பூச்சி 78

பூச்சி முடிந்து விட்டதாக நினைத்தேன்.  ஆனால் சமூகம் அதை முடிக்க விடாது போல் தெரிகிறது.  என்னோடு பழகிப் பார்த்தவர்களுக்குத் தெரியும், நான் எத்தனை அன்பானவன் என்று.  ஆனாலும் எழுத்தின் வழியே மட்டும் அறிந்தவர்கள் என்னை அப்படிச் சொல்ல மாட்டார்கள்.  மூர்க்கன், முரடன் இப்படியான பல பெயர்கள் உண்டு.  என் எழுத்தைக் கூர்ந்து கவனிப்பவர்களுக்குத் தெரியும்.  என் எழுத்தை மதிக்காதவர்களால் கூட சாரு அன்பானவர் என்று சொல்லப்படக் கூடிய ஒரு ஆள், எப்படி மூர்க்கன் என்றும் முரடன் என்றும் பேர் வாங்குகிறான்?  அந்தக் கேள்விக்கு பதில் இந்தப் பதிவில் தெரிந்து விடும்.  பிறருக்கு வெகு சாதாரணமாகத் தோன்றும் ஒரு விஷயம் எனக்குக் கிட்டத்தட்ட ஒரு பாலியல் பலாத்காரமாகத் தெரிகிறது.  அம்மாதிரி ஒரு விஷயத்தைத்தான் இப்போது எழுதப் போகிறேன். 

இரண்டு வாரங்களுக்கு முன்னால் அமெரிக்கத் தமிழரிடையே பிரபலமான ஒரு அன்பர் – ஒரு பிரபலமான இணையப் பத்திரிகையின் ஆசிரியரோ அல்லது ஆசிரியர் குழுவிலோ இருப்பவர் – எனக்கு ஒரு கடிதம் எழுதினார்.   

அன்புள்ள சாரு அவர்களூக்கு,

—————-(பத்திரிகையின் பெயர்) – பொலானோ சிறப்பிதழ் கொண்டு வருகிறது
தங்கள் பங்களிப்பை எதிர் பார்க்கலாமா?
தங்கள் கட்டுரைகளை ஜூன் 10 தேதிக்குள் அனுப்ப இயலுமா?

அன்புடன்,

அன்பரின் பெயரும் ஊரும் கண்டுள்ளது. 

அன்னார் எனக்கு எழுதிய முதல் கடிதம் என்று நினைக்கிறேன்.  முகநூலில் அவரைப் பார்த்திருக்கிறேன்.  மற்றபடி மேற்படி கடிதமே முதல். 

இப்படி ஒரு கடிதம் என் சக எழுத்தாளர்களுக்குப் போயிருந்தால் ஒன்று, கட்டுரையை எழுதி அனுப்பியிருப்பார்கள்.  அல்லது, பதில் எழுதாமல் விட்டிருப்பார்கள்.  அல்லது, கட்டுரை எழுத முடியவில்லை என்றாவது பதில் எழுதுவார்களே ஒழிய யாரும் உட்கார்ந்து இப்படி ஒரு முழுநீள கட்டுரையை எழுத மாட்டார்கள்.  நான் மட்டும் ஏன் எழுதுகிறேன் என்றால், நாலாயிரம் வருஷப் பாரம்பரியத்தை நான் முதல் ஆளாக உடைக்கிறேன்.  எழுத்தாளன் என்றால் யார் என்பதை இந்த சுரணை கெட்ட சமூகத்துக்கு முதல் முதலாகப் புரிய வைக்கிறேன்.  முன்பு ஜெயகாந்தன் செய்தாரே எனக் கேட்கலாம்.  செய்தார்.  ஆனால் அவருக்கு ஆனந்த விகடனின் ஆதரவு இருந்தது.  காங்கிரஸ் கட்சி இருந்தது.  கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது.  மூப்பனாரின் நண்பர்.  ஆனானப்பட்ட எம்ஜியாருக்கே ஜெயகாந்தன் என்றால் கொஞ்சம் உதறல்தான்.  நெருங்க மாட்டார்.  ஜெயகாந்தன் யார் என்று எம்ஜியாருக்குத் தெரியும்.  ஆனால் எனக்கு அப்படிப்பட்ட பலமான பின்னணி இல்லை.  அதனால் ஒண்டியாளாகச் செய்ய வேண்டியிருக்கிறது.

மேல் கண்ட கடிதத்தில் என்ன பிரச்சினை? உங்களில் பலருக்கு அது ஒன்றும் பிரச்சினையாகத் தெரியாது. எனக்கு அது எப்படி இருக்கிறது என்றால், வீதியில் செல்லும் பெண்ணிடம் போய், தயவாக, மிஸ், தங்களிடம் நான் செக்ஸ் வைத்துக் கொள்ள விரும்புகிறேன், வருகிறீர்களா, ஜூன் பத்துக்குள் செக்ஸ் வைத்துக் கொள்ள விருப்பம் என்று சொன்னால் அவள் என்னை செருப்பைக் கழற்றி அடிக்க மாட்டாளா?  அதே கோபம்தான் எனக்கும் வருகிறது.  யார் நீங்கள் என்னிடம் கட்டுரை கேட்க?  அமெரிக்காவின் மிகப் பிரபலமான நகரில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து கொண்டு, முப்பது ஆண்டுகளாக தமிழ்ச் சங்கம் மூலம் மிமிக்ரி ஆர்டிஸ்ட் தாமுவையும், பட்டிமன்றம் ராஜாவையும் முப்பது முறை வரவழைத்துக் கொண்டு தமிழ்த் தொண்டு செய்கிறீர்கள்.   சரி, அந்தத் தமிழ்ச் சங்கத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லையென்று நீங்கள் சொல்லலாம்.  ஆனால் அந்த எதார்த்தம் உங்களுக்குத் தெரியும்தானே?  உங்களால் முடிந்தது ஒரு இணைய இதழ்.  ஒத்துக் கொள்கிறேன்.  அது நல்ல தமிழ்ப் பணிதான்.  ஆனால் தமிழ்நாட்டில் வாழும் ஒரு தமிழ் எழுத்தாளனுக்கு அமெரிக்கா போன்ற ஒரு வளர்ச்சி அடைந்த நாட்டில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து கொண்டு என்ன செய்தீர்கள்?  ஒரு துரும்பையாவது அசைத்தீர்களா?  2000மாவது ஆண்டின் டிசம்பர் மாதம் ஷோபா சக்தி என்னை பாரிஸ் வரவழைத்தார்.  அதற்காக என்னென்னவோ தாஸ்தாவேஜுகளைத் தயார் செய்து அனுப்பினார்.  ஒரு இலக்கியக் கூட்டத்தில் பேசுவதாக ஏற்பாடு செய்தார்.  அப்போதுதான் வீசா கிடைக்கும்.  விமானக் கட்டணத்தை ஏற்றுக் கொண்டார்.  இத்தனைக்கும் நீங்கள் அமெரிக்காவில் வாழ்வது போல் அவர் நடுத்தர வர்க்கம் அல்ல.  இலங்கை அகதி.  போர்க்காலத்தில் ஃப்ரான்ஸுக்கு அகதியாகச் சென்றவர்.  அகதிகளுக்கான உதவித் தொகையில் மிச்சம் பிடித்து என் விமானச் செலவை அனுப்பினார்.  அது தவிர தினமும் கொஞ்ச நேரம் உணவகங்களில் கோப்பை கழுவிக் கொண்டிருந்தார்.  இப்போது அவர் ஃப்ரெஞ்ச் சினிமாவில் பிரபல நடிகர்.  இலக்கியத்திலும் நட்சத்திர எழுத்தாளனாகி விட்டார்.  ஆனால் நான் 20 ஆண்டுகள் முந்திய கதையை ஒரு உதாரணத்துக்காகச் சொல்கிறேன். 

நான் அமெரிக்காவுக்கு என்னுடைய காசில் வருவதற்காக மூன்று முறை முயன்றேன்.  அமெரிக்காவிலிருந்து சரியான அழைப்பிதழ் இல்லாததால் மூன்று முறையும் வீசா நிராகரிக்கப்பட்டது.  மூன்று முறை.  அதுவும் எந்த அழைப்பும் இல்லாமல் என் பணத்தில் வருவதற்கே இந்த நிலை.  அதுவும் பல ஆண்டுகள் இடைவெளியில்.  ஆனால் பட்டிமன்றம் ராஜாவும் புலி போலவும் சிங்கம் போலவும் கமல் போலவும் குரல் கொடுக்கும் மிமிக்ரி தாமுவும் இதோடு 40 தடவை அமெரிக்கா போய் வந்திருக்கிறார்கள்.  ஒவ்வொரு தீபாவளியும் ஒவ்வொரு அமெரிக்க நகரத்துக்குப் போகிறார்கள்.  எனக்கு என் காசில் போக வீசா மறுக்கப்படுகிறது.  முறையான அழைப்பும் இல்லை. 

சரி, இந்த லௌகீக விஷயத்தை விடுங்கள்.  என் நாவல்கள் ஆங்கிலத்தில் கிடைக்கின்றன.  சும்மா இல்லை.  ஸீரோ டிகிரி நாவல் சர்வதேச அளவில் பிரபலமான பதிப்பகமான ஹார்ப்பர்காலின்ஸால் இந்தியாவின் ஆகச் சிறந்த ஐம்பது புத்தகங்கள் என்ற தேர்வில் ஐம்பது புத்தகங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.  சர்வதேசப் பரிசான Jan Michalski பரிசுக்கு லாங் லிஸ்ட் செய்யப்பட்டது.  அதேபோல் Marginal Man நாவலுக்கு லண்டன் பத்திரிகையான ArtRevew Asia பத்திரிகையில் மதிப்புரை வந்தது.  உலகப் புகழ் பெற்ற Allan Sealy அதற்கு முன்னுரை கொடுத்தார்.   இந்த நாவல்களில் ஒவ்வொரு பிரதி வாங்கி உங்களுடைய நகர நூலகத்தில் வைப்பதற்கு ஏதாவது ஏற்பாடு செய்தீர்களா?  எத்தனை முறை என்னுடைய இணைய தளத்தில் திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்ப எழுதிக் கொண்டே இருக்கிறேன்?  நீங்கள் பேசுகின்ற, நீங்கள் எழுதுகின்ற, நீங்கள் பத்திரிகை நடத்துகின்ற, நீங்கள் அடையாளப் படுத்திக் கொள்கின்ற ஒரு மொழியின் முன்னணி எழுத்தாளனான என்னுடைய எழுத்து ஆங்கில வாசகர்களைச் சென்றடைய ஒரு துரும்பையாவது அசைத்ததுண்டா நீங்கள்?  அப்படியிருக்க நான் என்ன டேஷுக்கு ரொபர்த்தோ பொலான்யோ (Roberto Bolaño) பற்றிக் கட்டுரை எழுத வேண்டும்?  எத்தனை காலத்துக்குத் தமிழ் எழுத்தாளர்கள் ஐரோப்பிய எழுத்தாளர்களைப் பற்றியும் அமெரிக்க எழுத்தாளர்களைப் பற்றியும் எழுதிக் கொண்டே இருப்பது?  புதுமைப்பித்தனும் க.நா.சு.வும் தங்கள் வாழ்நாள் பூராவும் வெளிநாட்டு எழுத்தாளர்களைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார்கள்.  ஆனால் அவர்களின் பெயர் கூட அவர்கள் மொழிபெயர்த்த எழுத்தாளர்களின் தேசத்து புத்திஜீவிகளுக்குத் தெரியாது.  ஏன், தமிழர்களுக்கே அவர்களின் பெயர் தெரியவில்லை.  இந்த வெளிநாட்டு எழுத்தாளர் அறிமுக பஜனையையே தமிழ் எழுத்தாளன் எத்தனை நூற்றாண்டுகளுக்கு ஐயா செய்து கொண்டிருப்பது?  தமிழ் எழுத்தாளர்கள் என்ன ப்ளோஜாபர்களா? 

எனக்கு 66 வயது ஆகிறது.  என்னுடைய காசில் அமெரிக்கா செல்ல மூன்று முறை வீசா மறுக்கப்படுகிறேன்.  முறையான அழைப்பு இல்லை என்று தூதரகத்தில் மறுக்கிறார்கள்.  இங்கே காமெடியன்களெல்லாம் அமெரிக்காவுக்கு டவுன் பஸ்ஸில் போவது போல் போய் வந்து கொண்டிருக்கிறார்கள்.  இத்தனைக்கும் சென்ற ஆண்டு சீலே வரை சென்றேன்.  வழக்கம் போல் அமெரிக்க வீசா கிடைக்கவில்லை.  அமெரிக்கா வழியாகப் போனால் டிக்கட்டில் பாதி காசு குறைந்திருக்கும்.  இதெல்லாம் வேண்டாம், குறைந்த பட்சம் என்னுடைய மார்ஜினல் மேன்  நாவல் இருபது டாலருக்கு அமேஸான் டாட் காமில் கிடைக்கிறது.  அனுப்பினால் ஹார்ட் காப்பி வீடு தேடி வரும்.  அதை வாங்கி உங்கள் ஊர் நூலகத்தில் கொடுத்திருந்தால் மனம் மிக மகிழ்ந்து ரொபர்த்தோ பொலான்யோ பற்றிய கட்டுரையை அனுப்பி வைத்திருப்பேன்.  ஒரு தமிழ் எழுத்தாளனின் மிகக் குறைந்த பட்ச எதிர்பார்ப்பு.  அதையே காணோம். 

இவர்கள் கட்டுரை வேண்டும் என்றால் – அதுவும் பதினைந்தே நாட்களில் – எழுதிக் கொடுத்து விட வேண்டும்.  அதுவும் என்ன?  ஓசியில்.  அந்தக் கடிதத்தில் பணம் பற்றி ஏதாவது ஒரு குறிப்பு இருக்கிறதா பாருங்கள்.  எல்லாமே ஓசி.  உங்களுக்கு அமெரிக்காவில் என்ன எல்லாம் ஓசியிலா கிடைக்கிறது?  லண்டனுக்கு ஒரு கதை அனுப்பினேன்.  ஐம்பதாயிரம் ரூபாய் அனுப்பினார்கள்.  இங்கே என்னவென்றால், 30 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு ஓசியில் ——பஜனை பண்ணக் கூப்பிடுகிறார்கள். 

இவர்களுக்கு என்ன நினைப்பு தெரியுமா?  எனக்கு இவர்களின் பத்திரிகையில் எழுத வாய்ப்பு தருகிறார்களாம்.  —————– மானே தேனே என்று போட்டுக் கொள்ளுங்கள். 

எனக்கு ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது.  மூணு ஜென்மம் எடுத்தாலும் மறக்காது.  பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.  சம்பவத்தில் ஈடுபட்டவர் வேறு ஒரு நபர். அமெரிக்கப் பிரபலம். அப்போது நான் குடிப்பேன்.  நண்பர்களுடன் சென்னையில் ஒரு சர்விஸ் அபார்ட்மெண்ட்டில் பேசிக் கொண்டிருந்தேன்.  குடி ரெண்டாம் பட்சம்தான்.  கூட்டத்தில் குடிக்காதவர்களே அதிகம்.  நாலைந்து பேர்.  என் பக்கத்தில் ரெமி மார்ட்டின்.  அப்போது அதன் விலை ஐந்தாயிரம் ரூபாய்.  அப்போது ஒரு அன்பரின் போன் வந்தது.  அமெரிக்காவிலிருந்து விடுப்பில் வந்திருக்கிறேன்.  உங்களைச் சந்திக்க முடியுமா?  நான் எங்கே இருக்கிறேன் என்று சொன்னேன்.  அன்பரும் வந்தார்.  பெரிய பழக்கமெல்லாம் கிடையாது.  ஒருவரை ஒருவர் கேள்விப்பட்டிருந்தோம்.  அவர் என் எழுத்தைப் படித்திருக்கலாம்.  அவ்வளவுதான். 

விருந்தாளியை கவனிக்க வேண்டாமா?  ரெமி மார்ட்டினும் இருந்தது.  இந்திய சரக்கும் இருந்தது.  சாப்பிடுகிறீர்களா என்று கேட்டேன்.  இந்திய சரக்கு ஒத்துக் கொள்ளாது, ரெமி மார்ட்டின் சாப்பிடுகிறேன் என்றார்.  நாலு பெக் சாப்பிட்டார்.  நானும் சாப்பிட ரெமி மார்ட்டின் தீர்ந்து விட்டது.  காலை வரை பேசுவதற்கு எனக்கு தீர்த்தம் இல்லை.  அன்பரும் ஒரு மணி நேரத்தில் கிளம்பி விட்டார்.  என் நண்பர்கள் என்னைத் திட்டினார்கள்.  அமெரிக்க அன்பர் கிளம்பும் போது சற்றே குற்ற உணர்ச்சியுடன் ”நீங்கள் வைத்திருந்ததைக் குடித்து விட்டேன், எப்படியாகிலும் நாளை உங்களுக்கு ஒரு ரெமி மார்ட்டின் பாட்டில் கிடைக்கச் செய்கிறேன்” என்று வாக்களித்தார்.  இதோ பத்து ஆண்டுகள் ஆகி விட்டன.  ஒரு கடிதம் இல்லை.  போன ரெமி மார்ட்டின் போனதுதான்.  அமெரிக்க வாழ் தமிழ் நண்பர்களே, ஒரு அமெரிக்கன் இதை எத்தனை offensiveவாக எடுத்துக் கொள்வான் என்று உங்களுக்குப் புரியும்தானே?  இதை அந்த ஆள் அமெரிக்காவில் செய்ய மாட்டார்.  இந்தியாவில் செய்வார்.  Because he feels his fellow Indians are assholes.  அதுதான் பிரச்சினை.  எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், அப்போது என் ரெமி மார்ட்டினைக் குடித்து விட்டு ஓடியவருக்கும் இப்போது வந்து ரொபர்த்தோ பொலான்யோ கட்டுரை கேட்பவருக்கும் அதிக வித்தியாசம் இல்லை என்பதுதான். அமெரிக்க வாழ் தமிழர்களில் பெரும்பாலானோர் இப்படித்தான் இருக்கிறார்கள். 

நான் எதற்கு ஐயா ரொபர்த்தோ பொலான்யோ பற்றி எழுத வேண்டும்?  ஒவ்வொரு தமிழ் எழுத்தாளனும் இங்கே சோத்துக்கு சிங்கி அடித்துக் கொண்டிருக்கிறான்.  பப்ளிஷரைக் கேட்டால் ஐம்பது காப்பி போட்டு விட்டேன், அமர்க்களமாக விற்கிறது என்கிறார்.  எட்டு கோடி தமிழர்களுக்கு இந்த ஐம்பது காப்பிதான் தமிழ் எழுத்தாளனின் அடையாளம்.   இங்கே தமிழ் எழுத்தாளன் சோத்துக்கு சிங்கியடிக்காமல் இருக்க ஒரே வழிதான் இருக்கிறது.  அது, சினிமாவுக்கு எழுதுவது.  அதில் உள்ள சிக்கல்களைத்தான் நான் விலாவாரியாக எழுதித் தீர்த்து விட்டேன். 

எவ்வளவு எழுதினாலும் என்னை என்னால் ஆற்றுப்படுத்திக் கொள்ள முடியவில்லை.  அது எப்படி இவ்வளவு எழுதியும் அதில் ஒன்றைக் கூட படிக்காமல் திரும்பவும் ஓசி பஜனைக்கே வருகிறார்கள்?  அதுவும் அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு?  ”15 நாளில் ரொபர்த்தோ பொலான்யோ பற்றி ஒரு கட்டுரை தர முடியுமா?”  நான் எழுதிக் கேட்கவா, 15 நாளில் எனக்கு நீங்கள் ரெண்டாயிரம் டாலர் அனுப்ப முடியுமா? என்னய்யா விளையாட்டாக இருக்கிறது?  எழுத்தாளன் என்றால் ஓசியில் வரும் ஜிகலோவா?  என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?  தமிழ் சினிமா ஹீரோக்களிடம் ஃபைனான்ஸ் பற்றிப் பேசாமல் ஒரு வார்த்தை உங்களால் பிஸினஸ் பேச முடியுமா?  முதலில் அவர்களையெல்லாம் உங்களால் தொடர்பு கொள்ளத்தான் முடியுமா?  அவர்களெல்லாம் வெறும் entertainers.   ஆனால் எழுத்தாளன் என்றால், என்ன வேண்டுமானாலும் பேசுவீர்கள்?  உங்களுக்கெல்லாம் அந்த அமெரிக்க போலீஸ் தெரக் சாவின்தான் லாயக்கு. 

***

மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai