ஒரு சர்ச்சை

சாருவின் நாவல்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பிரத்யேகத் தன்மை இருப்பதைக் காணலாம். உதாரணமாக ஸீரோ டிகிரிக்கு கல்ட் ஸ்டேடஸ் கிடைத்து விட்டதால் அதைப்படிக்காமல் யாரும் இருக்க முடியாது.

ராஸ லீலாவை எடுத்துக் கொண்டால் , நெட் போன்ற சமகால விவகாரங்களைத் தொட்ட முதல் நாவல்; நவீன கால சிக்கல்களைச் சித்திரிக்கும் முதல் நாவல் என்ற பெருமை இருப்பதால் இளைஞர்களால் அதிகம் படிக்கப்படும் நாவலாக உள்ளது.

த்ரில்லர் பாணியில் பின்நவீனத்துவ நாவல் என்ற தன்மையில் இணையத்தில் அதிகம் பேசப்படுவது தேகம்.

இப்படி ஒவ்வொன்றுக்கும் சில பிரத்தியாகமான தன்மை உண்டு.

ஆனால் ஒரு பிரதி என்ற ஒரே தகுதியை  மட்டுமே தன் பலமாகக் கொண்டு , வாசகனை ஈர்க்கும் நாவல் என்றால் அது எக்ஸிடென்ஷியலிசமும் ஃஃபேன்சி பனியனும் நாவல்தான்.  என் ஃபாவரைட் இதுதான்…

அதைப் பற்றிய சில கருத்துகளை, சில மேற்கோள்களை இந்த த்ரெட்டில் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். நீங்களும் உங்கள் பார்வைகளை இதில் பதிவு செய்யுங்கள். 

மேற்கண்ட குறிப்பு பத்து மணி நேரத்துக்கு முன்னால் பிச்சைக்காரன் என்னுடைய வாசகர் வட்டத்தில் இட்ட பதிவு.  இதற்கு வாசகர் வட்டத்தில் யாரிடமிருந்தும் பதில் இல்லை.  அதன் பிறகு – அதாவது மேற்கண்ட பதிவைப் போட்ட மூன்று மணி நேரத்துக்குப் பிறகு – பிச்சைக்காரனே தன் பதிவுக்குக் காமெண்ட் போட வேண்டிய நிலை.  இப்படி எழுதுகிறார் பிச்சை.

”மிகச் சில வரிகளில், ஒரு சிறுகதையை , ஒரு மனச் சித்திரத்தை உருவாக்க முடியுமா… ? கீழ்க்கண்ட வரிகளைப் படியுங்கள்…

தஞ்சாவூர் வந்து ஒரு வருடம் ஆகி விட்டது…  நடேசன் அந்தப் பக்கமே வரவில்லை. காமாட்சிக்கு மூன்றாவது ஆண் மகவு பிறந்தது…  ஜாடையில் ராமமூர்த்தியை ஒத்து இருந்தது…  காமாட்சி தன் முதல் எழுத்தில் N க்கு பதில் பழையபடியே R என வைத்துக் கொண்டாள்…”

அதற்குப் பிறகு நடந்த ஒரு சிறிய விவாதத்தை இங்கே எடுத்துத் தருகிறேன். 

  Sivaprasad Sadasivam ஆனால் நாவல்கள் எல்லாம் ஒரே template-இல் இருப்பது போல் தோன்றுகிறது. கொக்கரக்கோ சொல்வது போல் உதயா இல்லாத நாவல் வேண்டும்.

Pichaikaaran Sgl நம் வாழ்க்கை ஒரே டெம்ப்ளேட்டில் இருப்பதாக தோன்றுகிறது , அன்றும் சாப்பிட்டோம் . தூங்கினோம் . இன்றும் அதையே செய்தாலும் நுட்பமான வேறுபாடு இருக்கிறது அல்லவா ? இந்த நுட்பம் புலப்படாத தருணங்களில் கைகொடுக்க ஃபேண்டசி இருக்கவே இருக்கிறது . விதவிதமாக குவிந்து கிடக்கிறதே

5 hours ago

Sivaprasad Sadasivam இல்லீங்க… அவரிடம் ரொம்ப அதிகமாக எதிர்பார்க்கிறேனோ ? தெரியவில்லை. சுஜாதாவின் பரம ரசிகன் நான். அந்த அளவுக்கு இனிமேல் எதிர் பார்ப்பது சரியில்லை.

படித்து விட்டீர்களா?

இந்த விவாதம் பற்றி நான் சற்று என்னுடைய கருத்தையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். 

சுஜாதா மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.  அவர் தமிழ் மொழியைப் பரவலாக எல்லோரிடமும் கொண்டு சென்றவர்.  என்னுடைய அம்மாவே ஜுஜாதா கதை என்று சொல்லிக் கொண்டு சுஜாதாவின் ரசிகையாக இருந்திருக்கிறார்.  அம்மா மூணாங்கிளாஸ் வரை தான் படித்தவர்.  எழுத்துக் கூட்டித்தான் ஜுஜாதாவின் கதையைப் படிப்பார்.

ஆனால் இதே பெருமை தினத்தந்திக்கும் உண்டு.  ஒரு மொழியை செழுமைப்படுத்துவது என்பது இது அல்ல.  பாரதியிலிருந்து அந்தக் கதை துவங்கி, மௌனி, சி. மணி, ஞானக்கூத்தன், தி. ஜானகிராமன், நகுலன், ப. சிங்காரம், ஆத்மாநாம், தேவதேவன், ந.முத்துசாமி, தேவதச்சன், லா.ச.ரா. என்று பலரும் தமிழின் போக்கை மாற்றி அமைப்பதில் தங்களுடைய அற்புதமான பங்கை ஆற்றியிருக்கிறார்கள்.  இதற்கெல்லாம் ஒரு தளத்தை அமைத்துக் கொடுத்த பிதாமகர்கள் சி.சு. செல்லப்பா, க.நா.சு.  இந்த வரிசையில் சுஜாதா வர மாட்டார்.  அவர் நகரம் போன்ற ஓரிரு நல்ல கதைகள் எழுதியிருக்கிறார்.  குறிப்பிடத்தகுந்த ஒரே நாவல் கனவுத் தொழிற்சாலை.  மற்றதெல்லாம் இலக்கியத்தில் சேராத பொழுது போக்கு எழுத்து.  அதனால் அது கெட்டது என்றெல்லாம் நான் சொல்லவில்லை.  அதுவும் சமூகத்துக்குத் தேவைதான்.  அதேபோல் சாண்டில்யன். அதேபோல் கல்கி.  சொல்லப் போனால் கல்கியின் இடத்தை அவருக்குப் பிறகு நிரப்பியவர் சுஜாதா.  மற்றபடி சுஜாதாவுக்கு நவீன தமிழ் இலக்கியத்தில் எந்த இடமும் இல்லை.  அவரை தமிழ்நாட்டுக்கு வெளியே – ஏன், பக்கத்தில் இருக்கும் கேரளத்தில் கூடத் தெரியாது. 

ஆனால் சுஜாதா வெகுஜன மரபிலிருந்து வந்தவர் அல்ல.  அவருக்கும் கல்கிக்கும் ஆரம்பத்தில் எந்த சம்பந்தமும் இல்லை.  அவர் தில்லியில் இருந்த போது கஸ்தூரி ரங்கன் போன்ற இலக்கிய ரசிகர்களோடு இருந்து, கணையாழியில் கடைசிப் பக்கங்கள் எழுதி இலக்கியப் பிரவேசம் செய்தவர்.  சுஜாதாவின் இன்றைய தீவிர ரசிகர்கள் எவரும் கணையாழியில் அவர் பல ஆண்டுகள் எழுதிய கடைசிப் பக்கங்களைப் படித்திருப்பார்களா என்று தெரியவில்லை.  கடைசிப் பக்கங்களில் இருந்த சுஜாதா வேறு.  குமுதம், விகடன், கல்கி, கதிர் போன்றவற்றிலும், ஷங்கர் படத்துக்கும் எழுதிய சுஜாதா வேறு.  முன்னவர் கண்ணதாசனையும், சிவாஜி கணேசனையும், இன்னும் பொதுமக்கள் கொண்டாடும் அத்தனை பேரையும் எள்ளி நகையாடி, துவைத்துத் தோரணம் கட்டியவர்.  ஆனால் பின்னவர்?  நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இன்றைய இலக்கியவாதிகளிடம் இல்லாத ஒரு மிகப் பெரிய திறமை சுஜாதாவிடம் இருந்தது.  அது, craftsmanship.  அவரால் மரியோ பர்கஸ் யோசாவைப் போல் (Mario Vargas Llosa) பல நாவல்களை எழுதியிருக்க முடியும்.  ஆனால் அவர் அதற்கு முயற்சி கூட செய்யவில்லை.  ஏனென்றால், அவர் ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் எழுதினார்.  அந்தப் பத்திரிகைகளில் தொடர்கதை எழுதி இலக்கியம் உருவாக்க முடியாது.  ஒரு நாவலில் ஏதோ ஒரு ஜாதி பற்றிக் குறிப்பிட, அது பெரிய பிரச்சினை ஆனதும் தொடரே நின்று விட்டது.  இலக்கியத்தின் தன்மை அது அல்ல.  ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் வெறும் ஜனரஞ்சகத் தொடர்கதைகள் மட்டுமே எழுத முடியும்.  அதைத்தான் சுஜாதா செய்தார். 

ஆனால் ப. சிங்காரம் என்ன செய்தார்? தமிழின் மிக முக்கியமான பத்து  நாவல்கள் என்றால் அதில் புயலிலே ஒரு தோணியும் வரும்.  இதை நான் மட்டும் சொல்லவில்லை.  ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் என்று அத்தனை பேரும் சொல்கிறார்கள்.  ஆனால் ப. சிங்காரத்தின் பெயர் தமிழ்கூறு நல்லுலகில் யாருக்குமே தெரியாது.  சிங்காரம் தன் நாவலை வெளியிட பிரசுரகர்த்தர் கிடைக்காமல் கையெழுத்துப் பிரதியை வைத்துக் கொண்டு பத்துப் பதினைந்து ஆண்டுகள் காத்திருந்திருந்திருக்கிறார். 

எனவே, ஒரு ஜனரஞ்சக எழுத்தாளரை என்னோடு ஒப்பிடுவதே தவறு.  அதில் சுஜாதா அளவுக்கு என்னிடம் எதிர்பார்ப்பதே தவறு என்று வேறு சொல்கிறார் திரு. சிவப்ரஸாத் சதாசிவம். சதாசிவம் சொல்வது, டி. ராஜேந்தர் அளவுக்கு Christopher Nolan-இடம் (Inception படத்தின் இயக்குனர்) எதிர்பார்த்து ஏமாந்து போனேன் என்று சொல்வது போல் இருக்கிறது.

சி.சு. செல்லப்பா, க.நா.சு., கு.ப.ரா., கரிச்சான் குஞ்சு, எம்.வி. வெங்கட்ராம், தி. ஜானகிராமன், நகுலன், மௌனி, ப. சிங்காரம் என்று துவங்கி அசோகமித்திரன், ஆதவன், கோபி கிருஷ்ணன், அழகிய பெரியவன் வரை நீளும் ஐம்பது உரைநடை எழுத்தாளர்களில் சுஜாதா என்ற பெயருக்க்கு இடமே இல்லை என்பதுதான் நவீன தமிழ் இலக்கியத்தின் சரித்திரம். 

நீங்கள் யாருடைய ரசிகராக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போங்கள்.  அதைப் பற்றி எனக்குக் கிஞ்சித்தும் கவலை இல்லை. ஆனால் அதில் என்னை இழுக்காதீர்கள். 

சதாசிவத்தின் இன்னொரு கருத்தையும்    நான் வன்மையாக மறுக்கிறேன்.  ”என்னுடைய எல்லா நாவல்களும் ஒரே டெம்ப்ளேட்டில் இருக்கின்றன.”  என்னுடைய எந்த நாவலோடும் ஒப்பிட முடியாதது எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் நாவல்.  ஸீரோ டிகிரியும் அப்படியே என்பதை ஒரு ஆரம்பநிலை வாசகர் கூட சொல்லி விடுவார்.  என்னுடைய நாவல்களிலேயே பிச்சைக்காரன் சொல்வது போல் ஸீரோ டிகிரிக்கு ஒரு cult status கிடைத்தது எனக்கு மிகுந்த வருத்தமளிக்கும் விஷயம்.  ஏனென்றால், ஸீரோ டிகிரியை விடப் பல மடங்கு வீர்யமானது ராஸ லீலா.  சர்வ தேச இலக்கியத்தின் தீராத வாசகன் என்ற முறையில் ராஸ லீலாவை உலகின் முக்கியமான நூறு நாவல்களில் ஒன்றாக நான் வைப்பேன்.  அது ஆங்கிலத்தில் வெளிவரும் போது இது உங்களுக்கும் ருசுவாகும்.  கொஞ்ச காலம் பொறுத்துப் பாருங்கள். 

எக்ஸைல்-2 இப்போது ஒரு காவியமாக உருவாகி விட்டது.  திட்டமிட்டே இதைச் செய்தேன்.  ஏன் நாம் ஒரு Classic-ஐ எழுதக் கூடாது?  பின்நவீனத்துவம், அது இது என்று எல்லாவற்றையும் மறந்து விட்டு ஒரு ஆதி மனிதனாக ஒரு நாவல் எழுதினால் என்ன, அது எப்படியிருக்கும் என்று யோசித்ததன் விளைவே எக்ஸைல் – 2. 

சரி, க்ளாஸிக் என்றால் என்ன?

ஒரு குறிப்பிட்ட தேசம், குறிப்பிட்ட கலாச்சாரம், குறிப்பிட்ட காலம் ஆகிய எல்லாவற்றையும் கடந்த ஒரு கலைப்படைப்பே க்ளாஸிக் என்று கருதப்படும்.  ஒரு ஜப்பானியரால் இன்னும் 400 ஆண்டுகள் கழிந்த பிறகும் வெகு சுவாரசியமாக எக்ஸைல் – 2 படிக்கப்பட்டால் அது க்ளாஸிக்.  உதாரணமாக, சங்க இலக்கியம் க்ளாஸிக்.  நவீன காலத்தில் தாஸ்தாவஸ்கி, கஸான்ஸாகிஸ் க்ளாஸிக்.  மரியோ பர்கஸ் யோசா க்ளாஸிக் அல்ல.  உங்களுக்கு வித்தியாசம் புரியும் என்று நினைக்கிறேன்.  எக்ஸைலிலிருந்தே உதாரணமாகச் சொல்ல வேண்டுமானால் – இப்போதே சொல்லக் கூடாது, இருந்தாலும் சொல்கிறேன் – 1200 பக்கங்கள் உள்ள அந்த நாவலில் 300 பக்கங்கள் வெறும் மரங்கள் மட்டுமே வருகின்றன.  மனிதர்கள் இல்லை.  200 பக்கங்கள் வெறும் மிருகங்கள்… அங்கே ஒரே ஒரு மனிதன் மட்டுமே வருகிறான்… ஆறு கொலை செய்தவன் அவன்… 1200 பக்கங்கள் கொண்ட அந்த நாவலில் அந்த நாவலை எழுதும் உதயா என்பவன் வெறும் 250 பக்கங்கள் மட்டுமே வருகிறான்.

எக்ஸைல் – 2 வெளிவரும் போது அது மிக நிச்சயமாக ஒரு சர்வதேச விருதைப் பெறும். 

என்னை இதை எழுதத் தூண்டி விட்டதற்காக சிவப்ரஸாத் சதாசிவத்துக்கு நன்றி. 

பணம் அனுப்புவதாக இருந்தால் அதற்கான விபரங்கள்:

Account holder’s Name: K. ARIVAZHAGAN

Axis Bank Account number: 911010057338057

Branch: Radhakrishnan Salai, Mylapore

IFSC UTIB0000006

MICR CODE: 600211002

***

ICICI account No. 602601 505045

Account holder’s name: K. ARIVAZHAGAN

T. Nagar branch.  chennai

IFSC Code Number: ICIC0006026

Comments are closed.