தமிழை வளர்த்ததில் பக்தி இலக்கியத்துக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. இப்போது தமிழ் எழுத வரும் இளைஞர்களிடம் நான் திரும்பத் திரும்ப சொல்வது என்னவென்றால், சங்க இலக்கியத்தையும் பக்தி இலக்கியத்தையும் படியுங்கள் என்பதுதான். ஆனால் அது காது கேளாதவனிடம் சொல்வது போலவே இருக்கிறது. இவ்வளவுக்கும் இன்று இந்த இலக்கியம் பூராவும் விளக்கவுரைகளுடன் கணினியிலேயே படிக்கக் கிடைக்கின்றன. இப்படிச் சொன்னால் லிங்க் அனுப்ப முடியுமா என்று கேட்டு கடிதம் வருகிறது.
தமிழ் வளர்த்தவர்களில் நான் முதன்மையாகக் கருதுவது ஆழ்வார்கள். அவர்களை நேரடியாகப் படிப்பதோடு கூட வேளுக்குடி வரதாச்சாரியாரின் உபந்யாசங்கள் மூலமும் நம் அறிவை விருத்தி செய்து கொள்ளலாம். வேளுக்குடி வரதாச்சாரியாரின் புதல்வர்தான் வேளுக்குடி கிருஷ்ணன். வேள்விக்குடி என்பதுதான் வேளுக்குடி என்று மருவியது போலும். வேளுக்குடி கிருஷ்ணன் அமெரிக்காவில் பெரிய உத்யோகத்தில் இருந்து விட்டு, பிறகு இந்தத் தெய்வீகப் பணிக்குத் திரும்பியவர். அவருடைய ஆங்கில உபந்யாசத்தை இன்று கேட்டேன். அற்புதமாக இருந்தது. ஆங்கிலத்தை சில பிராமண குமாஸ்தாக்கள் அழுத்தி அழுத்திப் பேசும் போது எரிச்சலாக வரும். ஆனால் வேளுக்குடி கிருஷ்ணன் அதே உச்சரிப்புடன் பேசும் போது வாத்ஸல்யம் உண்டாகிறது. இன்னும் இன்னும் கேட்க வேண்டும் போல் தோன்றுகிறது. ஆக, எதைப் பேசுகிறோம் என்பதுதான் அந்த மொழியின் அழகை நிர்ணயம் செய்கிறது என்று இன்று தெரிந்து கொண்டேன். இன்னொரு உதாரணமாக, வட இந்தியர்கள் ஆங்கிலம் பேசுவதும் கேட்க வேடிக்கையாக இருக்கும்; எரிச்சல் ஊட்டுவதாக இருக்கும். ஆனால் அதே வட இந்திய உச்சரிப்பில் ஓஷோ பேசும் போது அது ஒரு அற்புதத்தின் வேறொரு வீச்சாகத் தோன்றும்.
வேளுக்குடி கிருஷ்ணனின் அற்புதமான ஆங்கில உபந்நியாசம்: http://www.youtube.com/watch?v=88E8vPfXvRw