To You Through Me – 12

நகுலன் உரை மிக மிகச் சிறப்பாக இருந்தது. நீங்கள் கொடுக்கும் அறிவுக்கு என்ன விலை கொடுத்தாலும் ஆகாது. இப்போது இங்கு நிலவும் சூழ்நிலை காரணமாக சிறு தொகைதான் என்னால் அனுப்ப முடிகிறது. உங்களின் 15 நாள் உழைப்புக்கு, இந்த சொற்பப் பணம் அனுப்புவது எனக்கு மிகவும் அவமானமாக இருக்கிறது. மன்னிக்கவும்.

நீங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது கல்லூரி மாணவனைப் போல் குறிப்பு எடுப்பேன். சி சு செல்லப்பா ஆகட்டும்,  நகுலன் உரை ஆகட்டும், குறிப்புகளே நான்கு பக்கங்களைத் தாண்டிவிட்டது. வேலைப்பளு காரணமாக உடனே பணம் அனுப்ப முடியவில்லை.  க. நா.சு.  உரைக்கும் சேர்த்து 20 டாலர்கள்  அனுப்பியிருக்கிறேன்.

***

இப்படி ஒரு கடிதத்தை எழுதியிருந்தார் அமெரிக்காவில் வசிக்கும் என் அன்புக்குரிய நண்பர்.  பலரும் தாங்கள் அனுப்பி வைக்கும் தொகை குறித்த ஒரு குற்ற உணர்ச்சி கொள்வதை நான் கவனிக்கிறேன்.  சின்ன தொகையாக இருக்கிறதே.  என்ன விஷயம் என்றால், மொத்தம் நூறு பேரில் ஐம்பது பேர் அமெரிக்கா, ஐம்பது இந்தியா.  இதில் இந்தியர்களில் 45 பேர் பணம் அனுப்பி விட்டார்கள்.  முன்னூறு, ஐநூறு இப்படி.  ஒன்றிரண்டு பேர் இன்னும் அதிகமாக.  ஆனால் அமெரிக்காவிலிருந்து கலந்து கொண்ட ஐம்பது பேரில் 20 பேர் அனுப்பியிருப்பார்கள்.  ஐம்பது பேரும் பத்துப் பத்து டாலர் அனுப்பினால் ஐநூறு டாலர் என்பது மிகப் பெரிய தொகை.  ஆனால் இருபது பேரால்தான் அனுப்ப முடிகிறது.  ஒன்று, நேரம் இருக்காது.  இரண்டாவது, சோம்பேறித்தனம்.  மூன்றாவது, பட்ஜெட்டில் பத்து டாலருக்குக் கூட இடம் இருக்காது.  நான்காவது, இதுதான் மிக முக்கியமானது, அவர்கள் ஏற்கனவே சாருஆன்லைனுக்கு சந்தா அனுப்பியிருப்பார்கள்.  அப்படி சந்தா/நன்கொடை அனுப்பியவர்கள் மாதாந்திரக் கூட்டங்களுக்கு என்று தனியாகப் பணம் அனுப்ப வேண்டாம்.  ஏதாவது ஒன்றுக்குப் பணம் அனுப்பினால் போதும். 

சென்னையில் கார்ப்பெண்டராகப் பணி புரியும் தக்ஷிணாமூர்த்தி 300 ரூ. அனுப்பி விட்டு அடுத்த மாதம் ஆயிரம் ரூபாய் அனுப்புகிறேன் சாரு என்று எழுதியிருந்தார்.  ஏன் திரும்பத் திரும்ப கார்ப்பெண்டர் என்று சொல்கிறேன் என்றால், உடல் உழைப்பில் ஈடுபடுகின்ற ஒரு இந்தியனின் நிலைமை நமக்கெல்லாம் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான்.  கீழ்க்கண்ட சம்பவத்தை நான் வேறொரு புத்தகத்திலும் எழுதியிருக்கிறேன்.  இருந்தாலும் இங்கே திரும்பவும் எழுதினால் பாதகம் இல்லை.  என் நண்பர் ராம்ஜி சொன்ன சம்பவம் இது: நம்முடைய சங்கீத மேதை பாலமுரளி அமெரிக்கா போயிருக்கிறார்.  ஒருநாள் கச்சேரி முடிந்து ஒரு பெரிய பார்ட்டி.  அப்போது ஒருவன் அவரிடம் வந்து “ஹாய் மிஸ்டர் பாலமுரளி, எப்படி இருக்கிறீர்கள்?  என்னைத் தெரிகிறதா?” என்று கேட்டிருக்கிறான்.  அமெரிக்கன்.  இவர் தெரியவில்லையே என்று சொல்ல, நேற்று நான் தான் உங்களுக்கு முடி வெட்டி விட்டவன் என்றானாம்.  பாலமுரளி இதை சொல்லிச் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்.  தேசம் என்றால் அப்படி அல்லவா இருக்க வேண்டும் என்று.  பாலமுரளிக்கு விருந்து என்றால், அந்த விருந்துக்கு யார் யார் வருவார்?  இந்தியாவில் என்றால், அந்த ஊரின் போலீஸ் கமிஷனர், அந்த ஊர் மேயர், அந்த ஊரின் தனவந்தர்கள், கல்வித் தந்தைகள், ஆங் மறந்து விட்டேன், உலக நாயகன், பிரபஞ்ச நாயகன், அந்த ஊரின் அரசியல்வியாதி, பெரிய நீதி அரசர்கள், வைரமுத்துகள்… இப்படிப்பட்டவர்கள்தானே ஒரு சங்கீத மேதைக்குக் கொடுக்கும் விருந்துக்கு அழைக்கப்படுவார்கள்?  அங்கே அப்படிப்பட்ட விருந்தில் முடிதிருத்தும் தொழில் செய்யும் ஒருவனும் கலந்து கொள்ள முடிகிறது.  அப்படிப்பட்ட சமூகமாக இருந்தால் நான் கார்ப்பெண்டர் என்று சொல்ல மாட்டேன்.  இங்கே அம்மாதிரி வேலைகளையெல்லாம் – தொழில்ரீதியிலான சாதிகளை ஒழித்து விட்ட இந்தக் காலத்திலும் – சமூக அந்தஸ்தை எடை போடும் விதத்திலேயே பார்க்கிறோம்.  நான் ஒரு கார்ப்பெண்ட்டராக இருந்தால் பெருமையுடன் நான் ஒரு கார்ப்பெண்ட்டர் என்று சொல்லிக் கொள்வேன்.  தக்ஷிணாவும் அப்படித்தான்.  அப்படிப்பட்ட மனோநிலையை என் எழுத்து அவருக்குக் கொடுத்திருக்கிறது.  நல்லது.  தக்ஷிணாமூர்த்தியிடம் சொன்னேன், நீங்கள் பணமே அனுப்ப வேண்டாம் என்று.  அவர் கேட்பதில்லை. 

பொதுவாக ஒருவர் அமெரிக்காவில் இருந்தால் பணம் கொட்டுகிறது என்றுதான் ஒரு எளிய இந்திய மனம் நினைக்கிறது.  எனக்கு நிலைமை தெரியும்.  மாத வருமானமே 3000 டாலர்தான் என்றால் எனக்கு பத்து டாலர் அனுப்புவதற்குள் விழி பிதுங்கி விடும்.  நிறைய அமெரிக்கன் வெப் சீரீஸ் பார்த்து அமெரிக்காவிலேயே வாழ்ந்தது போல் ஆகி விட்டது.  என்னதான் வெப்சீரீஸ் என்றாலும் அதில் பாதி உண்மை இருக்கும்தானே? Breaking Bad தான் உடனடியாக ஞாபகம் வருகிறது.  உயர்நிலைப் பள்ளி விஞ்ஞான ஆசிரியரான வால்டர் வைட் போதைப் பொருள் தயாரிப்பதற்கு முன்னதாக எப்படி வாழ்கிறார்?  அமெரிக்காவில் ஒரு ஆசிரியரின் வாழ்க்கைத் தரம் எப்படி இருக்கிறது?  குளியலறையில் வெந்நீர் வரவில்லை என்று பையன் புகார் செய்கிறான்.  அதுவும் அவன் உடல்ரீதியாக பாதிப்பு உள்ள பையன்.  ஹீட்டரை சரி செய்ய காசு இல்லை.  பெட்ரோல் பங்கில் கார் கழுவும் பகுதி நேர வேலை செய்கிறார் வால்டர் வைட்.  அப்போது வகுப்பில் அவரிடம் திட்டு வாங்கிய ஒரு பணக்காரப் பையன் அந்தப் பெட்ரோல் பங்கில் வால்டரைப் பார்த்துக் கிண்டல் செய்கிறான்.  இதெல்லாம் அமெரிக்க வாழ்க்கைதான்.  இன்னமும் அமெரிக்க வாழ்க்கையைப் பார்க்க வேண்டுமானால், நான் நகுலன் உரையில் குறிப்பிட்ட இடத்தை நீங்கள் பார்க்க வேண்டும்.  லாஸ் ஏஞ்ஜலஸ் நகரில் உள்ள Skid Row தான் அது.  பூலோக நரகம் என்றால் அதுதான்.  அமெரிக்கத் தமிழர்கள் அங்கே போக முடியாது.  ஒரு ஆஃப்ரோ அமெரிக்கனோடு போனால்தான் பாதுகாப்பு.  அங்கே வசிக்கும் எல்லோரும் வீடற்றவர்கள்.  சிறைக்குச் சென்று வந்தவர்கள்.  சிறையிலிருந்து வீட்டுக்குப் போக வீடோ உறவோ இல்லாதவர்கள் நேராக வரும் இடம் ஸ்கிட் ரோ தான்.  இப்படி அமெரிக்க வாழ்க்கை கன்னாபின்னாவென்று சிதைந்துதான் கிடக்கிறது.  ஐரோப்பா இதை விடப் பரவாயில்லை.  ஐரோப்பாவில் பெரும்பாலும் மத்தியதர வர்க்கம்தான். 

என் நண்பருக்கு நண்பர் ஒருவர். கணவன் மனைவி.  கணவனுக்கு 5000 டாலர்.  மனைவிக்கு 5000 டாலர்.  செலவோ 3000 டாலர்தான்.  மீதியை என்ன செய்வதென்று தெரியாமல் சென்னையில் வீடு வீடாக வாங்கித் தள்ளுகிறார்கள்.  இதையெல்லாம் அந்த லட்சுமி தேவிக்குப் பைத்தியமே பிடித்துப் போகும்.  என்னதான் சரஸ்வதி லௌகீகத்துக்குப் பிச்சை எடுத்தாலும் லட்சுமியின் அவல நிலை அவளுக்கு நேராது.  பாவம், அந்த நண்பருக்கு வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பதைத் தவிர வேறு எதுவுமே தெரியாது.  ஒரு புத்தகம் படித்ததில்லை.  இப்படிப்பட்டவர்கள்தான் அமெரிக்காவில் இந்திய கார்ப்பொரேட் சாமியார்களிடமும் இஸ்கானிலும் போய்த் தஞ்சம் அடைகிறார்கள்.  போகட்டும்.  நூறு டாலர் அனுப்பி விட்டு ஒரு நண்பர் எழுதியிருந்தார். இன்றுதான் வாழ்க்கையில் முதல் முதலாக பணத்தின் தேவையை உணர்ந்தேன்.  உங்கள் நகுலன் உரையைக் கேட்டதும் உங்களுக்கு ஒரு ஐநூறு டாலர் அனுப்ப வேண்டும் என்று இருந்தது.  பார்த்தால் நூறு டாலர்தான் இருக்கிறது.  இதுவரை பணம் சம்பாதிப்பதில் துளியும் ஆர்வம் இல்லாமல் இருந்தது.  இனிமேல் சம்பாதிக்க ஆரம்பித்து விடுவேன். 

என் கதையைச் சொல்ல வேண்டும் அல்லவா, நானும் நீண்ட காலமாக ராமகிருஷ்ணரின் கதையில் வரும் நாகத்தைப் போல்தான் அடிபட்டுக் கொண்டு கிடந்தேன்.  கலைஞனுக்கு எதுக்குப் பணம்?  அதெல்லாம் இந்த லௌகீக ஆட்களுக்கான விஷயம் அல்லவா?  25 வயதிலிருந்து 65 வயது வரை இப்படித்தான் இருந்தேன்.  பிறகு அமெரிக்கத் தூதரகத்தில் வீசாவுக்காக வரிசையில் நின்று கொண்டிருந்தபோதுதான் எனக்கு வீசா மறுத்த அமெரிக்கப் பெண் என் குருநாதராக மாறினாள்.  எனக்கு முன்னால் நின்று கொண்டிருந்த ஒருத்தருக்கு வாழ்த்து சொல்லி சிரித்துக் கொண்டே வீசா கொடுத்த அவள் முகம் என் காகிதங்களைப் பார்த்ததும் கறுத்து விட்டது.  விசையுடன் பாஸ்போர்ட்டைத் திருப்பிக் கொடுத்தாள்.  எனக்கு முன்னால் நின்றவர் அமெரிக்காவுக்கு பேரப்பிள்ளைக்கு baby sitting செய்யப் போகிறார்.  அவருக்கு சிவப்புக் கம்பளம்.  நான் எழுத்தாளன்.  நான் போனால் இந்நேரம் நிலவு தேயாத தேசத்தைப் போல் ஒரு அற்புதமான புத்தகத்தை உங்களுக்குக் கொடுத்திருப்பேன்.  வீசா மறுக்கப்பட்டதற்குக் காரணம், என் வங்கிக் கணக்கில் பணம் இல்லை.

இருபது ஆண்டுகளுக்கு முன் கனடாவிலிருந்து சக்ரவர்த்தி என்னை அழைத்திருந்தார்.  எனக்காகவே மாடியில் தனியாக ஒரு அறை கூடக் கட்டினார்.  ஆறு மாதம் வேண்டுமானாலும் நீங்கள் தங்கலாம் என்றார்.  அப்போது சென்றிருந்தால் அமர்க்களமாக இருந்திருக்கும்.  ஏனென்றால், அவர் அப்போது ஒரு ட்ரக் ட்ரைவர்.  ஒருமுறை ட்ரக்கில் சென்றால் திரும்பி வர மூன்று வாரம் ஆகும்.  சாலையிலேயே தங்கி, ட்ரக்கிலேயே உண்டு உறங்கி… அது ஒரு சாகசப் பயணமாகவே இருந்திருக்கும்.  உங்கள் கணக்கில் போதுமான பணம் இல்லாததால் வீசா இல்லை என்று சொல்லி விட்டார்கள்.  அடுத்து, பிரிட்டன் வீசா. அதைத் தொடர்ந்து அமெரிக்கா இரண்டு முறை.  கடைசியாக ஜெர்மன் வீசா.  எல்லாமே பணம் இல்லை.   இப்படி தூதரகங்களிலிருந்து விரட்டி அடிக்கப்படும் இனி ஆளாகக் கூடாது என்று முடிவெடுத்தேன்.  அதுவும் பேபி சிட்டிங் செய்யப் போகிறவர்களுக்கெல்லாம் வீசா கிடைக்கிறது என்ற போது ரொம்பவும் எரிச்சலுற்றுத்தான் பணத்தின் பக்கம் பார்வை திருப்புவது என்று முடிவு செய்தேன். 

மற்றபடி இத்தனை ஆண்டுகளில் வீடு கூட சொந்தமாகச் செய்து கொள்ளவில்லை.  அது பற்றிய அக்கறை எங்கள் இரண்டு பேருக்குமே கிடையாது.  ஆனால் இப்போது இந்தப் பத்தாயிரம் நூல்களையும் பூனைகளையும், இது எல்லாவற்றையும் விட, என்னுடைய அசைவ உணவுப் பழக்கத்தையும் பார்த்தால் வாடகை வீடே கிடைக்காது போல் தோன்றுகிறது.  பூனை என்றால் வீட்டுக்காரர்கள் அலறுகிறார்கள்.  அசைவ உணவோ கூடவே கூடாது.  அசைவக்காரர்களுக்கு இங்கே வீடே கிடைப்பதில்லை.  இங்கே என்றால், மைலாப்பூர், ராஜா அண்ணாமலைபுரம் இந்த மாதிரி இடங்கள்.  அபிராமணர் வசிக்கும் இடம் என்றால் கிடைக்கும்.  ஆனால் நான் மைலாப்பூரை விட்டு நகர்வதாக இல்லை.  சைவ உணவுக்கும் மாறுவதாக இல்லை.  நினைத்தாலும் முடியாது.  நான் மீனுக்கு அடிக்ட்.  ஆனாலும் இந்த வயதுக்கு மேல் சொந்த வீடு பற்றி யோசிப்பது கூட பைத்தியக்காரத்தனம் என்பதால் எப்போதும் இருந்தது போல் இனிமேலும் வாடகை வீடுதான். 

ஆக, இந்த வீசா என்ற ஒரே காரணத்தினால்தான் பணத்தின் பக்கம் பார்வை திருப்பினேன். வீசா தேவைகளுக்குப் பணம் சேர்ப்பது எளிதுதான்.  நான்கு ஆண்டுகளுக்கு முன் போய் ஒன்றரை லட்சம் ரூபாயில் ஒரு கண்ணாடி வாங்கினேன்.  அப்படி இப்போது வாங்குவதில்லை.  என் நண்பர் ராஜசேகரன் கண்ணாடிக் கடை வைத்திருக்கிறார்.  அவர் ஒரு கண்ணாடி செய்து கொடுத்தார்.  ஒன்றரை லட்சம் மிச்சம்.  ஒன்றரை லட்சம் கண்ணாடிக்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை.  அது துராக்கியா.  இது நிவேதா ஆப்டிகல்ஸ்.  அவ்வளவுதான்.  முன்பெல்லாம் பணம் காகிதம்.  இப்போது நாகேஸ்வர ராவ் பூங்காவிலிருந்து திரும்பும்போது ஆட்டோ பக்கம் கண் திரும்பும்.  இப்போது பாக்யராஜ் எங்கே என்று பார்க்கிறது.  அவர் பைக்கில் திரும்பினால் ஆட்டோ செலவு மிச்சம்.  இப்படியெல்லாம் நான் வாழ்ந்ததே இல்லை.  அமெரிக்காக்காரனும் கனடாக்காரனும் இப்படி ஆக்கி விட்டான்.   இந்த வளர்ச்சி அடைந்த நாடுகள்தான் இந்தப் பிக்காரித்தனம் செய்கிறான்கள்.  நான் எழுத்தாளர் என்றால் அவர்களும் கூட தமிழன் மாதிரியே முழிக்கிறான்.  அவனுக்குத் தெரிந்த ஒரே மொழி, வங்கிக் கணக்கு. 

அதனால் நண்பர்களே, பத்து டாலர் என்றெல்லாம் குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டாம்.  நம்மைப் பொறுத்தவரை இது ஒரு உலக சாதனை.  காலை ஆறு மணி உரைக்கு ஐந்தரைக்கே ஐம்பது பேர் வந்து காத்திருக்கிறார்கள்.  ஆறு மணிக்கு வந்தவர்களுக்கு இடம் இல்லை.  மீதி ஐம்பது பேரும் அந்த ஐந்தரையிலிருந்து ஐந்து ஐம்பத்தைந்துக்கே லாக் இன் செய்து விடுகிறார்கள்.  நூறு பேர் இடம் இன்றித் திரும்பி விடுகிறார்கள்.  பார்த்தவர்களில் 60 பேர் பணம் செலுத்தி விடுகிறார்கள்.  பக்கம் பக்கமாக நோட்ஸ் எடுக்கிறார்கள்.  ஒரு மாணவன் நான் குறிப்பிட்டிருந்த லூனார் காஸ்டிக் நாவலையும் இன்னும் Wittgensteinஐயும் படித்து விட்டு லெக்சர் கேட்க வருகிறான்.  ஃபூக்கோ போன்ற ஃப்ரெஞ்ச் தத்துவவாதிகளின் வகுப்புக்குத்தான் இப்படியெல்லாம் நடந்திருக்கிறது.  இதெல்லாம் போதாதா?  இது என்னுடைய சாதனையா?  இது முழுக்க முழுக்க உங்களின் சாதனை.  ஏதோ உங்களையெல்லாம் ஐஸ் வைப்பதற்காக இதைச் சொல்லவில்லை.  எத்தனையோ வேலைகளை விட்டு விட்டு வருகிறீர்கள் இல்லையா?  ஒரு மணி நேர லெக்சர் இல்லையே?  மூன்றரை மணி நேரம்.  இங்கே இந்தியாவில் அதிகாலை ஆறு மணியிலிருந்து ஒன்பதரை வரை என் பேச்சைக் கேட்க உட்கார்ந்திருக்கிறார்கள்.  அங்கே அமெரிக்காவில் சனிக்கிழமை மாலை.  இப்படியெல்லாம் என் வாழ்வில் நடந்ததே இல்லை.  சதீஷ்வரனுக்கும் உங்களுக்கும்தான் நான் நன்றி சொல்ல வேண்டும்.  இதையெல்லாம் விடப் பணம் பெரிது இல்லை.  கலந்து கொண்ட உங்கள் ஒவ்வொருவருக்கும் என் தனிப்பட்ட அன்பு.  கலந்து கொள்ள முடியாத சிலர் பணம் அனுப்பி லிங்கைப் பெற்றுக் கொண்டார்கள்.  அதேபோல் நீங்களும் பெற்றுக் கொள்ளலாம்.  கலந்து கொண்டவர்களும் இன்னொரு முறை கேட்க வேண்டும் என்றால் எழுதுங்கள்.  இரண்டு உரைகளையும் அனுப்பி வைக்கிறேன்.  திரும்பவும் சொல்கிறேன்.  சாருஆன்லைனுக்கு சந்தா/நன்கொடை அனுப்பியிருந்தால் மாதாந்திரக் கூட்டத்துக்குப் பணம் அனுப்ப வேண்டாம்.  ரொம்ப சிரமப்படுத்திக் கொண்டும் பணம் அனுப்ப வேண்டாம்.  ஆனால் சோம்பேறித்தனத்தினால் அனுப்பாமல் இருந்து விடாதீர்கள்.  இன்னும் சில பேர் இருக்கிறார்கள்.  ”நான் பணம் கொடுத்துப் புத்தகம் வாங்குவதில்லை” என்று என் காதுபடவே சொல்கிறார்கள்.  கடவுள் அவர்களுக்கெல்லாம் தனியாக ஒரு ”செஷன்” வைத்திருக்கிறார்.

உங்கள் அனைவருக்கும் என் நன்றியும் அன்பும்.  இந்த மாதம் 26-ஆம் தேதி மீண்டும் சந்திப்போம்.  காலை ஆறு மணி.  க.நா.சு.  இன்னொரு விஷயம்.  பத்து டாலர் paypal மூலம் அனுப்புபவர்கள் பதினோரு டாலர் அனுப்ப முடிந்தால் நலம்.  பத்து டாலரில் கமிஷன் முக்கால் டாலர் போய் விட்டால் அது பத்து டாலராக ஆனால்தான் வங்கிக் கணக்கில் சேர்க்க முடியும் என்கிறார்கள்.  எனவே இன்னொரு பத்து டாலர் வந்தால்தான் இந்தப் பத்து டாலர் என் கணக்கில் சேரும்.  ஆனால் இது ஒன்றும் பெரிய விஷயமில்லை.  காத்திருக்கலாம்.  இருந்தாலும் சொல்லி வைத்தேன்.  அப்போதைக்கு அப்போது வேலையை முடித்தால் அடுத்த வேலையைப் பார்க்கலாம்.

***

மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai