சட்ட நடவடிக்கை என்ற கட்டுரையில் மட்டும் ஒரு சின்ன கருத்து முரண்பாடு எனக்கு உண்டு. அதில் சென்ற ஆண்டு ஜெ. மீது வழக்குத் தொடுத்த ஒருவரைப் பற்றி மிக உயர்வான கருத்துக்களை ஜெ எழுதியுள்ளார். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. எத்தனை படித்திருந்தாலும் ஒருவர் தன்னை கடவுள் போலவும் மற்றவர்களை அடிமை போலவும் நினைத்தால், அதுவும் அவர் மார்க்சிஸ்டாக இருந்தால், அதிகாரம் கிடைத்தால் அவர் ஹிட்லரைப் போலவே மாவோ போலவோதான் மாறுவார். ஏனென்றால், படிப்பு அவரிடம் ஆயுதமாகச் சேகரமாகிறது. அந்த நபரை விட பா.செ. ஆபத்தில்லாதவர். பா.செ.யின் கதைகள் மோசமானவை. ஆனால் ஜெ. மீது போன வருடம் வழக்குத் தொடுத்தவர் ஆளே ஆபத்தானவர். ஜெயமோகன் மீது பா. செயப்பிரகாசம் நீதிமன்ற நடவடிக்கை எடுத்திருக்கவே கூடாது. அப்படிச் செய்தால் மோடியை எதிர்த்து நான் தினந்தினம் ஒரு கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆயுள் முழுவதும் அப்புறம் நான் கோர்ட் வாசல்படியிலேயேதான் கிடக்க வேண்டியிருக்கும். ஏழு ஆண்டுகள் ஒரு சாமியாரால் அப்படித்தான் கிடந்தேன். பெங்களூர் கோர்ட் வாசலில். பல சமயங்களில் நீதிபதி எனக்கு பெயில் கொடுக்க மாலை ஐந்து மணி ஆகி விடும். அதுவரை – காலை பத்து மணியிலிருந்து நீதிபதி எதிரே நின்று கொண்டே இருப்பேன்.
எழுத்தாளர்களை நீதிமன்றத்துக்கு இழுப்பது ஒரு மோசமான காலகட்டத்தின் அடையாளம். தென்னமெரிக்கா சர்வாதிகாரிகள்தான் இடதுசாரி எழுத்தாளர்களை சிறையில் தள்ளினார்கள். இங்கே இடதுசாரிகளே எழுத்தாளர்களுக்கு எதிராக இருப்பது துரதிர்ஷ்டவசமானது.