பாரி, என் மீது பொது வெளியில் நிலவும் குற்றச்சாட்டுகள். ”அனைவரும் ஏற்பதை சாரு ஏற்க மாட்டார்.” இது குற்றச்சாட்டு அல்ல. பாராட்டு. மகாத்மா காந்தியிலிருந்து பாரதி, பெரியார் வரை யார் தான் பொதுஜனங்களின் கருத்தை ஏற்றுச் செயல்பட்டார்கள்? மிகச் சுருக்கமாக ஒரு பழமொழி இருக்கிறது. எதார்த்தவாதி வெகுஜன விரோதி. நான் எதார்த்தத்தை – உண்மையைப் பேசுகிறேன். எனவே நான் ஜனக்கூட்டத்துக்குப் பிடிக்காதவனாகத்தான் இருப்பேன். பொதுமக்கள் சொல்வதற்கு ஆமாம் சாமி போடுபவன் எழுத்தாளனாகவே இருக்க முடியாது. மற்ற குற்றச்சாட்டுகளைப் பற்றிப் பேசவே முடியாது. அவ்வளவு மொண்ணையானவை. நான் இதுவரை சர்ச்சைக்காக எதையுமே சொன்னதில்லை; செய்ததும் இல்லை. அந்த அளவுக்கு எழுத்தாளனுக்கு இந்தச் சமூகத்தில் இடமும் இல்லை. மொக்கை படங்களைப் பார்த்து, தொலைக்காட்சி சீரியல்களில் மூழ்கிக் கிடக்கும் மூட ஜனங்களுக்கு நான் எதைச் சொன்னாலும் அது சர்ச்சையாகத்தான் இருக்கும். அதற்காக நான் எழுதாமலோ பேசாமலோ இருக்க முடியுமா? இன்று ஒரு பத்திரிகையில் ஒரு சினிமா இயக்குனரின் பேட்டி வந்துள்ளது. அவருடைய பேட்டி அந்தப் பத்திரிகையில் மாதம் ஒருமுறை வருகிறது. 45 வயதில் நாலு படம் எடுத்தவர். அதில் ஒரு படம் வெளிநாட்டுப் படத்தின் உல்ட்டா. ஆனால் இதுவரை நான் 40 புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். என் பெயரைக் கூட அதில் போட மாட்டார்கள். எனக்கு என்று இல்லை. எல்லா எழுத்தாளனின் நிலையும் அதுதான். எப்போதாவது ஒரு செஞ்ஜுக்காக நாலு எழுத்தாளர்களின் புகைப்படங்களைப் போட்டு, கவிஞர் கலாப்ரியா வருஷாவருஷம் சபரிமலைக்குப் போவார்; கோணங்கி நன்றாக பருப்பு ரசம் பண்ணுவார் என்று துணுக்குச் செய்தி போடுவார்கள். தமிழ்நாட்டில் எழுத்தாளனுக்கு இடமே கிடையாது.
இதில் இந்த இலவச ஃபேஸ்புக் எல்லாம் வந்த பிறகு கேட்கவே வேண்டாம். ஏற்கனவே பைத்தியம் பிடித்தது போல் அலைந்து கொண்டிருந்தவர்களின் கையில் சாராய பாட்டில் கிடைத்தது போல் ஆகி விட்டது. எல்லா எழுத்தாளர்களின் மீதும் புழுதியை வாரி இரைத்துக் கொண்டிருக்கிறார்கள். மயிலாப்பூர் ரேஷன் கடை அரிசியில் புழு உள்ளது; இதை எதிர்த்துக் கேட்டாரா மனுஷ்ய புத்திரன். எல்லா சேனலிலும் போய் மணிக் கணக்காக மனித உரிமை பற்றிப் பேசுகிறாரே, இதற்கு என்ன சொல்கிறார்? என்று ஒரு இணைய தளத்தில் இன்று எழுதியிருக்கிறார்கள். எழுத்தாளர்களை இந்த அளவுக்கு வெறுக்கும் ஒரு சமூகம் உலகிலேயே இருக்க முடியாது என்று தோன்றுகிறது.
ஒரு குளுவான் சொல்கிறது. ”சாரு தன் மனைவிக்கும் மகனுக்கும் செய்ததை எல்லாம் வெளியே சொல்லிக் காண்பிக்கிறார். எவ்வளவு ஈனத்தனம் இது?” எண்டா டகால்டி… என் பெயரில் வந்த செக்ஸ் சாட்டை மட்டும் நாக்கில் எச்சில் ஊற ஊற படித்தாய் அல்லவா? அது இனித்தது… ஆனால் நான் செய்த நல்ல காரியங்களைச் சொன்னால் அது சொல்லிக் காண்பிப்பதாகுமா? மகாத்மா காந்தி தன் காம இச்சை பற்றியெல்லாம் எழுதவில்லையா? என்னுடைய படுக்கை அறை வரை வந்து எட்டிப் பார்த்து, உளவு பார்த்து அதை வக்கிரமாக ரசிக்கும் உனக்கு, நான் செய்த நற்காரியங்களைச் சொன்னால் வலிக்கிறதா? இதையும் நான் எதற்குச் சொல்கிறேன் என்றால், இரண்டு காரணங்கள்.
1.என் எழுத்தை ரசிக்கும் நண்பர்கள் கூட ”நான் சாருவின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பார்க்கவில்லை; அவர் எழுத்துக்கு நான் ரசிகன்” என்று சொல்லி என் தனிப்பட்ட வாழ்க்கையை ஏதோ ஒரு தீண்டத்தகாக விஷயத்தைப் போல் பார்க்கிறார்கள். அது ஒரு கொடும் தவறு. என் எழுத்தை விட என் தனி வாழ்க்கை மிகவும் போற்றுதலுக்குரியது. மற்றவர்கள் பின்பற்றத் தக்கது. இந்த சமூகத்தின் மிக மோசமான நிலைமைக்குக் காரணமான பல அம்சங்களை நான் நிர்த்தாட்சண்யமாக நிராகரித்திருக்கிறேன். எப்பேர்ப்பட்ட கொம்பனாக இருந்தாலும் வாரிசு என்று வரும் போது தடுமாறி விடுகிறான். ஆனால் நான் குடும்பம், வாரிசு என்ற இரண்டு விஷயங்களையும் நான் என் வாழ்க்கையிலிருந்து ஒதுக்கி வைத்தேன். இதற்குக் காரணம், ஃப்ரெட்ரிக் எங்கெல்ஸ் எழுதிய The Origin of the Family, Private Property and the State என்ற புத்தகத்தைப் படித்ததுதான். குடும்பம் என்ற அமைப்புதான் நம்முடைய எல்லா பலவீனங்களுக்கும் காரணமாக அமைகிறது. நாம் கெட்ட வழிகளில் பணம் சேர்த்து சொத்து சேர்ப்பதற்கு அதுதான் காரணம். நம் வாரிசுக்காகவே பணம் சேர்க்கிறோம். வாரிசுகளுக்காகவே எல்லா தவறுகளையும் செய்கிறோம். எனக்குத் தெரிந்த ஒருவர். என் இளம் வயதில் அவரை நான் சில காலம் ஆசானாக மதித்திருக்கிறேன். எங்கெல்ஸ் பற்றியும் குடும்பம் என்பது எவ்வளவு வன்முறையை உள்ளடக்கிய அமைப்பு என்பதையெல்லாம் எனக்குக் கற்பித்தவர் அவர். உண்மையும் அதுதான். குடும்பம் என்ற அமைப்பினால்தான் தனிச் சொத்து என்ற ஒன்றே உருவானது. நீங்கள் யாரைச் சந்தித்தாலும் அவர்களின் குழந்தைதான் உலகிலேயே சிறந்த குழந்தை என்று சொல்வதை நீங்கள் கேட்கலாம். தன் குழந்தையை சிலாகிப்பதில் தவறு இல்லை. ஆனால் அடுத்ததை விட என்னுடையது சிறந்தது என்பார்கள் எல்லோரும். ஏனென்றால், அது அவர்களின் குஞ்சாமணியிலிருந்து பிறந்தது. கல்வி கற்கும் போதும் இதுவே நடக்கிறது. அடுத்த பையனை முந்து… அடுத்த பையனை முந்து… ஏன் 98% எடுத்தாய்? ஏன் 100 எடுக்கவில்லை? ஏன் அடுத்தவனை முந்தவில்லை? நீ மட்டுமே முன்னால் இருக்க வேண்டும்? நீ மட்டுமே நீ மட்டுமே நீ மட்டுமே… இப்படி நம் பிள்ளைகளை கிரிமினல்களாக வளர்ப்பதற்குக் காரணம், நம்முடைய பிள்ளை என்பதுதான்.
இதை என் காலால் தூக்கி எறிந்தவன் நான். எனக்கென்று வாரிசு இல்லை. என் எழுத்தே என் சொத்து. உங்கள் சொத்தைத் தன் சொத்தாக நினைப்பவனை எதிர்த்து நீங்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து விடுவீர்கள். ஆனால் என் எழுத்தைத் தன் சொத்தாக நினைப்பவனை நான் என் வாரிசாக ஏற்கிறேன்.
வித்தியாசம் புரிகிறதா?
இப்போது நான் சொல்ல வந்ததைச் சொல்கிறேன். என் ஆசானாக மதித்த அந்த மனிதருக்கு ஒரு பேத்தி பிறந்தாள். உடனே அவர் என் பேத்தி என்ன அழகாக ஆங்கிலம் பேசுகிறாள் என்று நாலாந்தரமான மிடில் க்ளாஸ் முட்டாள்களைப் போல் பேச ஆரம்பித்து விட்டார். பேத்தி அழகாக ஆங்கிலம் பேசுவது ரசிக்கக் கூடியதுதான். ஆனால் அவர் என் பேத்திதான் உலகத்திலேயே உசந்தவள் என்ற பாணியில் எழுதினார். மார்க்ஸ், எங்கெல்ஸ் எல்லாம் பேத்தியின் ஆங்கிலத்தில் காணாமல் போய் விட்டார்கள். ஏன், ஆனானப்பட்ட ஆதி சங்கரரே அன்னையின் சாவுக்கு எங்கிருந்தோ ஓடோடி வரவில்லையா? ஆனால் நான்? என் தந்தை மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி வந்த போது, என் தம்பியிடம், “ஒரு பத்திரிகைக்கு (உயிர்மை) அவசரமாக எழுதிக் கொண்டிருக்கிறேன்; முடித்து அனுப்பி விட்டுத்தான் வர முடியும்… தாமதிக்க முடியாவிட்டால் பிரேதத்தை எடுத்து விடுங்கள்” என்று சொன்னேன். அதனால்தான் நான் அடிக்கடி சொல்கிறேன்… நான் ஒரு துறவி என்று. ஆனால் மற்றவர்களோ துறவு என்பது என் குஞ்சாமணியில்தான் இருப்பதாக நினைக்கிறார்கள். என்ன செய்வது? உறவு, பந்தம், பாசம், குடும்பம், சொத்து, வாரிசு ஆகிய இவற்றைக் கடப்பதுதான் ஐயா துறவு. கிழத்தன்மையை அடைவதல்ல துறவு. எழுத்தைத் தவிர, எழுத்தின் மீது இருக்கும் வெறித்தனமான பற்றைத் தவிர வேறு எதன் மீதும், யார் மீதும் எனக்கு பந்தமோ பாசமோ உறவோ ஒட்டுதலோ கிடையாது. அப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் என்னைப் பார்த்து ஏதோ அசிங்கத்தைப் பற்றிப் பேசுவது போல் பேசுகிறீர்களே என்ன நியாயம்? உங்களால் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு வாழ்க்கையை நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையின் மதிப்பீடுகளைப் பார்த்து உங்களால் வியக்க மட்டுமே முடியுமே தவிர பின்பற்றுவது சாத்தியமே அல்ல.
நான் நினைக்கிறேன்… எல்லா எழுத்தாளர்களுமே இப்படித்தான் வாழ முடியும் என்று. இங்கே ஒரு எச்சரிக்கை. நீங்கள் நினைக்கும் எழுத்தாளன் வேறு. என் அகராதியின் எழுத்தாளன் வேறு.
இதற்கிடையில் நண்பர்கள் என்று சொல்லிக் கொண்டு வரும் மனிதர்களைப் பற்றியும் கொஞ்சம் சொல்ல வேண்டும். முன்பு ஏதோ ஒரு கட்டுரையில் திருப்பூர் நண்பர் சதீஷ் பற்றி எழுதியிருந்தேன். என்னுடைய உள்வட்டத்தில் இருந்த நண்பர் அவர். ஆனால் என்ன ஆயிற்று என்றால், ஒவ்வொரு வாசகர் வட்டச் சந்திப்புக்கும் இரண்டு நண்பர்களை அழைத்துக் கொண்டு வந்தார். இரண்டு மூன்று முறை பார்த்தேன். வந்தவர்களும் பெரும் தொந்தரவாக இருந்தார்கள். ஆம்ப்ரா விடுதிக்கு வந்த இரண்டு பேரால் பெரும் பிரச்சினை ஆகி விட்டது. காண்டாமிருகங்களைப் போல் உருவம் கொண்ட அவர்களுக்கு ஆடிட்டர் ரமேஷும் அராத்துவும் பணிவிடைகள் செய்ய வேண்டியிருந்தது பற்றி ஏற்கனவே எழுதியிருந்தேன். அதாவது, அவர்களுக்கு உணவு சமைத்துத் தர வேண்டும். அவர்கள் பானம் அருந்த பழங்கள் அராத்து வாங்கிக் கொண்டு வர வேண்டும். அவர்கள் கையையும் இன்னொன்றையும் ஆட்டிக் கொண்டு ஹாயாக வந்து விடுவார்கள். அவர்கள் சாப்பிட்ட தட்டைக் கூட ரமேஷும் அராத்துவும் தான் எடுத்து வைத்தார்கள். அதை விடக் கேவலம் என்னவென்றால், அவர்கள் காண்டாமிருகம் சைஸில் இருந்ததாலோ என்னவோ மலஜலம் கழிக்கும் போது அந்த பேஸினைச் சுற்றிலும் மலத் துகள்கள் மிதந்து கொண்டிருக்கும். கொஞ்சம் அல்ல; எக்கச்சக்கமாக. அந்தக் கழிப்பறையோ ரெண்டு பேர் ஜாலியாக டேபிள் டென்னிஸ் ஆடும் அளவுக்குப் பெரிதாக இருந்தது. எங்கள் துரதிர்ஷ்டம், கழிப்பறை பேஸின் அந்த அறையின் ஆரம்பத்திலேயே இருந்தது. ஆக, கீழே கிடக்கும் மலத் துகள்களை தண்ணீர் ஊற்றி ஊற்றி ஆகக் கடைசியில் இருக்கும் துவாரத்துக்கு அனுப்ப வேண்டும். ஒவ்வொரு நாளும் ஐம்பது நூறு பக்கெட்டு தண்ணீர் ஊற்றி இந்த வேலையை நானும் அராத்துவும் மாற்றி மாற்றிச் செய்து கொண்டிருந்தோம்.
எங்களுக்கு என்ன தலை எழுத்தா ஐயா, மிஸ்டர் சதீஷ்? சரி. இதையெல்லாம் கூட நான் என் நண்பர் சதீஷுக்காகச் செய்வதாக எடுத்துக் கொண்டேன். கோபம் வரவில்லை. அடுத்து, அந்த இரண்டு காண்டாமிருகங்கள் எக்ஸ்ட்ராவாக வந்து விட்டதால், அறை போதாமல் இன்னொரு அறை 5000 ரூ கொடுத்து எடுக்க வேண்டி வந்தது. இதெல்லாம் என்னை அழைத்த விஜியின் சொந்தக்காரர் செலவு.
ஊருக்குத் திரும்பியதும் சதீஷுக்கு எழுதினேன், ”இனிமேல் இப்படிச் செய்ய வேண்டாம். நீங்கள் மட்டும் வாருங்கள். இதற்காக ஒரு பத்தாயிரம் ரூபாய் என் கணக்கில் போட்டு விடுங்கள்” என்று. சதீஷ் ஒரு தொழிலதிபர். மூன்று ஊர்களில் தொழிற்சாலைகள் உள்ளன. அவருடன் வந்த காண்டாக்களும் தொழிலதிபர்களே.
உடனே அடுத்த கணமே – பணம் வந்திருக்கும் என்றுதானே நினைக்கிறீர்கள்? கடிதம் வந்தது. ”மன்னிக்கவும் குருவே. தண்டனையாக அல்ல; என் குருவுக்கு நான் செலுத்தும் காணிக்கையாக பத்தாயிரத்தை அடுத்த மாதம் அனுப்பி வைக்கிறேன்.”
உடனே அராத்துவுக்கு போன் போட்டுச் சொன்னேன். அராத்து ஒரு கெட்டவர். கெட்டதாகச் சொன்னார். ”அந்த ஆளு அனுப்ப மாட்டாருங்க…”
“ஏங்க இப்படிச் சொல்றீங்க? அவரு ரொம்ப நல்லவருங்க…”
”இல்லீங்க… அனுப்ப மாட்டாரு… பாருங்க…”
அடுத்த மாதம் வந்தது… அடுத்த மாதம் என்பது அக்டோபர். சதீஷிடமிருந்து ஒரு கடிதம். ஏன் என் பெயரை சதீஷ் என்று மாற்றிப் போட்டீர்கள்? என்னுடைய நிஜப் பெயரையே போட்டிருக்கலாமே? தவறு என்னுடையதுதானே? இனிமேல் இப்படி நடக்கவே நடக்காது. மன்னித்து விடுங்கள் குருவே.
நான் பதில் எழுதவில்லை. ஏனென்றால், ஒரு ஓட்டலில் சாப்பிடுகிறீர்கள். சாப்பிட்டு விட்டு வந்து, சாப்பாடு சூப்பர் என்று சொல்லி விட்டு, காசு தராமல் போனால் என்ன அர்த்தம்?
அராத்து சொன்னது போலவே நடந்தது. ஏன் ஐயா எல்லோரும் எப்போதும் அராத்து சொல்வதே சரி என்று நிரூபித்துத் தொலைகிறீர்கள்? இன்று வரை சதீஷிடமிருந்து பணம் வரவில்லை. மன்னிப்புக் கடிதத்தின் மதிப்பே பத்தாயிரம் என்று நினைத்து விட்டார் போலும். ஒரு நட்பு போய் விட்டது. நான் இன்று வரை என் உள் வட்டத்தினரிடம், என் நண்பர்களிடம் பணம் கொடு என்று கேட்டதில்லை. அது என் வேலையும் இல்லை. சதீஷிடம் கேட்டது அவர் கொடுக்க வேண்டியது. அவரால் ஏற்பட்ட செலவு. கக்கூஸ் கழுவியது. மூன்று சந்திப்புகளுக்கு நண்பர்களை இழுத்துக் கொண்டு வந்து எங்களுக்கு செலவு வைத்தது. நாங்கள் செய்த சேவை.
ஆம்ப்ரா விடுதிக்குச் செல்லும் போது காரை ஸ்ரீதர் ஓட்டி வந்தார். பக்கத்தில் ரமேஷ். அராத்து வண்டியை ஒரு காய்கறிக் கடையில் நிறுத்தச் சொன்னார். நிறுத்தியதும், காய்கறியும் பழங்களும் ஒரு பெரிய பை நிறைய வாங்கி வந்தார் அராத்து. ரமேஷ் திட்டினார். ”நான் தான் வாங்கி வந்து விட்டேனே, நீங்கள் வேறு ஏன் வாங்கினீர்கள்?” என்று. அராத்து வாங்கி வந்தது ஆயிரம் ரூபாய்க்கு. ஸுக்னி, கேப்ஸிகம், வெங்காயம், தக்காளி, ஆப்பிள், எலுமிச்சை, மாதுளை, இத்யாதி. மறுநாள் ஸலாத் செய்ய பழமோ காய்கறியோ இல்லை. முந்தின இரவே தீர்ந்து விட்டது.
ரமேஷ், புரியுதா? என்றேன்.
புரியுது, புரியுது… நல்லா புரியுது என்றார் ரமேஷ்.
சதீஷும் இரண்டு காண்டாமிருகங்களும் கையை வீசிக் கொண்டு வந்ததற்காக இதைச் சொன்னேன். பத்தாயிரம் கேட்டால் மன்னிப்புக் கடிதம்.
சதீஷ் பழகியவர். உள் வட்டம். அவரே இப்படி என்றால் புதியவர்கள் எப்படி இருப்பார்கள்? இமயமலைக்கு எங்களுடன் வந்து எங்கள் உயிரை எடுத்த இரண்டு புதியவர்கள் பற்றி எழுதினேன் அல்லவா? அதையெல்லாம் படித்து விட்டு சென்ற வாரம் நீலாங்கரை சந்திப்புக்கு வந்தார் ஒரு புதியவர்.
அராத்து எப்போதும் சொல்வார், புதியவர்களைச் சேர்க்காதீர்கள் என்று. அவர் பேச்சைக் கேட்காமல் சேர்த்து செம்மையாக அனுபவிப்பேன். இந்த முறை சேர்த்தது செல்வகுமார்.
வந்தார் புதியவர். நாங்கள் குழுமிய போது மணி மதியம் மூன்று. இரவு இரண்டு மணி வரை அங்கேயிருந்த ஒரு திறந்த வெளிக் குடிசையில் பேசிக் கொண்டிருந்தோம். பின் நவீனத்துவம் பற்றித் தொடர்ந்து பல மணி நேரம் பேசினேன் நான். வழக்கம் போல் நண்பர்கள் பழம், காய், ஆலிவ் காய் எல்லாம் கொண்டு வந்திருந்தனர். விடுதியில் டின்னர் சொல்லி சாப்பிட்டோம். இரவு இரண்டு மணிக்குக் கிளம்பினார் புதியவர். நான் ரெஸ்ட் ரூம் போய் விட்டு வந்த போது புதியவரைக் காணோம். கிளம்பி விட்டார் என்றார்கள். சரி என்றேன். கருப்பசாமி தான் “நூறு ரூபாய் கொடுத்துட்டுப் போறாரு சாரு” என்றார். உடனே போனில் அவரைத் திரும்ப அழைத்தேன். அவரிடம் வண்டி இல்லை. செல்வகுமார் கிளம்பிய போது அவருடன் கிளம்பியிருக்கிறார்.
புதியவர் வேலை செய்வது டி.சி.எஸ்.ஸில். வயது 25 இருக்கும். அறை வாடகை 6000. குடிசை வாடகை 3000. டின்னர் செலவு 2000. பழங்கள் செலவு 1000. மொத்தம் 12,000/- இவர் நான் தான் தங்கவில்லையே என்று சொல்லி நூறு ரூபாயைக் கொடுத்து விட்டுக் கிளம்புகிறார். நான் அழைத்துப் பேசிய போதும் அவர் செய்ததை நியாயப் படுத்தியே பேசினார். இவ்வளவு செலவு ஆகும் என்றால் நீங்கள் முன்கூட்டியே என்னிடம் சொல்லியிருக்க வேண்டும் என்று அதிகாரமான தொனியில் சொன்னார். நூறு ரூபாயை அவர் மூஞ்சியில் விட்டெறிந்து அனுப்பி விட்டேன். மறுநாள் நாங்கள் கிளம்பும் போது பனிரண்டு போதாது, இன்னும் ஒரு ஆயிரம் வேண்டும் என்றார் மேனேஜர். ஏனென்றால், நீங்கள் ஐந்து பேர் என்றுதான் சொன்னீர்கள். ஆனால் ஆறு பேர் இருந்தீர்களே?
அதையும் கொடுத்து விட்டு வந்தோம். 13,000 ரூ செலவில் ஒருவர் நூறு ரூபாயைக் கொடுத்து விட்டுப் போகிறார். அவர் செய்த தவறும் அவருக்குத் தெரியவில்லை. என்ன ஒரு அயோக்கியத்தனம்? என்ன ஒரு கயவாளித்தனம்? பணம் கொடுக்காதது கூடப் பரவாயில்லை. தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று வாதிக்கிறார் அந்த ஆள். இப்படி ஒரு கயவாளித்தனத்தை என் வாழ்நாளில் பார்த்ததில்லை. இவ்வளவுக்கும் திருமணம் ஆகாதவர். ஏன்யா, உன் டின்னருக்குக் கூட நான் தான் செலவு செய்ய வேண்டுமா? அப்புறம் என்ன மயிருக்கு என்னைப் பார்க்க வந்தாய்?
இவ்வளவுக்கும் அன்று இரவு பூராவும் என் எழுத்தை வார்த்தைக்கு வார்த்தை மேற்கோள் காட்டிப் பேசிக் கொண்டிருந்தார் அந்தப் புதியவர். பிரபலமான ஸாஃப்ட்வேர் நிறுவனம் டி.எஸ்.எஸ்ஸில் வேலை. இந்த வயதிலேயே இப்படியென்றால்…?
மக்கள் எந்த அளவுக்குப் பணத்தின் மீது வெறி கொண்டு அலைகிறார்கள் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு உதாரணம். நானே ஒரு பிச்சைக்காரன். அப்படிப்பட்ட நானே அங்கே சென்ற போது கையில் என் பங்காகக் கொடுக்க வேண்டும் என்று 2000 ரூபாய் எடுத்துச் சென்றிருந்தேன். ஆனால் ஒரு இளைஞர் பண விஷயத்தில் எப்படிப்பட்ட கிரிமினலாக இருக்கிறார் என்று பாருங்கள். என்னை சுரண்டுவது ஒரு குருட்டுப் பிச்சைக்காரனிடம் ஜேப்படி செய்வது போல என்று கூட அவருக்குத் தெரியவில்லை.
அராத்து சொல்வதையே ஏன் எப்போதும் நீங்கள் சரி என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறீர்கள்? இன்னொரு சம்பவம். மதுரையில் நடந்தது. நண்பர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது நான் தருண் தேஜ்பாலின் story of my assassins நாவலைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். இடையிட்டு ஒரு நண்பர் – சீனியர் – நான் அந்த நாவலைப் படித்து விட்டேன் என்றார். எனக்கு உடனே ஆச்சரியத்தில் மெய் சிலிர்த்து விட்டது. ஆஹா, அந்த அற்புதமான நாவலைப் படித்து விட்டீர்களா என்று உணர்ச்சி வசப்பட்டேன். உடனே அராத்து குறுக்கே புகுந்து “படிச்சிட்டீங்களா? எங்கே, அதன் முடிவைச் சொல்லுங்கள் பார்ப்போம்” என்றார். அப்போதுதான் குட்டு வெளிப்பட்டது. நண்பர் படிக்கவில்லை. படிக்காமல் ஒரு பந்தாவுக்காக பொய் சொல்லியிருக்கிறார்.
என்னைத் திட்டிக் கொண்டிருப்பவர்களுக்கே மறுபடியும் வருகிறேன். இவர்கள் யாரும் என்னையோ என் நாவல்களையோ படித்ததில்லை. இணையத்தில் வரும் கட்டுரைகளைப் படித்து விட்டு ஜல்லியடித்துக் கொண்டிருக்கும் கூட்டம் இது. இவர்களுக்கு சாரு ஒரு நோய். இவர்கள் கடும் சாரு அடிக்ஷனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதிலும் தான் வெறுக்கும் எழுத்தைப் படிப்பது எவ்வளவு பெரிய தண்டனையாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். இவர்கள் என் அடிமைகளைப் போன்றவர்கள். இவர்களைப் பார்த்து நான் பரிதாபம் மட்டுமே கொள்கிறேன். நான் சொல்வது தவறு என்றால் ஒரு மாதம் என் எழுத்தைப் படிக்காமல் இருக்கட்டுமே? பைத்தியம் பிடித்து விடும். அதனால்தான் இவர்கள் சாரு அடிக்ட்ஸ் என்று சொல்லுகிறேன்.
தொடரும்…
Comments are closed.