பூச்சி 89

நகுலனின் நினைவுப் பாதை நாவலைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.  இரண்டு மணி நேரத்தில் படிக்கக் கூடிய நாவல் இல்லை.  நேற்று மாலையிலிருந்து படிக்கிறேன்.  சில சமயங்களில் ஒரு முழு மணி நேரமும் ஒரு பக்கம்தான் படிக்க முடிகிறது.  பலவித சிந்தனைகளுக்குள் ஆழ்த்தும் நாவல்.

திடீரென்று எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது.  சினிமாவில் எழுதியிருந்தால் ஒரு நாள் கூட என்னை அங்கே தாங்கியிருக்க மாட்டார்கள்.  ஏனென்றால், சினிமாவிலும் சரி, சினிமாவுக்கு வெளியேயும் சரி, சினிமாக்காரர்கள்தான் lords.  அங்கே எழுத்தாளன் எல்லாம் சும்மா.  பெரிய மரியாதை கொடுப்பது போல் நடிப்பார்கள்.  அது நிஜம் அல்ல.  உள்ளுக்குள் நீ சும்மா, நான் லார்ட் என்ற எண்ணம்தான் இருக்கும் அவர்களுக்கு.  ஏனென்றால், அவர்கள் படிப்பதில்லை.  படித்திருந்தால் மரியாதை வரும்.  சரி, ஒருசிலர் படிக்கிறார்களே என்று நீங்கள் நினைக்கலாம்.  அதெல்லாம் கூட தங்களுடைய ஈகோவைத் திருப்திபடுத்திக் கொள்வதற்குத்தானே ஒழிய எழுத்தைப் புரிந்து கொண்டு படிப்பது அல்ல.  உதாரணமாக, கமல் ஞானக்கூத்தனிடம் தான் எழுதிய மொக்கைக் கவிதையைக் கொடுத்து எப்படி இருக்கு என்று கேட்க, அதற்கு ஞானக்கூத்தம் ஓ பிரமாதம் என்று சொல்ல, அதையே ஞானக்கூத்தன் பற்றிய ஆவணப்படத்தில் சொல்வாரா கமல்?  என்னிடம் கொடுத்துக் கேட்டிருந்தால் மரண மொக்கை என்று மனதில் நினைத்துக் கொண்டு, நல்லா இல்லீங்க கமல் என்று சொல்லியிருப்பேன்.  செட் ஆகாது.

மேலும், சினிமாவில் நான் நுழைந்திருந்தால் ரெண்டு நாள் கூடத் தாக்குப் பிடித்திருக்க மாட்டேன்.  ஏனென்றால், ஜக்கி வாசுதேவ் மாதிரிதான் நடந்து கொள்வேன்.  புரிகிறதா?  ஒரு ஊடகக்காரர் அவரிடம் மிஸ்டர் வாசுதேவ் என்று விளிக்க, சத்குரு என்று சொல்லுங்கள் என்று சொன்னார் ஜக்கி.  நான் அப்படிச் சொல்ல மாட்டேனாயிருக்கும்.  ஆனால் என் நடை உடை பாவனை ஜக்கி போல்தான் இருக்கும்.  ஜக்கியின் நடை உடை பாவனையை கவனித்திருக்கிறீர்களா?  இல்லையென்றால், கரன் ஜோஹர் அவரை ஒரு வார்த்தைப் பேட்டி காணும் போது ஜக்கியின் அமெரிக்கையையும் பந்தாவையும் ஜோஹரின் பாடி லேங்வேஜையும் கவனியுங்கள்.  கரன் ஜோஹர் அப்படியேஜக்கி முன் கூனிக் குறுகுவார்.  ஏதோ ஒரு சிறகைப் போல் ஜோஹரைக் கையாளுவார் ஜக்கி.  ஜெயகாந்தனை நான் சந்தித்தது இல்லை.  ஆனால் ஜேகே அப்படித்தான் இருந்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.  எனக்கு யாரிடமிருந்து வந்தது என்று தெரியவில்லை.  இயல்பே அப்படித்தான் என்று நினைக்கிறேன். 

எல்லோரையும் சமமாகவே நடத்துவேன்.  ஆனால் பவ்யம் காட்டுவது எனக்குப் பிடிக்காது.  எழுத்தாளன் என்றால் ஒரு ஹோதா இருக்க வேண்டும்.  சார்ல்ஸ் ப்யூகாவ்ஸ்கி தன்னுடைய வாசகர் சந்திப்புகளில் மேடையில் ஒரு ஓரத்தில் பானை வைக்கச் சொல்வாராம்.  எப்போதும் குடியிலேயே இருப்பவர் அல்லவா, வாந்தி வந்தால் எடுப்பதற்கு.  ஃப்ரான்ஸிலும் அப்படி ஒரு ஆள் இருக்கிறார். Michel Houellebecq.  நல்லவேளை, நான் சினிமாவுக்குப் போகவில்லை.  போயிருந்தால் சிலருடைய தூக்கம் போயிருக்கும்.

அடுத்த ஞாயிறு நகுலன் சந்திப்புக்குத் தயாராயிருங்கள்.  அது பற்றிய விபரங்களை சதீஷ்வரன் அனுப்பியிருந்தார்.

Topic: Session with Charu – நகுலன்
Time: Jun 28, 2020

06:00 AM Mumbai, Kolkata, New Delhi

Join Zoom Meeting
https://zoom.us/j/9205225069?pwd=SHhzUTVwNlNyc3crbjl5TGsvc1VYdz09

Meeting ID: 920 522 5069
Password: 7Xed4N

அதே நடைமுறைகள் தான்:

  1. Zoom-ல் இருக்கும் வரம்புகளின் காரணமாக 100 நபர்கள் மாத்திரமே பங்குபெற இயலும். இது ‘முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை’ போன்றது. அதாவது முதலில் இணையும் 100 நபர்கள் சந்திப்பில் பங்குபெறலாம். மற்றவர்களால் இயலாது.
  2. சந்திப்பு சரியாக காலை 6 மணிக்குத் தொடங்கியவுடன், சதீஷ்வரனும் நானும் மாத்திரம் unmute-ல் இருப்போம். இணையும் மற்றவர்கள் அனைவரும் mute-ல் இருப்பர். இது தேவையற்ற இடையூறுகள், இரைச்சல்களைத் தவிர்க்க.
  3. முதல் இரண்டு மணி நேரம் என் உரை முடிந்தவுடன், கேள்வி கேட்க விரும்புபவர்கள் Zoom chat box-ல் விருப்பத்தைத் தெரிவிக்கலாம். அவர்கள் வரிசையாக, ஒவ்வொருவராக unmute செய்யப்படுவார்கள்.