பூச்சி தொடரை இன்னொரு முறை மேலோட்டமாக வாசித்துப் பார்த்தேன். பல வருடங்களாக சாரு இணையத்தில் எழுதினாலும் இந்தத் தொடரைத்தான் நான் முழுவதுமாக இணையத்தில் வாசிக்கிறேன். பழுப்பு நிறப் பக்கங்கள் மற்றும் ஒளியின் பெருஞ்சலனம்போன்றவைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டேன். என்னைப் பொருத்த வரை அவைகள் இரண்டும் வழிகாட்டிகள். அவை இணையத்தில் வாசித்த சமயம் அதில் சொல்லப்பட்டிருக்கும் புத்தகங்களையும் படங்களையும் தேடிப் பார்த்தும் படித்துமே போனது. பூச்சியும் நல்ல வழிகாட்டிதான் ஆனால் அதை மீறி ஒரு கொண்டாட்டம் இருக்கிறது. பூச்சி 100ஐ தொடும் போது எப்படிக் கொண்டாடலாம் என்று மனம் நினைத்துக் கொண்டேயிருக்கிறது.கொண்டாட்டங்களை மீறி இந்தத் தொடருக்கு வந்த விமர்சனங்களை நோக்கும் போது சாருவின் மீதான தரிசனங்கள் இன்னும் கொஞ்சம் புலப்படுகிறது. உதாரணமாக இத்தொடரின் சாதாரண வாசிப்பில் அய்யங்கார்களை உயர்த்திப் பிடிப்பதாகத் தோன்றும். அதன் காரணமாகச் சாருவுக்குக் காவிச் சாயம் பூசப்படலாம். பூசப்பட்டது. ஒரு பிரபல இயக்குனரிடம் உதவி இயக்குனராக இருக்கும் நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். பேச்சில் சாருவை ஏதோவொரு காரணத்திற்காகக் குறிப்பிட்டேன். நீங்கள் சாரு வாசிக்கிறீர்களா என்றார். என் தகப்பன் என்றேன் அவரிடம். இப்பொழுதெல்லாம் சாருவின் வழி மாறிவிட்டது நான் வாசிப்பதை நிறுத்திவிட்டேன். சாரு இப்பொழுதெல்லாம் காவி மையைக் கொண்டு எழுதுகிறார் என்றார். நீங்களே பூச்சியை வாசித்துத் தெரிந்துகொள்ளுங்கள் என்றார். அதற்கு மேல் அந்த உரையாடலைத் தொடர முடியவில்லை. வந்துவிட்டேன். நண்பர்கள் பலரும் பூச்சியை எதிர்மறையாக விமர்சித்தார்கள். எனக்குள்ளும் அந்த நெருப்பு வளர ஆரம்பித்தது. அதற்கேற்றார் போலப் பூச்சியில் அய்யங்கார்கள் வந்து போனார்கள். எனக்கு இந்து கடவுளர்களில் சிவனை ரொம்பவும் பிடிக்கும். அடிக்கடி திருவாசகம் கேட்டு உருகிப்போவேன். நியாயப்படி சாருவும் சைவ மதத்தை உயர்த்திப் பேசியிருக்க வேண்டும், காரணம் சிவனே பெண்களுக்குச் சம உரிமை கொடுத்த கடவுள். சுடுகாடு, பேய், ருத்ர தாண்டவம் என வாழும் ஒரு Transgressive கடவுள் அல்லவா? ஏன் இவர் வைணவர்களை உயர்த்திப் பிடிக்கிறார் என்ற ஒரு கேள்வி மனதில் எழுந்தது.இரண்டு நாளுக்கு முன் ஸ்ரீரங்கத்தில் இருக்கும் ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். பேச்சின் ஊடாக நண்பர் சொன்னார் “பெருமாள் ஒரு அலங்காரப் பிரியர். ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் நுழைந்தால் சொர்கத்துக்குள் நுழைந்தது போல இருக்கும். அவ்வளவு கொண்டாட்டங்கள் அலங்காரங்கள்! அப்படியே எதிரில் இருக்கும் திருவானைக்காவல் ஜம்புகேஷ்வரர் கோவிலுக்குச் சென்றால் வேறுமாதிரியான கொண்டாட்டங்கள், ஸ்ரீரங்கம் போல இருக்காது, காரணம் சிவன் அபிஷேகப் பிரியர்”என்றார். ஒரு பெரிய கண் திறப்பு. ஒரு ‘ஆஹா’ தருணம். சாருவின் எழுத்தில் வைணவம் வந்து போகக் காரணம் சாருவின் இயல்பு. சாரு ஒரு அலங்காரப் பிரியர் அல்லவா! அவர் நமக்குக் காட்டுவது ஒரு வாழ்வியலை. பல வருடங்களாக என் செல்போனின் முகப்புப் படம் சாருவினுடையதுதான். சாரு தேர்ந்தெடுக்கும் ஆடைகளின் நிறமும் மேனியின் மினுமினுப்பும் அட்டகாசமான சிரிப்பும் யாரையும் ஈர்த்துக் கொண்டேயிருக்கும். இதெல்லாம் நம் இந்திய மண் கொடுத்த வரம் என்று பார்க்கிறேன். வைணவ கடவுள் அலங்காரப் பிரியர் என்பதெல்லாம் தத்துவக் கலாச்சாரம் கொண்டு பார்க்க வேண்டும். Hermeneutics கொஞ்சம் தெரிந்திருந்தால் நான் சொல்ல வருவது புரியும். நான் சொல்ல வருவது புரியவில்லை என்றால் அராத்து எழுதிய கலைஞனுக்குள் ஊடுருவும் சாரு நிவேதிதா இன்னொருமுறை படித்துப் பாருங்கள்.படிப்பதற்கு எளிமையாக இல்லாவிட்டாலும் அரூ மின்னிதழில் வெளியாகியிருக்கும் செல்வேந்திரனின் ஜான் பால் சாரு என்ற கட்டுரை மிக முக்கியமான ஒன்று. அதில் சொல்ல வந்த விஷயங்களை மூன்று வருடங்களுக்கு முன் நான் வதைகளின் கலைஞன் என்ற கட்டுரையில் சொல்ல முற்பட்டிருக்கிறேன். என்ன சொல்ல வருகிறேன் என்றால், சாருவின் எழுத்துக்களை ஒருவர் எளிதில் ஒரு குறுகியப் பார்வைக்குள் ஒடுக்கிவிட முடியாது. சாரு அடிக்கடி சொல்லும் துரித உணவுக்கும் வேட்டையாடி உண்ணும் உணவிற்கும் உள்ள வேறுபாடு கொண்டுதான் சாருவின் எழுத்துக்களை விளக்க முடியும். குறுகிய வட்டத்திற்குள் சாருவை அடக்கினால் அது நமது இயலாமையே. இன்னும் கொஞ்ச நாளுக்குப் பிறகு அந்த எழுத்துக்களே ஒரு வெடிகுண்டைப் போல் வெடித்து உங்கள் கட்டுப்பாடுகளிலிருந்து திமிறி கொண்டு வெளி வரலாம். வேறு மாதிரியாகச் சொல்ல வேண்டுமென்றால், வாசகனை சவாலுக்குள்ளாக்கும் எழுத்து.பூச்சியில் என்ன இல்லை! வாசிப்பு, இசை, திரைப்படம், தமிழகச் சர்ச்சைகள், மதம், குடும்பம், பெண்ணியம், தத்துவம், ஆன்மீகம், இன்னும் எத்தனையோ. அவந்திகா அம்மா ‘சாரூஊஊஊஊ’ என்று சத்தம் போடுவதை எழுதும் போது சிரித்துக் கண்களில் நீர் வந்துவிட்டது. ஆனால் அதன் பின் இருக்கும் ஒரு மெல்லிய புலம்பலும் கேட்காமல் இருக்கவில்லை. பாத்திரம் துலக்கும் நேர்த்திப் பற்பல இடங்களில் வந்துபோகிறது, அனுபவித்தவர்களுக்கு மட்டும்தான் அவ்வெழுத்துக்களுக்குப் பின் இருக்கும் நுணுக்கம் தெரியும்.கொரோனாப் பிரச்சனை வராமலிருந்திருந்தால் சாரு இச்சமயம் அமெரிக்காவில் இருந்திருப்பார். அமெரிக்காவில் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று சூரியஸ்தமனம். பொறுமையாக நின்று நிதானித்துச் சூரியன் மறைவதற்குள் இந்த பாஸ்டன் நகரின் மீது ஓர் ஓவியக் கண்காட்சி நடந்து முடிந்திருக்கும். அவ்வளவு வண்ணங்கள் எங்கிருந்துதான் வருமோ! அற்புதமாக இருக்கும்! சாரு இங்கே வந்தால் நிதானமாக ஒரு சூர்யஸ்தனமனத்தில் Ludovico Einaudiயின் Divenire இசையை மெலிதாக ஒலிக்கச் செய்து நெடுந்தூரம் நடக்க வேண்டும். திரும்பவும் பூச்சியை வாசிக்கையில் அகஸ்டின் சொன்ன Late have I loved thee என்ற வரிகளை உச்சரிக்கத் தோன்றுகிறது.
வளன் அரசு