அன்புள்ள சாரு,
இதை எப்படி ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை. நான் ஒரு எழுத்தாளருக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்ற எண்ணமே என்னைப் பதற்றமடையச் செய்கிறது. பலமுறை ‘அன்புள்ள சாரு’ என்ற இந்த வாசகத்தை மட்டும் எழுதிவிட்டு அதற்குமேல் பதற்றம் அடைந்து விட்டு விடுவேன். இது உங்களைப் பார்த்து வரும் பயம் அல்ல. ஒரு ஆளுமையைப் பார்த்து ஏற்படும் பயம். ஒருவித மரியாதையினால் ஏற்படும் பயம் என்று கூட சொல்லலாம்.
இது என்ன கொடுமை. வாசகனுக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை? ஒரு நடிகனை வழிபடும் ரசிகனுக்கு அவரைச் சந்திக்கும் போது நடித்துக் காட்ட வேண்டுமா என்ன? ஆனால் ஒரு வாசகன் மட்டும் எழுத்தாளரிடம் உரையாடுவதற்கு எழுத்தாளரின் மொழியிலேயே தொடர்பு கொள்ள வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு எழுத்தை அடிக்கும் போதும் ‘என்ன நினைப்பாரோ’ என நினைத்துக் கொண்டே எழுத வேண்டியிருக்கிறது. சரி, அது கிடக்கட்டும்.
தைரியமாக ஒரு உண்மையைச் சொல்லிவிட வேண்டும். எனக்கு தமிழ் இலக்கிய உலகம் அறிமுகம் ஆன போது, ‘சாருவா? அவர் ஒரு கோமாளி’ என்கிற ரேஞ்சில்தான் அறிமுகம் செய்து வைத்தார்கள். பொதுவான பேச்சு என்னவென்றால்:
- அனைவரும் ஏற்றுகொள்ளும் விஷயத்தை சாரு ஏற்றுக் கொள்ள மாட்டார்.
- பிறருக்கு என்னவென்றே தெரியாத விஷயங்களைப் பற்றி அளந்து விடுவார்.
- அனைவரும் பரதேசியை காவியம் என போற்றிக் கொண்டிருந்தால், அவர் குப்பை என்று கரித்துக் கொட்டுவார்.
- முக்கியமாக பிறர் நம்மை கவனிக்க வேண்டும் என்பதற்காக சர்ச்சைக்குரிய ஏதாவது ஒன்றைச் சொல்லிக் கொண்டேயிருப்பார்.
இதுதான் பொதுவெளியில் இருந்து எனக்கு அறிமுகபடுத்தப்பட்ட சாரு. நான் மட்டும் அல்ல, கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழ் இலக்கியச் சூழலுக்குள் அறிமுகம் ஆனவர்கள் பெரும்பாலானவருக்கு இதுதான் உங்களைப் பற்றிய நிலைப்பாடாக இருக்கும் என நினைக்கிறேன். அதற்கு முன்பு நிலைமை எப்படி இருந்திருக்கும் என நான் அறியேன்.
ஆறு மாதங்களுக்கு முன்பு வரை உங்கள் வலைத்தளத்தை மட்டுமே தொடர்ந்து வந்த எனக்கும் உங்களைப் பற்றி பொதுவெளியில் உருவான இந்தக் கருத்தாக்கம் சரியென்றே பட்டது. ஸீரோ டிகிரி படிக்கும் வரை.
ஆம், இதை நான் சொல்லியே ஆக வேண்டும். பலரும் உங்களிடம் சொல்லியிருப்பார்கள். ஸீரோ டிகிரி படிக்க ஆரம்பித்த சில பக்கங்களிலேயே தெரிந்துவிட்டது, நீங்கள் பிறர் சொல்வது போல அல்ல என்று. இன்னும் ஸீரோ டிகிரியில் நான் உள்வாங்கிக் கொள்ளாத பல சூட்சமங்கள் இருக்கும் என்றே நினைக்கிறேன். இருப்பினும் எனக்குப் புரிந்த அளவிலேயே சொல்கிறேன். நான் இதுவரை ஸீரோ டிகிரி போன்றதொரு ஆக்கத்தைப் படித்ததில்லை. தமிழ் இலக்கியச் சூழலில் இனி எதிர்காலத்திலும் இந்த மாதிரி ஒரு ஆக்கத்தைப் படிப்பேன் எனவும் தோன்றவில்லை.
நேற்றுதான் உங்களின் ‘நானும் என் வாழ்க்கையும்…’ படித்தேன். இன்று உங்களுக்குக் கடிதம் எழுதி கொண்டிருப்பதும் அதனாலேயே. உங்களிடம் மன்னிப்பு கேட்டுவிட வேண்டும் என்றே இதை எழுதுகிறேன். இதுவரை உங்களைப் பற்றி வெளியில் எதுவும் சொன்னதில்லை. இருப்பினும் என் மனதினுள் உங்களைப் பற்றிய தவறான மதிப்பீடுகள் இருந்ததல்லவா? அதற்காகவே இந்த மன்னிப்பு. உங்களின் அறச் சீற்றம் தான் என்னை இப்போது தானாக வந்து மன்னிப்புக் கேட்க வைக்கிறது. மன்னித்து விடுங்கள்.
முக்கியமாக அந்தப் பதிவில் என்னைக் கவர்ந்தது, உங்களின் சமரசமற்ற தன்மை தான். உங்கள் வாழ்வில் நீங்கள் சமரசம் செய்யாமல் கடந்து வந்த ஒவ்வொரு தருணமும் என் அகத்தைச் சீண்டுகிறது!
வாழ்வின் ஒவ்வொரு துளியிலும் ஏதோ ஒன்றிற்காக, யாரோ ஒருவருக்காக சமரசம் செய்து கொண்டிருக்கும் எனக்கு சாரு ஒரு கனவு நாயகனாகவே தெரிகிறார். பொறாமை கொள்ள வைக்கிறார்.
நீங்கள் எனக்கு அறிமுகமாகிய நாளிலிருந்து இப்போது வரை உங்கள் ஆளுமை பற்றிய பிம்பம் தொடர்ந்து என்னுள் மாறிக் கொண்டே வந்திருக்கிறது. உங்களை மேலும் மேலும் நேர்மையானவராக, மரியாதைக்குரியவராக, நெருக்கமானவராக உணர்கிறேன்.
தற்போது எக்ஸைல் படித்துக் கொண்டிருக்கிறேன். அது பற்றிப் பிறகு எழுதுகிறேன். நன்றி.
இப்படிக்கு,
என்னைத் தேடிக் கொண்டிருக்கும் நான்.
(நானை ‘பாரி’ என்று அழைப்பார்கள்)
அன்புள்ள பாரி,
உங்கள் கடிதம் என்னை நெகிழ்ச்சி அடையச் செய்தது. என்னுடைய நெருங்கிய நண்பர்கள் ஒரு விஷயத்தைக் குறித்து மிகவும் வருத்தம் அடைகிறார்கள். பலரும் என்னைக் காது கூசும்படி ஏசுகிறார்கள் என்று. அதை ஏன் படிக்கிறீர்கள் என்று கேட்டால் அவர்களிடம் பதில் இல்லை. அந்த என் நண்பர்கள் பார்க்க வேண்டும் என்றுதான் உங்களுடைய இந்தக் கடிதத்தை இங்கே வெளியிடுகிறேன். இது போன்ற கடிதங்கள் தினமும் வந்து கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட கடிதங்கள் வந்தால், என்னை ஏசுகின்றவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். நல்லது இருந்தால் கெட்டதும் இருக்கத்தானே செய்யும்? இன்னொரு விஷயம். என்னை ஏசுபவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள். ஏனென்றால், அவர்களுடைய உலகமே நான் தான். நான் எழுதுவதைத்தான் அவர்கள் படிக்கிறார்கள். அதைத்தான் அக்கு வேறு ஆணி வேறாகக் கிழித்துத் தோரணம் கட்டுகிறார்கள். என்னைத் திட்டுவது என்பது அவர்களின் குடலில் கிடக்கும் மலம் போன்றது. மலத்தை வெளியேற்றாவிட்டால் அது எத்தகைய கொடுமை? அதைத்தான் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். அதை அவர்கள் அடக்கி வைத்தால் சட்டையைக் கிழித்துக் கொள்ளும் நிலைக்குப் போய் விடுவார்கள். அவர்கள் என்னை ஏசுவது அவர்களின் உடல், மன நலத்துக்கு நல்லது. என்னால் ஒரு நூறு பேரின் வாழ்க்கை நலம் பெறுகிறது என்பது எனக்கு எவ்வளவு பெரிய புண்ணியம். காலையில் எழுந்து கணினியைத் திறந்ததும் அவர்கள் செய்யும் காரியம் ”சாருஆன்லைனில் அந்தப் பொறுக்கி என்ன எழுதி இருக்கிறான் பார்ப்போம், கிழி கிழி என்று கிழிக்கலாம்” என்பதுதானே? ஆக, அவர்களின் ஹீரோவும் நான் தான்; வில்லனும் நான் தான். என்னைச் சுற்றியே அவர்கள் சுழன்று கொண்டிருக்கிறார்கள். என்னைத் திட்டிக் கொண்டே அவர்கள் சுழன்று வருவது என்னைத்தான். எனவே அவர்களை நான் பொருட்படுத்தவே கூடாது.
பாரி, உங்கள் கடிதத்தின் இரண்டாவது பத்தியில் வாசகனும் எழுத்தாளனும் பற்றி ஒரு அபூர்வமான அவதானத்தை எழுதியிருக்கிறீர்கள். அது சரிதான். ஏனென்றால், எழுத்தாளன் என்பவன் மட்டுமே வேறு யாரோடும் – உதாரணமாக, சச்சின் போன்ற மகத்தான விளையாட்டுக்காரரோடும், அமிதாப் போன்ற பெரும் நடிகனோடும் – ஒப்பிட முடியாதவனாக இருக்கிறான். காரணம், எழுத்தாளன் ஒரு entertainer இல்லை. அவன் ஒரு ஜென் குருவைப் போல் எழுதிக் கொண்டிருக்கிறான். எழுத்தாளன் உங்கள் வாழ்வையே மாற்றி அமைத்து விடும் தன்மையைக் கொண்டிருக்கிறான். அதனால்தான் அவனைக் கல்லால் அடிக்கவும் தேடுகிறோம்… ஆசானாக அமர்த்தி வைக்கவும் தேடுகிறோம். அதனால்தான் பிச்சைக்காரர்களைப் போல் வாழ்ந்தாலும் எழுத்தாளனின் பேச்சுக்கு அத்தனை மதிப்பு. சமீபத்தில் வெளிவந்து எல்லோரும் ஆஹா ஓஹோ என்று பாராட்டித் தள்ளிய ஒரு படத்தை நான் பார்க்க முடியாது; படம் பார்த்து விமர்சனம் எழுதுவதா என் வேலை என்று நான் எழுதியதும் அந்த இயக்குனரின் ஓவிய நண்பர் என்னைப் பெயர் சொல்லாமல் நான்கு பக்கத்துத் திட்டியது எதனால்? நான் அந்தப் படத்தைத் திட்டியிருந்தால் கூட சந்தோஷப்பட்டிருப்பார்கள். நானோ பார்க்கவே மறுத்து விட்டேன். நாலு பக்கத்துக்குத் திட்டு. அதுவும் அஞ்சு லட்சம் பேர் படிக்கும் பத்திரிகையில். எழுத்துக்கு அவ்வளவு சக்தி இருக்கிறது.
சுஜாதாவுக்காவது அவர் சலவைக் கணக்கு எழுதினால் கூடப் போடுவோம் என்று வெளியிட்டார்கள். ஆனால் நான் உன் படத்தைப் பார்க்க மாட்டேன் என்று சொன்னாலே திட்டுகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
பாரி, மேற்கூறிய காரணங்களால்தான் எழுத்தாளனை நெருங்குவதும் ஒரு சினிமா நடிகரை நெருங்குவதும் வேறு வேறாக இருக்கிறது. அது நிழல். இது நிஜம்.
என்னைக் கோமாளி என்று பலரும் சொல்வதை நானும் பலமுறை கேட்டிருக்கிறேன். மூடர்களின் உலகில் எவனாவதை ஞானத்தைப் பேசினால் அவன் கோமாளிதானே? பணம் மட்டும்தான் ஒரு மனிதனின் மரியாதையை நிர்ணயிக்கிறது என்று நம்புபவர்களுக்கு பணத்தைத் துச்சமாக மதிக்கும் என்னைப் பார்த்தால் கோமாளியாகத்தானே இருக்கும்? சமரசம் செய்து வாழ்பவர்களுக்கு சமரசம் செய்யாமல் வாழ்பவன் கோமாளியாகத்தான் தெரிவான். உதாரணமாக, வரதட்சணை வாங்க மாட்டேன் என்று சொல்லிப் பாருங்கள். நீ என்ன லூஸா என்பார்கள். உங்கள் மனைவியிடம், “நீ கொஞ்சம் ஓய்வு எடு; நான் சமைக்கிறேன்” என்று சொல்லிப் பாருங்கள். உங்கள் அம்மாவே உங்களை லூஸு என்பார். என் அம்மா தான் நான் ஒரு லூஸு என்பதை முதல் முதலில் கண்டு பிடித்து எனக்குச் சொன்னவர். ஆக, இந்தக் கோமாளி என்ற பட்டத்தை நான் எனக்குக் கிடைத்த கௌரவமாகவே கருதுகிறேன்.
தொடரும்… நாளை…
பணம் அனுப்புவதாக இருந்தால் அதற்கான தகவல்:
Account holder’s Name: K. ARIVAZHAGAN
Axis Bank Account number: 911010057338057
Branch: Radhakrishnan Salai, Mylapore
IFSC UTIB0000006
MICR CODE: 600211002
***
ICICI account No. 602601 505045
Account holder’s name: K. ARIVAZHAGAN
T. Nagar branch. chennai
IFSC Code Number: ICIC0006026
Comments are closed.