டியர் சாரு,
அன்று சி.சு. செல்லப்பா உரையை லைவ்-ஆகக் கேட்க முடியாத சூழ்நிலை.
உரை ஆன்லைனில் கிடைக்கும் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். உரைக்கான கட்டணம் ஜி-பே வழியாக அனுப்பியிருக்கிறேன். உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது உரைக்கான லிங்க் அனுப்புவீர்களானால் பயனடைவேன்.
எனக்கு சொந்த ஊர் வத்தலக்குண்டு. சி.சு. செல்லப்பாவின் தெரு இருந்த/இருக்கும் அதே தெருவில்தான் என் வீடும். எதிர் வரிசையில் இரண்டு மூன்று வீடுகள் தள்ளி அவர் வீடு.
சின்ன வயதில் நாங்கள் எல்லாம் விளையாடுகையில் அவர் வீட்டு சுவரில் பந்து அடித்து விட்டால் வீட்டுக்கு வெளியே வந்து ரொம்பவே சத்தம் போடுவார். அவர் எவ்வளவு பெரிய ஆள் என்பதெல்லாம் அப்போது எங்களுக்குத் தெரியாது. எங்களைப் பொறுத்த வரையில் தெருவில் எங்களைச் சுதந்திரமாக விளையாட விடாத மற்றுமொரு சிடுசிடு பெரியவர் அவர், அவ்வளவே.
பிற்காலத்தில் அவரைப் பற்றித் தெரிந்து கொண்ட பிறகு ‘அடடே, சின்ன வயசுல அப்படி எல்லாம் பண்ணி இருக்கக் கூடாதோ?’ என்று (இப்போதும்) எண்ணுவதுண்டு. இப்போது அவர் இருந்த வீட்டைப் பல விதங்களில் மாற்றி அமைத்து விட்டார்கள். அவர் வாழ்ந்ததற்கு அடையாளமாய் ஒரு அறிவிப்புப் பலகை கூடக் கிடையாது.
அதே தெருவில்தான் பி.ஆர். ராஜமய்யர் வீடும். அவர் வீட்டு வாசலில் ஒரு சின்ன அறிவிப்புப் பலகை பார்த்திருக்கிறேன், இப்போது இருக்கிறதா எனத் தெரியவில்லை. அடுத்த முறை ஊருக்குப் போகும்போது பார்க்க வேண்டும்.
நகுலன் உரையை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
நன்றி.
ஆர். முத்துக்கிருஷ்ணன்
மகாப் பெரியவரா அல்லது ராமகிருஷ்ணரா தெரியவில்லை, இருவரில் ஒருவர்தான் இதைச் சொன்னது. ஒரு பக்தர் சொல்கிறார், ஆன்மீகத் தேடலுக்கு ஒரு குரு தேவை என்கிறீர்கள். ஆனால் என்னுடைய குருவோ கஞ்சா புகைக்கிறார், புறம் பேசுகிறார். அதனால் அவரை விட்டு விட்டு வேறொரு குருவைத் தேடலாமா என்று பார்க்கிறேன். அதற்குப் பெரியவர் சொன்னார், ஒரு குரு சரியில்லை என்று இன்னொரு குருவிடம் போனால் அவரிடமும் ஏதாவது குறை தென்படும், அப்புறம் வேறொரு குருவிடம் செல்வாய். அங்கேயும் குறை இருக்கும். கடைசியில் வாழ்நாள் முழுவதுமே உன்னால் எதையும் கற்றுக் கொள்ள முடியாமல் போய் விடும். குரு என்பவர் துடைப்பம் மாதிரி. இதோ இந்தத் தரையைப் பார், தூய்மையாக இருக்கிறது. இதைத் தூய்மை செய்யும் துடைப்பம் அழுக்காகத்தான் இருக்கும். ஆன்மீகத்தை விட எழுத்தாளர்களுக்கு இந்தக் கதை ரொம்பப் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
செல்லப்பா கடைசி வரை மாறவே இல்லை. வத்தலக்குண்டுவில் தெருவில் விளையாடிய பொடியன்களை விரட்டி அடித்தார். பிறகு சென்னை திருவல்லிக்கேணியில் இருந்த போது எழுத்தாளர்களை விரட்டி அடித்தார். க.நா.சு. பெயரை உச்சரித்தால் அவருக்கு ஆகாது. அதேபோல் பி.எஸ். ராமையாவைப் பிடிக்காது என்று சொன்னால் அப்புறம் உங்கள் முகத்திலேயே முழிக்க மாட்டார். இப்படியெல்லாம் இருந்த செல்லப்பாவின் எழுத்து ஒவ்வொன்றும் ஒருவரின் ஆன்மாவுக்குள் ஊடுருவக் கூடியது. ஆளுமையையே மாற்றி விடக் கூடாது. அவருடைய சுதந்திர தாகம் ஒரு தேசத்தின் கதை; ஒரு காலகட்டத்தின் கதை; இழந்து போன பழைய அறம் மற்றும் மதிப்பீடுகளின் கதை. ஆக, செல்லப்பா எப்படி இருந்திருந்தால் நமக்கு என்ன?
மே 31 நடந்த செல்லப்பா சந்திப்பு பற்றி அமல்ராஜ் ஃப்ரான்சிஸ் பின்வரும் கடிதம் அனுப்பினார். பெய்ரூத்தில் (லெபனான்) அமர்ந்து என் செல்லப்பா உரையைக் கேட்டிருக்கிறார்.
வணக்கம் சாரு,
எப்படி இருக்கிறீர்கள்? கொரோனா நிலைமை எப்படி இருக்கிறது?
செல்லப்பா பற்றிய உரை மிகவும் சிறப்பாக இருந்தது. அலுவலகத்தில் கொஞ்சம் அதிகமான வேலைகள் என்பதால் உடனடியாக உங்களுக்கு எழுத முடியவில்லை. ஒரு படைப்பாளி பற்றிய “இரண்டு மணி நேர” தொடர்ச்சியான உரையை நான் இதுவரை என் வாழ்நாளில் கேட்டதில்லை. இலக்கிய உரைகளின் மீதான பரிச்சயம் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வருகிறது போலிருக்கிறது – உங்கள் மூலமாக. அதுவும் ஒரு இலக்கியக் கூட்டத்தில், ஒருவர் பேச்சைக் கேட்டபடி இரண்டு மணி நேரம் உட்கார்ந்திருப்பதெல்லாம், என்னைப் பொறுத்தமட்டில் வேலைக்காகாத சமாச்சாரம். யூட்யூபில் இருக்கும் இலக்கிய உரைகளையெல்லாம் என்னால் தொடர்ந்து பார்க்க முடியவில்லை. அதிகமானவை வெறும் அறுவையாக இருக்கின்றன. உள்ளடக்கத்தை மாத்திரம் வைத்துக்கொண்டு ஒரு அழகியல், ஈர்ப்பு எதுவுமில்லாமல் அறுப்பார்கள். ஆனால், செல்லப்பா பற்றிய உங்களுடைய உரையை நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது.
அதிகாலை மூன்று மணிக்கே எழுந்துவிட்டேன். முந்தின இரவு பனிரண்டு மணிக்குத்தான் படுக்க வேண்டி வந்ததால் இரண்டு தொலைபேசிகளிலும் மூன்று மணிக்கு அலாரம் வைத்தேன். ஒன்று பிசகினால் இன்னொன்று காப்பாற்றும் அல்லவா? கோப்பியைப் போட்டுக்கொண்டு அமர்ந்தால் ஐந்தரை மட்டும் அங்கிருந்து அரக்கவே இல்லை.
சாரு ஒரு பிரமாதமான பேச்சாளர் இல்லை, என்றாலும் இரண்டு மணிநேரம் ஒருவனைப் பிடித்துவைத்திருக்கும்படி பேச்சை எப்படிக் கோர்த்துக்கொள்ள வேண்டும் என்கின்ற வித்தை தெரிந்தவர். “எப்படி இரண்டு மணிநேரம் குந்திக்கொண்டிருந்தாய், அதுவும் அதிகாலையில்?” என்று டினேசா கேட்டபோது இப்படித்தான் சொன்னேன். Very contentful, அலுப்புத்தட்டாத பேச்சுக் கோர்வை. சிலரது அலட்டலான கேள்விகளை விடுத்து (அல்லது அந்த ஒரே டெம்லேட் கேள்விகள்), மிகவும் பயனுள்ள இரண்டு மணித்தியாலங்கள்.
நன்றி சாரு. அடுத்து நகுலனின் உரைக்காகக் காத்திருக்கிறேன்.
அன்புடன்,
அமல்.
அமல் கடிதத்தில் ஒரே ஒரு திருத்தம்தான். மொத்தம் மூன்று மணி நேரம். நான் இடைவெளியின்றிப் பேசியது இரண்டு மணி நேரம். பிறகு கேள்வி நேரத்திலும் அநேகமாக நான் தான் பேசினேன். அது ஒரு மணி நேரம். மூன்று மணி நேரம் இரண்டு மணி நேரமாகத் தோன்றுகிறது என்றால், அது பெரும் வெற்றிதான். இதைத் திறம்பட ஒருங்கிணைத்த சதீஷ்வருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.