சிறிய வயதில் அம்புலி மாமா பத்திரிகையை விரும்பிப் படிப்பேன். அதிலும் முருங்கை மரத்தில் ஏறும் வேதாளமும் அதைப் பிடித்துத் தன் தோளில் போட்டுக் கொள்ளும் பட்டி விக்ரமாதித்தனும் இன்னமும் அப்படியே ஞாபகத்தில் தங்கி இருக்கின்றனர். அந்தக் கதை இன்று ஞாபகம் வந்தது.
தமிழ்ப் பத்திரிகைகள் அனைத்துமே என்னை black list செய்து வைத்திருப்பது போல் தோன்றுகிறது. ஒருமுறை ஒரு தமிழ்நாட்டுப் பிரச்சினை பற்றி சென்னையின் பிரபலமான ஒரு ஆங்கிலப் பத்திரிகைக்கு ஒரு கட்டுரை அனுப்பினேன். ஒரு வாரம் ஆயிற்று. கிணற்றில் போட்ட கல்லாய் பதிலே இல்லை. பிறகு நானே மெயில் அனுப்பிக் கேட்டேன். இதோ கேட்டு சொல்கிறேன் என்றார் என் நண்பர். மறுநாள் அவரிடமிருந்து மெயில். பிரசுரிக்க இயலவில்லையாம். அதே கட்டுரையை உடனடியாக லண்டனுக்கு அனுப்பினேன். மறுநாளே பதில் வந்தது. அந்த வாரமே அந்தப் பத்திரிகையில் பிரசுரமும் ஆகி விட்டது.
கடந்த ஆறு மாதமாக ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதவில்லை. எக்ஸைல் வேலை. அந்த வேலை ஓரளவுக்கு முடிந்து விட்டது. இந்த நிலையில் ஒரு நண்பர் எங்கள் பத்திரிகைக்கு எழுதுங்களேன் என்றார். சரி, நண்பராயிற்றே என்று எழுதி அனுப்பினேன். ஒரு நாள் ஆயிற்று. இரண்டு நாள் ஆயிற்று. மூன்று நாள் ஆயிற்று. எந்தத் தகவலும் இல்லை. நண்பருக்கு ஃபோன் போட்டேன். இருங்கள், கேட்டு சொல்கிறேன் என்றார். கொஞ்ச நேரத்தில் போன் செய்து தவறாக நினைக்காதீர்கள்; நீங்களே எடிட்டருக்கு அனுப்பி விடுவது நல்லது என்றார். எனக்கு இது போன்ற விஷயத்தில் ஈகோ மண்ணாங்கட்டி எல்லாம் எதுவும் கிடையாது. எடிட்டருக்கு அனுப்பினேன். ஒரு நாள் போனது. இரண்டு நாள் போனது. மூன்று நாள் போனது. கிணற்றில் போட்ட கல். எந்தத் தகவலும் இல்லாததால் நானே எடிட்டருக்குக் கடிதம் எழுதிக் கேட்டேன். மறுநாள் பதில் வந்தது. ”வரும் சார். சற்று காத்திருங்கள்.” இரண்டு வாரம் ஆயிற்று. ஒரு தகவலும் இல்லை. கட்டுரையும் வரவில்லை. அந்தப் பிரச்சினையும் இப்போது மக்களின் கவனத்திலிருந்து விலகி விட்டது.
சரி, பழையபடி லண்டன் பத்திரிகைக்கும் தில்லி பத்திரிகைகளுக்கும் எழுதலாம் என்று நேற்று ஒரு கட்டுரையை எழுதி இன்று காலை அனுப்பினேன். அனுப்பும் போது மணி 12.59. எடிட்டரிடமிருந்து ஏழே நிமிடத்தில் பதில் வந்தது. ”கட்டுரையை எடிட் செய்து இன்று மாலை அனுப்புகிறோம். ஓரிரு நாளில் வெளிவரும்.”
தமிழ்நாட்டில் எழுத்தாளர்களை எப்படி நடத்துகிறார்கள் என்று மேற்கண்ட சம்பவத்திலிருந்து உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன். எனக்கு மட்டும் அல்ல. எல்லா எழுத்தாளர்களின் நிலையும் இதுதான். என் நெருங்கிய நண்பர் ஒருவரிடம் “அந்தப் பத்திரிகையில் எல்லோரும் பத்தி எழுதுகிறார்கள். 18 வயசுப் பையன் கூட தன் தெருவில் இருக்கும் இஸ்திரிக்காரர், பெட்டிக்கடைக்காரர், சின்னம்மா, சித்தப்பா, தன் வாத்தியார் என்று எல்லாரைப் பற்றியும் எழுதுறான். அதைப் படித்துத் தமிழ்நாடே அமளிதுமளிப் படுகிறது. நீங்கள் ஏன் அந்தப் பத்திரிகையில் பத்தி எழுதுவதில்லை?” என்று கேட்டேன். அதற்கு அவர், “நான் 20 ஆண்டுகளாக எழுதி வருகிறேன். ஆனால் அந்தப் பத்திரிகைக்கு எழுத வேண்டுமானால் முதலில் டெஸ்ட் வைப்பார்கள். ஒரு நாலைந்து கட்டுரை மாடலுக்கு எழுதிக் காட்ட வேண்டும். அதோடு, அந்தக் கட்டுரை அந்தப் பத்திரிகையின் எம்.பி.ஏ. படித்த மேனேஜருக்குப் பிடித்திருக்க வேண்டும். மேனேஜர் ஓகே சொன்னால்தான் எடிட்டரே அதை வெளியிட முடியும். இதெல்லாம் நமக்குத் தேவையா?” என்றார்.
Fine. தமிழில் எழுதினால் தமிழ்நாட்டில் மட்டும்தான். ஆங்கிலத்தில் எழுதினால் இந்தியா முழுவதும் போகும். இப்போது மீண்டும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதலாம் என்று முடிவு செய்து விட்டேன். ஆனால் கொஞ்சம் தமிழ்ப் பக்கம் தலையைத் திருப்பிப் பார்த்தால் கூட ”எழுத்தாளனா ஓடிப் போ நாயே” என்கிறார்கள். கேவலம். சினிமாக்காரர் பேட்டிக்காக நாயைப் போல் அலையும் இவர்களுக்கு எழுத்தாளன் என்றால் ஏதோ எடுபிடி என்று நினைப்பு. தமிழில் போடாவிட்டால் எனக்கு இடுப்புக்குக் கீழே ஒரு ரோமம் உதிர்ந்த மாதிரி.