செல்வகுமார் கணேசனின் குறிப்பு

என் வாசகர் வட்டத்திலிருந்து வெளிவந்த முக்கியமான எழுத்தாளர் அராத்து.  அராத்துவை எழுத்தாளர் என்று எழுத எனக்கே சற்று கூச்சமாகத்தான் இருக்கிறது.  இருந்தாலும் ஒரு உலகத் தரமான நாவலை எழுதியவரை வேறு எப்படித்தான் அழைப்பது?  அடுத்து, வாசகர் வட்டத்திலிருந்து வந்தவர் கணேஷ் அன்பு.  அவர் எழுதும் இமயமலைப் பயணக் கட்டுரை சிறப்பாக உள்ளது.  ஏன் இவர்களையெல்லாம் எழுத்தாளர் என்று சொல்லத் தயங்குகிறேன் என்றால், கணேஷ் முறையாக தமிழிலும் ஆங்கிலத்திலும் வந்துள்ள பயணக் கட்டுரைகளைப் படித்தவர் அல்ல.  என்றாலும், என் எழுத்தைப் பயின்றிருக்கும் தகுதியினால் அவர்களுடைய எழுத்து சோடை போகாமல் ஒரு பயணக் கட்டுரை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக அமைந்து விடுகிறது.  தமிழில் மிக முக்கியமான பயண நூல்கள் என்றால் அது ஏ.கே. செட்டியாரின் நூல்கள்தான்.  ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமானால் இரண்டு பேர்: Paul Theroux and Rory Stewart.  ஸ்டூவர்ட் ஆஃப்கனிஸ்தானில் போர் நடந்து கொண்டிருந்த போதே அந்த வழியாக பிரிட்டனிலிருந்து பர்மா வரை கால்நடையாக நடந்து  பயணம் செய்தவர்.  அந்த அனுபவங்களைத்தான் Places in between என்ற நூலில் எழுதியிருக்கிறார்.  இவர்கள் இருவரையும் நான் விரிவாகப் படித்திருக்கிறேன்.  மற்றபடி, ஆரம்ப காலப் பயணியான இப்ன் பதூதாவின் பயணக் குறிப்புகள் ஒவ்வொரு பயண எழுத்தாளரும் படிக்க வேண்டிய ஒன்றாகும்.  இது பற்றியும் விரிவாக தப்புத் தாளங்கள் நூலில் எழுதியிருக்கிறேன்.  இப்ன் பதூதாவின் பயணக் குறிப்புகளைப் படித்தால் நாம் பதின்மூன்றாம் நூற்றாண்டிலேயே வாழ்வது போல் இருக்கும்.  அராத்து, கணேஷ் அன்புவைத் தொடர்ந்து இப்போது செல்வகுமார் கணேசன்.  இவரது கவிதை ஒன்றை நேற்று படித்தேன்.  சிறப்பாக இருந்தது.  வாசகர் வட்டத்தில் இவர் எழுதும் சிறு குறிப்புகளும் விசேஷமாக உள்ளன.  இவர் சற்று சீரியஸான எழுத்தாளராக உருவாக முடியும் என்று தோன்றுகிறது.  பத்து பேர் குடித்தபடி இரவு முழுவதும் பேசிக் கொண்டிருந்தாலும் காலை வரை சீரியஸாக  கவனித்தபடி இருப்பார்.  நிறைய படிக்கிறார்.  காஞ்சனா அய்யப்பன் என்ற  பெண்ணின் கவிதைகளும் சிறப்பாக உள்ளன.  பெண் என்பதால் இதோடு நிறுத்திக் கொள்கிறேன்.  நேற்று ஒரு பத்திரிகை அதிபரிடம் பேசிக் கொண்டிருந்த போது இனிமேல் பெண்களை வேலைக்கு எடுக்கப் போவதில்லை என்று சொன்னார்.  அதற்கு என் கண்டனத்தைத் தெரிவித்தேன் என்றாலும், ஒரு பெண்ணின் கவிதை நன்றாக இருக்கிறது என்று சொல்லக் கூட பயமாக உள்ளது.

ஒரு எழுத்தாளரின் வாசகர் வட்டத்தில், எழுதுவதை நிறுத்தி விட்டு  ஓய்வில் இருக்கும் வயதான பார்ட்டிகளுக்கு ஒரு லட்சம் பணம் அளித்து கௌரவிப்பதாகக் கேள்விப்பட்டேன்.    சுதந்திரப் போராட்ட வீரர்களுக்குக் கொடுக்கப்படும் ஓய்வு ஊதியம் போல அது.  அதையெல்லாம் கிண்டல் செய்வது தப்பு.  ஆனால் நம் வாசகர் வட்டத்தில் இப்படி ஓய்வு ஊதியம் கொடுக்காமல் இளம் எழுத்தாளர்களை உருவாக்கிக் கொண்டிருப்பது மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயம்.  இது நடப்பது என்னால் அல்ல.  வாசகர் வட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் உங்கள் அனைவரின் சாதனை இது.  அத்தனை பேரையும் பெயர் குறிப்பிட முடியாவிட்டாலும் அவர்கள் அனைவருக்கும் நன்றி.  இந்த ஆண்டு அராத்துவின் இரண்டு நூல்கள் வருவதைப் போல் அடுத்த ஆண்டு வாசகர் வட்டத்திலிருந்து உருவான மூன்று நான்கு எழுத்தாளர்களின் நூல்கள் வெளிவரும் என்று நம்புகிறேன்…

சரி… இப்போது செல்வகுமார் கணேசனின் இன்றைய குறிப்பைக் கீழே தருகிறேன்.  செல்வகுமார் கணேசனை என்னுடன் சேர வேண்டாம் என்று எச்சரித்து எழுதும் கடிதங்களை எனக்கே அனுப்பி வையுங்கள்.  நான் அதை அவருக்கு ஃபார்வர்ட் செய்து விடுகிறேன்.  காஞ்சனா அய்யப்பனை நீங்கள் முகநூலிலேயே தொடர்பு கொண்டு எச்சரிக்கலாம்.  இனி வருவது செல்வகுமார் கணேசன்:

பழம் தின்று கொட்டை போட்ட மூத்த எழுத்தாளர்கள் பலர் குறிப்பிட்ட மைன்ட் பிளாக்கில் மாட்டிக் கொண்டார்கள்.

 

எழுதத் தொடங்குகையில் அவர்களுக்கு முழுச் சுதந்திரம் இருந்தது.  காலப்போக்கில் அவர்களே ஏற்படுத்திக் கொண்ட எல்லைகளால் தங்களை சிறைபடுத்திக் கொண்டு தவிக்கிறார்கள்.
எழுத்து நடை, கதைக் களம், மறுபடி மறுபடி அவர்கள் முன்வைக்கும் ஒரே கருத்தாக்கங்கள், சொல்லப் போனால் பயணம் செய்ய வேண்டிய குதிரைகள் செக்குமாடாக ஆகிவிட்டன.

 

அதனால் வாசகன் வேறுவகையான எழுத்தைப் படிக்க வேண்டும் என்றால் வேறு எழுத்தாளரைத் தேடிப் போக வேண்டியிருக்கிறது.  அவரும் அவருடைய ஒரே பாணி எழுத்தில் மாட்டியிருப்பார்.  எனவே அவரின் அடுத்த படைப்பும் அவரின் முந்திய பிரதியின் தாக்கத்திலேயே இருக்கும்.

 

இப்போது எழுத வருபவர்கள் இதில் கவனம் செலுத்தலாம்.  வெறும் புத்தக எண்ணிக்கையை கணக்கில் எடுக்காமல் செறிவு மிக்க எழுத்தைக் கொடுப்பதில் கவனம் செலுத்தலாம்.  மிகச் சுலபமாக படிக்கும்படி எழுதுவதுதான் மிகக் கடினமான எழுத்து என்பதை நாம் அறிவோம்.

 

புதிய எழுத்தாளர்கள் இதில் நிறைய கவனமாக இருக்கிறார்கள் என்றே நம்புகிறேன்.  மேலும், எந்த குழு மனப்பான்மையிலும் சிக்காமல் அவர்கள் வாசகர்களின் பக்கம் மட்டுமே இருக்க வேண்டும்.  ஜாதிச் சங்கங்கள் போல சிலருக்காக மட்டும் எழுத்தாளன் செயல்படக் கூடாது.

 

அவன் உலகின் பொதுச் சொத்து.  உலகப் பொதுமறை என்று திருக்குறளை சொல்கிறார்கள்.  ஒவ்வொரு படைப்புமே அத்தகைய குறிக்கோளையே கொண்டிருக்க வேண்டும்.  சுஜாதாவையும் சாருவையும் இந்த ரீதியிலேயே நான் விரும்புகிறேன்.
செல்வகுமார் கணேசன்

Comments are closed.