ராஸ லீலா – முன் வெளியீட்டுத் திட்டம்

ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு எக்ஸைல் நாவல் வெளிவந்த போது முதல் பிரதியை ஒரு லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார் ஒரு நெருங்கிய நண்பர்.  முதல் பிரதி என்றால் அந்தக் குறிப்பிட்ட பிரதியில் முதல் பிரதி என்று போட்டு கையெழுத்துப் போட்டுத் தருவேன்.  இரண்டாவது பிரதியை மற்றொரு நெருங்கிய நண்பர் 50,000 ரூபாய்க்கு பெற்றுக் கொண்டார்.  அந்தப் பிரதிகள் எக்ஸைல் வெளியீட்டு விழாவில் விழா மேடையில் அந்த நண்பர்களை அழைத்து அவர்களுக்கு வழங்கப்பட்டது.  மற்றும் பத்து நண்பர்கள் நூலை பத்தாயிரம் இருபதாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிக் கொண்டார்கள்.  இந்தப் பணத்தில்தான் எக்ஸைல் வெளியீட்டு விழா நடந்தது.  மொத்த செலவு நாலு லட்சம்.  பிரம்மாண்டமான விழா.  அப்போதுதான் யோசித்தேன், இந்த நாலு லட்சத்தில் சீலே போய் வந்திருக்கலாமே என்று.  அப்போதே இனி வெளியீட்டு விழாக்கள் நடத்த வேண்டாம் என்றும் முடிவு செய்தேன்.

வரும் ஜூன் முதல் வாரம் சீலே, பெரூ, ப்ரஸீல் ஆகிய நாடுகளுக்கு ஒரு மாதப் பயணம் மேற்கொள்ளலாம் என்று இருந்தேன்.  ஆனால் ஜூன் 16-ஆம் தேதி கோவையில் கண்ணதாசன் விருது வழங்கும் விழா இருப்பதால் பயணத்தை ஜூன் 25க்கு ஒத்திப் போட்டு விட்டேன்.  திட்டமிடப்பட்ட கம்பெனி டூர் என்பதால் வீஸாவுக்குப் பிரச்சினை இல்லை.  அமெரிக்க வீசாதான் சொதப்பி விட்டது.  அவ்வளவு தூரம் போகிறோம், அமெரிக்காவுக்கும் போகலாமே என்று நினைத்தேன்.  ஏதாவது தமிழ்ச் சங்க அழைப்பைக் காட்டியிருந்தால் வீசா கிடைத்திருக்கும்.  போகட்டும்.

இந்த நிலையில் ராஸ லீலா மறு வெளியீடு வர உள்ளது.  அதிக பட்சம் ஒரு மாதம்.  பிழை திருத்தம் முக்கால்வாசி முடிந்து விட்டது.  நாளை முடித்து டைப் செட்டிங்குக்குக் கொடுத்து விடுவேன்.  நாவல் hard bound நூலாக வரும்.  இதில் ஒரு 50 பிரதிகளை தனியாகப் பிரித்துக் கொள்ளலாம் என்று இருக்கிறேன்.  இதற்கும் பதிப்பகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  இதில் வரும் பணத்தை என் சீலே பயணத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இருக்கிறேன்.  விபரம் என்னவென்றால், இந்த 50 பிரதிகளும் தனித்தனியாகத் தயாரிக்கப்படும்.  இதை வாங்குபவர்களோடு நான் புகைப்படம் எடுத்துக் கொண்டு அந்தப் புகைப்படம் நூலின் பின்னட்டையில் அச்சிடப்படும்.  சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்.  ருபேஷ் என்ற நண்பர் வாங்குகிறார் என்றால் ருபேஷும் நானும் சேர்ந்த புகைப்படம் ருபேஷின் பிரதியின் பின்னட்டையில் இருக்கும்.  இப்படி யார் யார் வாங்குகிறாரோ அவரவரும் நானும் சேர்ந்த புகைப்படம் அந்தந்தப் பிரதியின் பின்னட்டையில் இருக்கும்.  அதாவது, ஒவ்வொரு பிரதியின் பின்னட்டையும் அந்தப் பிரதியை வாங்கியிருப்பவரும் நானும் இணைந்து நிற்கும் புகைப்படத்தோடு இருக்கும்.  அதோடு, அந்தந்த நூலை வாங்குபவரின் பெயரும் நூலின் முதல் பக்கத்தில் அச்சிடப்பட்டு என் கையெழுத்தோடு வழங்கப்படும்.  இந்த Collector’s copyயின்  விலை பத்தாயிரம் ரூபாய்.  கொடுக்கலாம் என்று நினைப்பவர்கள் மட்டுமே இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

தொடர்பு கொள்ள என் மின்னஞ்சல் முகவரி:  charu.nivedita.india@gmail.com