இஸ்லாமிய வெறுப்பைத் தவிர அநேகமாக மற்ற எல்லா விஷயங்களிலும் மிஷல் வெல்பெக்குக்கும் (Michel Houllebecq) எனக்கும் ஒத்த தன்மைகளைப் பார்க்கலாம். அதில் ஒன்று செக்ஸ். இன்னமும் அவரை செக்ஸ் எழுத்தாளர் என்றே பெரும்பாலோர் அழைக்கின்றனர். அவரும் அதை ஒத்துக் கொள்ளவே செய்கிறார். ஐரோப்பாவில் ஒரு எழுத்தாளர் செக்ஸை எழுதுவதைத் தவிர்க்கவே முடியாது என்கிறார். இங்கே (ஐரோப்பாவில்) சிலருக்கு செக்ஸ் தினமும் கிடைக்கிறது. ஆனால் பலருக்கோ அவர்கள் வாழ்நாளிலேயே ஐந்தாறு தடவைகள்தான் கிடைக்கிறது. சிலருக்கு வாழ்வில் ஒருமுறை கூட கிடைப்பதில்லை. சிலர் டஜன் கணக்கான பெண்களோடு செக்ஸ் உறவு கொள்கிறார்கள். ஆனால் பலருக்கு ஒரு பெண்ணோடு கூட உறவு கொள்ள வாய்ப்பு கிடைப்பதில்லை. நிலைமை இங்கே இப்படித்தான் இருக்கிறது. இது மிஷல் வெல்பெக். நான் பார்த்த ஏராளமான ஐரோப்பிய சினிமாக்களும் வெல்பெக் சொல்வது உண்மைதான் என்று நினைக்க வைக்கிறது. அமெரிக்காவில் வாழ்ந்த என்னுடைய இன்னொரு சகாவான சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கியின் போஸ்ட்டாஃபீஸ் நாவலின் ஆரம்பமே இப்படித்தானே? நான் ஒரு பெண்ணோடு செக்ஸ் வைத்து ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. அதனால்தான் போஸ்ட்மேனாகச் சேர்ந்தேன். போஸ்ட்மேனாக இருந்தால் பெண்களைப் போடலாம் என்று சொன்னார்கள். மதிய வேளைகளில் பெண்கள் வீட்டில் தனியாக இருப்பார்கள். அப்போது தபால் கொடுக்கப் போவது போல் போய் அவர்களிடம் நைச்சியமாகப் பேசி சிநேகம் பிடித்துக் கொள்ளலாம் என்பதே என் திட்டம். ஆனால் எதார்த்தமோ வேறு மாதிரி இருந்தது. ஒரு பெண்ணோடு கூட பேச முடியவில்லை. ஆம். பேசக் கூட முடியவில்லை. போஸ்ட்மேனாகச் சேர்ந்து என் செக்ஸ் வறுமை அதிகமாகத்தான் ஆயிற்று. இது சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கி. அமெரிக்கா.
மிஷல் வெல்பெக் செக்ஸை எழுதுவது மட்டும் அல்ல; பெண்களோடும் பல பிரச்சினைகள் அவருக்கு. ஒருமுறை டைம்ஸ் பத்திரிகை நிருபர் (பெண்) லண்டனிலிருந்து அவரைப் பேட்டி எடுக்க வந்த போது பாதி பேட்டியில் அடுத்து நீ என்னோடு படுத்தால்தான் பேட்டி கொடுப்பேன் என்று சொன்னார். அந்தப் பெண் மிரண்டு போய் ஏதோ சொல்ல, தப்பாக நினைக்காதே, என் மனைவியும் நீயும் நானும் த்ரீஸம் போடுவோம் என்றாராம். இதுவும் அந்தப் பேட்டியிலேயே வந்திருந்தது. ஏதாவது விருது கொடுத்தால் – மிஷல் வெல்பெக் வாங்காத விருதே ஃப்ரான்ஸில் எதுவும் இல்லை – விருது வழங்கும் விழாவுக்கு நிறைபோதையுடன் தள்ளாடியபடியேதான் செல்வது வெல்பெக்கின் வழக்கம். அப்படிப்பட்ட மிஷல் வெல்பெக்குக்கு ஃப்ரான்ஸ் அரசாங்கம் ஃப்ரான்ஸின் மிகப் பெரிய விருதான Légion d’honneur ஐ வழங்கியிருக்கிறது. இந்தியாவின் பாரத ரத்னா மாதிரி. எழுத்தாளனை கௌரவிப்பது என்றால் இதுதான். இந்தியாவிலோ கார்ப்பரேட் சாமியார்களுக்கும் சினிமா நடிகர்களுக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கும்தான் இந்த மரியாதை கிடைக்கிறது. எழுத்தாளன் சும்மா வெத்து.
வெல்பெக் பற்றிய மற்றொரு விமர்சனம், அவருக்குக் கற்பனைத் திறனே இல்லை. தன் வாழ்க்கையை மட்டுமே எழுதுகிறார். ஒரே மாதிரியான கதைகளையும் சம்பவங்களையுமே சொல்கிறார். ஒரே விதமான மொழியைத்தான் பயன்படுத்துகிறார். சொன்னதையேதான் திருப்பித் திருப்பிச் சொல்கிறார். எப்போதும் மனிதர்களைத் திட்டுகிறார்.
இதே குற்றச்சாட்டுகள் என் மீதும் இருக்கின்றன. ஒரே வித்தியாசம், அங்கே வெல்பெக்கின் மீது இவை குற்றச்சாட்டுகளாக விழுவதில்லை. வெல்பெக்கின் எழுத்து இன்ன மாதிரி இருக்கும் என்ற குணாதிசயமாகச் சொல்லப்படுகிறது. இங்கே அது குற்றச்சாட்டு. ஆனால் வாஸ்தவத்தில் தி. ஜானகிராமன், க.நா.சு., சி.சு. செல்லப்பா, ந.சிதம்பர சுப்ரமணியன், ஆதவன், கோபிகிருஷ்ணன் – எல்லோரையும் விட முக்கியமாக நகுலன் – எல்லோருமே தங்கள் சுய அனுபவத்தைத்தான் தங்கள் ஆயுள் முழுவதுமே எழுதினார்கள். இங்கே பாஸ்கரன் என்ற புகழ்பெற்ற ஓவியர் இருக்கிறார். ஓவியக் கல்லூரியின் பிரின்ஸிபாலாக இருந்தார். தன் ஆயுள் முழுவதுமே பூனைகளை மட்டுமே வரைந்து கொண்டிருக்கிறார். பூனை பாஸ்கரன் என்றெல்லாம் சொல்வார்களே தவிர அவரிடம் போய் யாரும் ஏன் நீங்கள் யானையையும் வரையுங்களேன் என்று சொன்னதில்லை. எழுத்தாளனிடம் மட்டுமே வந்து நீங்கள் இன்னன்னதை எழுதலாம், இன்னன்னதை எழுதக் கூடாது என்று சொல்கிறார்கள்.
இதெல்லாம் எனக்கு இப்போது ஞாபகம் வரக் காரணம், நேற்று எனக்கு வந்த ஒரு கடிதம்.
மதிப்பிற்குரிய எழுத்தாளரே.
பலநாட்களாக உலகில் அவ்வப்போது நிகழும் சம்பவங்களையும் அரசியலில் ரஜினி கமல் உளறல்களை கூட சமூகத்தின் முன் தோலுரித்துக் காட்டும் நீங்கள் இன்னும் ஸ்ரீலங்கா குண்டு வெடிப்பு விஷயத்தில் மௌனம் காப்பது என்னை ஆச்சர்யபடுத்துகிறது. விரைவில் உங்கள் அவதானிப்பை வாசிக்க ஆவலாய் உள்ளேன்.
*** ***
இது போன்ற கடிதங்களை அப்படி அப்படியே நான் ரத்து செய்து விடுவது வழக்கம். ஆனால் இந்தக் கடிதத்தை அப்படிச் செய்யாததற்குக் காரணம், இதில் தெரியும் மரியாதை. அதனாலேயே இதற்கு பதில் எழுதத் துணிந்தேன். முதலில் எழுத்தாளரே என்ற விளிப்பு. யாரையும் ஒருவர் இப்படி அழைப்பது மரியாதை இல்லை. அதாவது மரியாதை என்று நினைத்துக் கொண்டு மரியாதை தவறி நடக்கிறோம். எழுத்தாளரை எழுத்தாளர் என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பது? கூடாது. தவறு. இப்படி யோசித்துப் பாருங்கள். ரஜினிக்கு எழுதும் போது மதிப்புக்குரிய நடிகரே என்றா எழுதுகிறோம். பெயரைக் குறிப்பிட்டு எழுதுங்கள். அது மரியாதையாக உங்களுக்குத் தோன்றவில்லையெனில் திரு போட்டுக் கொள்ளுங்கள். அவர்களே போடுங்கள். அல்லது இருக்கவே இருக்கிறது சார். இத்தனையையும் விட்டுவிட்டு எழுத்தாளரே என்றால்? ரமணரிடம் போய் மதிப்புக்குரிய துறவியே என்றா அழைப்பீர்கள்? எழுத்தாளரே என்று அழைக்கும் போது அதில் ஒரு எகத்தாளம் தெரிகிறது. அடுத்து ஸ்ரீலங்கா துயரம் பற்றி நான் ஏற்கனவே எழுதி விட்டேன். அதை நண்பர் கவனிக்கவில்லை; அல்லது கவனித்தாலும் அது ஸ்ரீலங்கா பற்றியது அல்ல என்று நினைத்து விட்டார். அது என் தவறு அல்ல. அக்கட்டுரையின் இணைப்பு கீழே:
http://charuonline.com/blog/?p=7680
மேலும் ஒரு முக்கியமான விஷயம். இதன் காரணமாகவே இந்த பதிலை எழுதிக் கொண்டிருக்கிறேன். ஒரு எழுத்தாளன் தன்னைச் சுற்றி நடக்கும் அத்தனை விஷயங்களைப் பற்றியும் கருத்துச் சொல்லியே ஆக வேண்டுமா? தமிழ்நாட்டில் ஒரு ஊரில் தலித்துகளின் வீடு புகுந்து தாக்கியிருக்கிறார்கள் ஒரு அரசியல் கட்சித் தொண்டர்கள். அதைப் பற்றிக் கூடத்தான் நான் கருத்து சொல்லவில்லை? கருத்து சொல்ல வேண்டுமானால் 24 x 7 நியூஸ் சேனல்களைப் போல் நாள் பூராவும் கருத்து சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியதுதான். அத்தனை அயோக்கியத்தனங்கள் இந்தத் துணைக்கண்டத்தில் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. ஸ்ரீலங்கா துயரத்தில் கருத்து சொல்ல வேண்டியவர்கள் இஸ்லாமியர்கள். அவர்களில் சிலர் கருத்தும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பான்மையோர் மௌனம்தான். இந்தியா, பாங்க்ளாதேஷ், இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் வாழ்வதே ஒரு பெரும் அவலம். இதில் எதைப் பற்றிக் கருத்து சொல்வது? மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கோ, கனடாவுக்கோ, ஆஸ்த்ரேலியா, நியூசிலண்ட் போன்ற நாடுகளுக்கோ போய் வாழ்வதுதான் உசிதம். இந்தியத் துணைகண்டத்தில் வாழ்வது ஒரு சாபம்.
***
www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன். ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள். நான் paypal-இல் இருக்கிறேன். கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. charu.nivedita.india@gmail.com
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார். அவர் வங்கியில் கேட்கிறார்களாம். Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai