முகமூடிகளின் பள்ளத்தாக்கு – சில எதிர்வினைகள்

முகமூடிகளின் பள்ளத்தாக்கு நாவலுக்கு வரும் எதிர்வினைகளைத் தொகுத்துக் கொள்ளலாம் என்று பார்க்கிறேன். நேற்றும் இன்றும் ஒவ்வொரு கடிதம். முதல் கடிதம்:

அன்புள்ள சாரு, 

முகமூடிகள் 85வது பக்கத்தில் படித்தது. உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது.

ஆசான் அலியிடம் கேலியாகக் கூறும் செய்தி :

“நீ நேசிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறாய், அதுதான் உன் தோல்வி. நீ நேசிக்கப்பட வேண்டும் என்று ஏங்கினால் நீ யாராக இருக்கிறாயோ அதிலிருந்து நீ விலகிச் செல்கிறாய். மற்றவர்கள் நீ எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ அப்படியே நீ மாறுவாய். பிறகு அதற்கு முடிவே இராது. நீ எப்போதும் மற்றவர்களின் விருப்பமாக மாறிக்கொண்டேயிருப்பாய். அதனால்தான் என்னதான் மனிதர்கள் புதிய விடியலை மகிழ்ந்து கொண்டாடினாலும் ஜனநாயகங்கள் முடிவில் தோல்வியுறுகின்றன. அவை தங்கள் உண்மையான முகத்தை வெளிக்காட்டாத மனிதர்களாலேயே செலுத்தப்படுகின்றன. நிழல்கள் நிழல்களோடு பொருதுகின்றன. எல்லோரும் நிழல்களை விரட்டிச் செல்கிறார்கள். என் நண்பனே, நீ அங்கே பெரிய தலைவன் ஆகிவிடுவாய்.”

சஷி தரூர் இந்தப் புத்தகத்தை கவனப்படுத்தியதில் ஆச்சர்யம் இல்லை.

சுரேஷ் 

சொல்ல மறந்து போனேன். நாவல் முழுவதும் இது போன்ற மேற்கோள்கள் வந்து கொண்டே இருக்கும். அதையே தொகுத்துக் கூட சிறிய புத்தகமாகப் போடலாம்.

***

இரண்டாவது எதிர்வினை, வாஸ்தோ:

டியர் சாரு

முகமூடிகளின் பள்ளத்தாக்கு என் கைக்கு வந்து சேர்ந்ததை நம் தமிழ் மக்களின் வாசிப்பு அறிவைப் பற்றி ஒரு அருமையான பகடியாக எழுதலாம். ராமவர்மபுரம், நாகர்கோவில் என்கிற முகவரியை எந்த முகாந்திரத்தில் ராமநாதபுரம் என்று வாசித்தார்கள் என்று தெரியவில்லை. சென்னையிலிருந்து மதுரைக்கு அனுப்பி, அங்கிருந்து ராமநாதபுரத்திற்கு அந்தப் பார்சலை அனுப்பி வைத்திருக்கிறார்கள். பின்னர் அங்கே அப்படியொரு முகவரியே இல்லையென்றானதும் அங்கிருந்து மீண்டும் மதுரைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அதன் பிறகே என் கைக்கு வந்து சேர்ந்தது. இந்த அலைக்கழிப்பில் கிட்டத்தட்ட மூன்று நான்கு நாட்களைக் கடத்தி ஒருவழியாக நேற்று மதியம் என் கைக்கு வந்து கிடைத்துவிட்டது நாவல்.

தமிழில் வரும் மொழிபெயர்ப்பைப் பற்றிப் பலமுறை உங்களிடம் என்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறேன். என்னைக் கவர்ந்த மொழிபெயர்ப்பாளர்களில் கநாசு, சுராவுக்கு அடுத்தபடியாக நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை உங்களிடம் இதுவரை நான் சொன்னதில்லை. என்னிடம் ஒரு பழக்கம் உண்டு. எந்தவொரு புத்தகம் கைக்கு வந்தாலும் உடனே பருவெட்டாக அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பக்கங்களைப் புரட்டி ஒன்றிரண்டு பக்கங்களை வாசிப்பேன். அந்த ஒன்றிரண்டு பக்கங்களின் மொழிநடை என்னை எந்தளவிற்கு போதையேற்றுகிறதோ அதைப் பொறுத்தே அந்தப் புத்தகத்தை வாசிப்பதற்கான நேரத்தைத் தேர்ந்தெடுப்பேன். சில எழுத்துநடை உழைப்பைக் கோருபவையாக இருக்கும். அம்மாதிரியான எழுத்துநடை கொண்ட புத்தகங்களை வாசிக்க வேறெந்த வேலையும் வராத நேரத்தை ஒதுக்குவேன். ஒருசில நடைகளை வாசிக்கையில் எந்தவொரு புறவேலையும் அந்த வாசிப்பிற்குத் தடங்கலை உண்டுபண்ணாது எனும்போது, அந்த வாசிப்பிற்கெனத் தனி நேரத்தை ஒதுக்குவதில்லை. 

பொதுவாகவே உங்களுடைய நேரடி புனைவு எழுத்து என்பது, என்னுடைய உழைப்பைக் கோரும் தன்மை கொண்டது. உங்களுடைய மொழிபெயர்ப்பு என்பது என்னுடைய உழைப்பைக் கோராது என்றாலும் மூலமொழிக்கு மிக நெருக்கமான தன்மையைக் கொண்டதாக இருக்கும். அதனால் முகமூடிகளின் பள்ளத்தாக்கு நாவலை பருவெட்டாகப் பக்கங்களைப் புரட்டாமல் முதல் பக்கத்திலிருந்து வாசிக்க ஆரம்பித்தேன். எந்தவொரு இடத்திலும் தொய்வின்றி போய்க் கொண்டே இருந்தது. நேற்று மாலை அம்மாவையும் அப்பாவையும் வெளியே அழைத்துச் செல்வதாய் அவர்களுக்கு வாக்களித்திருந்தேன். அந்த வாக்கை நிறைவேற்றும் பொருட்டு வாசிப்பு தடைப்பட்டுவிட்டது. அதன்பிறகு மீண்டும் புத்தகத்தைக் கையில் எடுத்தேன். அலுவல் சம்பந்தமாக வரிசையாக நான்கைந்து அலைபேசி அழைப்புகள். வாசிப்பு தடைப்பட்டுக் கொண்டே இருந்தது. அதனால் மேற்கொண்டு வாசிக்கத் தோன்றாமல் மூடிவைத்துவிட்டேன்.

இனி இந்த முகமூடிகளின் பள்ளத்தாக்கை ஊரில் இருக்கும் அனைவரும் அவர்களின் முகத்தை மூடித் தூங்கிய பிறகே திறக்கவேண்டுமென முடிவு செய்திருக்கிறேன். இனி எத்தனை இரவுகளைத் தூக்கமற்ற இரவுகளாகக்  கழிக்கப்போகிறேன் என்று தெரியவில்லை. ஒருவேளை இந்த நாவலை முடித்த பிறகாக “உறக்கமற்ற இரவுகளின் உரத்த குரல்கள்” என்ற தலைப்பில் ஏதும் படைப்பை எழுதினேனெனில் அதற்கு முழுமுதற் காரணம் நீங்களாகத் தான் இருப்பீர்கள் சாரு. 

அன்புடன்

வாஸ்தோ

அன்புள்ள வாஸ்தோ மற்றும் நண்பர்களுக்கு,

இதை உங்களில் ஒருவர் சொல்லும் வரை ரகசியமாக எனக்குள்ளேயே வைத்திருக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  முடியவில்லை.  முகமூடிகள் பள்ளத்தாக்கு நாவலை ஒருமுறை படித்து முடித்து விட்டால் மீண்டும் ஒருமுறை படிக்க வேண்டியிருக்கும்.  முதலில் படிக்கும்போது நாவலின் அடிக்கரு என்ன என்பது புரியாமல் படிக்கிறோம்.  அது கடைசி அத்தியாயத்தில் அவிழ்ந்ததும், இதுவரை படித்தது எல்லாவற்றையும் அந்தப் பின்னணியில் படிக்கத் தோன்றும்.  இதிலிருந்து தப்பவே முடியாது. 

உங்கள் அனுபவத்துக்காகக் காத்திருக்கிறேன்.

சாரு