ஒரு பெயரை விட்டு விட்டேன். இளம் எழுத்தாளர். முகநூலில் அவர் எழுதுவதைப் படித்திருக்கிறேன். பிடிக்கும். தன் சிறுகதையைத் தொகுதியைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். ஒரு ஆண்டு ஆனது படிக்க. அதுவரை தொடர்ந்து கேட்டபடியே இருந்தார். இடையில் என் நண்பர் ஒருவரும் அதைப் படிக்கச் சொல்லி வற்புறுத்திக்கொண்டே இருந்தார். படித்தேன். அவர் எந்த மக்களைப் பற்றி எழுதியிருந்தாரோ அதுதான் தமிழில் அவர்களைப் பற்றி எழுதப்பட்ட முதல் பதிவு. நல்ல இலக்கியத் தரம் வாய்ந்ததாகவும் இருந்தது. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட வேண்டிய கதைகள். இதையெல்லாம் எழுதினேன்.
ஆனால் அவர் தன் வாழ்நாளில் என் பெயரை உச்சரிக்கும் சாத்தியமே இல்லை. இதுவரை உச்சரித்ததும் இல்லை. இனியும் நடக்கப் போவது இல்லை. ஆனால் நான் வழங்கும் சான்றிதழ் மட்டும் தேவைப்படுகிறது. பரவாயில்லை. சமீபத்தில் அவருடைய முகநூல் பதிவு ஒன்றில் வாழ்கை என்று பார்த்தேன். இப்படி எழுதுபவர்களை சிறையில் தள்ள வேண்டும் என்பது என் அவா. தமிழை வன்கொடுமை செய்தால் தண்டனை இல்லையா? ஆனால் இதையெல்லாம் வெளியே சொல்ல முடியுமா? கோபத்தை மனதுக்குள் வைத்துக் கொண்டு, ஒரு எழுத்தாளர் இப்படி வாழ்கை என்று எழுதலாமா என்று அவர் பெயரைக் குறிப்பிட்டே முகநூலில் எழுதினேன். இதைப் படிக்கும் நீங்களாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? ஒன்று, முகநூலிலேயே வருத்தம் தெரிவித்து தவறை மாற்றிக் கொண்டிருக்கலாம். அல்லது, எனக்கு ஃபோன் செய்திருக்கலாம். அல்லது, அந்த வாழ்கையையாவது வாழ்க்கையாக்கி இருக்கலாம். இந்த மூன்றுமே நடக்கவில்லை. ஏன் சொல்லுங்கள்? அவர் என் எழுத்தையே படிப்பதில்லை. நான் எழுதியதே அவருக்குத் தெரியாது. இப்படி அவர் பெயரைக் குறிப்பிட்டு எழுதியிருக்கிறேன் என்பதை அவரிடம் சொல்வதற்குக் கூட அவருடைய மிக விரிவான நட்பு வட்டத்தில் ஆட்கள் இல்லை. ஏனென்றால், அவர்கள் யாருமே என்னை வாசிப்பதில்லை.
இப்படிப்பட்ட நிலைமையில்தான் என் நண்பர் நான் படிக்க வேண்டிய எழுத்தாளர்கள் என பட்டியலை அனுப்புகிறார். நான் அவர்களைப் படிக்க வேண்டுமா? அவர்கள் என்னைப் படிக்க வேண்டுமா? சரி, நாமும் எஸ்.ரா. மாதிரி, ஜெயமோகன் மாதிரி நாமும் உருப்பட்டு ஊர் சேர்வோம் என்று நண்பர் அனுப்பிய பட்டியலில் உள்ள புத்தகங்களையெல்லாம் வாங்கினேன். ஒரே கந்தர்வகோலம். ஒரே அச்சுப் பிழை. சகிக்க முடியவில்லை. பதிப்பாளர் என் நண்பர். என் மீது மிகுந்த மதிப்பு வைத்திருப்பவர். பெயர் சொல்ல முடியாது. சரி, அச்சுப் பிழையையும் மீறி உள்ளே போவோம் என்று போனேன். டெடிகேஷனிலேயே பிழை. குரஸவா என்றால் காராசேவு என்று இருக்கிறது. நெருப்பு வைத்துக் கொளுத்த வேண்டாமா ஐயா? ஏன் இப்படியெல்லாம் புத்தகம் போடுகிறீர்கள்? இதற்குப் பேசாமல் பர்மா பஸாரில் போய் செக்ஸ் படங்களின் திருட்டு சிடி விற்கலாமே?
சரி, இத்தனை தடைகளையும் மீறி ஒன்றிரண்டு புத்தகங்களைப் படித்தேன். சகிக்கவில்லை. ஒரு புத்தகம் அல்லது பொதுவாக கலை என்ற சாதனம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நீண்ட காலத்துக்கு முன் ந. முத்துசாமியின் நீர்மை தொகுதியை நான் எப்படி அணுகினேன் என்பதை உதாரணமாகச் சொல்லலாம். நாம் அறிந்த நாடகாசிரியர், இவர் என்ன சிறுகதை எழுதியிருக்கப் போகிறார், திரும்பத் திரும்ப பிராமண வாழ்க்கைதானே, அதைத்தான் வேண்டும் வேண்டும் என்று தி.ஜா. எழுதி முடித்து விட்டாரே என்ற அவநம்பிக்கையுடன் தான் முத்துசாமியின் நீர்மை தொகுப்பை எடுத்தேன். அவர் நாடகம் எழுதுவதற்கு முன்பே சிறுகதைகள் எழுதி விட்டார். எழுத்து கால எழுத்தாளர். ஆனால் நீர்மை படித்த பிறகு முத்துசாமியை நான் என் தகப்பனாக வரித்துக் கொண்டேன். அவர் என் ஆத்மாவுக்குள் கலந்து விட்டார். கலை என்றால் அப்படி இருக்க வேண்டும். என் வெறுப்பைக் கூட வென்றெடுப்பதாக இருக்க வேண்டும். இங்கே என்ன நடக்கிறது என்றால், நான் மிகுந்த அன்புடன் நம் தம்பிகளாயிற்றே என்று புத்தகத்தை எடுக்கிறேன். விரட்டி விரட்டி அடிக்கிறது புத்தகம். இது கலை அல்ல; கொலை.
காரணம், உழைப்பே இல்லை. என்னுடைய நகுலன் உரையைக் கேட்ட பிறகு நண்பரும் விஞ்ஞானியுமான கிருஷ்ணமூர்த்தி ”உங்களுடைய அசுர உழைப்பு எனக்கு ஜப்பானியர்களை ஞாபகப்படுத்துகிறது” என்றார். உண்மைதான். அரூ பத்திரிகையில் வர இருக்கும் நேர்காணலை நீங்கள் படித்தால் கிருஷ்ணா கூறியது உங்களுக்குப் புரியும். ஒரு நாவலை எழுத அமர்ந்தால், அதற்கு முன்னர், செல்லப்பா, க.நா.சு., எம்.வி.வெங்கட்ராம், எஸ். சம்பத், கரிச்சான் குஞ்சு, தி. ஜானகிராமன், நகுலன், தஞ்சை ப்ரகாஷ் போன்றவர்களைப் படித்து விட்டு வர வேண்டாமா? சினிமாவில் ஒரு படத்தை இயக்குவதற்காக ஐந்து ஆண்டுக் காலம் எடுபிடியாக இருக்க வேண்டியிருக்கிறது. ஆனால் நாவல் என்று வரும்போது முன்னோடிகள் ஒருத்தரையும் படிக்காமல் எழுதிக் குவிக்கிறார்கள். அது அவர்கள் விருப்பம். இதெல்லாம் என் மீது திணிக்கப்படும்போதுதான் எரிச்சல் வருகிறது.
இதற்கு மேல் இது பற்றிப் பேசுவதற்கு ஒன்றுமில்லை. நேர விரயம்தான் மிச்சம். இத்தனைக்கும் மேலும் பொறுமையாக இரண்டு மூன்று எழுத்தாளர்களின் புத்தகங்களை எடுத்து வைத்திருக்கிறேன். காரணம், அவை என்னை உள்ளே இழுத்தன. மெதுவாகப் படிக்க வேண்டும்.
மேலும், என்னுடைய இயங்குதளம் வேறு. இரண்டு மாதங்களுக்கு முன்பு Music & Literature என்ற சஞ்சிகையிலிருந்து ஒரு பேட்டி அனுப்பும்படி கேட்டிருந்தார்கள். கேள்விகளையும் நானே உருவாக்க வேண்டும். மறுத்து விட்டேன். ம்யூசிக் அண்ட் லிட்ரேச்சரோடு ஒப்பிட்டால் Granta சஞ்சிகையை ஜனரஞ்சகப் பத்திரிகை என்று சொல்லலாம். அப்படிப்பட்ட பத்திரிகை M&L. இதுவரை ஒன்பது தொகுதி வந்துள்ளது. ஒரு தொகுதியைப் படிக்கவே ஒரு மாதம் ஆகும் போல் இருக்கிறது. எழுத்தாளர்களின் பத்திரிகை என்று சொல்லலாம். விலை 35 டாலர். இப்போதைய இதழ் Peter Bichshel சிறப்பிதழ். பீட்டர் பிஷல் ஸ்விஸ் ஜெர்மன் எழுத்தாளர். 85 வயது ஆகிறது. நம் ஊரில் அறுபது ஆனால் வயதாகி விட்டது, ஜாக்கிரதையாக இருங்கள் என்று சொல்லிச் சொல்லியே பயமுறுத்துகிறார்கள். அங்கே பீட்டர் பிஷல் 85 வயதில் தம் அடித்துக் கொண்டுதான் புகைப்படத்துக்கு அமர்கிறார். ம்யூசிக் & லிட்ரேச்சர் ஆட்களுக்கு நான் எழுதியிருக்கிறேன், பீட்டர் பிஷல் மாதிரி எனக்கு ஸ்பெஷல் இஷ்யூ வெளியிடுங்கள், அல்லது, கேள்விகளை நீங்கள் அனுப்புங்கள் என்று. கடிதப் போக்குவரத்து நடந்து கொண்டுள்ளது. இந்தப் பத்திரிகை சர்வதேச அளவில் இன்னும் சரிவரப் பேசப்படாத, பேசப்பட வேண்டிய எழுத்தாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறது. உதாரணமாக, லத்தீன் அமெரிக்கா என்றால் மார்க்கேஸ் என்பீர்கள், இப்போது மரியோ பர்கஸ் யோசா. அவருக்கு நோபல் கிடைத்த பிறகு. ஆனால் ம்யூசிக் அண்ட் லிட்ரேச்சரில் அலெஹாந்த்ரா பிஸார்நிக்கின் ஸ்பெஷல் இஷ்யூ வந்துள்ளது. Alejandra Pizarnik யார்? என்னுடைய ஊரின் மிக அழகான பெண் மொழிபெயர்ப்புத் தொகுதியைப் படியுங்கள். கிண்டிலில் கிடைக்கிறது. 99 ரூ. விலை. வாங்கிப் படியுங்கள். அலெஹாந்த்ரா பிஸார்னிக்கை லத்தீன் அமெரிக்காவின் மிகச் சிறப்பான பத்து எழுத்தாளர்களில் முதலில் வைக்கலாம். ஆனால் பெயர் வெளியே தெரியாது. நான் இவருடைய கதையை 25 ஆண்டுகளுக்கு முன்னால் மொழிபெயர்த்திருக்கிறேன்.
இப்படியாக என் கனவுகளும் வேலைகளும் வேறு தளத்தில் இருக்கின்றன. மேலும், இன்னொரு முக்கியமான விஷயம். தமிழில் எப்படி பெருமாள் முருகன் போன்றவர்கள் பிரபலமாக இருக்கிறார்களோ அப்படித்தான் சர்வதேசச் சூழலும் இருக்கிறது. பத்ரிக் மோதியானோவுக்கு நோபல் பரிசு கிடைத்ததையும், Bob Dylanக்கு இலக்கியத்துக்கான நோபல் கிடைத்ததையும் வேறு எப்படிப் புரிந்து கொள்ள முடியும்? வைரமுத்து தனக்கு நோபல் கிடைக்கும் என்று சொன்னபோது அதை நான் வடிவேலு ஜோக் மாதிரி எடுத்துக் கொண்டேன். ஆனால் சர்வதேச அளவிலேயே நிலைமை அப்படித்தான் இருக்கிறது. பாப் டைலானுக்கு நோபல் கிடைத்தால் வைரமுத்துவுக்கும் பெருமாள் முருகனுக்கும் கிடைக்கலாம். ஆச்சரியமே இல்லை. அதனால், ஜெயமோகன் போன்றவர்கள் இந்த சர்வதேச இலக்கியம் என்பதே ஒரு பக்வாஷ் என்ற நிலைப்பாட்டை எடுத்திருப்பதிலும் தவறு இல்லை. ஆனால் அங்கேயும் சிலர் இங்கே சி.சு. செல்லப்பா எழுத்து நடத்திக் கொண்டிருந்தது போல் சீரிய இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதில் ஒன்றுதான் ம்யூசிக் அண்ட் லிட்ரேச்சர். அது போன்றவர்களின் செயல்பாடுகளில்தான் என்னையும் அடையாளம் கண்டு கொள்கிறார்கள். அரூ பத்திரிகை பேட்டி கேட்டதும் மூன்றே தினங்களில் ஐம்பது பக்கத்துக்கு எழுதி அனுப்பினேன். ம்யூசிக் அண்ட் லிட்ரேச்சரை இரண்டு மாதமாகக் காக்க வைத்திருக்கிறேன். காத்திருக்கட்டும். வேறு வேலைகள் இருக்கின்றன.
***
மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.
PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
***
www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன். ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள். நான் paypal-இல் இருக்கிறேன். Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
charu.nivedita.india@okaxis
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
charu.nivedita.india@gmail.com
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார். அவர் வங்கியில் கேட்கிறார்களாம். Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai