியின் அம்மா தான் என் ஞாபகத்துக்கு வந்தார்.  என்ன மாதிரியெல்லாம் சித்ரவதை செய்கிறார்கள் பாருங்கள்!

இந்தக் கொடுமையில் என்னுடைய உயிர் நண்பர் சதீஷ் (திருப்பூர்) நாங்கள் திருப்பூர் பக்கத்தில் ஆம்பராம்பாளையம் சென்றிருந்த போது தன்னுடைய இரண்டு நண்பர்களை என் அனுமதி இல்லாமல் அழைத்துக் கொண்டு வந்து விட்டார்.  அவர்களுக்கு என் பெயர் மட்டுமே தெரியும்.  இருவரும் சதீஷைப் போலவே தொழிலதிபர்கள்.  இளைஞர்கள்.  ஓசியில் வந்து ஓசியில் தின்று விட்டு ஓசியில் தங்கி விட்டு சதீஷோடு கிளம்பிப் போய் விட்டார்கள்.  எங்கள் கணக்கில் சதீஷ் மட்டுமே இருந்ததால் அந்த எண்ணிக்கையில் மட்டுமே அறை போட்டிருந்தார் விஜியின் உறவினர் நாகு. இப்போது சதீஷோடு புதிதாக இரண்டு பேர் வந்து அதுவும் என் அறையிலேயே தங்கி விட்டதால் புதிதாக இன்னொரு அறை எடுக்க வேண்டி வந்தது.  அதற்குத் தனியாக ஐந்து ஆறு ஆயிரம் ரூபாய்.  அதை விடக் கொடுமை, அந்த இரண்டு அன்பர்களும் ஒரு வேலை செய்யவில்லை.  ஈரோடு நண்பர் ரமேஷ் தான் எல்லோருக்கும் சமைப்பார், எல்லா காய்கறிகளையும் நறுக்கி, பழங்களை நறுக்கி ஸலாத் செய்வார்.  அந்த இரண்டு அன்பர்களும் —————————– மாதிரி தின்று விட்டு தின்ற தட்டை எடுத்துக் கூட வைக்க மாட்டார்கள்.  அதை அராத்துவோ அல்லது வேறு யாராவது ஒரு கூமுட்டையோ எடுத்து வைக்க வேண்டும். 

ஒருநாள் என்னோடு வாக்கிங் வந்த அந்த இரண்டு அன்பர்களில் ஒருவர் என்னிடம் வந்து நிறைய ஹெல்த் டிப்ஸ் கொடுத்தார்.  நான் எதுவும் கேட்காமலேயே.  அவராகவே வந்து.  அந்த டிப்ஸில் தினமும் இரவில் கடுக்காய் சாப்பிட்டால் நன்றாக மலம் போகும். செவுளிலேயே ஒன்று கொடுக்க வேண்டும் போல் இருந்தது. ஆனால் அவர்கள் உடம்பில் என்னை விட ஐந்து மடங்கு அதிக கறி இருந்தது.  மேலும் வயலன்ஸ் கூடாது என்று முடிவு செய்திருக்கிறேன்.  அதனால் வெறுமனே புன்முறுவல் மட்டும் செய்து வைத்தேன். 

இன்னும் ஏகப்பட்ட அராஜகங்கள் நடந்தன.  சதீஷ் தான் காரணம்.  இப்படி சதீஷ் ஒருமுறை செய்யவில்லை.  மூன்று முறை செய்திருக்கிறார்.  இவ்வளவுக்கும் சதீஷ் எனக்கு அராத்து அளவுக்கு வேண்டியவர்.  இப்போது இதைப் படித்து வருந்துவார்.  என்ன செய்வது?  நான்தான் நூறு முறை எழுதியிருக்கிறேனே, சம்பந்தம் இல்லாதவர்களை அழைத்து வராதீர்கள் என்று?  ஏன் இப்படி அழைத்து வந்து துன்பம் கொடுக்கிறீர்கள்? 

எனவே, இலங்கைப் பயணத்துக்கு வாசகர் வட்ட நண்பர்கள் மட்டுமே வரலாம்.  அல்லது, என்னோடு நேர்ப் பழக்கம் உள்ள நண்பர்கள் வரலாம். 

இங்கே இன்னொரு முக்கியமான விஷயத்தைச் சேர்க்க வேண்டும். சமீபத்திய ஏற்காடு பயணத்துக்கு மனோ வரவில்லை.  ஆனால் தன்னுடைய இரண்டு நண்பர்கள் வருவதாக சொன்னார்.  நாங்கள் முதலில் சற்று பயந்தோம்.  ஐயோ, புதியவர்கள் ஆயிற்றே, என்ன ஆகப் போகிறதோ என்று. இதனால் பழகிய நண்பர்கள் என்றால் நல்லவர்கள், புதியவர்கள் கெட்டவர்கள் என்று அர்த்தம் அல்ல.  பழகியவர்கள் செய்யும் அராஜகங்கள் என்னென்ன, அவர்கள் எப்படியெல்லாம் துன்பம் கொடுப்பார்கள்; நாம் அவர்களுக்கு என்னென்னவெல்லாம் துன்பம் கொடுப்போம் என்று ஒருவருக்கொருவர் தெரிந்திருக்கும். 

ஒரு உதாரணம் சொல்கிறேன்.  ஒருமுறை வெளியூரிலிருந்து அராத்துவும் நானும் ரயிலில் பகலில் வந்து கொண்டிருந்தோம்.  அவர் தன்னுடைய ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆப்பிள் லேப்டாப்பை எங்கள் இருக்கையின் எதிரே உள்ள பலகையில் வைத்து வேலை செய்து கொண்டிருந்தார்.  திடீரென்று எழுந்து நான் கொஞ்சம் பாத்ரூம் போய் வருகிறேன் என்று கிளம்பிப் போனார்.  அவர் வருவதற்குள் நாமும் போய் வரலாம், அது கொஞ்சம் சொகுசு ரயில் என்பதால் திருட்டு பயம் இல்லை என்று போய் வந்தேன்.  திரும்பி வந்து அமர்ந்த போது அவரும் இருந்தார்.  கொஞ்சம் வித்தியாசமான குரலில், “எங்கே போனீங்க?” என்று கேட்டார்.   ரெஸ்ட்ரூம் என்றேன்.  நான் வந்த பிறகு போய் இருக்கலாம்ல? என்றார்.  ஏன், என்ன விஷயம் என்றேன் ஒன்றும் புரியாமல்.  அவர் வந்து பார்க்கும் போது பலகையிலிருந்து லேப்டாப் கீழே விழுந்து கிடந்ததாம்.  பலகை ஆடியிருக்கிறது.  நான் அமர்ந்திருந்தால் கீழே விழாமல் அது என் மடியில்தான் விழுந்திருக்கும். 

என் அதிர்ஷ்டம், லேப்டாப் வேலை செய்தது.  இல்லாவிட்டால் ஒன்றரை லட்சம் பழுத்திருக்கும்.  இனிமேல் இவரோடு வந்தால் ஒன்றுக்கு இருக்கப் போகும் போது கூட சூதனமா பார்த்துதான் நடந்துக்கணும் போல என்று நினைத்துக் கொண்டேன். அதேபோல் அவரும், இனிமேல் சாருவோடு வரும் போது ஒரு ஆள் துணைக்கு இருக்கிறார் என்று சத்தியமா நினைக்கக் கூடாது என்று முடிவு செய்திருப்பார்.

சரி, மனோவின் நண்பர்களுக்கு வருகிறேன்.  வந்த இரண்டு நண்பர்களும் வரும் போதே தண்ணீர், பழம், காய்கறி என்று எல்லாமே வாங்கி வந்திருந்தனர்.  அவர்கள் தங்கியதற்கான பணத்தையும் கொடுத்தனர்.  அது மட்டும் அல்லாமல், மறுநாள் கிளம்பும் போது ஏற்காடு மார்க்கெட்டுக்குப் போய் மறுபடியும் தண்ணீர், காய், பழம் என்று வாங்கி வைத்து விட்டுக் கிளம்பினர்.  ஊருக்குத்தானே போகிறோம், இனிமேல் நமக்கென்ன என்று கையை வீசிக் கொண்டு கிளம்பி விடவில்லை.  இந்தப் பொறுப்பும் ஒழுங்கும் (Discipline and responsibility) அவர்கள் இருவருக்கும் இருந்தது.  அப்படிப்பட்ட நண்பர்கள் புதியவர்களாக இருந்தாலும் பரவாயில்லை.

நாம் யாருக்கும் தொந்தரவாக இருக்கக் கூடாது என்ற அடிப்படை நாகரிகத்தைக் கூட கடைப்பிடிக்காதவர்கள் என்னை அணுக வேண்டாம். 

இலங்கைப் பயணத்தில் எங்களுக்குத் திட்டமிட, உதவி செய்ய இலங்கை நண்பர்கள் யாரேனும் முன்வந்தால் நல்லது. உதவி என்றால், சில ஆலோசனைகள் கொடுத்தால் கூடப் போதும்.  இலங்கையில் என்னைச் சந்திக்க விரும்பும் நண்பர்களும் என்னைத் தொடர்பு கொள்ளலாம். இலங்கையில் ஒரு வாரம் இருப்பேன்.

charu.nivedita.india@gmail.com  

Comments are closed.