எத்தனையோ எழுத்தாளர்கள் எத்தனையோ இன்னல்களுக்கு இடையே எழுதியிருக்கிறார்கள். பெரும்பாலான கதைகள் நமக்குத் தெரியும். லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் என்றால், ஒன்று, நாடு கடத்தி விடுவார்கள். அல்லது, தூதராக ஏதாவது ஒரு ஐரோப்பிய நாட்டுக்கு அனுப்பி விடுவார்கள். அது ஏன் ஐரோப்பிய நாடு என்றால், அங்கே போனால்தான் திரும்பி சொந்த நாட்டுக்கு வர மனசு வராது. பாப்லோ நெரூதா எல்லாம் தன் வாழ்நாளில் பெரும்பகுதியை வெளிநாடுகளில் தூதராகவே கழித்தவர். துரதிர்ஷ்டவசமான விஷயம் என்னவென்றால், லத்தீன் அமெரிக்க இலக்கியம் என்றால், எல்லோரும் கார்ஸியா மார்க்கேஸையும் நெரூதாவையும் சொல்லிக் கொண்டிருப்பதுதான். ஆனால் லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் போக்கையே மாற்றி அமைத்த ஒரு எழுத்தாளர் இருந்தார். நெரூதாவின் வயதை ஒத்தவர். காஸ்ட்ரோ, மார்க்கேஸ் போன்றவர்களுக்கெல்லாம் இரு தசாப்தங்கள் மூத்தவர். இவரது The Kingdom of this World என்ற நாவல் லத்தீன் அமெரிக்காவுக்கு மேஜிகல் ரியலிஸத்தை அறிமுகம் செய்த ஆரம்ப நாவல். இந்த நாவல் 1949-இல் ஸ்பானிஷில் வெளிவந்து பதினெட்டு ஆண்டுகள் கழித்துத்தான் நூறாண்டுகளின் தனிமை வந்தது. ஆனால் இன்று காலத்தின் போக்கில் கார்ப்பெந்த்தியரின் பெயர் எங்கோ கிடக்கிறது. என்னைப் போன்ற தீவிர இலக்கியவாதிகள் சிலரும் பல்கலைக்கழகப் பேராசிரியர்களும்தான் கார்ப்பெந்த்தியரின் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். அவருடைய The Lost Steps என்ற நாவல் என்னுடைய நாவல் வாசிப்பு அனுபவத்தில் என்றென்றும் மறக்க முடியாத சாதனைப் படைப்பு. எல்லாம் 1980-இல் தில்லி சாஹித்ய அகாதமி நூலகத்தில் அமர்ந்து படித்தது. அப்போதே இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் கார்ப்பெந்த்திய பற்றி ஒரு நீண்ட கட்டுரை எழுதினேன். எக்ஸ்பிரஸில் முக்கால் பக்கம் வந்திருந்தது. அதன் தமிழ் வடிவம் என்னாயிற்று என்று தெரியவில்லை. லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் ஆர்வமுள்ள நண்பர்கள் இந்த இரண்டு நாவல்களையும் படிக்கலாம். 1980-இல் படித்த அந்த இரண்டு நாவல்களையும் இப்போது திரும்பவும் படிக்க வேண்டும் என்ற ஆவல் மேலிடுகிறது. நூலகத்திலிருந்து படித்த அந்த நாவல்களைப் பிறகு தில்லி People’s Publishing House புத்தகக் கடையில் காசு கொடுத்து வாங்கினேன். இப்போது அவை என்னிடம் இல்லை. நண்பர்களிடம் போய் விட்டது. எய்த்தியில் நடந்த புரட்சி பற்றிய நாவல் கிங்டம். அதில் ஒரு அடிமை மனித வாழ்க்கை பிடிக்கவில்லை என்று எறும்பாக மாறுவான். ஆனால் என்ன கொடுமை, எறும்பாக மாறியும் அடிமைத்தனத்திலிருந்து மீட்சி கிடைக்கவில்லை. ராணி எறும்பின் ஆயிரக்கணக்கான அடிமை எறும்புகளில் ஒருவனாக இருந்து லோல் பட்டுத் திரும்பவும் மனிதனாக மாறி விடுவான். 1980-இல் படித்தது. இவ்வளவுதான் ஞாபகம் இருக்கிறது.
கூபாவைச் சேர்ந்தவர். கூபாவின் சர்வாதிகாரியை எதிர்த்ததால் 1927-இல் சிறையில் தள்ளப்பட்டு 40 நாட்களில் வெளியே வந்து போலி பாஸ்போர்ட்டில் ஃப்ரான்ஸுக்குத் தப்பி வந்தார். 1928இலிருந்து 1939 வரை ஃப்ரான்ஸில்தான் இருந்தார். அப்போது அவரது வாழ்க்கை மிக அதிகக் கலையுலகச் செயல்பாடுகளால் நிறைந்திருந்தது. பாப்லோ பிக்காஸோவின் நண்பராக இருந்தார். பல ஃப்ரெஞ்ச், ஸ்பானிஷ் பத்திரிகைகளில் கட்டுரைகளும் கதைகளும் எழுதிக் கொண்டு பிரபலமாகவே இருந்தார். கார்ப்பெந்த்தியர் ஒரு இசை அறிஞர் என்பதால் இசை சம்பந்தமான பல செயல்பாடுகளிலும் ஈடுபட்டிருந்தார். கூப இசை பற்றிய அவருடைய ஆய்வுகள் Music in Cuba என்ற தலைப்பில் இரண்டு தொகுதிகளாக 1946-இல் வெளிவந்தன. ஆனால் இது ஆங்கிலத்தில் 1980-இல்தான் கிடைக்கப் பெற்றது. அப்போதிருந்து இந்தத் தொகுதிகள்தான் லத்தீன் அமெரிக்க இசை குறித்த என் கட்டுரைகளுக்கு மூல நூல்களாக இருந்து வருகின்றன. இது கூப இசை பற்றிய நூல் மட்டுமல்லாமல் லத்தீன் அமெரிக்காவின் ஆஃப்ரோ அமெரிக்க இசையின் வேர்களைப் பற்றியும் ஆய்வு செய்யும் நூல். இரண்டும் இன்னமும் என் வசம் உள்ளன. என்னுடைய கலகம் காதல் இசையில் இந்த நூல்களைப் பற்றி விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.
பாரிஸில் பதினோரு ஆண்டு வாசத்துக்குப் பிறகு 1939-இல் கூபா திரும்பிய கார்ப்பெந்த்தியர் அங்கே நான்கே ஆண்டுகள்தான் இருந்தார். 1943-இல் எய்த்தி பயணம். பிறகு 1945-இல் வெனிஸுவலா கிளம்பினார். சாதாரண பயணமாக அல்ல. கூபாவிலிருந்து எக்ஸைல். வெனிஸுவலாவில் 14 ஆண்டுகள். 1959 வரை. அப்போதுதான் காஸ்ட்ரோ கூபாவின் ஆட்சியைப் பிடித்தார். அங்கேயும் ஆறு ஆண்டுகள்தான் வாழ்ந்தார். தன் தந்தை வயதுள்ள கார்ப்பெந்த்தியரை காஸ்ட்ரோ பாரிஸுக்குக் கூபாவின் தூதராக அனுப்பி விட்டார். பிறகு அவர் 1980-இல் மரணம் அடையும் வரை ஃப்ரான்ஸிலேயேதான் இருந்தார். என் நண்பர்களிடம் நான் கிண்டலாகச் சொல்வதுண்டு. ஒரு சர்வாதிகாரிக்கு (பாத்திஸ்த்தா) பயந்து கார்ப்பெந்த்தியர் தன்னைத்தானே நாடு கடத்திக் கொண்டார். இன்னொரு சர்வாதிகாரி அவரைத் தூதராகப் பதவி கொடுத்து நாடு கடத்தி விட்டார் என்று. பாவம், கார்ப்பெந்த்தியர் மட்டும் காஸ்ட்ரோவின் கூபாவில் இருந்திருந்தால் தன் கம்யூனிஸக் கனவுகள் நொறுங்கிப் போனதைக் கண்டு தற்கொலை செய்து கொண்டிருப்பார்.
இதெல்லாம் எனக்கு ஜூலை ஒன்றாம் தேதி ஞாபகம் வந்தது. உலகம் பூராவும் எழுத்தாளர்கள் இப்படித்தான் எழுதியிருக்கிறார்கள். பாப்லோ நெரூதா போன்ற அதிர்ஷ்டசாலிகள் ஆயிரத்தில் ஒருத்தர்தான். ம்ஹும். அப்படியும் சொல்ல முடியாது. கடைசியில் அவரும் ஜெனரல் பினோசெத்தால் கொல்லப்பட்டார்தானே? இவர்களைப் பார்க்கையில் என் நிலை தேவலாம். வீட்டு எடுபிடி வேலைக்கிடையே எழுத நேரம் கிடைப்பதில்லை. ஏன் எடுபிடி வேலை என்றால், என் உயிரைக் காப்பாற்ற என்கிறாள் அவந்திகா. பணிப்பெண் இல்லாத வீடு இங்கே எங்கள் ஒரு வீடுதான். மேல் வீட்டில் ஐந்து பணியாட்கள் உள்ளனர். ஒருத்தர் சமைக்க. ஒருத்தர் வீடு துடைத்து பாத்திரம் தேய்க்க. ஒருத்தர் வீட்டு எடுபிடி வேலை செய்ய. ஒருத்தர் கடை கண்ணிகளுக்குப் போய் வர. ஒருத்தர் டிரைவர். அவர்களுக்கு என்ன கொரோனா வந்ததா என்று கேட்டால், நீதானே கொரோனா இந்த உலகத்துக்கு வரும் முன்பாகவே கொரோனா அறிகுறிகளோடு இருந்தவன் என்கிறாள் அவந்திகா. அதாவது, மூச்சு விடுவதில் சிரமம் என்பதைக் குறிக்கிறாள்.
10,000 அடிகளுக்கு மேல் என்னால் போக முடியாது என்பதெல்லாம் பயணம் செல்லும் போதுதான். இங்கே மைலாப்பூரில் ஏது அவ்வளவு உயரம்? ஆனாலும் வேறு பிரச்சினைகள் உள்ளன. இதயத்தில் ஐம்பது சதம் அடைப்பு என்பதால் எனக்கு மாலை ஆனதுமே ஆக்ஸிஜன் தேவைப்படும். நண்பர்கள் என்னை இந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் வாசலில் விடுவார்கள். உள்ளே நடக்க ஐந்து நிமிடம் ஆகும். அதற்குள் எனக்கு ஆஞ்ஜைனா வரும். நெஞ்சு வலிக்கும். படிகளே ஏற முடியாது. இதெல்லாம் பகலில் அல்ல. இரவில். பொலிவியாவின் 12000 அடி உயர நகரமான குஸ்கோவில் என்னால் மூச்சு விட முடியாமல் மாட்டிக் கொண்டதும் ஒரு இரவுதான். அதுவே பகலாக இருந்திருந்தால் சமாளித்துக் கொண்டிருப்பேன். இரவு போனதும் பகலில் நன்றாகத்தான் இருந்தது. ஆனாலும் திரும்பவும் சோதிக்கத் தயங்கியதால்தான் பொலிவியப் பயணத்தை ரத்து செய்து விட்டு சீலே கிளம்பி விட்டேன்.
இருக்கின்ற வியாதிகளிலேயே ஜலதோஷம்தான் ஆக சாதாரணம். கையில் கைக்குட்டை இருந்தால் சமாளித்து விடலாம். மூன்று நாள் இருந்து விட்டுப் போய் விடும். எனக்கு அவ்வளவாக ஜலதோஷம் வந்ததில்லை. ஆனால் வந்ததென்றால், அது எனக்கு உயிர்க்கொல்லி. இரவில் கொஞ்சம் கூட மூச்சு விட முடியாது. படுக்கவே முடியாது. மூக்கில் ஏதோ அடைத்து விட்டது போல் இருக்கும். இரவு முழுதும் வாயால்தான் மூச்சு விட வேண்டும். பகலில் இப்படியெல்லாம் இருந்ததற்கான சுவடே தெரியாது. நான் கூட மூக்குக்குள் சதை வளர்ந்து விட்டதோ எனப் பயந்ததுண்டு. எல்லாம் ஜலதோஷம் போனதும் போய் விடும். ஜலதோஷம் சும்மா போகாது. ஜுரம் வந்து படுத்தி எடுத்து விட்டுத்தான் போகும். இப்படியே பதினைந்து நாள் காலியாகி விடும். வெறும் ஜலதோஷம். அதனால்தான் அதிகப்படியான கவனம் எடுத்து சுத்தப்படுத்திக் கொண்டிருக்கிறாள் அவந்திகா. இதயத்தில் ஏற்கனவே 50 சதம் அடைப்பு இருப்பவன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் இல்லையா? காய்கறி வாங்கினாலும் அதற்கு மஞ்சள் நீராட்டுவது இதற்குத்தான். கரன்ஸி நோட்டுக்கும் அதுதான்.
இதற்கிடையில் என்னுடைய ஊரின் மிக அழகான பெண் நூல் இறுதிப் பிழை திருத்தத்துக்கு அச்சகத்திலிருந்து வந்து விட்டது. காயத்ரி வீட்டிலிருந்து என் வீட்டுக்கு வர வேண்டும். அடுத்த மாதம் கொடுத்து அனுப்பு என்று சொல்லி விட்டேன்.
எனக்கு இப்போது வெள்ளைக் காகிதங்களும், இரண்டு நோட்டுப் புத்தகங்களும், புத்தகங்களில் வாக்கியங்களைத் தனித்துக் காட்டுவதற்காகப் பயன்படுத்தும் மார்க்கர்களும், பக்கங்களில் செருகுவதற்கான flagகளும் தேவைப்படுகின்றன. மாதாந்திரக் கூட்டங்களுக்காக நோட்ஸ் எடுக்கவும், ஃப்ரெஞ்ச் வகுப்புக்கும். ஒரு நண்பரிடம் சொன்னேன். இதெல்லாம் அமேஸானில் அனுப்ப மாட்டேன் என்கிறான். அத்தியாவசியப் பொருள் இல்லையாம். அதனால் நண்பர் கடையில் வாங்கி டன்ஸோவில் அனுப்பி விடுவார். அவந்திகா தடுத்து விட்டாள். எப்படி ஒவ்வொரு பேப்பராகக் கழுவிக் காயப் போடுவது? வீட்டுக்கு வெளியிலிருந்து வரும் அத்தியாவசியப் பொருட்கள்: மளிகைச் சாமான், காய்கறி, பூனை உணவு. இதைத் தவிர வேறு ஒரு பொருள் உள்ளே வருவதில்லை.
நாஞ்சில் நாடனைப் பற்றி ஒரு சுவாரசியமான செய்தி படித்தேன், அவர் செருப்பு அணிந்தே நாலு மாதம் ஆகிறது என்று. அந்த அளவு வசதியெல்லாம் நமக்குக் கிடையாது. இந்த நாலு மாதங்களில் ஓரிரு தடவைதான் கடைப் பக்கம் போனேன் என்றாலும் ஒரு நாளில் இரண்டு முறை வீட்டை விட்டு வெளியே வர வேண்டியிருக்கிறது. காலையில் மொட்டை மாடியில் நடை. லிஃப்ட் பயன்படுத்துவதில்லை. அதற்கு லிஃப்டைத் தொட வேண்டியிருக்கும். மூன்று மாடி ஏற வேண்டும். அங்கேயும் மாடியின் உள்ளே செல்லும் வழியின் கதவு மூடியிருக்கும். அதன் கைப்பிடியைப் பிடித்துத் திறக்க வேண்டும். கைப்பிடியில் கொரோனா இருந்தால்? கையோடு கொண்டு போயிருக்கும் சானிடைஸர் திரவத்தால் கையைத் துடைத்துக் கொண்டு கைப்பிடியைத் தொட்டுக் கதவைத் திறப்பேன். பிறகு கதவு பட் பட்டென்று அடித்துக் கொள்ளாமல் இருக்க அதன் கீழே ஒரு கல்லைப் போடுவேன். இப்போது மறுபடியும் சானிடைஸர் பயன்படுத்தி கையைத் துடைப்பேன். பிறகுதான் நடை. ஒன்றரை மணி நேரம் நடந்த பிறகு இதேபோல் மீண்டும். சானிடைஸரால் கையைத் துடைத்துக் கொண்டு கைப்பிடியைப் பிடித்து கதவை மூடி விட்டு மீண்டும் சானிட்டைஸரால் கையைத் துடைப்பது. கதவை ஏன் மூடுகிறார்கள் என்று செக்யூரிட்டிகளிடம் நான் கேட்டதில்லை. கேட்டால் சரியான காரணம் தெரியும். ஆனால் அந்தக் கதவில் ஒட்டப்பட்டிருந்த வெள்ளைக் காகிதம்தான் எரிச்சலூட்டிக் கொண்டிருந்தது. Please Closed The Door. ஆனால் வட இந்தியா என்றால் இந்த அளவு கூட ஆங்கிலம் தெரியாது. வாய்ப்பே இல்லை. தப்பும் தவறுமாக இந்தியில் எழுதி வைத்திருப்பார்கள். பிஹாரிகள்தான் அங்கே இம்மாதிரி வேலைகளில் இருப்பது. கீழ்நிலை பிஹாரிகளுக்கு இந்தியும் சரியாகத் தெரியாது. எனக்கு முதலில் அந்தக் காகிதத்தைப் பார்த்ததும் சற்று கோபம் வந்தது. நாம்தான் முறையாகக் கதவை மூடி விட்டுப் போகிறோமே? ஒருநாள் மாடியில் செக்யூரிட்டியைப் பார்த்தபோது கேட்டேன். அன்றைய தினம் அந்தக் காகித அறிவிப்புக்குக் கீழே பெரிய கொட்டை எழுத்தில் சாக்கட்டியால் PLEASE CLOSED THE DOOR என்று எழுதியிருந்தது. ஏன் எழுதியிருக்கிறீர்கள், நான் தான் தினமும் மூடி விட்டுப் போகிறேனே என்று கேட்டேன். ஒரு குறிப்பிட்ட வீட்டைப் பற்றிப் புகார் சொன்னார். குடியிருப்புவாசிகள் சொல்வது எதையுமே அவர்கள் கேட்பதில்லை. நண்பர்களோடு மொட்டைமாடியில் வந்து அரட்டை அடிக்கிறார்கள். மற்ற சமயமாக இருந்தால் பரவாயில்லை. இது ஊரடங்குக் காலம் அல்லவா? அவர்களுக்காகத்தான் இப்படி எழுதிப் போட்டிருக்கிறார்களாம். எப்படியோ தொலையுங்கள் என்று சொல்லி விட்டு என் கையாலேயே Dயை அழித்து விட்டு, என் கைக்கு சானிட்டைஸர் போட்டுக் கொண்டேன்.
இன்னும் ஒருமுறை கீழே இறங்குவேன். இரவு ஒன்பது மணி வாக்கில் பூனைகளுக்கு உணவு கொடுக்க. அப்போதும் அங்கே இங்கே என்று எல்லாவற்றையும் தொட வேண்டியிருக்கும். வெளியே செல்வதற்கும் ஒரு கதவு உண்டு. அதன் கைப்பிடியைத் தொட வேண்டுமே? இரவு இரண்டு பேருமே கீழே போவோம். நான் வலதுகைப்பக்கம். அவந்திகா இடதுகைப்பக்கம். வலதுகைப் பக்கத்தில் பத்து பூனை. இடதுகைப் பக்கத்தில் ஐந்து பூனை. இடது பூராவும் குட்டிகள். Sachet-யில் உள்ள திரவமான உணவைத்தான் உண்ணும். வலது எல்லாம் வளர்ந்தவை. அதற்கான dry food. போகாவிட்டால் பூனைகள் பசியால் கதறுவது மேலே கேட்கிறது. போய்த்தான் ஆக வேண்டும்.
நான் அடிக்கடி குறிப்பிடும் Zoltan Fabri-இன் Fifth Seal படத்தை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். படம் பார்த்திருக்காவிட்டாலும் பரவாயில்லை. அந்த ஒரு குறிப்பிட்ட காட்சி பற்றிப் பல சமயங்களில் குறிப்பிட்டிருக்கிறேன். அனாதைக் குழந்தைகளைப் பராமரிக்கும் ஒருவனைப் பற்றி. புடாபெஸ்ட் நகரம் நாஸிகளின் ஆக்ரமிப்பில் இருந்தபோது அனாதைக் குழந்தைகளைப் பராமரிக்கும் ஒருவனைக் கைது செய்து அழைத்துக் கொண்டு போய் விடுகிறார்கள். அவன் பராமரிக்கும் குழந்தைகளில் பலர் யூதக் குழந்தைகள். இவன் உயிர் போய் விட்டால் அத்தனை குழந்தைகளும் செத்து விடும். இவனுக்கு வேறு யாரும் கிடையாது. இவன் இப்போது செய்ய வேண்டியது, இவனது உயிர் நண்பன் ஒருவனை மூன்று முறை கன்னத்தில் அறைய வேண்டும். உயிர் நண்பன் நாஸிகளுக்கு எதிரான போராளி. அடிபட்டு உதைபட்டு செத்து விடும் நிலையில் கயிற்றில் தொங்குவான். அவனைத்தான் அறைய வேண்டும். அறைந்தால் விடுதலை. இல்லாவிட்டால் சுட்டுக் கொல்லப்படுவான். இவனுடைய இன்னொரு நண்பனால் அறைய இயலாது. இவன் அறைந்து விட்டு வெளியே போவான். குழந்தைகளைக் காப்பாற்றியாக வேண்டும். அவனுடைய நிலையில்தான் நான் இருக்கிறேன். இந்தப் பதினைந்து பூனைகளும் என்னை நம்பித்தான் – இப்போது இந்தக் கொரோனா காலகட்டத்தில் – இருக்கின்றன. பிறிதொரு சமயமாக இருந்தால் மயிரே போச்சு என்று இருந்து விடலாம். இப்போது இங்கே எந்த உணவு விடுதியும் இல்லை. நூற்றுக்கணக்கான படகுகள் நான்கு மாதமாகக் கடலுக்குள் இறங்கவில்லை. உணவு விடுதியும் இல்லாமல், கடலில் படகுகளும் இறங்காமல் இந்தப் பூனைகள் உணவுக்கு என்ன செய்யும்?
பூனைகளுக்கு உணவிடுவதில் எனக்கு செலவாகும் நேரத்தைப் பற்றிக் கவலையுற்று ”ஏன் இந்தப் பிரச்சினையில் என்னை மாட்டி விட்டாய்?” என்று அவந்திகாவிடம் நான் ஒருநாள் வருத்தப்பட்டபோது அவள் சொன்னாள்.
நாம் இந்த வீட்டுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வந்த போது உணவு இல்லாமல் இரண்டு பூனைகள் பட்டினி கிடந்து செத்துப் போனதை நான் பார்க்க நேர்ந்தது. இந்தப் பூனைகள் அசைவ உணவுக்குப் பழகி விட்டன. செக்யூரிட்டிகளோ வாரம் ஒருமுறைதான் அசைவ உணவு சாப்பிடுவார்கள். அப்போது கிடைக்கும் ஒரு கவளம் மீன் குழம்புச் சோறு எப்படிப் போதும்? செத்து விட்டன. அதைப் பார்த்ததிலிருந்துதான் நான் இவைகளுக்கு உணவு கொடுக்க ஆரம்பித்தேன் என்றாள். என்னால் ஒன்றும் பதில் சொல்ல முடியவில்லை.
காலையில் பதினோரு மணி அளவில் ஒருமுறை பூனைகளுக்கு உணவிட வேண்டும். அப்போது அவந்திகாவே கொண்டுபோய்க் கொடுப்பாள்.
ஆக, என் ஆஞ்ஜைனா (மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சுவலி) குறித்த பயத்தில்தான் அவந்திகா மற்ற வீடுகளை விட அதிக ஜாக்கிரதையுடன் இருக்கிறாள். அதனால்தான் வேலைக்கும் ஆள் வைக்கவில்லை. அதன் விளைவாக அவளுக்கு வேலை அதிகம், எனக்கும் அதிகம். என் வேலையெல்லாம் எடுபிடி வேலைதான். கீழே உள்ள பதினைந்து பூனைகள் தவிர வீட்டின் உள்ளே ஏழு பூனைகள். அதனால் வேலையும் அதிகம்.
இந்தப் பாத்திரம் தேய்ப்பது பற்றி எழுதிய முதல் ஆண் எழுத்தாளன் நானாகத்தான் இருப்பேன். இப்போது இது பற்றிப் பலரும் எழுத ஆரம்பித்துள்ளார்கள். இதெல்லாம் பெண் விடுதலையை நோக்கிய படிகள் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். பாத்திரம் தேய்ப்பது பற்றி எத்தனைதான் எழுதினாலும் இன்னும் இன்னும் என்று எங்கள் வீட்டுப் பாத்திரம் மாதிரியே விழுந்து கொண்டே இருக்கிறது. பெண்களுக்குத் தெரிந்த விஷயம்தான். ஆனால் ஆண்களுக்குத் தெரியாது என்பதால் எழுதலாம். சென்ற வாரம் ஒருநாள் பாத்திரம் தேய்க்கும் ஸிங்க்கின் கீழே உள்ள குழாய் அடைத்துக் கொண்டு விட்டது. மற்ற சமயம் என்றால் ப்ளம்பரைக் கூப்பிடலாம். இப்போது அவரே கொரோனாவைக் கூட்டி வரலாம். சாதாரணமாக எடுத்துக் கொண்ட காலம் போய் விட்டது. அவளுடைய நண்பர்களிலேயே இரண்டு பேர் பலி. ஒரு பெண் இளம் வயது. இன்னொரு பெண் நர்ஸ். அதையெல்லாம் விட பயங்கரம் பக்கத்துக் கட்டிடத்தில். ஒருநாள் எங்கள் மேனேஜரிடம் ஒரு செக்கைக் கொடுத்துப் போட்டு விட்டு வரச் சொன்னார் என் பக்கத்து வீட்டுக்காரர். பக்கத்துக் கட்டிடத்தில்தான் இந்தியன் வங்கி. வங்கி மூடிக் கிடந்தது. வாசலில் வங்கி அதிகாரி. என்ன என்று கேட்டால், கேஷியர் கொரோனாவில் இறந்து விட்டார். வங்கியைத் திறக்கலாமா, வங்கிக்குள் கொரோனா இருக்குமா என்று சந்தேகமாக இருக்கிறது. கேஷியர் வயது என்ன சார்? இருபத்தைந்து. எங்கள் மேனேஜர் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடி வந்து விட்டார். ஓடி வந்து நேராக அவந்திகாவிடம்தான் சொன்னார். அவந்திகாவுக்கு கிலி கூடி விட்டது.
ஒரே வழிதான் இருக்கிறது. தரையில் சாஷ்டாங்கமாகப் படுத்து சாக்கடைக் குழாய்க்குள் கையை விட்டு அடியில் உள்ள கசண்டை எடுக்கலாம். நான் படுக்கக் குனிந்தேன். அதற்குள் அவந்திகா ஏதோ ஒரு அமிலத்தைக் கொண்டு வந்தாள். அதைக் குழாய்க்குள் போட்டாள். எங்கும் ஒரே நெடி. ஆனால் கசண்டெல்லாம் பொசுங்கி விட்டது. சாக்கடைக் குழாய்க்குள் இப்போது தடையின்றி தண்ணீர் பாய்ந்தது.
அடுத்து விசாரணை. நீ மீன் கழுவும்போது கசண்டையெல்லாம் அப்படி அப்படியே ஸிங்கில் போடுகிறாயா?
சீச்சீ. யாரைப் பார்த்து என்ன வார்த்தை பேசினாய்?
ஒரே அடி.
அடுத்தது கேள்வி அல்ல. அறிவுரை. உனக்கு மட்டும் அல்ல. எனக்கும்தான் சொல்லிக் கொள்கிறேன். இனிமேல் பால் பாத்திரங்களையெல்லாம் எப்படித் தேய்க்க வேண்டும் என்றால் – அதன் அடியில் பிடித்திருக்கும் ஆடையையெல்லாம் கையால் நன்றாக வழித்து குப்பைக் கூடையில் போட்டு விட்டுத்தான் பிறகு தேய்க்க வேண்டும். அதுதான் அப்படியே வெண்ணையாகப் போய் அடைந்து கொள்கிறது. (எங்கள் வீட்டில் உடனுக்குடன் கறந்த பசும்பால்தான் வாங்குகிறோம். காய்ச்சினால் அப்படியே வெண்ணெய் மிதந்து கொண்டு வரும். தயிர் சாதம் சாப்பிட்டால் கையை இரண்டு முறை சோப்புப் போட்டுக் கழுவ வேண்டியிருக்கும்.)
இந்தப் பூனைகளின் காரணமாகத்தான் பாத்திரங்கள் விழுந்து கொண்டே இருக்கிறது. மீனைத் தண்ணீரில் போட்டு அவிப்பது, கோழி அவிப்பது இரண்டும் பிரதான வேலைகள். காலையில் மீன். இரவில் கோழி. பிறகு அவை சாப்பிடும் பாத்திரங்கள். காலையில் பத்து மணி அளவில் முக்கால் மணி நேரம் நான் பாத்திரம் தேய்ப்பேன். பிறகு மதியமும் இரவும் அவந்திகா தேய்ப்பாள். இரவு என்றால், பதினோரு மணிக்குக் கூடத் தேய்த்துக் கொண்டிருப்பாள். என்னம்மா இது அந்யாயம் என்றால், இல்லாவிட்டால் உனக்குக் காலையில் பாத்திரம் ரொம்ப சேர்ந்து விடும் என்பாள்.
ஆனால் இப்படி எடுபிடியாகப் பாத்திரம் தேய்ப்பதற்கே எனக்குத் தாவு தீர்ந்து விடுகிறது. மீன் பாத்திரமும் சிக்கன் பாத்திரமும் தேய்ப்பது பெரிய வேலை. தெருவில் வைத்து பெரிய பெரிய குண்டாக்களில் பிரியாணி செய்வதைப் பார்த்திருப்பீர்கள் இல்லையா? அந்தப் பாத்திரத்தில் ”பத்து” எப்படிப் படிந்திருக்கும்? அதுவேதான் இந்தச் சிறிய பாத்திரங்களில் படியும். தம் பிடித்துக் கொண்டுதான் ஸ்க்ரப்பரால் தேய்க்க வேண்டும். இரண்டு கைகளால்தான் டைப் அடிக்கிறேன். ஆனால் வலது கைக்கு மௌஸ் வேலையும் இருப்பதாலோ என்னவோ அப்படித் தேய்க்கும்போது தேள் கொட்டியது போல் தோள் பட்டையில் கடுக்கும். இதையெல்லாம் வெளியே சொன்னால் அப்புறம் அதையும் அவந்திகாவே செய்வாள். அதனால் வாயே திறப்பதில்லை.
சரி, விஷயத்துக்கு வருகிறேன். விஷயங்களைக் கோர்வையாக்கிக் கொண்டீர்களா? அலெஹோ கார்ப்பெந்த்தியரிலிருந்து ஆரம்பித்தோம். பாத்திரம் தேய்ப்பது தவிர சமையலுக்குக் கறிகாய் திருத்துவது. இந்த இரண்டுதான் என்னுடைய பிரதான வேலைகள். இரவு பூனைகளுக்கு உணவிடுவது. இது தவிர வீட்டுப் பூனைகளுக்கு மூன்று முறை உணவிடுதலும் என் வேலை. கறிகாய் திருத்த ஒருமணி நேரம் ஆகும். உதாரணமாக, சின்ன வெங்காயம். பூண்டு. கீரை ஆய்தல். தக்காளி. குழம்பு காய். தொட்டுக் கொள்ள காய். இது அனைத்தையும் வெட்டி, குக்கரில் பருப்பும் அரிசியும் வைத்து முடிக்க ஒரு மணி நேரம். உண்மையில் பாத்திரம் தேய்க்க ஒரு மணி நேரம், கறிகாய் ஒரு மணி நேரம் என்ற இந்த ரெண்டு வேலையுமே பிஸாத்துதான். மீதி 22 மணி நேரத்தில் காலையில் ஐந்திலிருந்து ஒன்பது வரை கழித்து விடுவோம். அந்த நேரம் நடை அல்லது ஃப்ரெஞ்ச் வகுப்பு, வீட்டுப் பூனைகளுக்கு உணவு தயாரித்தலில் போய் விடும். மீதி 18 மணி நேரம். ஆறு மணி நேரம் தூக்கம். மீதி 12 மணி நேரம் எழுதக் கிடைக்க வேண்டும். இதில் சாப்பிட குளிக்க எல்லாம் இரண்டு மணி நேரம் போனால் கூட பத்து மணி நேரம் கட்டாயமாகக் கிடக்க வேண்டும். எனக்கோ நாலு மணி நேரம்தான் கிடைத்தது. ஆறு மணி நேரம் எடுபிடி வேலை. எங்கே ஓட்டை என்று பார்க்க வேண்டுமே? அந்த வழியாகத்தான் நேரமெல்லாம் ஓடுகிறது. எடுபிடி என்றால் யாருக்கும் புரியாது. அதை விளக்க வேண்டுமானால் நூறு பக்கம் வேண்டும். ஒரே ஒரு உதாரணம் தருவேன். புரிந்து கொள்ள வேண்டும். ஒருநாள் சாரூஊஊஊஊ என்று ஒரு அலறல். போய்ப் பார்த்தால் குட்டிங்களுக்கு மண்ணு போடு. அவள் குழம்புக்குத் தாளித்துக் கொண்டிருந்தாள். அவளால் நகரவே முடியாது. கண்ணிமைக்கும் நேரத்தில் மண் போடாவிட்டால் குட்டிகள் தரையிலேயே மூச்சா போய் விடும். அது பிறகு பெரிய வேலையாகி விடும். நானோ அவளோ அன்றைய தினம் குட்டிகள் மலஜலம் போக பேசினில் மண் போட்டு வைக்க மறந்து போனோம். குட்டிகளும் ரொம்ப சமத்து. அவசரம் என்று சொல்லிக் கத்தின. நீங்கள் கழிப்பறையில் இருந்தாலும் சாரூஊஊஊ என்ற சப்தம் கேட்டு ஓடி வந்தே ஆக வேண்டும்.
நேற்று நடந்த கதையைக் கேளுங்கள். இரண்டு மாதம் கழித்து செல்வகுமாரிடம் பேசினேன். பேச ஆரம்பித்து ஒரு நிமிடம் கூட ஆகியிருக்காது. காதுகளில் சாரூஊஊஊஉ என்ற ரீங்காரம். இருங்கள், பிறகு கூப்பிடுகிறேன் என்று அவசரமாகச் சொல்லி விட்டு கதவைத் திறக்க விழுந்தடித்துக் கொண்டு ஓடினேன். கைகளில் பெரும் பளுவைச் சுமந்து கொண்டு அவந்திகா அது போல் பல முறை நின்றிருக்கிறாள். இதுவே நானாக இருந்தால் அந்த பளுவான மூட்டையை எல்லாம் தரையில் வைத்து விட்டு நானே கதவைத் திறந்து கொண்டு பிறகு மூட்டைகளை எடுத்துக் கொண்டு உள்ளே வருவேன். இதையே நீ செய்யலாமே என்று அவந்திகாவிடம் எனக்குக் கேட்கத் தோன்றாது. ஏனென்றால், அப்படிச் செய்யாததற்கான தக்க பதில் அவளிடம் இருக்கும். அப்படி இருக்கக் கண்டுதானே அவள் அப்படிச் செய்யவில்லை? இப்படியான காரணங்களினால்தான் நான் இறந்தால் அடுத்த க்ஷணமே அவளும் விடை பெற்று விடுவாள் என நம்புகிறேன். தனியாக வாழ்வதற்கான பயிற்சியை அவள் பெற்றுக் கொள்ளவில்லை. ஒருநாள் நான் “அம்மு, எனக்குப் பிறகு என் புத்தகங்களையெல்லாம்… “ என்று ஆரம்பித்தேன். ஒருக்கணம் அவளுக்குப் புரியவில்லை. புரிந்ததும் அழ ஆரம்பித்தாள் பாருங்கள். நான்கு மணி நேரம் அழுகை. நிறுத்துவதற்குள் எனக்குப் போதும் போதும் என்று ஆகி விட்டது. அப்போதுதான் தெரிந்து கொண்டேன், அவளைப் பொறுத்தவரை எனக்கு மரணமே இல்லை என்று. நான் கடவுள் அல்ல. எனக்கு டிக்கட் கிழிக்கப்பட்ட கையோடு அவளுக்கும் டிக்கட். அந்த டிக்கட்டை அவளே கிழித்துக் கொண்டு விடுவாள். தற்கொலை அல்ல. மனநிலை. மனம் நினைத்தால் உடல் பணியும். சென்ற வாரம் இதை எழுதின போது என் அன்புக்குரிய பாலசுப்ரமணியம் பெங்களூரிலிருந்து ஒரு செய்தியை அனுப்பியிருந்தார். அதாவது, அதை நான் எழுதிய சமயத்தில்தான் ஆகமம் ஸ்ரீ ஸ்தலசயன பட்டாச்சாரியார் காலமானார். அந்தச் செய்தியைக் கேட்ட மாத்திரத்தில் அதிர்ச்சியில் அவர் மனைவியும் இறந்து விட்டார்.
சரி, நாம் நம்முடைய கதைக்கு வருவோம். இருபத்து நாலு மணி நேரத்தில் எழுதுவதற்கு நாலு மணி நேரம்தானா என்று நொந்த நான் இரவில் கண் விழித்துப் படிக்க ஆரம்பித்தேன். ஆறு மணி நேரத்தை நான்கு மணி நேரமாகக் குறைத்துக் கொண்டு இரண்டு மணி நேரத்தை படிப்புக்கு எடுத்துக் கொண்டேன். ஆக, பகலில் நாலு மணி நேரம். இரவில் இரண்டு மணி நேரம். ஓரளவு சரிப்பட்டு வந்தது. ஆனால் இரவில் கண் விழித்தால் என் ஆரோக்கியம் கெட்டு விடும், சமநிலை குறையும். நான் பகல் மனிதன். பகலில் தூங்கவே மாட்டேன். ஆனால் இரவில் கண் விழித்தால் ஆகாது. ஒரு வாரம் இப்படிச் செய்தேன். படிப்பதில் மட்டும் சமரசமே செய்து கொள்ள மாட்டேன்.
இதற்காகத்தான் அலெஹோ கார்ப்பெந்த்தியரைக் குறிப்பிட்டேன். எழுத்தாளர்கள் எப்படியெப்படியெல்லாமோ எழுதுகிறார்கள். மார்க்கி தெ சாத்-ஐ சிறையில் போட்டார்கள். சிறையிலிருந்து எழுதினான். சிறையில் அவனிடமிருந்த காகிதத்தைப் பிடுங்கினார்கள். அவன் கக்கூஸில் இருந்த டிஷ்யூ பேப்பரில் நாவலை எழுதி முடித்தான். குளிர் நாடுகளில் கக்கூஸ்களுக்கு டிஷ்யூ பேப்பர் எவ்வளவு வேண்டுமானாலும் கிடைக்கும். இப்படித்தான் நானும். பகலில் நேரம் கிடைக்கவில்லையானால், இரவில் படி. ஒரே வாரத்தில் உடம்புக்கு வந்தது. ஒருநாள் – நகுலன் கூட்டம் முடிந்த மறுநாள் ஒரே தும்மல், மூக்கிலிருந்து ஜலம் கொட்டியது. மிரண்டு விட்டாள் அவந்திகா. அன்றைய தினம் வீட்டு வேலை இல்லை. எட்டு மணி நேரம் எழுதக் கிடைத்ததால் இரவு பத்து மணிக்கே தூங்கி விட்டேன். ஆறு மணிக்கு எழுந்த போது அவந்திகா விழித்துக் கொண்டு இருந்தாள். இரவு முழுதும் பிரார்த்தனை. இரவு நன்றாகத் தூங்கியதாலோ உடம்பு முழுவதும் இருந்த கஷாயமோ பிரார்த்தனையோ உடம்பு நன்றாகி விட்டது. நன்றாகி விட்டது என்றேன். பிறகுதான் தூங்கப் போனாள், காலை ஆறு மணிக்கு. அதிலிருந்து எடுபிடி வேலை இல்லை. பாத்திரம் தேய்க்க முக்கால் மணி நேரம், காய் திருத்த ஒரு மணி நேரமும் பிரச்சினையே இல்லை.
இத்தனை மணி நேரம் எழுதி இவ்வளவு பக்கங்கள்தானா என்று நீங்கள் வியக்கலாம். இன்னும் பல விஷயங்களை சாரு ஆன்லைனில் போடுவதில்லை. வேறு சில காரியங்களும் செய்து கொண்டிருக்கிறேன்.
ஒரு வேண்டுகோள் கடைசியாக. இன்னும் நூறு பேரை மாதக் கூட்டங்களில் சேர்த்துக் கொள்ள 20 டாலர் கட்ட வேண்டுமாம் ஸூமுக்கு. அந்தச் செலவை யாரேனும் ஏற்றுக் கொண்டால் அதைச் செய்யலாம். ஒருவர் இல்லையேல் இருவர். இது பற்றி எழுதினேன். எந்த எதிர்வினையும் இல்லை. இதுவே என் கடைசி விண்ணப்பம். பதில் இல்லையேல் நூறு பேரைக் கொண்டே தொடர்வோம். காரணமும் எனக்குப் புரிகிறது. தனவந்தர் யாரும் சாருஆன்லைன் படிப்பதில்லை. எல்லோரும் நடுத்தர வர்க்கம்.
***
மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.
PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
***
www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன். ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள். நான் paypal-இல் இருக்கிறேன். Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
charu.nivedita.india@okaxis
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
charu.nivedita.india@gmail.com
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார். அவர் வங்கியில் கேட்கிறார்களாம். Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai